Home Blog

நாகவில்லுவில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ்வின் நினைவுதினம்!

பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நாகவில்லுவில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு நிகழ்வு!

இலங்கை திருநாட்டில் பெளதீக ரீதியான பல வேலைத்திட்டங்களையும், இடம்பெயர்வு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பறந்துபட்ட அறிவினையும் கொண்டிருந்த எருக்கலம்பிட்டியை சேர்ந்த மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் 7ஆவது வருட நினைவு தின நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

அந்த வகையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் நினைவுப் பேருரையும், புத்தக வெளியீடு நிகழ்வும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் ஏற்பாட்டில் நேற்று 25.08.2025 புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலய அதிபர் ஜனாப் S.M. ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், புத்தி ஜீவிகள் மற்றும் குடும்பத்தார்கள் கலந்தகொண்டமை விஷேட அம்சமாகும்.

சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் பொருளாளர் ஜனாப் ஏ.ஜி. அனீஸ் (Bsc.Agri) அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

மேலும் இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களினால் நூல் அறிமுக உரையும், நினைவுப் பேருரையும் மிகவும் உணர்வுபூர்வமாக நிகழ்த்தப்பட்டது.

கிழக்கு மற்றும் தென் கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையில் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நினைவு கூறிய பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், வடக்கில் ஏற்பட்ட யுத்தம் மற்றும் முஸ்லிம்களின் இடம்பெயர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்ட மிக முக்கியமானவர் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்கள் எனவும் எடுத்துரைத்தார்.

வடக்கு முஸ்லிம்களின் இடம்பெயர்வு மற்றும் மீள் குடியேற்றம் தொடர்பில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் பலதரப்பட்ட கலந்துரையாடல்களை நடத்தி, சர்வதேசம் வரை இவ்விடயங்களை கொண்டுசென்ற மகான் மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் என பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் தனது உரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் புதல்வி சட்டத்தரணி எப்.சப்னா ஹஸ்புல்லாஹ் அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், நூல் வெளியீடு நிகழ்வும் இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தரும், புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாக சபையின் முன்னாள் உறுப்பினருமான ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் (GS) அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

மேலும் சமூக அபிவிருத்திக்கான ஆய்வு செயலமைப்பின் செயலாளர் ஜனாப் எஸ்.எச்.எம். றிஸ்னி அவர்களினால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டதுடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், மர்ஹூம் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் பாரியாருக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில், பேராசிரியர்கள், கல்விமான்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், பாடசாலைச் சமூகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் அவர்களின் குடும்பத்தார்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன், ஈ நியூஸ் பெஸ்ட் ஊடக நிறுவனம் ஊடக அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக ஒன்று திரண்ட அரசியல் தலைவர்கள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது, நாட்டின் அடிப்படை ஜனநாயக நிறுவனங்களின் வலிமை குறித்து கடுமையான கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவுகள் ஒரு தனிநபரின் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவிதியையும் விட, சமூகத்தின் உரிமைகளுக்கான பிரச்சினைகளை தோற்றிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் தலைவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது மற்றும் விளக்கமறியலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய விசேட ஊடக சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அறிக்கையை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல் அணி சாம்பியன் ஆனது!

‘நேஷன்ஸ் லீக்’ கால்பந்தில் போர்ச்சுகல் அணி சாம்பியன் ஆனது. பைனலில் ‘பெனால்டி ஷூட் அவுட்டில்’ 5-3 என ஸ்பெயினை வீழ்த்தியது.

ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்காக ‘நேஷன்ஸ் லீக்’ தொடர் நடத்தப்படுகிறது. மொத்தம் 54 அணிகள் பங்கேற்றன. நேற்று ஜெர்மனியின் முனிக் நகரில் நடந்த பைனலில், போர்ச்சுகல், நடப்பு யூரோ சாம்பியன் ஸ்பெயின் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் 21வது நிமிடம் ஜுபிமெண்டி (ஸ்பெயின்), 26வது நிமிடம் மெண்டிஸ் (போர்ச்சுகல்) தலா ஒரு கோல் அடித்தனர். 45வது நிமிடம் மைக்கேல் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் 61 வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். போர்ச்சுகல் அணிக்காக இவர் அடித்த 138வது கோல் இது. 90 நிமிட முடிவில் போட்டி 2-2 என சமன் ஆனது. அடுத்து நடந்த கூடுதல் நேரத்திலும் (30 நிமிடம்) இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

இதையடுத்து வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘பெனால்டி ஷூட் அவுட்டுக்கு’ சென்றது. இரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் தரப்பட்டன. காயம் காரணமாக 88 வது நிமிடம் வெளியேறிய ரொனால்டோ, இதில் பங்கேற்கவில்லை.

முதல் 3 வாய்ப்பில் போர்ச்சுகலின் ராமோஸ், விடின்ஹா, பெர்ணான்டஸ் கோல் அடித்தனர். மறுபக்கம் ஸ்பெயின் தரப்பில் மெரினோ, பயேனா, இஸ்கோ கோல் அடிக்க 3-3 என ஆனது.

