Home Blog Page 106

கற்பிட்டி பகுதியில் 10 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

கற்பிட்டி, ஆனவாசல் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற விஷட தேடுதல் நடவடிக்கையின் போது ஆறு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த10 கிலோ 400 கிராம் கஞ்சாவை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியதுடன் மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விஜேலால் தலைமையிலான நான்கு பேர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட 10 கிலோ 400 கிராம் கஞ்சா பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் வர்த்தமானியில்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவு அல்லது 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்தும் அதற்குப் பின்னரும் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதுடன், அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்திய நிலையில், தற்போது அது சட்டமாக வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

புனித ரமலான் நோன்பு காலம் நாளை ஆரம்பம்!

புனித ரமலான் நோன்பு காலம் நாளை (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள்.

இன்று (18) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தெரிவித்தது.

புனித  ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். 

ரமலான் நோன்பு என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாக உள்ளது. கலிமா, தொழுகை, ஜகாத் மற்றும் ஹஜ் ஆகியவையே மீதமுள்ள 4 கடமைகள் ஆகும்.

பொதுவாக 30 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும் இந்த நோன்புகளில், விடியற்காலை (ஸஹர்) முதல் சூரிய அஸ்தமனம் (இஃப்தார்) வரை முஸ்லிம்கள் சாப்பிடவோ, எதையும் குடிக்கவோ மாட்டார்கள். இஸ்லாத்தில் பக்தி மற்றும் சுய ஒழுக்கத்தின் செயலாக இது பார்க்கப்படுகிறது.

ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள், விடியலுக்கு முன்பு அதிகாலையிலேயே காலை உணவை உண்பர். இது, ஸஹர் என அறியப்படுகிறது.

அதன்பின், சூரியன் மறைந்ததும் மாலை நோன்பை முடிப்பதற்கு முன்பு வரை எதையும் உண்ண மாட்டார்கள், தண்ணீர் உட்பட எதையும் அருந்த மாட்டார்கள். இது இஃப்தார் எனப்படுகிறது.

இந்த இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் உள்ளது. அதற்குள் ஸஹர் உணவை முடித்து, நோன்பைத் தொடங்க வேண்டும் மற்றும் மாலையில் இஃப்தார் உணவை உண்டு, நோன்பை முடிக்க வேண்டும்.

மாத்தளை பகுதியில் பாறை ஒன்றின் அருகே கிடந்த சடலம்!

ஜூட் சமந்த

மாத்தளை, லக்கல பிரதேசத்தின் களுப்பிட்டிய பகுதியில் உள்ள அணைக்கட்டுக்கு (Amuna) மேலேயுள்ள பாறை ஒன்றின் அருகே கிடந்த நிலையில், ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை உயிரிழந்தவரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலமாக மீட்கப்பட்ட நபரை அடையாளம் காண்பதற்காகப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் சுமார் 6 அடி உயரமானவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீட்கப்பட்ட போது உட்புறமாக பச்சை நிறத்தை ஒத்த காலர் (Collar) கொண்ட டி-சேர்ட் (T-shirt) அதன் மேல் பகுதியில், மார்புப் பகுதியில் குறுக்காக வெள்ளை நிறக் கோடுகள் இடப்பட்ட மற்றும் நான்கு பைகளைக் கொண்ட கருப்பு நிற ஜாக்கெட் (Jacket) வெளிர் பச்சை நிறத்திலான நீளமான காற்சட்டை உடைகளை அணிந்திருந்தார்:

குறித்த நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் அல்லது அவர் யாரென அடையாளம் காண முடிந்தால், அது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சவூதியின் இராஜதந்திரமும் மனிதாபிமானப் பணிகளும்!

பாலஸ்தீன விவகாரம்: சவூதி அரேபியாவின் இராஜதந்திர நிலைப்பாடும் மனிதாபிமானப் பணிகளும்!

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) – ஓட்டமாவடி.

மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் பாலஸ்தீன விவகாரம் ஒரு மையப்புள்ளியாக உள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சவூதி அரேபியா தனது அரசியல் மற்றும் மனிதாபிமான நகர்வுகளை மிகத்தெளிவாக வகுத்துள்ளது. சர்வதேச அரங்கில் ஒரு பலமான மத்தியஸ்தராகவும், மனிதாபிமானத்தின் முகவரியாகவும் சவூதி தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

சவூதியின் இராஜதந்திர நிலைப்பாடு
சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கைகளில், இஸ்ரேலுடனான எந்தவொரு இராஜதந்திர உறவுக்கு முன்னதாக, 1967 ஜூன் 4ஆம் திகதி எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2026 பெப்ரவரி 14 அன்று நடைபெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், “பாலஸ்தீனர்களுக்கான இறையாண்மை உறுதி செய்யப்படாமல் பிராந்திய அமைதி சாத்தியமில்லை” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,துப்பாக்கிகள் மௌனிக்காத வரை அதனை ஒரு போர் நிறுத்தமாக கருத முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். காசாவில் பொதுமக்கள் உயிரிழப்பது இன்னும் நிற்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

காசாவின் தற்போதைய கள நிலவரம் (பெப்ரவரி 2026)
ஐநா மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) பிப்ரவரி 15, 2026 தரவுகளின்படி, காசாவில் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது:

  • தொடரும் மோதல்கள்: 2025 இறுதியில் எட்டப்பட்ட தற்காலிக போர்நிறுத்த முயற்சிகளுக்கு மத்தியிலும், பிப்ரவரி முதல் வாரத்தில் மட்டும் காசாவின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 82 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • உயிரிழப்புகள்: 2023 அக்டோபர் முதல் தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,000-ஐத் தாண்டியுள்ளது. இதில் 70% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • மனிதாபிமான தடைகள்: காசாவிற்குள் நுழையும் நிவாரணப் பொருட்களுக்கான சோதனைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இது சர்வதேச சட்டங்களின் கீழ் ‘கூட்டுத் தண்டனை’என ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.

சவூதியின் மனிதாபிமான மற்றும் பொருளாதார ரீதியாக பலஸ்தீனத்திற்கு
இவ்வாறான இக்கட்டான சூழலிலும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) மூலம் சவூதி அரேபியா முன்னெப்போதும் இல்லாத வகையில் உதவிகளை வழங்கி வருகிறது:

  • நிவாரணப் பாதைகள்: இதுவரை 77 விமானங்கள் மற்றும் 8 கப்பல்கள் மூலம் சுமார் 7,700 டொன்களுக்கும் அதிகமான அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவப் பொருட்களை சவூதி வழங்கியுள்ளது.
  • பொருளாதார மீட்சி: காசாவை மீண்டும் கட்டியெழுப்ப $90.35 மில்லியன் டொலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்களில் சவூதி கையெழுத்திட்டுள்ளது. குறிப்பாக, காசாவின் சிதைந்த மருத்துவக் கட்டமைப்பைச் சீரமைக்க இது பயன்படுத்தப்படும்.
  • நிர்வாக ஆதரவு: காசாவின் சிவில் நிர்வாகத்தைச் சீரமைக்க சர்வதேச சமூகத்தால் முன்மொழியப்பட்ட “அமைதிச் சபை” (Board of Peace) நடவடிக்கைகளுக்குத் தனது முழுமையான ஆதரவையும் நிதிப் பங்களிப்பையும் சவூதி உறுதி செய்துள்ளது. “எவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்.” (அல் குர்ஆன்)

இந்த இறைவசனத்திற்கேற்ப செயல்படும் சவூதி, காசாவின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை வழங்கத் தயாராக உள்ளது. எனினும், நீண்டகால அமைதிக்காகச் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளது:

