சிறைச்சுவர் தாண்டிய இரகசியப் பொதி! கொழும்பில் வெடித்த கலவரமும் ட்ரோன் பறந்த நள்ளிரவுப் பரபரப்பும்!
இரவின் அமைதியைக் கிழித்துக்கொண்டு கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையிலிருந்து திடீரெனக் கேட்ட அலறல் சத்தங்கள், தலைநகரையே ஒரு கணம் உரைய வைத்தன. சிறைச்சாலையின் உயரமான சுவருக்கு மேலால் திடீரென உள்ளே விழுந்த அந்த ஒரு சிறிய இரகசியப் பொதிதான், அத்தனை கலவரத்திற்கும் பிள்ளையார் சுழி போட்டது. ரோந்து பணியிலிருந்த அதிகாரி ஒருவர் சமயோசிதமாகச் செயற்பட்டு அப்பொதியைக் கைப்பற்ற முயன்ற கணமே, சிறை வளாகமே ஒரு போர்க்களமாக மாறத் தொடங்கியது.
பொதி கைநழுவிய ஆத்திரத்தில் கைதிகள் சிலர் கட்டுக்கடங்காத வன்முறையில் இறங்கினர். அடுத்த சில நிமிடங்களிலேயே ஒரு சிறை அறையின் பூட்டைத் தகர்த்தெறிந்த 40க்கும் மேற்பட்ட கைதிகள், எதற்கும் துணிந்தவர்களாக வெளியே பாய்ந்து வந்தனர். நிலைமை கையை மீறிச் சென்ற அந்த நள்ளிரவு வேளையில், சிறை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து களமிறங்கினர். வான்வழியாக நிலைமையைக் கண்காணிக்க விமானப்படையின் ட்ரோன் கேமராக்கள் விண்ணில் வட்டமிட, முப்படையினரின் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் மெகசின் சிறை கொண்டுவரப்பட்டு நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
கொழும்பு சிறையில் நிலைமை சீரடைந்து, அசம்பாவிதங்களில் ஈடுபட்ட கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அதிரடி உத்தரவைப் பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அடுத்த அதிர்ச்சிச் செய்தி இரத்தினபுரியிலிருந்து வந்தது. நேற்றிரவு லேசான பதற்றத்துடன் காணப்பட்ட இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில், இன்று காலை மீண்டும் கட்டுக்கடங்காத கைதிகளின் கலவரம் வெடித்துச் சிதறியது.
இம்முறை கைதிகளின் கோரத் தாக்குதலுக்கு இரையானது சிறைச்சாலையின் வைத்தியசாலைப் பிரிவுதான். கட்டடத்தின் பெரும் பகுதி அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட, நிலைமை முற்றாகக் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த பொலிஸார் அதிரடியாகக் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டு களத்தை அதிரவைத்துள்ளனர். மெகசினில் தொடங்கிய வன்முறை அலை குருவிட்டவிற்கும் பரவியுள்ளதா அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் சூழ்ச்சி உள்ளதா என்பது குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.