4வது வாய்ப்பில் மெண்டெஸ் (போர்ச்சுகல்) கோல் அடிக்க, ஸ்பெயினின் மோராட்டோ அடித்த பந்தை கோல் கீப்பர் டீகோ கோஸ்டா தடுத்து அசத்தினார்.

5வது வாய்ப்பில் நெவேஸ் கோல் அடித்தார். இதையடுத்து 5-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் ‘திரில்’ வெற்றி பெற்றது. 2019க்குப் பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் ஆனது.

தில்லையடியில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

புத்தளத்தில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளுடன் வேன் ஒன்றும் பறிமுதல்!

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, புத்தளம், தில்லையடி பகுதியில் 2025 ஜூன் 05 இரவு வேளையில் நடத்திய சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட ஒரு வேன் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனம், புத்தளம் பொலிஸாருடன் இணைந்து தில்லையடி பகுதியில் நடத்திய இந்த சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் முந்நூற்று எண்பத்தாறு (386) கிலோகிராம் பீடி இலைகளானது வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் வேன் ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களால் ஆபத்தா?

விண்வெளியில் பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கொள்களை சீனா நினைத்தால் வெறும் 12 மணி நேரத்தில் தாக்கி அழித்துவிட முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் என்கிற செய்தி ஊடகத்தில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது சீனா 99 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. இவை அனைத்தும் நான்ஜிங் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஆஸ்ட்ரோனாட்டிக்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளிக் கட்டுப்பாட்டுத் துறையின் இயக்குநர் வூ யுன்ஹுவா தலைமையிலான குழுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தும் எலான் மஸ்கின் 1400 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை வெறும் 12 மணி நேரத்தில் காலி செய்துவிடும். சீன செயற்கைக்கோளில் லேசர், நுண் அலைகளை உருவாக்கும் கருவி, உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் வெறுமென நெட்வொர்க் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதில்லை. தவிர, ராணுவ நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என சீனா குற்றம்சாட்டி வருகிறது.

அதாவது, உக்ரைன்-ரஷ்யா போரில், உக்ரைன் படைகளுக்கு தகவல்கள் கொடுக்கவும், ரஷ்ய எல்லையை துல்லியமாக கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்ய போரின்போது அப்போதைய உக்ரைனின் துணைப் பிரதமரான மைக்கைலோ ஃபெடோரோவ், “ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவையை உடனடியாக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மஸ்க், “உடனடியாக சேவை வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

உக்ரைன் போருடன் மட்டுமே ஸ்டார்லிங்க் நிற்காது, நாளை சீனாவுக்கும்-தைவானுக்கும் பஞ்சாயது ஏற்பட்டால் அப்போதும், தைவானுக்கு சப்போர்ட் செய்ய ஸ்டார்லிங்க் வரும். எனவே இந்த கூட்டு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க சீனா இந்த புதிய செயற்கைக்கோள்களை உருவாக்கியிருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு இதற்கான பணிகளை சீனா தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ‘கியான்ஃபான் மெகா-விண்மீன் திட்டம்’ (Qianfan mega-constellation project) என்றும் பெயரிட்டிருந்தது. நோக்கம் உலகம் முழுவதும் இணைய தொடர்பை வழங்குவதாகும். இதற்காக மொத்தம் 15,000 சிறிய ரக செயற்கைக்கோள்களை ஏவ சீனா முடிவெடுத்தது. இதன் முதல் தொகுப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்டது. இதில் 18 செயற்கைக்கோள்கள் இருந்தன.

ஒவ்வொன்றும் சுமார் 300 கி.கி எடையில் இருந்தது. இவை பூமியிலிருந்து 800 கி.மீ உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதேபோன்று 2024 டிசம்பரில் அடுத்து இரண்டு தொகுதி ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. தற்போது மொத்தம் 99 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன. 15,000 செயற்கைக்கோள்களை 3 கட்டங்களாக ஏவ இருக்கிறது. முதல் கட்டத்தில் 1,296 செயற்கைக்கோள்கள் ஏவப்படும். இதில் 648 செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் கன்னி உரை

அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்

தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:

மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.

நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.

ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.

ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.

மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.

மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.

நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.

மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தேர்தலில் இவ்வாறுதான் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்

அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.

அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.

அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.

தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.

எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.

அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.

அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.

எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.

அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு  மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக மாறும்

புத்தளம் தல வைத்தியசாலை தேசிய வாத்தியாசலையாக மாற்றம் பெரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று புத்தளத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ அலிசப்ரி ரஹீம் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன தலைமையில் புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

புத்தளம் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வருகின்ற புத்தளம் தல வைத்தியசாலையை தரமுயர்த்துவது தொடர்பாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அலிசப்ரி ரஹீம் அவர்களினால் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோலுக்கிணங்க குறித்த வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மேலும் புத்தளத்தில் மீன் பிடி தொழிலை முன்னேற்றும் நோக்கத்தில் மீன் பிடி துறைமுகம் ஒன்றை அமைக்கும் யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டதுடன், அதற்கான முன்னெடுப்புகளும் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டமை புத்தளம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டில் நிரந்தர பொருளாதார அபிவிருத்தியை நிலை நாட்ட தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாட்டை பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவதே தனது பிரதான நோக்கம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சைனப் ஆரம்பப் பாடசாலைக்கு ஆளுநர் வருகை!

