புத்தளம் கோட்ட கல்விப் பிரிவுக்குட்பட்ட மேதானந்தா வித்யாலய மாணவர்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த புதிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.
புத்தளம் மேதானந்தா வித்யாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட 80 அடி × 25 அடி அளவிலான ஒற்றை மாடி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த திங்கட்கிழமை (04.05.2025) அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வானது, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சகோதரர் முகமது பைசல் அவர்களின் தலைமையில் இனிதே இடம்பெற்றது.
நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் கல்விக்கு முதன்மை முன்னுரிமை அளிக்கும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) அரசாங்கத்தின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 11.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தவும், இடவசதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
இந்த விசேட நிகழ்வில் கௌரவ மதத் தலைவர்கள் கலந்துகொண்டு ஆசிகளை வழங்கினர். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் பைசல் அவர்களுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவச் செல்வங்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.
அத்துடன், புத்தளம் பிரதேச சபையின் உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திக் குழு (CDC) தலைவர்கள், தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.
புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலையின் கல்வித் தரம் மேலும் உயர்வடையும் என ஆசிரியர்களும் பெற்றோர்களும் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர்.




