பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, சொகுசு குளிரூட்டப்பட்ட மீன் லொறியில் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மரங்களை கடத்த முயன்ற கும்பலின் திட்டம் சிலாபத்தில் தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது.
சிலாபம், மரதங்குளம் பகுதியில் இன்று 15ஆம் திகதி அதிகாலை வேளையில், வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு வீதியில் பயணித்த குளிரூட்டப்பட்ட மூடிய லொறி ஒன்று மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சற்றும் தாமதிக்காத பொலிஸ் குழுவினர், குறித்த லொறியை வழிமறித்து அதிரடி சோதனையை முன்னெடுத்தனர்.
மீன் அல்லது இறைச்சி கொண்டு செல்லப்படுவதாக நினைத்து லொறியின் கதவை திறந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. லொறியினுள் எந்தவித அனுமதிப்பத்திரமும் இன்றி சட்டவிரோதமாக வெட்டப்பட்ட பெருந்தொகை மஹோகனி வகை மரக்குற்றிகள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ஏன் இந்த நூதன கடத்தல்?
பொலிஸாரின் தீவிர விசாரணையின் போது, இந்த மரக்குற்றிகளை சிலாபம் – ஜயபிம பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது. காடழிப்பு மற்றும் மரக்கடத்தல்களை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் வீதி தடைகளை ஏற்படுத்தி தீவிர சோதனைகளை நடத்தி வருவதால், அதிலிருந்து தப்புவதற்காகவே இந்த குளிரூட்டப்பட்ட லொறியை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால், வெளியில் இருந்து பார்த்தால் மரக்கடத்தல் என்று எவருக்கும் சந்தேகம் வராதவாறு இந்த நூதன முறையை கையாண்டதாக சந்தேகநபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலாபம் – மரதங்குளம் மற்றும் பங்கதெனிய பகுதிகளைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் இந்த மரங்களின் உரிமையாளர் எனவும், மற்றையவர் கடத்தலுக்கு உதவிய அவரது நண்பர் எனவும் சிலாபம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு லொறியும் பொலிஸ் காவலின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரையும், கைப்பற்றப்பட்ட மஹோகனி மரக்குற்றிகள் மற்றும் லொறியையும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜுட் சமந்த



