ஜுட் சமந்த
மாதம்பே, செம்புகட்டிய பகுதியில் வசிக்கும் 62 வயதான பஸ்நாயக்க அப்புஹாமிலாகே துலானி தீபிகா பஸ்நாயக்க என்ற பெண்மணி, கடந்த 29ஆம் திகதி அதிகாலை வழக்கம் போல் நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அப்போது, தனது கட்டிலுக்கு அருகில் யாரோ நடமாடுவது போன்ற ஒரு விசித்திரமான உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. திடுக்கிட்டு கண்விழித்துப் பார்த்தபோது முகத்தை முழுமையாக மூடியபடி, அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தி முனையில் அவர் முன்னால் நின்றுகொண்டிருந்தனர்.
பெண்ணை சத்தமிடக் கூடாது என மிரட்டிய அந்த முகமூடி கும்பல், “வீட்டில் இருக்கும் பணத்தையும் நகையையும் உடனடியாக எடு!” என அதட்டியுள்ளனர். தன்னிடம் பணம் எதுவும் இல்லை என அந்தப் பெண் பதறியடி கூறியபோதும், கொள்ளையர்கள் விடுவதாக இல்லை. வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடி, அங்கிருந்த பெருமளவிலான தங்க நகைகளையும், அந்தப் பெண் விரலில் அணிந்திருந்த தங்க மோதிரத்தையும் பறித்துக்கொண்டனர். அத்தோடு நிறுத்தாமல், அங்கிருந்த 10,000 ரூபா பெறுமதியான ஒரு கைத்தொலைபேசியையும் சுருட்டிக்கொண்டு அந்த கும்பல் இருளில் மறைந்தது.
கொள்ளையர்கள் சென்ற பின் தெரிந்த அதிர்ச்சி உண்மை!
கொள்ளைக் கும்பல் வீட்டை விட்டு வெளியேறியதும், பதற்றத்துடன் தனது கணவரைத் தேடி ஓடிய துலானிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவரது கணவரின் கை, கால்கள் மற்றும் வாய் துணிகளால் கட்டப்பட்ட நிலையில், அவர் படுக்கையறையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்ததும் முதன்வேலையாக கணவரைத்தான் கட்டிப்போட்டு மிரட்டியுள்ளனர் என்பது பின்னரே தெரியவந்தது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு ரூபா 2 கோடியே 21 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸார் வசம் வாக்குமூலம்: வலைவீசித் தேடப்படும் முகமூடிக் கும்பல்!
பாதிக்கப்பட்ட பெண்மணி உடனடியாக மாதம்பே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கொள்ளையர்கள் முகமூடி அணிந்திருந்தாலும், அவர்களின் உடல்வாகு மற்றும் குரலை வைத்து, மீண்டும் பார்த்தால் தம்மால் நிச்சயமாக அடையாளம் காண முடியும் என அவர் பொலிஸாரிடம் தைரியமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை கொள்ளையர்கள் பற்றிய எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள மாதம்பே பொலிஸார், சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களைச் சேகரித்து, கொள்ளையர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


