குளிக்க அழைத்துச் செல்வதாகக் கூறி 7 வயதுடைய தனது உறவினரான சிறுமியை பாலியல் துஷ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மாதம்பே பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ராகல – லுணுகலை தோட்டத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் காக்கபள்ளிய – வாலஹேன பிரதேசத்தில் உள்ள தென்னை நார் மில் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரும் அதே மில்லில் பணியாற்றுபவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 24ஆம் திகதி மாலை, குறித்த சிறுமியையும் அவரது சகோதரனையும் கடைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சந்தேகநபர் அழைத்துச் சென்றுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் சிறுவன் மட்டும் தனியாக வீடு திரும்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாய், மகளைத் தேடிச் சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் அருகே உள்ள கால்வாய்க்குப் பக்கத்தில் சிறுமி அரைவாசி ஆடைகளுடன் இருப்பதைக் கண்ட தாய், அது குறித்து விசாரித்துள்ளார். இதன்போது, சந்தேகநபர் தனக்கு இழைத்த அநீதி குறித்து சிறுமி தாயிடம் கூறியுள்ளார்.
சம்பவம் அம்பலமானதும் அங்கிருந்து தப்பியோட முயன்ற சந்தேகநபரை, அக்கம் பக்கத்தினர் பிடித்து மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். மாதம்பே பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தித் தொகுப்பு: ஜுட் சமந்த


