ஜுட் சமந்த
இலங்கையின் மிக முக்கிய சர்வதேச ராம்சார் ஈரநிலங்களில் ஒன்றான ஆனவிலுந்தாவ சரணாலயத்தில் கடந்த 20ஆம் திகதி இரவு திடீரென பரவிய பாரிய தீ தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் சரணாலயத்தின் சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் மர்மமான முறையில் தொடங்கிய இந்த தீ, சரணாலயப் பகுதி முழுவதும் வேகமாக பரவியுள்ளது. இதில் அப்பகுதியில் வாழ்ந்து வந்த ஆமைகள், அரிய வகை பறவைகள் மற்றும் பல நீர்வாழ் உயிரினங்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த ஆராச்சிக்கட்டுவ பொலிஸார், பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், அப்பகுதியில் வீசிய பலத்த காற்று தீயை கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக அமைந்தது. நிலைமை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையின் ஹெலிகொப்டர்கள் வரவழைக்கப்பட்டு வான்வழியாக நீர் ஊற்றப்பட்டு தீ முற்றாக அணைக்கப்பட்டது.
1397 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த சரணாலயத்தில் அமைந்துள்ள 5 குளங்களில், கடந்த நவம்பர் மாதம் வீசிய ‘தித்வா’ சூறாவளியால் 2 குளங்களின் அணைக்கட்டுகள் உடைந்தன. இதனால் சரணாலயம் கடுமையான வறட்சிக்கு உள்ளாகியிருந்தமையே தீ வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆண்டுதோறும் டிசம்பர் மாத இறுதியில் வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து குவியும் இந்த சர்வதேச சரணாலயம் தற்போது பெரும் அழிவைச் சந்தித்துள்ளது.
சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி கருத்துத் தெரிவிக்கையில்: “தீ எவ்வாறு உருவானது என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை. இது ஒரு நாசகார வேலையாக இருக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் உடைந்த குளங்களை புனரமைத்து, வெளிநாட்டுப் பறவைகளுக்குப் பொருத்தமான சூழலை உருவாக்கவும், அழிவடைந்த சரணாலயத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் முழுமையான நிதி மற்றும் உதவிகளை வழங்கும்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் தவிசாளர் ஜயரத்ன ஜயசேகர உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.



