சிலாபம் – ஆனமடுவ வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் வைது மோட்டார் சைக்கிள், திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வடிகானுக்குள் தூக்கி வீசப்பட்டு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை உடனடியாக மீட்டு சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலும், சிகிச்சைப் பலனின்றி அந்த இளைஞனின் உயிர் பிரிந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர் பள்ளம, பொத்துக்குளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மொஹொட்டி பத்திரன்னஹேலாகே கயான் புஷ்பகுமார என அடையாளம் காணப்பட்டுள்ளார். துடிதுடிப்பான வயதில், வீட்டிற்கும் சமூகத்திற்கும் ஆதாரமாக இருக்க வேண்டிய ஒரு இளம் உயிர் இப்படி வீதி விபத்தொன்றில் பலியாகியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ திசையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே மோட்டார் சைக்கிள் செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதுடன், விபத்துக்கான பின்னணி காரணங்கள் குறித்து சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
ஜுட் சமந்த


