கற்பிட்டி: கடல் அரிப்பின் கோரப்பிடியில் இருந்து தங்களது வாழ்வாதாரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக, கற்பிட்டி – கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று அதிரடி நடவடிக்கை ஒன்றில் இறங்கியுள்ளனர்.
கீரிமுந்தல் (டச்பே) கிராமிய மீனவ அமைப்பின் தலைவர் தினேஷ் சுரஞ்சன் பெர்னாண்டோ விடுத்த அவசர வேண்டுகோளுக்கு இணங்க, கரையோரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த அவசர மண்வேலி கட்டும் பணி இன்று காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இன்று காலை கற்பிட்டி பங்குத்தந்தை, உதவிப் பங்குத்தந்தை ஆகியோரின் விசேட ஆசிர்வாதங்கள் மற்றும் இறை வழிபாடுகளுடன் இப்பணிகள் சுபயோக முகூர்த்தத்தில் தொடங்கப்பட்டன. இயற்கைச் சீற்றத்திடமிருந்து தங்களது கிராமத்தையும், கடற்கரையையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு அப்பகுதி மக்கள் அதிகாலையிலேயே திரண்டிருந்தனர்.
அதிகாரிகள் மற்றும் அமைப்புகளின் நேரடி மேற்பார்வை
கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதேச காரியாலய அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ் இப்பணிகள் மிகவும் திட்டமிட்டபடி தரம் வாய்ந்ததாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், இந்த உன்னத காரியத்திற்கு ஆலய நிர்வாக சபையினர், மீனவ சங்கத் தலைவர் மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்கள், கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் என பலரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, களத்தில் இறங்கி வேலை செய்து வருவதுடன், சுமார் 80 மீட்டர் நீளம் கொண்ட குறித்த மண்வேலி 10 அடி அகலத்தை கொண்டதாக அமைக்கப்பட்டு வருகின்றது
இயற்கையின் சீற்றத்திற்கு முன்னால் கைகட்டி நிற்காமல், “நம் கிராமத்தை நாமே காப்போம்” என்ற நோக்கில் கீரிமுந்தல் (டச்பே) கிராம மக்கள் காட்டி வரும் இந்த ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் ஒட்டுமொத்த கரையோர பகுதி மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த மண்வேலி அமைக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், இப்பகுதியில் நிலவி வரும் கடல் அரிப்பு அபாயம் தற்காலிகமாக கட்டுப்படுத்தப்படும் என மக்களும் அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.







