பாத்திமா ஷஸ்னா சமீன்
- விண்வெளிக்கு பாயும் பெண்களின் விண்கலம்: வரலாற்றுத் திட்டத்தில் இணையும் மல்வானை மாணவி முஸ்னா!
- 108 உலக நாடுகள்… 200 பெண் ஆய்வாளர்கள்: இந்திய விண்வெளி மையத்தில் தடம் பதிக்கும் இலங்கை மாணவி!
- இந்திய ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ள மல்வானை அல்-முபாரக் மாணவி!
விண்வெளி ஆய்வில் தடம் பதிக்கும் மல்வானை மாணவி: உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை!
உலக விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக பாடசாலைப் பெண் மாணவிகள் ஒன்றிணைந்து வடிவமைக்கும் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் மாபெரும் சர்வதேச திட்டத்தில், மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரி மாணவி செல்வி முஸ்னா முபாரக் இணைந்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
‘Mission ShakthiSAT – Phase II (India Programme)’ என்ற சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செய்மதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இப்பயிற்சிப் பட்டறை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
108 நாடுகள்… தேர்ந்தெடுக்கப்பட்ட 200 இளம் திறமையாளர்கள்!
விஞ்ஞான உலகை ஆச்சரியப்படுத்தும் இந்த சர்வதேச திட்டத்திற்காக, உலகளாவிய ரீதியில் 108 நாடுகளிலிருந்து 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறந்த மாணவிகள் மட்டுமே விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து செய்மதி வடிவமைப்பு, விண்வெளித் தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் நேரடி கள ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். அத்துடன், இப்பயிற்சி நெறியின்போது இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் விண்வெளித் துறைசார் சர்வதேச பிரமுகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மகத்தான வாய்ப்பும் இம்மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
9A சாதனையாளரின் அடுத்த இலக்கு விண்வெளி!
இலங்கையின் சார்பாக இந்த சர்வதேச மேடையில் தடம் பதிக்கும் செல்வி முஸ்னா முபாரக், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்திகளைப் பெற்று, தற்போது மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் பயின்று வரும் ஒரு திறமைசாலி மாணவியாவார்.
இலங்கையின் கிராமிய மட்டத்திலிருந்து சர்வதேச விண்வெளி தளம் வரை இந்த மாணவி செல்வதற்கான வழிகாட்டல்களையும், இதற்கான முழுமையான நிதி அனுசரணைகளையும் சர்வதேச செயற்பாட்டாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனைக்காக மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை சமூகமும், மல்வானை வாழ் மக்களும் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


