இலங்கை நீதித்துறையின் உயர் மட்டத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை அதிகரிப்பு விவகாரத்தில், கீழ் நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்திற்கு எதிராக அதிரடியான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர். உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கும் நோக்கில் அரசாங்கம் கொண்டுவரவிருந்த சட்ட மூலத்திற்கு எதிராக, நாட்டின் நீதவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் ஒன்றிணைந்து மரண அடி கொடுத்துள்ளனர்.
அதிகார வர்க்கத்தின் இந்தத் திட்டத்தை முற்றாக நிராகரிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், கடுவெல நீதிமன்ற வளாகத்தில் கடந்த 11ஆம் திகதி சனிக்கிழமை கூடிய விசேட பொதுக்கூட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ளது. அங்கு அரங்கேறிய விடயங்கள் தான் தற்போது ஒட்டுமொத்த நீதித்துறையையும் உலுக்கியெடுத்துள்ளன.
வழமையாக வெளிப்படையாக விவாதிக்கும் நீதிபதிகள், இந்த முறை அரசாங்கத்தின் முன்மொழிவு மீது ஒரு ‘இரகசிய வாக்கெடுப்பை’ (Secret Ballot) நடத்தியுள்ளனர். ஜனநாயகத்தின் உச்சக்கட்டமாக அமைந்த இந்த வாக்கெடுப்பின் முடிவு அரசாங்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் திட்டத்திற்கு ஆதரவாக ஒரு ஒற்றை வாக்குக் கூடப் பதிவாகவில்லை! அனைவரும் ஒருமனதாக இந்தத் திட்டத்தை தூக்கியெறிந்துள்ளனர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 லிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வயதை 63 லிருந்து 65 ஆகவும் உயர்த்த நீதியமைச்சு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்ற சேவைகள் சங்கம் உத்தியோகபூர்வமாக தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் மூன்றாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசேட கூட்டத்திற்கு முன்பாக நீதித்துறை வட்டாரத்தில் மற்றொரு பரபரப்பும் அரங்கேறியது. சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்த கொழும்பு கோட்டை நீதவான் பிரசன்ன அமரசேன, கூட்டத்திற்கு முன்னதாக தனது தலைவர் பதவியை அதிரடியாக இராஜினாமா செய்து, உறுப்பினர்களுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து எழுந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், சங்கத்தின் உப தலைவர் கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கொழும்பு, கல்கிஸ்சை, கடுவெல ஆகிய நீதிமன்றங்களின் பிரதான நீதவான்கள் மற்றும் மேலதிக நீதவான்கள் உட்பட 65 முக்கிய நீதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் சுரங்க முனசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


