வீதிக்கு வந்த மாணவர்கள்… துரத்திய நவீன ரகசியக் கண்கள்!
இந்திய தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான மாணவர்களின் பாரிய போராட்டக்களம், வெறும் கோரிக்கைகளை முழங்கும் இடமாக மட்டும் மாறவில்லை. அது, நவீன தொழில்நுட்பத்தின் கோரப்பிடிக்குள் மக்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறார்கள் என்பதை உலகிற்கே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. போராட்ட களத்திற்கு வந்த மாணவர்களின் முகங்களை, அங்கே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸாரின் அதிநவீன கண்காணிப்பு வாகனங்கள் ‘360 பாகை’ கோணத்தில் சுழன்று சுழன்று படம் பிடித்து, அவர்களின் முக அடையாளங்களை AI தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்துள்ளன.
இன்ஸ்டாகிராம் கணக்குகள் முதல் ‘இக்ஷனா’ வாகனம் வரை!
போராட்ட களத்திற்கு நுழையும் இளைஞர்களின் இன்ஸ்டாகிராம் முகவரிகளைக் கூட பொலிஸார் குறிப்பெடுத்துக் கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. களத்தில் நிறுத்தப்பட்டிருந்த டெல்லி பொலிஸின் ‘இக்ஷனா’ (Ikshana – பார்வை) என்ற பெயரிடப்பட்ட சிறப்பு ரோந்து வாகனத்தின் கணினித் திரைகளில், சாதாரண மாணவர்களின் முகங்களைச் சுற்றி பச்சை நிறக் கட்டங்கள் தோன்றி, அவர்களின் முகத் துல்லியத்தை AI கணக்கிட்டுக் கொண்டிருந்த காட்சியை சர்வதேச ஊடகவியலாளர்கள் நேரிலேயே கண்டுள்ளனர். “குற்றப் பின்னணி உள்ளவர்களைக் கண்டறியவே இந்தச் சாதனம்” என பொலிஸார் சமாளித்தாலும், தங்களை அறியாமலேயே தங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படுவதை உணர்ந்த மாணவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சட்டத்திற்குப் புறம்பான கண்காணிப்பா? நீதிமன்றத்தில் வெடித்த மோதல்!
இந்தியாவில் பொலிஸார் இதுபோன்று முக அடையாளக் கணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ சட்ட அனுமதியும் கிடையாது என டிஜிட்டல் உரிமை அமைப்புகள் கொதித்தெழுந்துள்ளன. இதனையடுத்து, மாணவர் தலைவி ஆயிஷே கோஷ் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கொன்றைத் தொடந்துள்ளார். “போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் இருந்து சட்டவிரோதமாகச் சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவுகள் அனைத்தையும் உடனடியாக பொலிஸார் அழிக்க வேண்டும்; இத்தகைய AI கண்காணிப்புகளுக்குக் கடுமையான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும்” என அந்த மனுவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அரசின் விசித்திர வாதமும் எதிர்கால அபாயமும்!
அரசாங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், “பொது இடங்களில் கூடும்போது தனிநபர் சுயாட்சி அல்லது தனியுரிமை பேசுவது நகைச்சுவையானது” என்றும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க இத்தகைய AI சோதனைகள் மிகவும் அவசியம் என்றும் வாதாடியுள்ளார். கல்வி அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யும் அளவுக்கு இப்போராட்டம் தீவிரமடைந்த போதிலும், பொலிஸார் சேகரித்த தரவுகள் எங்கே பயன்படுத்தப்படும் என்ற அச்சம் ஓய்ந்தபாடில்லை. “நாட்டின் பாதுகாப்பைக் காரணம் காட்டி மக்களின் முகங்களை AI மூலம் தொடர்ந்து கண்காணிப்பது, எதிர்காலத்தில் ஜனநாயக ரீதியான கருத்து சுதந்திரத்தையே முற்றாக முடக்கிவிடும்” என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.




