சீரற்ற வானிலை தீவிரம்: பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள அதிரடித் தீர்மானம்!
நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (21) பாடசாலைகள் இயங்குமா என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது. இதற்கான நேரடிப் பதிலையும் முக்கிய அறிவுறுத்தலையும் கல்வி அமைச்சு தற்போது உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை பாடசாலைகளை நடத்துவதா, அல்லது விடுமுறை வழங்குவதா என்பதை அந்தந்த மாகாணக் கல்விப் பணிப்பாளர்களே சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஊடகங்களுக்கு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எந்தவொரு முடிவையும் எடுக்கும்போது மாணவர்களின் பாதுகாப்புக்கே மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் கண்டிப்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த அபாயங்கள் உள்ள பகுதிகளில் மாணவர்களை எவ்வித இடருக்கும் உட்படுத்தக் கூடாது என்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது.
இதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் மாகாணக் கல்விப் பிரிவினரும் அவ்வப்போது வௌியிடப்படும் புதிய வானிலை மற்றும் இடர் முகாமைத்துவ அறிக்கைகள் குறித்து தீவிர அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உங்கள் பிரதேசத்தின் நிலவரத்தைப் பொறுத்து அந்தந்த மாகாணக் கல்விப் பணிமனைகளால் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


