கடந்த வெள்ளிக்கிழமை (05.09.2025) இரவு 8.30, மணியளவில் புத்தளம்-கொழும்பு பிரதான வீதி, நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய நாகவில்லு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30, மணியளவில் நாகவில்லு ஜும்மாஹ் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் வைத்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புத்தளம் நோக்கி மிக வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று, வேக கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற குறித்த நபரின் மீது மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் வந்த நபர் தப்பித்து சென்றுள்ளதுடன், விபத்துக்குள்ளாகிய நபர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, மீண்டும் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபர் நாகவில்லு பகுதியை சேர்ந்தவர் என்பதுடன், பு/எருக்கலம்பிட்டி பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய மர்ஹூம் மனாப் ஆசிரியரின் சகோதரர் எனவும் தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபர் இதுவரை அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய என்டோரோமிக்ஸ் புற்றுநோய் தடுப்பூசி தற்போது மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ மற்றும் உயிரியல் நிறுவனம் அறிவித்துள்ளது.
mRNA அடிப்படையிலான இந்த தடுப்பூசி அனைத்துவித பரிசோதனைகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட RNA-க்கு ஏற்ப தடுப்பூசி உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் பெருங்குடல் புற்றுநோயை இலக்காகக் கொண்ட இந்த தடுப்பூசி, கட்டியின் அளவைக் கணிசமாகக் குறைத்து, உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்துவதாக அறிவித்துளளது.
மேலும் கிளியோபிளாஸ்டோமா மற்றும் மெலனோமாவிற்கான தடுப்பூசிகளை உருவாக்குவதில் மேலும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டு வருவதாகவும், தடுப்பூசி இப்போது பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது; நாங்கள் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்,” என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது.
அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு (Core Group on Sri Lanka) ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது.
இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.
இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.
இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது.
அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம்.
எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும்.
எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.
முழு சந்திரகிரகணத்தை இன்று வெற்றுக்கண்களால் இலங்கையர்களாலும் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.57 முதல் அதிகாலை 1.26 வரை சந்திர கிரகணம் நிகழவுள்ளது, எனினும், இரவு 11.42 க்கு சந்திர கிரகணத்தை பார்வையிட சிறந்த நேரம் எனவும் கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது போன்ற முழு சந்திர கிரகணம் 2028 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை இடம்பெறும் நாட்களில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி பாடசாலை நாட்களில் காலை 6.30 மணி முதல் 7.45 மணி வரையிலும், முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டும் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பாடசாலை போக்குவரத்தில் ஈடுபடும் வேனுடன் மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தீபானி வீரக்கோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் கனிமப் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாகனங்கள் வீதியோரத்தில் முறையாக நிறுத்தப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விழிப்புணர்வு நாட்டில் உள்ள சகல பிரதேச செயலகங்களின் ஊடாக கடந்த 4 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் காட்டுப்பகுதியில் இன்று மாலை 7 மணி அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும், வீதியை குறுக்கறுத்து செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர் மீது வீதியால் பயணித்த மற்றுமொரு வாகனம் ஏறி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.
புது குடியிருப்பு ஒன்பதாம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் சானுசன் என்பவரே குறித்த விபதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் தர்மபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக புது குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
இறக்குமதி செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்கும், குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேவினால் கொண்டுவரப்பட்ட நிலையில் மித்தெனியவில் கண்டறியப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சம்பவத்துடன் தொடர்புடைய 2 கொள்கலன்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (06) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. உட்லர் இதனைக் குறிப்பிட்டார்.
போதைப்பொருள் சம்பவத்தில் கண்டறியப்பட்ட 2 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும், துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள எண்களுக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 323 கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சமூகத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. ஆனால் இந்த இரண்டு கொள்கலன்களும் அதனுடன் தொடர்புடையவை அல்ல. ஏனென்றால் அந்த கொள்கலன்களின் எண்களை நாங்கள் ஆராய்ந்தோம்.
காரணம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அந்த 323 கொள்கலன்கள் தொடர்பாக விசேட விசாரணை நடத்தி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களுக்கு வெளியே வேறு இரண்டு கொள்கலன்களைக் கண்டறிந்தது.
எனவே, இந்த இரண்டு கொள்கலன்களுக்கும் அந்த 323 கொள்கலன்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக கூற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி நிதியத்தின் முதலாவது உதவித் திட்டம் வழங்கி வைப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
ஜனாதிபதி நிதியத்தின் உதவித் திட்டம் பிரதேச மட்டம் வரையான வேலைத்திட்டத்தின் ஊடாக கற்பிட்டி பிரதேச செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பயனாளிக்கான உதவி வழங்கும் நிகழ்வு கற்பிட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் பீ.ஜீ.எஸ்.என் பிரியதர்ஷினி தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் பல்வகைப்படுத்தலில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில் முதலாவது பயனாளியாக பள்ளிவாசல்துறை கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் ஏ.ஏ.எம். ஹாலிடீன் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் (250,000) ரூபா காசோலை கற்பிட்டி பிரதேச செயலாளரால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ் மர்ஜானா மற்றும் சமூக சேவை பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எஸ் பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது ஜனாதிபதி நிதியத்தின் பணிகள் பிரதேச மட்டத்திற்கு வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதற்கான சான்றினை உறுதிப்படுத்துகின்றது, மேலும் தகுதியான குடிமக்களுக்கு நேரடியான மற்றும் பரவலாக்கப்பட்ட ஆதரவை வழங்குவதனை நோக்காக கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள “சட்டப்படி வேலை செய்யும்” தொழிற்சங்க நடவடிக்கை இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
எந்தவொரு ஊழியரும் தன்னார்வ ஓய்வு திட்டத்திற்கு உடன்படவில்லை என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.
“முதற்கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை செப்டம்பர் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பில் தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல்முறைகள் காரணமாக இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.நேற்று அமைச்சருடன் இது குறித்து கலந்துரையாடினோம். ஆனால், இதன்போது திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதல் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG) ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி, தர்ஷிகா குமாரி, பத்மினி வீரசூரிய, ரேணுகா ஜயசுந்தர மற்றும் நிஷானி செனவிரத்ன ஆகியோர் பிரதி பொலிஸ்மா அதிபர்களாகப் பதவியேற்க உள்ளனர்.
இவர்களில் மூவர் 1997 ஆம் ஆண்டு பயிற்சி உப பொலிஸ் பரிசோதகர்களாக இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்தனர்.
இந்தப் பதவி உயர்வுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட இந்த நான்கு பெண் பொலிஸ் அதிகாரிகளில், தர்ஷிகா குமாரி தற்போது பொலிஸ் களப் படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், அந்தத் தலைமையகத்தில் முதல் பெண் கட்டளை அதிகாரியாகப் பதவியேற்று சாதனை படைத்துள்ளார்.
பத்மினி வீரசூரிய தற்போது களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பதில் பிரதி பொலிஸ்மா அதிபராக உள்ளார். இதன் மூலம், இலங்கை பொலிஸ் வரலாற்றில் ஒரு மாவட்டத்திற்கு பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ரேணுகா ஜயசுந்தர, பாலியல் குற்றங்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும், நிஷானி செனவிரத்ன ஆராய்ச்சி மற்றும் தகவல் பிரிவின் பதில் பிரதி பொலிஸ்மா அதிபராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நால்வரில் மூத்த அதிகாரியான நிஷானி செனவிரத்ன, அரச புலனாய்வு சேவையில் நீண்ட காலம் பணியாற்றியவர் ஆவார்.