அதிகரித்து வரும் எபோலா நோய் பரவல் அச்சங்களுக்கு மத்தியில் 3 எபோலா தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முறையான பரிசோதனை செய்ய முடியாத நிலையில், எபோலா அறிகுறிகளுடன் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 220-க்கும் மேல் உயர்ந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காங்கோவின் ‘இடூரி’ (Ituri) மாகாணத்தில் உள்ள மொங்ப்வாலு, புனியா போன்ற பகுதிகளிலேயே அதிகப்படியான மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் பல சுகாதாரப் பணியாளர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆபிரிக்க நாடான காங்கோவில் அரிய வகை எபோலா வைரஸ் தொற்றால் சுமார் 1000 பேர் வரை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏற்க்கனவே கிட்டத்தட்ட 250 பேரின் உயிரை பறித்து இருக்கும் எபோலா நோயை சமாளிக்க 3 புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனிடையே இந்த தடுப்பூசிகளில் ஒன்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு நிறுவனம், எபோலா பரவல் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமாக இருக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், மாடர்னா என்ற மருந்து நிறுவனமும் ‘பண்டிபுக்யோ’ (Bundibugyo) என்ற எபோலா வகைக்கு எதிரான தடுப்பூசிகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன.
இதனிடையே மெடிசின் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (MSF) என்ற மருத்துவத் தொண்டு நிறுவனம் இந்த நிலைமை மிகவும் கவலையளிப்பதாகவும், இதற்கு முன்பு இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் பதிவானதில்லை என்று கவலை தெரிவித்து உள்ளது.
இதனிடையே தற்போது எபோலாவின் சையர் (Zaire) வகைக்கு மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் (Ervebo, Zabdeno) உள்ளன. ஆனால், இப்போது பரவி வரும் ‘பண்டிபுக்யோ’ ‘Bundibugyo’ வகைக்கு என்று தனியாக தடுப்பூசிகள் இல்லாததால், உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆலோசனையின் பேரில் இந்த 3 தடுப்பூசிகளின் மருத்துவப் பரிசோதனைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.