புத்தளம் சைனப் ஆரம்ப பாடசாலையின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் யஹியா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து புத்தளம் ஜெய்னப் பாடசாலைக்கு 22 லட்சம் ரூபா பெறுமதியான நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு, சிறுவர் விளையாட்டு நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தல் மற்றும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் செயற்திட்டத்தின் கீழ் BCMH நிறுவனத்தினால் கற்றல் உபகரணம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் கடந்த செவ்வாய்க்கிழமை (16) வெகு விமர்சையாக இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், விசேட அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கௌரவ அதிதியாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் அர்ஜுன ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆரம்ப பாடசாலையின் முக்கியத்துவம் மற்றும் அறிவார்ந்த சமூகத்தை கட்டியெழுப்ப ஆரம்ப பாடசாலை ஆற்றிவருகின்ற அர்ப்பணிப்பு குறித்து விரிவாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமத், புத்தளம் மாவட்ட பாடசாலைகளின் துரித வளர்ச்சி பற்றியும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மேலும் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” எனும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் செயற்திட்டத்திற்கு வடமேல் மாகாண ஆளுநர் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்ஷி ஜமால்தின், இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி ஆசிரியர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் உட்பட உறுப்பினர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் அயல் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு
நுழைவாயல் மற்றும் உள்ளக வீதி நிர்மாணத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

ஹிருணிகாவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறை

கடத்தல் வழக்கில் முன்னாள் எம்.பி ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

தெமட்டகொட பகுதியிலுள்ள கடை ஒன்றில் பணிபுரிந்த அமில பிரியந்த அமரசிங்க எனும் இளைஞர் ஒருவரை 2015 டிசம்பர் 21ஆம் திகதி ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு சொந்தமான டிபெண்டர் வாகனத்தில் கடத்திய வழக்கு விசாரணை முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

29 குற்றங்கள் தொடர்பில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 8 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், அச்சம்பத்திற்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாக ஹிருணிகா மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்திருந்தார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதான ஐந்தாம் சந்தேகநபரின் மகள் அளித்துள்ள வாக்குமூலத்தில், தமது தாயாருடன் தொடர்பு பேணிய நபர் ஒருவரை தாம் காண்பித்ததாகவும், அவரை தமது தந்தையும் அவருடன் சென்றவர்களும் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஹிருணிகாவிடம் அழைத்துச் சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

ஓவியப்போட்டியில் எருக்கலம்பிட்டி மாணவன் முதலாமிடம்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வட மாகாண மானவர்களுக்கிடையிலான சித்திரப்போட்டியில் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்றார்.

வீதி விபத்துக்கள் இல்லாத நாளைக்கான பாடசாலையிலிருந்து அணிவக்குப்போம் எனும் தொனிப்பொருளில் கடந்த வியாழக்கிழமை (13.06.2024) அன்று நடாத்தப்பட்ட வட மாகாண மாணவர்களுக்கிடையிலான குறித்த சித்திரப்போட்டியில் சுமார் 2600 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

சித்திரப்போட்டியில் பங்குபற்றிய 2600 மாணவர்களில் 250 மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு நேற்றைய தினம் (15.06.2024) அவர்களுக்கான போட்டி இடம்பெற்றது.

நடைபெற்று முடிந்த இறுதிச் சுற்றுப்போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி மாணவன் முஹம்மது ஹுசைன் முதலாம் இடம் பெற்று பெருமதிமிக்க பரிசில்களை பெற்றுக்கொண்டார்.

முதலாம் இடம் பெற்ற முஹம்மது ஹுசைன் என்ற மாணவனுக்கு சான்றிதல், துவிச்சக்கரவண்டி மற்றும் 8500/- ரூபா பெறுமதியான வவுச்சரும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த போட்டியில் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய இல்முதீன் முஹம்மது ஹஸ்பான் 7 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி சார்பாக பங்குபற்றிய மற்றொரு மாணவரான முஹம்மது சம்ஹான் 8 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டதுடன், அவருக்கான சான்றிதல், 8500/- ரூபா பெறுமதியான வவுச்சர் மற்றும் பரிசுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாரிய சாவல்களுக்கு மத்தியில் தனி ஒரு மனிதனாக இம் மாணாவர்களை ஊக்கப்படுத்தி, தயார்ப்படுத்தி போட்டியில் பங்குபெறச் செய்து வெற்றிபெறச் செய்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் அவர்களின் இம் முயற்சிக்கு, பாடசாலை சமூகம் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.

தமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்து தேசிய அளவில் இடம்பெறும் போட்டிகளில் மாணவர்களை பங்குபெறச் செய்வதே தனது இலக்கு என சித்திரப் பாட ஆசிரியர் திரு பிரசாந்த் எமது ஊடகத்திற்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் எருக்கலம்பிட்டியில் கடும் வெள்ளம்

புத்தளம் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக புத்தளம் பகுதி முழுதும் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

புத்தளம், தில்லையடி, பாலாவி, புத்தளம் எருக்கலம்பிட்டி, ஹிதாயத் நகர்,  மதுரங்குளி மற்றும் ஏனைய பல கிராமங்களும் வெள்ளித்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமமும் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1500 குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவருவதுடன், அனைத்து வீடுகளும் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நூற்றிற்கும் அதிகமான வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஐநூற்றுக்கும் அதிகமான வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8ஆம் திகதி ஏற்பட்ட மழை வெள்ளித்தினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் மற்றும் பாடசாலைகளில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக இவர்களுக்கான சமைத்த உணவுகள் மூன்று வேலைகளிலும் ஊர் தனவந்தர்களின் உதவியுடனும், பள்ளிவாசல் நிர்வாக சபையின் வழிகாட்டலுடனும் வழங்கப்பட்டு வருவதுடன், ஊர் மக்களுக்கும் உணவு விநியோகங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

இவர்களுக்கான நிவாரண உதவிகள் இதுவரை அரசாங்கத்தினால் வழங்கப்படாத போதிலும், ஊர் மக்களின் பங்களிப்புடன் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு விநியோகங்கள் இதுவரை  வழங்கப்பட்டு வருகின்றது.

புத்தளம் பொத்துவில்லு பகுதியில் உள்ள குளம் மழை நீரினால்  பெருக்கெடுத்துள்ளதால் குறித்த குளத்து நீர் புத்தளம் எருக்கலம்பிட்டி கிராமத்திற்குள் தொடர்ந்தும் மூன்றாவது நாளாக ஊடறுத்து செல்வதால் வீடுகள் தொடர்ந்தும் நீருள் மூழ்கியுள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கத்தின் நிவாரண உதவிக்காக பல மக்கள் தொடர்ந்தும் எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

12 வருட கடூழியச் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிய நபர்!

  • மருத்துவ அறிக்கையில் திடீர் திருப்பம்: 12 வருட கடூழியச் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிய நபர்!
  • எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்: அதிர்ச்சி பின்னணி!
  • வழக்கில் எழுப்பப்பட்ட நியாயமான சந்தேகம்: பாலியல் குற்றச்சாட்டில் இருந்து நபர் முற்றாக விடுதலை!

எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட 12 ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனையிலிருந்து நபர் ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் முழுமையாக விடுவித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. வழக்கின் ஆரம்ப விசாரணைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்குற்றச்சாட்டு, மருத்துவ ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களின் மீள் ஆய்வுக்குப் பின்னர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தை அடைந்துள்ளது.

நீதியரசர்களான அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமசந்திர ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற இரு நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களை நுணுக்கமாக ஆராய்ந்த நீதியரசர்கள், சந்தேகநபர் மீதான குற்றச்சாட்டில் “நியாயமான சந்தேகம்” காணப்படுவதாகத் தெரிவித்து அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

வழக்கின் பின்னணியை நோக்குகையில், 13 வயதான சிறுமி ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக அவருக்கு எச்.எஸ்.வி-2 (HSV-2) எனப்படும் வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் அரச தரப்பு வாதிட்டது. இந்த மருத்துவ நிலையானது சந்தேகநபரின் செயலினாலேயே ஏற்பட்டது எனவும், இதுவே துஷ்பிரயோகம் இடம்பெற்றதற்கான பிரதான மருத்துவ ஆதாரம் எனவும் ஆரம்ப நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

ஆனால், வழக்கின் போக்கையே புரட்டிப்போட்ட விடயம் என்னவென்றால், குறித்த சந்தேகநபர் பாலின நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஒருவரால் (Consultant Venereologist) முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அப்பரிசோதனை அறிக்கையில், அவரிடம் எந்தவிதமான பாலியல் தொற்றுக்கான (STI) அடையாளங்களும் இல்லை என்பது திட்டவட்டமாகப் பதிவாகியிருந்தது.

இந்த முரண்பாடான நிலையை சுட்டிக்காட்டிய நீதியரசர் சுமுது பிரேமசந்திர, பாதிக்கப்பட்ட சிறுமியின் மருத்துவ நிலையும் சந்தேகநபரின் மருத்துவ முடிவுகளும் ஒன்றோடொன்று முரண்படுவதால், அரச தரப்பின் வாதத்தில் பலத்த சந்தேகம் எழுவதாகத் தெரிவித்தார். அத்துடன், ஆரம்ப நீதிமன்ற நீதிபதி இந்த முக்கிய மருத்துவ அறிக்கையை முறையாகக் கருத்தில் கொள்ளாமல் புறந்தள்ளியமை வழக்கில் பெரும் தவறை ஏற்படுத்தியுள்ளது எனவும் நீதிமன்றம் அவதானித்தது.

