Wednesday, September 10, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 11

வடக்கு விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கிவைப்பு!

கழிவுகளை தரம் பிரித்து தருமாறு உள்ளூராட்சி மன்றங்கள் கோரினாலும் எங்கள் மக்கள் அவ்வாறு செய்வதில்லை. எல்லாக் கழிவுகளையும் ஒன்றாகவே போடுகின்றார்கள். நீங்கள் போடுகின்றன கழிவுகளை தரம்பிரிப்பதும் மனிதர்களே என்பதை எங்கள் மக்கள் உணர்ந்து கொள்கின்றார்கள் இல்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

தரம் பிரித்து கழிவுகளை தராவிட்டால் அதை எடுக்கமாட்டோம் என்று உள்ளூராட்சி மன்றங்கள் சொன்னால், அந்தக் கழிவுகள் எல்லாவற்றையும் ஒன்றாகக் கட்டி, வீதியில் போட்டுவிட்டுச் செல்வார்கள். மக்கள் தாங்களாக உணர்வதன் ஊடாகவே இதைச் சீர் செய்ய முடியும் என ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விவசாய கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், மீன்பிடி, நீர் வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், அறுவடை சஞ்சிகை வெளியீடும், உலக சுற்றாடல் தின நிகழ்வும் திருநெல்வேலியிலுள்ள யாழ். மாவட்ட விவசாய பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (19.08.2025) அமைச்சின் செயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோதே வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.

விவசாயிகளை நாம் இன்னும் எவ்வளவு காலத்துக்கு ஏழை விவசாயிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கப்போகின்றோம். அவர்களையும் பணக்கார விவசாயிகளாக நாம் மாற்றவேண்டாமா? புதிதாகச் சிந்திக்க வேண்டும். 1970 ஆம் ஆண்டுகளில் எமது பிரதேச விவசாயிகளின் வீடுகள் கல் வீடுகளாக மாறின. தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் விவசாயிகளின் வாழ்க்கையில் இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கெளரவ ஆளுநர்;

விவசாயிகளின் உற்பத்திப்பொருட்களுக்கு நிலையான விலை கிடைப்பதில்லை என்பதே இங்கு பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. இதனால் அவர்கள் விவசாயத்தை கைவிடும் நிலைமையும் இருக்கின்றது. இதற்காகத்தான் விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதி சேர் பொருட்களாக மாற்றுவதற்கும், ஏற்றுமதிக்குமான முயற்சிகளை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம். அதன் ஊடாக விவசாயிகளின் உற்பத்திகளுக்கு எப்போதும் நிலையான விலையை வழங்க முடியும்.

விவசாய உற்பத்திப் பொருட்களை பெறுமதிசேர் பொருட்களாக மாற்றுவதென்றால் அதற்குரிய தொழிற்சாலைகள் முதலீட்டாளர்களால் இங்கு வரவேண்டும். எதிர்காலத்தில் அவை இங்கு வரும் என நம்புகின்றேன்.

முன்னைய காலங்களில் அரசாங்க வேலைகளைவிட்டு விவசாயத்துக்குச் சென்றவர்களை எனக்குத் தெரியும். அரசாங்க வேலையை விட விவசாயத்தில் அதிகம் உழைக்க முடியும் என்ற சூழல் இருந்தது. அத்தகைய சூழலை நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்.

அதேபோல சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வரவேண்டும் என்று விரும்புகின்றோம். ஆனால் அவர்கள் வருவதற்குரிய வகையில் எங்கள் நகரத்தின் தூய்மை இருக்கின்றதா? எங்கள் நகரம் இலங்கையிலேயே தூய்மையான நகரமாக 1970 ஆம் ஆண்டுகளில் இருந்தது. ஆனால் இன்று அதை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டோம். இதற்கு நாம் ஒவ்வொருவரும்தான் பொறுப்பு. ஒவ்வொருவரும் தங்கள் கடமையைச் செய்யத் தவறியதன் விளைவை நாங்கள் அனுபவிக்கின்றோம். இப்போதிருந்தாவது இதை எல்லோரும் இணைந்து மாற்றுவோம், என்றார் ஆளுநர்.