  • இஸ்ரேலியப் படைகள் காசாவிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.
  • அங்கு பாலஸ்தீனர்களுக்கான நிலையான மற்றும் தன்னிச்சையான நிர்வாகம் (Palestinian Authority) உறுதி செய்யப்பட வேண்டும்.
  • நிரந்தர போர்நிறுத்தம் மற்றும் எதிர்காலத் தாக்குதல்கள் நிகழாது என்பதற்கான சர்வதேசப் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

எனவே,சவூதி அரேபியாவின் மனிதாபிமான உதவிகள் மற்றும் இராஜதந்திர நகர்வுகள் பாலஸ்தீன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மாத்திரமின்றி ஒரு சுதந்திர நாட்டை அடைவதற்கான அவர்களின் போராட்டத்திற்குப் பெரும் பலமாக அமைகின்றன. “முஃமின்கள் ஒரு உடலைப் போன்றவர்கள்” என்ற நபிமொழிக்கேற்ப, சவூதி தனது தார்மீக மற்றும் சட்டரீதியான கடமைகளைச் சர்வதேச அரங்கில் திறம்பட ஆற்றி வருகிறது என்பது தார்மீக உண்மையாகும்.

வாழைச்சேனை காதி நீதிவான் இலஞ்ச ஊழல் பிரிவினரால் கைது!

“நீதிமன்றம்” என்பது சாதாரண மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குத் தீர்வு தேடிச் செல்லும் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. அத்தகைய இடத்தில், நீதியை நிலைநாட்ட வேண்டிய ஒருவரே பணத்திற்காகத் தனது கடமையைத் தவறவிட்ட சம்பவம் கிழக்கு மாகாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று, 2026 பெப்ரவரி 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை. வாழைச்சேனை அக்பர் பள்ளி வீதியில் அமைந்துள்ள காதி நீதிமன்றம் வழமை போல இயங்கிக் கொண்டிருந்தது. முற்பகல் 11.45 மணியளவில், நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்குச் சற்றும் எதிர்பாராத வகையில், இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அங்கு அதிரடியாக நுழைந்தனர்.

சிக்கிய காதி நீதிவான்

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி காதி நீதிமன்றத்தின் நீதிவானாகவும், பொலன்னறுவை பதில் காதி நீதிவானாகவும் கடமையாற்றும் நபர், இதன்போது அதிகாரிகளால் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார்.

ரூபாய் 5,000/- (ஐயாயிரம் ரூபாய்) மாத்திரமே அவர் பெற்ற இலஞ்சத் தொகை எனக் கூறப்பட்டாலும், ஒரு நீதியரசர் இருக்கையில் அமர்ந்து கொண்டு இழைத்த இந்தத் தவறு பணத்தின் மதிப்பை விட பாரதூரமானது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பின்னணி என்ன?

குறிப்பிட்ட ஒரு வழக்கினைத் தமக்குச் சாதகமாக முடித்துத் தருவதற்காகவோ அல்லது அது தொடர்பான சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ இந்த இலஞ்சத் தொகை கோரப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட இந்த சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

“நீதி என்பது விற்கப்படக் கூடிய ஒன்றல்ல; அது சமூகத்தின் முதுகெலும்பு. ஒரு சில அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குகின்றன.”

சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்ட காதி நீதிவான் மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் வாழைச்சேனை மற்றும் பொலன்னறுவை ஆகிய இரு பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், நீதித்துறையில் நேர்மையைப் பேண வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.

குறைந்த தொகையாக இருந்தாலும், அதிகாரத்தைச் சுவைப்பவர்கள் சாமானியர்களிடம் சுரண்டும் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய மதீஷ பத்திரண!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண நடைபெற்று வரும் உலக கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார். 

இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியின் போது, மதீஷ பத்திரணவின் இடது காலில் காயம் ஏற்பட்டிருந்தது. 

அவர் காயத்தில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் தேவை என்பதால், இந்த தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றது. 

இந்நிலையில் அவருக்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அல்லது நுவன் துஷார ஆகியோரில் ஒருவர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சவூதியிடமிருந்து இலங்கைக்கு 50 டன் பேரீச்சம்பளங்கள் நன்கொடை!