வழக்கின் திருப்பங்கள் இத்துடன் முடிந்துவிடவில்லை; பாதிக்கப்பட்ட சிறுமி ஆரம்பத்தில் வழங்கிய வாக்குமூலத்திற்கும், பின்னர் நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்திற்கும் இடையில் சம்பவங்கள் நிகழ்ந்த விதம் தொடர்பிலும், முறைப்பாடு செய்வதைத் தடுத்ததாகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் பாரிய முரண்பாடுகள் காணப்பட்டமை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த அனைத்து காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு, சந்தேகநபருக்கு எதிராக விதிக்கப்பட்ட தீர்ப்பு மற்றும் தண்டனையை ரத்து செய்து, அவரை வழக்கில் இருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ரியாத் விமான நிலையத் தாக்குதல்: முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன்?

  1. ரியாத் விமான நிலைய தாக்குதலுக்கு முன் மௌனமான எச்சரிக்கை எச்சரிக்கை முறைமை: என்ன நடந்தது சவுதியில்?
  2. மக்களை நிலைகுலைய வைத்த விமான நிலையத் தாக்குதல்: முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன்? எழும் பரபரப்பு கேள்விகள்!
  3. 18 பேர் பலி, 300 க்கும் மேற்பட்டோர் காயம்: சவுதி பாதுகாப்பு பொறிமுறை பலவீனமடைகிறதா?
மௌனமான எச்சரிக்கை அமைப்புகள்: ரியாத் விமான நிலையத் தாக்குதலின் பின்னணி

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட பயங்கரத் தாக்குதல்களுக்கு சில நாட்களுக்கு முன்னரே, இராணுவத் தாக்குதல்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் அவசர எச்சரிக்கை முறைமைகளை சவுதி நிர்வாகம் திடீரென இடைநிறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் ரியாத் நகரை நிலைகுலையச் செய்த நான்கு தொடர் தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 18 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன், 300 இற்கும் மேற்பட்டோர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். எனினும், இத்தகைய பாரதூரமான அச்சுறுத்தல்கள் நிலவிய போதிலும், பொதுமக்களுக்கு ஏன் எவ்வித முன்னெச்சரிக்கைகளும் வழங்கப்படவில்லை என்பது தொடர்பில் சவுதி அரசாங்கம் இதுவரை எந்தவொரு தெளிவுபடுத்தலையும் முன்வைக்கவில்லை.

ஏமனின் ஈரான் ஆதரவு ஹூதி ஆயுதக் குழுவினருடனான மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்பற்ற தன்மையை வெளிக்காட்டும் எனவும், அமைதியான தேசம் என்ற பிம்பத்தை அது சீர்குலைக்கும் எனவும் சவுதி கருதியதாகத் தெரிகிறது. ஆனால், உயிர்களைப் பலிகொண்ட இந்த விமான நிலையத் தாக்குதலின் போது எச்சரிக்கைகள் விடுக்கப்படாமை, அந்நாட்டின் பாதுகாப்பு பலவீனம் மற்றும் அங்குள்ள பிரஜைகள், வெளிநாட்டுப் பயணிகளைப் பாதுகாக்கும் திறன் தொடர்பில் கடுமையான சந்தேகங்களை சர்வதேச அரங்கில் தோற்றுவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச மற்றும் அரபு நாடுகளின் இராஜதந்திரிகள், நாட்டில் சகல விடயங்களும் சாதாரணமாக இயங்குவது போன்ற தோற்றப்பாட்டைப் பேணவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர். “இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளையில், உள்நாட்டு மக்களுக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் அமைதி நிலவுவது போன்ற நம்பிக்கையை ஒரே நேரத்தில் கொடுக்கவே சவுதி அரசாங்கம் முயற்சிக்கிறது” என மத்திய கிழக்கு கொள்கை மையத்தின் (Middle East Policy Council) சிரேஷ்ட ஆய்வாளர் சுல்தான் அல்-ஆமர் (Sultan Alamer) வெளிப்படுத்தியுள்ளார்.

150 மி.மீ வரை வெளுத்துவாங்கப் போகும் கனமழை!

  1. தீவிரமடையும் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்: இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
  2. 150 மி.மீ வரை வெளுத்துவாங்கப் போகும் கனமழை: வானிலை மையம் வெளியிட்டுள்ள புதிய நிலவரம்!
  3. வங்கக்கடலில் மாற்றம்: நாட்டைச் சூழ அதிகரிக்கும் மழை — களத்தில் இறங்கியுள்ள முக்கிய எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் இன்று (13) புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளிமண்டலத் தொகுதியின் தீவிரத் தாக்கம் காரணமாக, நாடளாவிய ரீதியிலும் நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளிலும் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை கணிசமாக தீவிரமடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் 100 மி.மீ முதல் 150 மி.மீ வரையான மிகக் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்பதுடன், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான ஓரளவு கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, கடலுக்குச் செல்லும் மீனவர்கள், கடற்படையினர் மற்றும் பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது வெளியிடும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அவசர எச்சரிக்கை அறிவிப்புகள் குறித்து அதிக விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதேவேளை, இடியுடன் கூடிய மழை தீவிரமடையும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்று மற்றும் அபாயகரமான மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்பதால், அனர்த்த விபத்துகளைத் தவிர்ப்பதற்கான அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாது பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். மேலதிகமாக, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் குறிப்பிட்ட சில இடங்களில் அதிகாலை வேளையில் கடும் பனிமூட்டமான நிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் அதிரடி கைது!

