ஜுட் சமந்த
குடும்பத் தகராறு எல்லை மீறி, கத்திக் குத்தில் முடிந்த அதிர்ச்சிச் சம்பவமொன்று சிலாபம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சொந்த மனைவியையே கத்தியால் வெட்டிப் படுகாயப்படுத்திய சந்தேகநபரான கணவரை பொலிஸார் தற்போது வலைவீசித் தேடி வருகின்றனர்.
சிலாபம், எபர்ட் சில்வா தோட்டத்தில் தற்காலிகமாக வசித்து வரும் குடும்பமொன்றிலேயே இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. காயங்களுக்கு உள்ளான பெண் உடனடியாக மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 17 ஆம் திகதி மாலை வேளையில் தம்பதியினருக்கு இடையே வீட்டின் உள்ளே திடீரென கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. சாதாரண சொல்லாடலாகத் தொடங்கிய அந்த முரண்பாடு, கணவனின் கட்டுக்கடங்காத கோபத்தினால் விபரீதமாக மாறியுள்ளது.
கோபத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற கணவன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக வெட்டி காயப்படுத்தியுள்ளார். தாக்குதலை நடத்திய கையோடு, அவர் சம்பவ இடத்திலிருந்து தலைமறைவாகியுள்ளார்.
காயமடைந்த பெண்ணின் தற்போதைய நிலை மற்றும் தாக்குதலின் பின்னணியில் உள்ள தீவிர காரணங்கள் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். தப்பியோடிய கணவரைச் சுற்றி பொலிஸாரின் வலை விரிகிறது.


