இலங்கை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதியதொரு சட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முக்கியஸ்தர்கள் தாக்கல் செய்த மனுவை முற்றாகத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் நிபுண ஆராய்ச்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதனால் இதற்கு மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) கோரப்பட வேண்டும் எனவும் தெரிவித்து, BASL இன் பொருளாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோர் விசேட மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையிலேயே, இந்த வழக்கில் தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தோன்றி வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி NPP நாடாளுமன்ற உறுப்பினர் களமிறங்கியுள்ளார்.
குறித்த சட்டத்தரணிகள் சங்க மனுதாரர்களின் வாதங்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், சட்ட ரீதியாக நிலைநிறுத்த முடியாதவை எனவும் லக்ஷ்மண் நிபுண ஆராய்ச்சி தனது மனுவில் மிகத் தெளிவாக நிராகரித்துள்ளார். உரிய தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றும் அரசியலமைப்பு பேரவை பொறிமுறையை தவிர்ப்பதாக கூறப்படும் வாதங்கள் அனைத்தும் தவறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல், பிரதம நீதியரசரின் ஓய்வுபெறும் திகதி தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய மாற்றங்களே கொண்டுவரப்படவுள்ளன.
இவ்வாறான சீர்திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளையோ, சட்டத்தின் ஆட்சியையோ அல்லது நீதித்துறையின் சுயாதீனத்தையோ எவ்விதத்திலும் மீறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரமுள்ளதால், மக்கள் தீர்ப்பு எதனையும் நாட வேண்டிய அவசியமில்லை எனவும், BASL மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்குமாறும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது சட்டமாக மாறினால் இதன் மூலம் நேரடிப் பலனைப் பெறப்போகும் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி தற்போதைய பிரதம நீதியரசரே ஆவார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவரது பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படுவதாக மக்கள் மத்தியில் ஒரு வலுவான சந்தேகம் நிலவி வருவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நீதித்துறை மற்றும் பிரதம நீதியரசரை இலக்கு வைத்து அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிறுவனத்தையும் போலவே, நீதித்துறையும் சட்டபூர்வமான கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது என்பதை சங்கம் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது.
நீதித்துறையின் சுயாதீனம் என்பது தவறுகளையோ பொறுப்புக்கூறலையோ மறைப்பதற்கான ஒரு கேடயம் அல்ல. மாறாக, சட்டத்தின் ஆட்சி, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய அரணாகும். எனவே, நீதித்துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, உண்மையான பிரச்சினைகளைச் சட்ட வழிமுறைகளின் ஊடாகத் தீர்க்க முன்வருமாறு அரசு, ஊடகங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.



