கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தலைக்கு மேலாக வெடித்துச் சிதற, மூச்சுத்திணறலுக்கு மத்தியிலும் ஒரு கையில் தன் போனை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு ஓடுகிறார் 18 வயது அவன்ஷிகா சிங். தன் கண் முன்னாலேயே நிராயுதபாணியாக நின்ற மாணவிகளைப் பொலிஸார் கொடூரமாகத் தாக்குவதைப் படம் பிடித்த அவர், வீட்டிற்குச் சென்றதும் அதைச் சிறிய ரீல்ஸாக (Reels) மாற்றி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றினார். “இன்று நாடாளுமன்றத்தின் அழைப்பு மணியை அடித்துவிட்டு ஓடிவிட்டோம்” என்ற அவரது ஒற்றை வரிக் குறிப்புடன் வெளியான அந்த வீடியோ, இந்தியாவில் இப்போது வெடித்துள்ள பிரம்மாண்ட மாணவர் புரட்சியின் சாட்சியாக மாறியுள்ளது.
ஜூலை 20 அன்று தேசிய அளவில் நடைபெற்ற பரீட்சை வினாத்தாள்கள் தொடர்ச்சியாக கசிந்தமைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் டெல்லி வீதிகளில் திரண்டபோது, இந்தியத் தலைநகரமே ஸ்தம்பித்தது. பொலிஸார் நடத்திய கொடூரமான தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். வரலாற்றில் முதன்முறையாக டெல்லியில் மாணவர்கள் மீது ‘பெலட்’ (Pellet) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும், பொலிஸார் ‘Meta’ ஸ்மார்ட் கண்ணாடிகளை அணிந்து தாக்குதல் நடத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதிகார வர்க்கம் இந்த அத்துமீறல்களை மறுப்பதற்கு முன்பே, மாணவர்களின் ஸ்மார்ட்போன்களில் பதிவான காட்சிகள் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.
கடந்த 12 ஆண்டுகளாகப் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதா கட்சியும் சோஷியல் மீடியாவைத் தங்கள் பிரசார ஆயுதமாகக் கச்சிதமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அதே சோஷியல் மீடியாவை மோடி அரசுக்கு எதிரான கூர்மையான ஆயுதமாக ‘Gen Z’ இளைஞர்கள் திருப்பியுள்ளனர். தடிச்சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் காட்சிகளை ஹிப்-ஹாப் பாடல்களுடனும், கூர்மையான நகைச்சுவை மீம்ஸ்களுடனும் இணைத்து வைரலாக்கும் இளைஞர்கள், “நாங்கள் எங்களது புரட்சியை நேரலை செய்கிறோம்” என கெத்தாக முழங்குகின்றனர்.
போராட்டக் களத்தில் பொலிஸாருக்குப் பூக்களைக் கொடுத்துக் கிண்டல் செய்வதும், ‘One Piece’ அனிமேஷன் மற்றும் ‘Marvel’ சூப்பர்ஹீரோ உடைகளை அணிந்து கலந்துகொள்வதும் என இந்த Gen Z தலைமுறையின் எதிர்ப்பு வடிவம் முற்றிலும் புதுமையாக இருக்கிறது. “Cockroach Janta Party” என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ள இவர்கள், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமா, போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பெறல் மற்றும் வினாத்தாள் கசிவால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு என 3 கோரிக்கைகளை முன்வைத்து அசைக்க முடியாத உறுதியுடன் நிற்கின்றனர்.
பாரம்பரிய தொலைக்காட்சி ஊடகங்கள் இந்தச் செய்தியை சரிவரக் காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் மற்றும் சுயாதீன ஊடகங்கள் மூலம் இந்த போராட்டம் மும்பை, பெங்களூரு, லக்னோ என இந்தியாவெங்கும் தீயாகப் பரவியுள்ளது. “மோடியின் அரசுக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான அகந்தையை எங்கள் தலைமுறை சகித்துக்கொள்ளாது” என முழங்கும் இந்த இளைஞர்கள், பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கங்களையும் தங்கள் கருத்துக்களால் முடக்கி வருகின்றனர். சோஷியல் மீடியா மூலம் ஆட்சியைப் பிடித்த மோடிக்கு, அதே சோஷியல் மீடியா மூலம் Gen Z தலைமுறை இப்போது மிகப்பெரிய அரசியல் சவாலை விடுத்துள்ளது.