வாக்குமூலம்  வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தமை மற்றும் அந்நிறுவனங்களுக்குப் பொஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான உரிமங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவி புரிந்தமைக்காக, குறித்த நிறுவனங்களிடமிருந்து 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதுதொடர்பில் இன்று வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியிருந்த  சாமர சம்பத் தசநாயக்க சுமார் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையில்  கைது செய்யப்பட்டுள்ளார்.

சாமர சம்பத்  தசநாயக்க முன்னதாக கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் அவரது தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றிய சுமதிபால லியனாராச்சி என்பவரும் இந்த விசாரணைகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தல் பகுதியில் திடீர் சூறாவளி: முறிந்த மரங்கள், பறந்த கூரைகள்!

  • முந்தல் பகுதியில் திடீரென சீறியடித்த சூறாவளிக் காற்று: பறந்துபோன கூரைகள், முறிந்து விழுந்த மரங்கள்!
  • புத்தளம் – கொழும்பு பிரதான வீதியை முடக்கிய அனர்த்தம்: அடுத்தடுத்து பலத்த சேதமடைந்த வீடுகள்!
  • கீரின்கள்ளியில் மாலை நேரத்தில் ஆடிய ருத்ரதாண்டவம்: வீடுகளை இழந்து தவிக்கும் 10 பேர்!

ஜுட் சமந்த

மாலைப் பொழுதில் பெய்த அடைமழையுடன் சேர்ந்து திடீரெனச் சுழன்றடித்த பலத்த சூறாவளிக் காற்று, சில மணித்துளிகளில் ஒரு கிராமத்தையே நிலைகுலையச் செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் முந்தல் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் ஏற்பட்ட இந்தத் திடீர் சீரற்ற வானிலை காரணமாக, கீரின்கள்ளிப் பகுதியிலுள்ள 7 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இயற்கையின் இந்தத் திடீர் ஆக்ரோஷம் முதலில் பிரதான பாதையையே முடக்கிப்போட்டது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கீரின்கள்ளிப் பகுதியில் பிரம்மாண்ட மரம் ஒன்று வேரோடு சரிந்து வீதியின் குறுக்கே வீழ்ந்ததில், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்தது. எனினும், முந்தல் பொலிஸ் அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் உடனடியாக களமிறங்கி, ஒன்றிணைந்து மரத்தை வெட்டி அகற்றி வீதியை மீண்டும் வழமைக்குக் கொண்டுவந்தனர்.

சாலைப் போக்குவரத்து சீரமைக்கப்பட்ட போதிலும், அதற்குள்ளாகவே அருகிலுள்ள கிராமத்தில் பெரும் அழிவு நிகழ்ந்தேறிவிட்டது.

கீரின்கள்ளி, தஸநாயக்கபுர கிராமத்தில் சூறாவளிக் காற்று ஏற்படுத்திய தாக்கம் தீவிரமானது. பலத்த காற்றினால் வீடுகளின் கூரைகள் முற்றாகக் கழன்று காற்றில் பறந்து சென்றதுடன், பாரிய மரக் கிளைகள் முறிந்து விழுந்ததில் 2 வீடுகள் முற்றாகவும், மேலும் 5 வீடுகள் பகுதியளவிலும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகின.

அதிர்ஷ்டவசமாக இந்த அனர்த்தத்தில் எவருக்கும் எவ்வித காயங்களோ, உயிராபத்துக்களோ ஏற்படவில்லை. இருந்தபோதிலும், வீடுகளை இழந்து அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாகப் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் பரவும் புதிய சுகாதார அச்சுறுத்தல்!

  • பகலில் கொளுத்தும் வெயில், மாலையில் அடைமழை: இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
  • விளையாடும் சிறுவர்கள் முதல் விவசாயிகள் வரை: நாடளாவிய ரீதியில் பரவும் புதிய சுகாதார அச்சுறுத்தல்!
  • வானிலை மாற்றத்தால் எழும் இரட்டை ஆபத்து: சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பகல் வேளையில் சருமத்தை எரிக்கும் அளவுக்கு கொளுத்தும் வெயில், மாலைப் பொழுதில் திடீரெனக் கொட்டித் தீர்க்கும் அடைமழை — இந்தத் தீவிர காலநிலை மாற்றம் தற்போது நாடு முழுவதும் பல நோய்கள் பரவுவதற்கான தீவிர ஆபத்து நிலையை உருவாக்கியுள்ளது. இலங்கை மக்கள் அனைவரும் இந்த அபாயகரமான சூழல் குறித்து அதீத விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் தற்போது பகல் வேளையில் உடலுக்குத் தாங்க முடியாத அளவுக்கு நேரடி வெப்ப தாக்கம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. “உடலுக்கு நேரடியாக உணரப்படும் அதீத வெப்பம் என்பது ஒரு தீவிர அபாய நிலை” எனக் குறிப்பிட்ட உபுல் ரோஹண, திறந்தவெளிகளில் கடமையாற்றுவோர் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இந்நாட்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனவும், வெயிலில் செல்வதாயின் உடலை முழுமையாக மூடும் பாதுகாப்பான ஆடைகளை அணியுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால், ஆபத்து இந்தச் சுட்டெரிக்கும் பகல் வெப்பத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. மாலையில் பெய்யும் மழை அடுத்தகட்ட அச்சுறுத்தலைக் கொண்டுவருகிறது.

