மினா (புனித பூமி): வாழ்க்கையின் ஆகச்சிறந்த ஆன்மீக உச்சத்தைத் தொடுவதற்காக, தங்களின் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் கொட்டிக் கொடுத்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் சென்ற 3,500 இலங்கை யாத்திரிகர்களின் கனவு, தற்போது ஒரு கொடூரமான நரக வேதனையாக மாறியுள்ளது. மினாவின் கூடாரங்களில் தங்கியுள்ள இலங்கை ஹாஜிகள், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மற்றும் கண்ணியத்தைக்கூட இழந்து தவிக்கும் அவல நிலை அரங்கேறியுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கெல்லாம் காரணம், இலங்கை ஹஜ் குழுவின் தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற நிர்வாகச் சீர்கேடுதான் என்று குற்றம் சாட்டப்பட்டு, பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
டெய்லி மிரர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
‘A-வகுப்பு’ என்ற பெயரில் அரங்கேறிய ‘C-வகுப்பு’ மோசடி!
அனுபவமிக்க உள்ளூர் முகவர்களை கலந்தாலோசிக்காமல், ‘ரஹ்லத் வா மனாஃபி’ (Rehlat Wa Manafe) என்ற சுற்றுலா நிறுவனத்தை இலங்கை ஹஜ் குழு தன்னிச்சையாகத் தேர்ந்தெடுத்ததே இந்த ஒட்டுமொத்த பேரழிவிற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு யாத்திரிகரிடமிருந்தும் உயர்தரமான (A-வகுப்பு) சேவைகளை வழங்குவதாகக் கூறி, தலா 562,000 இலங்கை ரூபா பிரீமியம் தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால், களத்திலோ அவர்கள் செலுத்திய தொகையில் பாதிக்கும் குறைவான மதிப்புடைய, தரம் குறைந்த (C-வகுப்பு) கூடாரங்களில் மிருகங்களைப் போல அடைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார சீர்கேடு: 3,500 பேருக்கு வெறும் 32 கழிவறைகள்!
மினாவில் தங்கியிருந்த ஒட்டுமொத்த இலங்கை ஹாஜிகளின் கூட்டத்திற்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது வெறும் 32 கழிவறைகள் மட்டுமே! இந்த கழிவறைகளே குளிப்பதற்கும் பயன்படுத்தப்படுவதால், 100 யாத்திரிகர்களுக்கு 1 கழிவறை என்ற சாத்தியமற்ற விகிதம் உருவாகியுள்ளது.
இதனால், முதியவர்களும், நோயாளிகளும் கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்காகக் வரிசையில் நின்று, தங்களின் இயற்கை உபாதைகளைக் கூட கழிக்க முடியாமல் கண்ணீர் வடிக்கும் அவலம் நேர்ந்துள்ளது.
பசிப் பட்டினி: 3,500 பேருக்கு இரண்டே இரண்டு பஃபே (Buffet) வரிசைகள்!
கடும் பாலைவன வெயிலில், அலைந்து திரிந்து சோர்வடைந்த 3,500 யாத்திரிகர்களுக்கும் உணவளிப்பதற்காக, ஆண்களுக்கு ஒன்று, பெண்களுக்கு ஒன்று என வெறும் இரண்டு பொபே (Buffet) உணவு விநியோகம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
பல மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு, அந்த நீண்ட வரிசையில் நின்று வாங்கும் உணவும், மனிதர்கள் வாயில் வைக்க முடியாத அளவிற்கு மிக மோசமான தரத்தில் இருப்பதாக ஹாஜிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் அவலமும், அதிகாரிகளின் சொகுசும்: வெடித்தது மக்கள் ஆக்ரோஷம்!
சாதாரண குடிமக்கள் பசியாலும், தாகத்தாலும், கடுமையான வெப்பத்தாலும் மயங்கி விழும் நிலையில், அவர்களுக்கு உதவ வேண்டிய ஹஜ் குழு உறுப்பினர்களின் அநாகரிகமான செயல்பாடு ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆத்திரமடையச் செய்துள்ளது.
பொதுக் கூடாரங்களுக்குச் சென்று மக்களின் குறைகளைக் கேட்கக்கூட மறுத்துள்ள ஹஜ் குழு உறுப்பினர்கள், குளிரூட்டப்பட்ட சொகுசு VIP தங்குமிடங்களில் தங்களை ஒளித்துக் கொண்டுள்ளனர். மக்கள் அங்கே நரக வேதனைப் பட, இவர்கள் சொகுசு குளியலறைகளையும், உயர்தர வசதிகளையும் அநுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உடனடிப் பதவி விலகலுக்கு வலுக்கும் கோரிக்கை!
இது வெறும் ஒரு நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல; புனித யாத்திரை வந்த மக்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களின் பணத்தைச் சூறையாடிய நிர்வாணமான நிதி மோசடி என்றே குற்றம் சாட்டப்படுகிறது. நமது நாட்டின் முதியவர்களையும், பெற்றோர்களையும் பாலைவனத்தில் தவிக்கவிட்டு, சொகுசு வாழ்க்கை வாழும் ஹஜ் குழுவின் செயல், அவர்களின் தரமற்ற செயலைத்தான் காட்டுகிறது.
எனவே, இந்த பேரழிவிற்கு முழுப் பொறுப்பேற்று, இலங்கை ஹஜ் குழுவின் ஐந்து உறுப்பினர்களும் உடனடியாகத் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள் இன்று பதவி விலகாவிட்டால், புனித ஹஜ் விவகாரத்தில் திட்டமிட்ட மோசடி நடந்துள்ளது என்பது அசைக்க முடியாத உண்மையாகிவிடும் என சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்களும் கொதித்தெழுந்துள்ளனர் என டெய்லி மிரர் இணைய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



