சிலாபம்: நவீன தொழில்நுட்பங்களும் முறையான திட்டமிடல்களும் இல்லாத ஒரு அதிகாரத்துவ முடிவு, எவ்வாறு ஒரு முழு நகரத்தின் வடிகால் அமைப்பையே முடக்கிப்போடும் என்பதற்கு சிலாபம் நகரின் “CML வடிகால்” அணைக்கட்டு ஒரு நேரடி சாட்சியாக மாறியுள்ளது.
சிலாபம் நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரை, புனித ஜேம்ஸ் வீதிக்கு அருகிலுள்ள ரயில்வே பாதை ஊடாக முகத்துவாரத்தில் சேர்க்கும் பிரதான நரம்பாக இந்த வடிகால் காணப்படுகிறது. எனினும், கடலோரப் பகுதியை விட நிலப்பரப்பு உயரமாக இருப்பதனாலும், கடலின் வற்றல்-பெருக்கு (வடி-அலை) மாற்றங்களினாலும் இங்கு நீர் சீராக வெளியேறுவதில் இயற்கையாகவே சிக்கல் நிலவி வந்தது.
இதற்குத் தீர்வாக, கடந்த 1980களின் காலப்பகுதியில் இந்த CML வடிகானின் குறுக்கே பாரிய அணைக்கட்டொன்று நிர்மாணிக்கப்பட்டது. தேங்கும் நீரை அணையைக் கடந்து முகத்துவாரத்திற்குள் பாய்ச்சுவதற்காக 3 பிரம்மாண்ட நீர் இறைக்கும் மோட்டார்களும், அவற்றுக்கான மின்சாரத்தை வழங்க உயர் அழுத்த மின்மாற்றி (Transformer) ஒன்றும், தனி பம்பா நிலையமும் அமைக்கப்பட்டன. ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தத் திட்டம், இயக்கப்பட்ட முதல் நாளிலேயே சிலாபம் நகரசபைக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.
காரணம், ஒரே ஒரு நாள் மோட்டார்களை இயக்கியதற்கே 30,000 ரூபாவிற்கும் அதிகமான மின் கட்டணம் வந்து சேர்ந்தது. அன்றைய காலகட்டத்தில் ஒரு நாளுக்கு இவ்வளவு பெரிய தொகையை மின் கட்டணமாகச் செலுத்த முடியாத நிதி நெருக்கடியில் இருந்த நகரசபை, அடுத்த கணமே மோட்டார்களை நிரந்தரமாக முடக்கியது. அன்று அணைக்கப்பட்ட மோட்டார்கள், அதன் பின்னர் இன்றுவரை இயக்கப்படவே இல்லை.
வருடங்கள் நகர நகர, பராமரிப்பின்றி கைவிடப்பட்ட அந்த மூன்று பிரம்மாண்ட மோட்டார்களும், விலைமதிப்பற்ற மின்மாற்றியும் மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட்டு, தற்போது கட்டிட இடிபாடுகள் மாத்திரமே அங்கு எச்சங்களாகக் காட்சிளிக்கின்றன. ஆனால், அன்று கட்டப்பட்ட அந்த அணைக்கட்டு மட்டும் அப்படியே நகரின் சாபக்கேடாக எஞ்சியுள்ளது.
இதனால், நகரின் கழிவுநீரும் மழைக் காலங்களில் அடித்து வரப்படும் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் போத்தல்களும், ஏனைய திடக்கழிவுகளும் இந்த அணையில் முட்டி மோதி தேங்கி நிற்கின்றன. இந்த வடிகாலின் இறுதிப் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் நிரந்தர வீடுகளை அமைத்து வாழ்ந்து வரும் நிலையில், தேங்கும் அசுத்த நீரினாலும் துர்நாற்றத்தினாலும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய் அபாயங்களுக்கு அவர்கள் முகங்கொடுத்து வருகின்றனர்.
இது குறித்து சிலாபம் நகரசபையின் தலைவர் சுமேத பெரேராவிடம் வினவியபோது, “இந்த நீர் அடைப்பை ஏற்படுத்தும் அணையை உடைத்து அகற்ற நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். ஆனால், அதற்கான உத்தியோகபூர்வ அனுமதி நீண்டகாலமாக எமக்குக் கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு பல வருடங்களாக எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது எம்மால் சில மாதங்களுக்கு ஒருமுறை அங்கு தேங்கும் கழிவுகளை மாத்திரமே அகற்ற முடிகிறது. அனுமதி கிடைத்தால், சில நாட்களுக்குள் இந்த அணையை உடைப்போம். இதனை அகற்றினால் நகரின் வடிகால் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்” என அவர் கவலை வெளியிட்டார்.
அதிகாரிகளின் ஒரு சிறிய கையெழுத்துக்காக, 50 குடும்பங்களின் சுகாதாரமும் ஒரு நகரின் தூய்மையும் இன்னும் எத்தனை காலத்திற்கு அடகு வைக்கப்படப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாகும்.
ஜுட் சமந்த