கடந்த காலங்களில் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி, தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள டெங்கு நோய், மீண்டும் பெய்துவரும் மழையால் மீண்டெழும் அபாயம் உருவாகியுள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்குவதற்கு இடமளிக்காமல் சூழலை தூய்மையாகப் பராமரித்தால் மட்டுமே, மீண்டும் ஒரு டெங்கு பேரலை நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க முடியும் என சுகாதாரத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, மழையின் வருகையோடு வயல்வெளிகளில் ஆரம்பிக்கும் அடுத்தகட்ட வாழ்வாதாரச் சவாலும் அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்துகிறது.

மழை வீழ்ச்சியைத் தொடர்ந்து விவசாயிகள் தமது நெற்செய்கை பணிகளை ஆரம்பிக்கும் நிலையில், சேற்றுக்குள் இறங்குவதற்கு முன்பாகவே எலிக் காய்ச்சலைத் தடுக்கும் மருந்தை தவறாது உட்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விசேடமாக, இந்நாட்களில் வயல்வெளிகள் மற்றும் திறந்த நிலங்களில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்களும் இளைஞர்களும் கூட இந்த எலிக் காய்ச்சல் அபாய வலையத்துக்குள் சிக்கக்கூடும் என்பதால், பெற்றோர்களும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ரயில் கடவையை மீறிப் பாய்ந்த பைக்: வென்னப்புவவில் கோர விபத்து!

  • மூடப்பட்ட கேட்டை மீறிப் பாய்ந்த மோட்டார் சைக்கிள்: வென்னப்புவவில் நள்ளிரவில் நடந்த கோர விபத்து!
  • கொழும்பு – சிலாபம் புகையிரதத்தில் மோதி 35 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!
  • நள்ளிரவில் அவசரம் தந்த விபரீதம்: மூடப்பட்ட புகையிரத கடவையில் துடிதுடித்துப் போன உயிர்!

ஜுட் சமந்த

நள்ளிரவுப் பயணமும் சில வினாடி அவசரமும் ஒரு மனிதனின் உயிரையே பறித்துவிட்ட ஒரு சோக சம்பவம் வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளது.

மூடப்பட்டிருந்த புகையிரதக் கடவையை எப்படியாவது கடந்துவிட வேண்டும் என்ற ஒற்றை முயற்சி, சில நொடிகளில் பெரும் விபரீதமாக மாறியுள்ளது. அக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில், கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதப் பாதையிலேயே இந்த அதிர்ச்சி விபத்து நிகழ்ந்துள்ளது.

சிலாபம் – கொழும்பு வீதியில் அமைந்துள்ள போரலெஸ்ஸ – கிராகார புகையிரதக் கடவை பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த நிலையிலும், குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளைப் புகையிரதப் பாதைக்குக் குறுக்கே செலுத்தி கடக்க முற்பட்டுள்ளார். அப்போது அதிவேகமாக வந்த புகையிரதம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் தங்கொட்டுவ, வடக்கு கோணாவில பகுதியைச் சேர்ந்த நாத்தாண்டிகே டிலுக் மதுஷான் பெர்னாண்டோ (35 வயது) என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

18 கிலோவுக்கும் அதிக ஐஸ், ஹெரோயினுடன் சிக்கிய இளைஞன்!

வத்தளை, மாபோலை பகுதியில் பல கோடி ரூபாய் பெறுமதியான பெருந்தொகை போதைப்பொருட்களுடன் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மிகவும் திட்டமிட்ட வகையில் குறிப்பிட்ட பகுதி சுற்றிவளைக்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த மின்னல் வேக சோதனையின் போது, சந்தேகநபர் தப்பிச்செல்ல முடியாதவாறு மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையின்போது, 9 கிலோ 229 கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருளும், 9 கிலோ 264 கிராம் ஹெரோயினும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. மொத்தமாக 18 கிலோவுக்கும் அதிகமான இந்த அபாயகரமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட விதம் அதிகாரிகளையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

போதைப்பொருட்களைப் பொதி செய்வதற்கும் விநியோகிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் நிறுக்கும் தராசு ஒன்றும், முக்கிய தகவல்கள் அடங்கிய கையடக்கத் தொலைபேசியும் சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைதான நபர் வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த பாரிய போதைப்பொருள் பின்னணியில் இயங்கும் முக்கிய நபர்கள் யார் என்பது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

ரியாத் விமான நிலையம் மீது பயங்கர தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு!

