ஜுட் சமந்த
வென்னப்புவ – வைக்காலை புகையிரதக் கடவையில் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் கடந்து செல்வதற்காக, குறித்த புகையிரதக் கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்தது. எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் சீறிப்பாய்ந்து வந்த புகையிரதத்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வைக்காலை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் (பெயிண்டிங்) வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த வென்னப்புவ பொலிஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


