ஜுட் சமந்த
நள்ளிரவு அமைதியை உடைத்துக்கொண்டு, தொழிற்பேட்டைப் பகுதியையே அதிர வைத்த திடீர் தீ விபத்தொன்று இன்று அதிகாலை பதிவாகியுள்ளது. ஏற்றுமதிக்கான கயிறுகளை உற்பத்தி செய்து பதப்படுத்தும் பிரபல தொழிற்சாலையொன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது.
இன்று (30) அதிகாலை 3.00 மணியளவில் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் திடீரெனப் புகைமூட்டத்துடன் எழத் தொடங்கிய தீ, அங்கிருந்த கயிறு மூலப்பொருட்களின் காரணமாக சில நிமிடங்களிலேயே தொழிற்சாலை கட்டடம் முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது.
தீயின் வேகம் அதிகரித்ததை அடுத்து, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் படையினர் அவசரமாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சிலாபம் தீயணைப்புப் பிரிவினர், லுணுவள பொலிஸார் மற்றும் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட தீவிர போராட்டத்தின் பலனாகப் பரவிவந்த தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்தோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்பதை வென்னப்புவ உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசேல புல்வங்ஷ உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலோ அல்லது இதனால் ஏற்பட்ட மொத்த சொத்து சேதங்கள் குறித்தோ இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


