ஜுட் சமந்த
இலங்கையின் அரச நிர்வாகக் கட்டமைப்பில் முதுகெலும்பாகச் செயற்படும் ஒன்றரை இலட்சம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் எதிர்காலத்தை மறுசீரமைக்கும் மிக முக்கியமான நகர்வொன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் தற்போதைய நிலையில் சுமார் 1,50,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இத்தனை பாரிய அரச படைப்பிரிவுக்கு முறையானதொரு சேவை யாப்போ, தெளிவான பதவி உயர்வு நடைமுறையோ அல்லது அதி விசேட தரப் பதவி உயர்வுகளோ இன்றுவரை வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை தொழிற்சங்கப் பிரதிநிதிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.
தற்போது நடைமுறையிலுள்ள சேவை யாப்பு எந்தவொரு அறிவியல் அடிப்படையுமின்றி உருவாக்கப்பட்டுள்ளது எனவும், இதன் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு நிர்வாக மற்றும் தொழில்சார் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தத் தொடர் முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், ‘அரசு மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால்’ விசேடமாகத் தயாரிக்கப்பட்ட புதிய சேவை யாப்பு வரைபொன்று, அரச ஊழியர் சம்பள மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸிடம் ஆணைக்குழு வளாகத்தில் வைத்து நேரடியாகக் கையளிக்கப்பட்டது.
இந்தச் சந்திப்பையடுத்து, முன்வைக்கப்பட்ட வரைவு தொடர்பில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதியில் ஒரு தீர்க்கமான கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் உடன்பாடு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் அரசு மற்றும் மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர்களான அனுராத செனவிரத்ன, ரி.டபிள்யூ.எம். அபேசிங்க, தம்மிக முனசிங்க, சமந்த உதயங்க மற்றும் ஊடக இணைப்பாளர் கீதானந்த திலகரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.


