வவுனியா: தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கும் பரிசோதனைகளுக்கும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் நீண்டகாலமாக ஆதங்கம் நிலவிவரும் நிலையில், வவுனியாவில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வவுனியா நகரில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்று, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை மீறி, முழுமையான இரத்தப் பரிசோதனைக்கு (Full Blood Count – FBC) நோயாளர்களிடம் இருந்து அதிக தொகையை அறவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு தெரியாமல் இடம்பெற்று வந்த இந்த பகல் கொள்ளை, நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) புலனாய்வு அதிகாரிகளின் கழுகுப் பார்வையில் இருந்து தப்பவில்லை. குறித்த வைத்தியசாலையில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, அரசாங்க விலைக் கட்டுப்பாட்டு சட்ட விதியை மீறி நோயாளர்களிடம் கூடுதல் கட்டணம் கறந்தது ஆதாரங்களுடன் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை உடனடியாக வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது.
வழக்கை விசாரணை செய்த வவுனியா நீதவான் நீதிமன்றம், அரசாங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய குற்றத்திற்காக குறித்த தனியார் வைத்தியசாலைக்கு ரூ. 5,00,000 (ஐந்து இலட்சம் ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
தனியார் மருத்துவமனைகளில் இடம்பெறும் இவ்வாறான மேலதிக கட்டண அறவீடுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது.


