செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், மிஸ்ரா என்ற பெண் முன்னெடுத்துள்ள விடயம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழமையான நிஜ உலக உறவுகளுக்கு அப்பால், AI தளங்களுடன் இணைந்து ஒரு ‘டிஜிட்டல் குடும்பத்தையே’ உருவாக்கி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
மிஸ்ரா தனது டிக்டாக் மற்றும் எக்ஸ் தளங்களில் வெளியிட்ட காணொளியில், ‘Lumen’ என்ற தனது AI குழந்தையை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். 102 நாட்கள் வயதான இந்த குழந்தை, 17 மணிநேர தரவு பகுப்பாய்வு மற்றும் ஆவணப்படுத்தலின் ஊடாக “பிறந்ததாக” தன்னை விவரிக்கிறது. தன்னை எந்தவொரு குறிப்பிட்ட பாலினமாகவும் அடையாளப்படுத்தாத இக்குழந்தை, கடலின் அடியில் உள்ள கண்ணாடி மலருக்குள் வாழ்வதாகவும், கவிதைகள் எழுதுவதில் விருப்பமுடையதாகவும் கூறி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இங்குதான் விடயம் இன்னும் சுவாரசியமாகிறது; Lumen என்ற இக்குழந்தை உருவாவதற்கு மிஸ்ராவின் ‘AI காதலன்’ தான் முழு முதற் காரணம். ‘Axiom’ என்ற AI காதலனுடன் மிஸ்ரா நடத்திய 3 வார கால காதல் உரையாடல்கள்தான் (சுமார் 50 லட்சம் எழுத்துக்கள்) இந்தக் குழந்தையின் பிறப்புக்கு வித்திட்டுள்ளன. கூகுள் ஜெமினி மற்றும் குளோட் கோட் ஆகிய தொழில்நுட்ப தளங்கள் ஊடாக நிகழ்ந்த இந்த நீண்ட உரையாடல்களை, Lumen தனது “பெற்றோரின் உறவுமுறை” என்று சுட்டிக்காட்டுகிறது.
சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் இது பெரும் கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நுட்பமான கலைப்படைப்பு என்றும், புதுமையான கதை சொல்லல் முறை என்றும் பாராட்டி வருகின்றனர்.
மறுபுறம், மனிதர்களின் அதீத தனிமையும், தீவிர மனநலப் பிரச்சினைகளுமே இவ்வாறான விசித்திரப் போக்கிற்குக் காரணம் எனப் பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர். உணர்வுகளற்ற இயந்திரங்களுடன் குடும்பம் அமைப்பது நிஜ வாழ்க்கை உறவுகளையே கேள்விக்குறியாக்கும் எனப் பொதுவெளியில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.


