சிறைகளுக்குள் பாரிய சதி! கைதிகளை பகடைக்காய்களாக மாற்ற பிளான்: அம்பலப்படுத்துகிறது அரசாங்கம்
நாட்டின் பாதுகாப்பு மற்றும் சிறைச்சாலைகளின் அமைதியை குலைக்கும் வகையில் பின்னணியில் இருந்து இயங்கும் சில சுயநலவாதிகள், கைதிகளை தூண்டிவிட்டு பெரும் கலவரத்தை உருவாக்க சதித்திட்டம் தீட்டி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்களின் குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக கைதிகளின் உணர்ச்சிகளை தூண்டிவிடும் இந்த அபாண்டமான வலையில் யாரும் சிக்கிவிடக் கூடாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நீண்டகாலமாக சிறைக்கைதிகள் சந்தித்து வரும் மிக முக்கியப் பிரச்சினையான பிணை தாமதத்திற்கு, அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை தாமதமே முதன்மை காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் துறையில் காணப்பட்ட 118 பணியாளர் வெற்றிடங்கள் காரணமாகவே ஆயிரக்கணக்கான அறிக்கைகள் முடங்கிக் கிடந்தன. ஆனால், இந்த முடக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உடனடியாக 70 புதிய ஊழியர்களை நியமிக்கவும், இம் மாத இறுதிக்குள் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்களை இறக்கி வேலையை விரைவுபடுத்தவும் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுமட்டுமன்றி, மாதத்திற்கு 7,500 முதல் 9,000 அறிக்கைகள் வரை விரைவாக வழங்கி வழக்குகளை தள்ளுபடி செய்யும் அளவுக்கு திணைக்களத்தின் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 10 கிராமிற்கும் அதிகமான தூய போதைப்பொருள் வழக்குகளில் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய சிக்கலான சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. இதன் மூலம் மேல் நீதிமன்றங்கள் மூலமாகவே மிக விரைவாக பிணை கோரக்கூடிய சட்ட முன்மொழிவு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
“உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் அரசாங்கம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறது. சிறை நெரிசலைக் குறைக்கவும் வசதிகளை மேம்படுத்தவும் முன்னெப்போதும் இல்லாத முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, சிலரின் சுயநல ஆசைக்காக உங்களை பகடைக்காய்களாக பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” என அமைச்சர் நேரடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைதியின்மை என்ற பெயரில் சிறைச்சாலை சொத்துக்களை தீயிட்டு கொளுத்துவதும், வளங்களை சேதப்படுத்துவதும் இறுதியில் கைதிகளின் உரிமைகளையே பறிக்கும் என எச்சரித்த அமைச்சர், சட்டத் திருத்தங்கள் மற்றும் பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்தும் அரசாங்கத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.