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், கௌரவ காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி அவர்கள், இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மானிடம் இருந்து 50 டன் பேரீச்சம்பழங்களை, மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையத்தின் (KSrelief) ஊடாக இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வின் போது இலங்கை மத மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான துணை அமைச்சர் கௌரவ முனீர் முலவ்பர் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக இப் பேரீச்சம்பழங்கள் கையளிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இலங்கை பாராளுமன்ற துணை சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலிஹ் அவர்கள் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் மற்றும் KS Relief பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

உலகளாவிய சாசனத்தில் முதலாவது கைகோர்த்த இலங்கை!

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை மாறவுள்ளது.

சிறுவர் பராமரிப்பு சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் (Global Charter on Children’s Care Reform) இணைவதற்கான உத்தியோகபூர்வ விருப்பத்தை இலங்கை இன்று (17) கொழும்பு 07, பௌத்தாலோக மாவத்தையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில் வைத்து வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், நீதித்துறை அமைச்சரும் (லோர்ட் சான்சலர்) பிரதிப் பிரதமருமான உயர் கௌரவ டேவிட் லம்மி அவர்கள் கலந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்களினால் இதற்கான உத்தியோகபூர்வ விருப்பக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இலங்கை நீண்டகாலமாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் பிரகடனத்தில் (UNCRC) ஒரு பங்காளியாக இருந்து வருவதுடன், சர்வதேச சட்டங்களின் கீழ் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

சிறுவர்களுக்கான மாற்றுப் பராமரிப்பு தொடர்பான 2009 ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வழிகாட்டுதல்கள், பெற்றோர் பராமரிப்பு அற்ற சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான 2019 பொதுச் சபை தீர்மானம் (A/RES/74/133), 2022 நிறுவனமயமாக்கலை நீக்குதல் தொடர்பான வழிகாட்டுதல்கள் (CRPD/C/5), 2022 கிகலி (Kigali) பிரகடனம் மற்றும் 2024 சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதலாவது உலகளாவிய அமைச்சர்கள் மாநாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த உலகளாவிய சாசனம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை உலகில் 34 நாடுகள் இந்த சாசனத்தை அங்கீகரித்துள்ளன.

தெற்காசிய பிராந்தியத்தில் இதுவரை எந்தவொரு நாடும் இந்த சாசனத்தில் இணையாத நிலையில், அதில் இணையும் முதல் தெற்காசிய நாடாக இலங்கை திகழ்கின்றது.

இலங்கையின் தேசிய சிறுவர் பராமரிப்புக் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதும், அவற்றை சர்வதேச தரத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதும் இந்த சாசனத்தில் இணைவதன் முதன்மை நோக்கமாகும்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கௌரவ அமைச்சர்:

“சிறுவர்களின் நலன் என்பது வெறுமனே ஒரு வார்த்தையாக மட்டுமல்லாது, அது ஒரு நடைமுறையாக இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

யுனிசெப் (UNICEF) மற்றும் இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

இதில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு ஆண்ட்ரூ பேட்ரிக், இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் மாண்புமிகு தெரேசா ஓ மகோனி, இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் திரு.மார்க் அன்ட்ரே பிரான்சே, யுனிசெப் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி திருமதி.எம்மா பிரிகம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் திருமதி.தரங்கனி விக்கிரமசிங்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: கடமை தவறிய காவல்துறையினர் கைது!

ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற தருணத்தில் தமது கடமையைச் சரிவரச் செய்யத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜிந்துப்பிட்டி பகுதி சலூனில் மன்னார் சிலாவத்துறையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த பெப்ரவரி 14 இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முடிவெட்டுவதற்காக சலூனுக்குச் சென்றிருந்த போதே, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களால் T-56 ரக துப்பாக்கியால் இந்தச் சூடு நடத்தப்பட்டுள்ளது

மேலும் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவரும் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.