- மன்னார் வளைகுடாவில் கொட்டிக்கிடக்கும் கச்சா எண்ணெய்: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை விடுத்த அவசர அழைப்பு!
- 2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் எரிவாயு: இலங்கையின் தலைவிதியை மாற்றப்போகும் மன்னார் பேசின் மெகா திட்டம்!
- எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளியா? மன்னார் கடற்பரப்பில் 34,000 சதுர கி.மீட்டர் பரப்பில் சர்வதேச தேடுதல் வேட்டை!
இலங்கையின் மன்னார் கடல் படுகையில் புதைந்து கிடக்கும் பாரிய அளவிலான இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் வளங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில், சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் ஆய்வுகளுக்காக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக திறந்துவிட்டுள்ளது.
‘2026 இலங்கை பெற்றோலிய ஆய்வுக்கான உரிமங்கள் வழங்கும் சுற்று’ கொழும்பு தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன கேட்போர்கூடத்தில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கடலுக்குள் புதையுண்டுள்ள 2 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்!
மன்னார் படுகையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட புவியியல் ஆய்வுகளின்படி, சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு படிவுகள் காணப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் ஒட்டுமொத்த எதிர்கால எரிசக்தித் தேவையை தலைகீழாக மாற்றக்கூடிய மாபெரும் வளமாகப் பார்க்கப்படுகின்றது.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் தம்மிக தந்திரிகொட, பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி ராஜகருணா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த புதிய நகர்வு அறிவிக்கப்பட்டது.
நவீன தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் உலக நாடுகள்
மன்னார் படுகையில் திரவ ஹைட்ரோகார்பன்கள் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், இதுவரை மிகக் குறைந்தளவிலான பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி நீல் டி சில்வா சுட்டிக்காட்டினார். எனவே, அதிநவீன புவியியல் ஆய்வு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீதமுள்ள பரந்த கடற்பரப்பை சர்வதேச நிறுவனங்கள் துல்லியமாக ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏலச் சுற்றில் இணையும் உலகளாவிய நிறுவனங்களுக்கு, இலங்கை அரசிடம் உள்ள முழுமையான புவியியல் ஆய்வுத் தரவுகளும் நேரடியாக வழங்கப்படும்.
பல தசாப்தங்களாக வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கும் நாட்டிற்கு இந்த வளங்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அது தேசிய பொருளாதாரத்தின் போக்கையே திசைமாற்றும். இருப்பினும், இந்த படிவுகளின் உண்மையான இருப்பு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு என்பது அடுத்தகட்ட தொடர் ஆய்வுகள் மற்றும் வெற்றிகரமான அகழ்வு நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.