  • ரியாத் விமான நிலையம் மீது பயங்கர தாக்குதல்: 12 பேர் உயிரிழப்பு, 300 இற்கும் மேற்பட்டோர் காயம்!
  • தசாப்த காலத்தின் கோரச் சம்பவம்: சவூதி வான் எல்லைக்குள் நுழைய வேண்டாம் என ஹூதிகள் எச்சரிக்கை!
  • ஹூதிகளுக்கு எதிராக சவூதியுடன் கைகோர்க்கிறதா அமெரிக்கா? – டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு தகவல்!
  • ரியாத் சர்வதேச விமான சேவைகள் முடக்கம்: மத்திய கிழக்கில் வெடிக்கும் புதிய போர் பதற்றம்!
ரியாத் விமான நிலையம் இரத்தக் களரி: மத்திய கிழக்கை அதிரவைத்த தாக்குதல் பின்னணி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையம் மீது சனிக்கிழமை முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு தசாப்த காலத்தில் சவூதி அரேபிய எல்லைக்குள் இடம்பெற்ற மிகக் கொடூரமான தாக்குதலாக இது வர்ணிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் புறப்படும் பகுதிக்கு (Departure Gate) அருகே கூரையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததாகவும், வானில் ஏதோ ஒன்று பாய்ந்து வந்த சில வினாடிகளில் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் நேரில் கண்ட பயணிகள் விவரித்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த பயணிகள் அம்புலன்ஸ்கள் மற்றும் உலங்குவானூர்திகள் மூலம் அவசர அவசரமாக வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு சவூதிப் பிரஜைகளும், இரு பங்களாதேஷியர்களும் அடங்குவர். அத்துடன் அமெரிக்கா, ஜோர்தான், பலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் பலியாகியுள்ளதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை உறுதிப்படுத்தியுள்ளது.

முடங்கிய 8 மில்லியன் மக்களின் தலைநகர்

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 80 இலட்சம் மக்கள் வாழும் ரியாத் நகரத்தின் பிரதான விமான நிலைய நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் யாவும் உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டு, பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

இதனிடையே, புனித நகரங்களான மக்கா மற்றும் மதீனா தவிர்ந்த சவூதி அரேபியாவின் ஒட்டுமொத்த வான்பரப்பும் தமது போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், சர்வதேச விமான நிறுவனங்கள் சவூதி வான்வழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஹூதி தரப்பு எச்சரித்துள்ளது.

களத்தில் இறங்குகிறதா அமெரிக்கா? ட்ரம்பின் நேரடி எச்சரிக்கை

சவூதி-ஹூதி மோதல் சர்வதேசப் போராக தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சவூதி கூட்டுப்படையுடன் இணைந்து ஹூதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் அது குறித்து பரிசீலித்து வருகிறோம்; எம்மால் மிக விரைவாகத் தீர்மானம் எடுக்க முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவும், ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரஸும் பொதுமக்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

முக்கிய சர்வதேச எரிசக்தி மற்றும் முதலீட்டு மாநாடுகளை நடத்துவதற்கு ரியாத் தயாராகி வந்த சூழலில் நிகழ்ந்துள்ள இச்சம்பவம், மத்திய கிழக்கின் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் பயணங்கள் மீது பாரிய கேள்விக் குறிகளை எழுப்பியுள்ளது.

நண்பனை பெயில் எடுக்க வந்து ஜெயிலுக்குப் போன இளைஞன்!

ஜுட் சமந்த

பண மோசடி வழக்கில் கைதான நண்பனைப் பிணையில் மீட்கும் நோக்கில் மாரவில நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த இளைஞருக்கு, அங்கு காத்திருந்த அதிர்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல.

நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட வழக்கமான உடல் சோதனையின்போது, குறித்த இளைஞரின் பணப்பையை (Wallet) திறக்க நேரிட்டது. அப்போது பொலிஸாரின் கண்களில் பட்ட ஒரு பொருள் அங்கிருந்த அனைவரையும் திகைக்க வைத்தது; அது வேறொன்றுமில்லை, யுத்த முனைகளில் பயன்படும் T-56 துப்பாக்கியின் வெற்று ரவை உறை.

தன்கொட்டுவ – மெட்டிகொட்டுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதான இந்த இளைஞரிடம் உடனடியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ஒரு விசித்திரமான உண்மை தெரியவந்தது. தரையில் வீசப்பட்டுக் கிடந்த இந்த ரவை உறையை தான் பொறுக்கி எடுத்ததாகவும், அதனை ஒரு பதக்கமாக மாற்றி கழுத்தில் மாலையாக அணிந்து கொள்ளவே பணப்பையில் வைத்திருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், நீதிமன்ற பாதுகாப்பு வலையத்திற்குள் சட்டவிரோதமாக துப்பாக்கி ரவை உறையை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், நண்பனை மீட்க வந்த இளைஞரே பொலிஸாரால் அங்கேயே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உடனடியாக மாரவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, மாரவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த இளைஞரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.