ஜுட் சமந்த
25 ஏக்கர் தோட்டத்தில் துணிகர கொள்ளை: தடயங்களை அழிக்க சிசிடிவி கேமராக்களையே அள்ளிச் சென்ற பலே திருடர்கள்!
பரந்து விரிந்த 25 ஏக்கர் தென்னந்தோட்டம், சுற்றிலும் அதிநவீன சிசிடிவி கேமராக்களின் தீவிர கண்காணிப்பு; ஆனாலும் தடயமே இல்லாமல் அனைத்தையும் அள்ளிச் சென்று பொலிஸாருக்கே சவால் விட்டுள்ளனர் ஒரு மர்மக் கும்பல்.
ஆனைமடுவ – சேருகெலே, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அக்குரண பத்திரணலாகே விஜேரத்ன (வயது 69) என்பவருக்குச் சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்தத் துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது. வழமைபோல கடந்த 25 ஆம் திகதி மாலை வீட்டைச் சுற்றிலும் மின்விளக்குகளைப் பொறுத்திவிட்டு, அவர் தோட்டத்திலுள்ள காவல் கொட்டகைக்கு (முரமடுவ) சென்றுள்ளார்.
ஆனால், மறுநாள் 26 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது காத்திருந்தது பேரதிர்ச்சி. வீட்டின் பாதுகாப்பிற்காக நான்கு பக்கங்களிலும் பொருத்தப்பட்டிருந்த 8 அதிநவீன சிசிடிவி கேமராக்களும் மாயமாகியிருந்தன.
உடனடியாக வீட்டைச் சோதனையிட்டபோது, திருடர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசையைக் காட்டியிருப்பது அம்பலமானது. தங்களின் அடையாளங்கள் எக்காரணம் கொண்டும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த கொள்ளையர்கள், சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்யும் டி.வி.ஆர் (DVR) இயந்திரத்தையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.
அத்துடன் திருப்தியடையாத அவர்கள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோகிராம் கஜு (முந்திரி) அடங்கிய மூட்டை, குழாய் கிணற்றின் நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் அங்கிருந்த டிராக்டரின் பிரதான பேட்டரி உள்ளிட்ட பெறுமதிமிக்க பல பொருட்களையும் சுருட்டிக்கொண்டு இரவோடு இரவாகத் தப்பியோடியுள்ளனர்.
திட்டமிட்டு சாட்சியங்களை அழித்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உப பொலிஸ் பரிசோதகர் சுனில் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் கொள்ளையர்களைக் கைது செய்ய தீவிர வலைவீசி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


