திடீர் சேற்றுப் பேரலை… கண்முன்னே கரைந்துபோன கிராமங்கள்: நேபாள – சீனா எல்லையில் கோரத்தாண்டவம்!
எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி நொடிப்பொழுதில் பாய்ந்துவந்த பல மாடி உயர சேற்றுப் பிரவாகம், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளைத் தரைமட்டமாக்கியுள்ளது. வரலாறு காணாத இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் இதுவரை 165 க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோரின் நிலை இன்னும் தெரியவில்லை.
நேபாள பொலிஸார் இதுவரை 162 சடலங்களை மீட்டுள்ள நிலையில், சீனாவின் கீரோங் பகுதியில் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேற்றுப் பெருக்கில் ஒரு மாடிக் கட்டிடம் மீது சேறு பாய்ந்து அமுக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், சீனா தனது பகுதியில் 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்குப் பெயர்போன இந்த பிராந்தியத்தில், 142 இந்தியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள் மற்றும் மலேசியா, தென் கொரியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் உட்பட 579 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுடன் 28 நேபாள பொலிஸ் உத்தியோகத்தர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
“எங்கள் கண்முன்னே ஒரு பெரும் சேற்று மலை திரண்டு வந்தது. வீட்டுக்குள் சேறு புகுந்ததும் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓட முயன்றேன்; ஆனால் என் கண்முன்னே அவளை அந்த சேற்றுப் பிரவாகம் இழுத்துச் சென்றுவிட்டது,” என மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 68 வயதான கேஷவ் பிரசாத் பரால் என்ற முதியவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
போதே கோசி மற்றும் திரிசூலி நதிகளின் வழித்தடத்தில் அமைந்திருந்த பாடசாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் ஒட்டுமொத்த கிராமங்களே வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளன. நேபாளத்தின் 430 மெகாவாட் நீர்மின் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்து முழு பிராந்தியமும் இருளில் மூழ்கியுள்ளதுடன், நதி பாயும் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் 6 மாவட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நேபாள இராணுவம் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கியுள்ள போதிலும், பல அடி ஆழத்திற்கு புதைந்துள்ள வண்டல் சேறு, தகர்க்கப்பட்ட பாதைகள் மற்றும் தொடரும் மழை காரணமாக இயந்திரங்களை அங்கு கொண்டுசெல்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக அமெரிக்கா 5 இலட்சம் டொலர்களை உதவியாக அறிவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரணங்களை அனுப்பி வருகிறது.
கடுமையான மழை இல்லாத நிலையிலும் இந்த அனர்த்தம் ஏற்பட்டமைக்கு, பனிப்பாறைச் சரிவு ஒன்று நதியின் ஓட்டத்தை இடைமறித்து திடீரென பெருக்கெடுத்தமையே காரணம் என காலநிலை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுக்கள் இரவும் பகலுமாகப் போராடி வருகின்றன.