மேலும் பாடசாலை சுற்றாடல் கழகங்களின் பொறுப்பாசிரியர்களுக்கு மேலங்கிகளை வழங்கி வைத்ததுடன், பாடசாலை மாணவர்களிடையே சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி, யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி மாலதி முகுந்தன் ஆகியோரும், வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள மேலதிக மாகாணப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பிரதிப் பணிப்பாளர், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் (PSDG) கீழ் விவசாயிகளுக்கு விதை நெல்லும், நீர்ப்பாசன இயந்திரமும், வரிசையில் விதையிடும் கருவியும், வெங்காய சேமிப்பு கொட்டகையும் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் விவசாய கிணறுகள் புனரமைப்புக்கான காசோலையும் விவசாயிகளுக்கு ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையர்களுக்கு தாய்லாந்தில் புதிய வாய்ப்பு!

0

தாய்லாந்தில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 இலங்கை தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு அந்த நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், முதல் தொகுதி விரைவில் இலங்கையிலிருந்து வெளியேற உள்ளதாகவும் தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் பொங்கவின் ஜங்ருங்ருங்ராங்கிட் (Pongkawin Jungrungruangkit) தெரிவித்தார்.

வயதானோர் சனத்தொகை மற்றும் சுருங்கி வரும் தொழிலாளர் சக்தி காரணமாக, நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களை அனுமதிக்கவும் தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய எல்லை மோதல் காரணமாக 300,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்ததுடன், தாய்லாந்தை விட்டு சுமார் 400,000 கம்போடியர்கள் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில்,விவசாயம், நிர்மாணம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய துறைகள் சுமார் 3 மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டியுள்ளதாக சர்வதே ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும்!

0

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. 

ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. 

19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (18) பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. 

இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த விடயம் தொடர்பில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், இ.ஜி.சி. நிரோஷன் தெரிவிக்கையில், 

“உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம். அதுவரை தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

வவுனியாவில் இணைந்த மன்னார், புத்தளம் அரசியல் பிரமுகர்கள்!

“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” தொடர்பான கலந்துரையாடல்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

“இலங்கையில் ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவத்தைக் கட்டியெழுப்புவதற்காக சிறுபான்மைக் குழுக்களை வலுப்படுத்தல்” எனும் கருப்பொருளில், மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் செயற்படும் அரசியல் கட்சிகளுடன் நலிவுற்ற சிறுபான்மை குழுக்களுடைய அரசியல் பங்குபற்றுதலுக்கான சவால்கள் மற்றும் அவர்களது அரசியல் பங்குபற்றுதலுக்கான அரசியல் கட்சிகளின் பங்களிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் அமைந்துள்ள ஹோட்டல் நோத்வேயில் அண்மையில் நடைபெற்றது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் அமைப்பின் நிறைவேற்றுப் பணிபாளரும், சட்டத்தரணியுமான, எம்.பி.எம்.புஹாரி தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் மாவட்டத்தை பிரதிபலித்து 06 அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

புத்தளம் மாவட்டம் சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், மன்னார் மாவட்டத்தின் அரசியல் கட்சியின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட உறுப்பினர்களும் கலந்துக் கொண்டனர்.

சிறுபான்மை சமூகங்களுக்குள் நலிவுற்ற நிலையில் வாழ்கின்ற குழுக்களை பிரதிநிதித்துவபடுத்துகின்ற பெண்கள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துவதனூடாக உள்ளக ஆட்சியில் அவர்களின் வினைத்திறன் மிக்க பங்குபற்றலை உறுதிப்படுத்தி அவர்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் தாமே அடையாளப்படுத்தி குரலெழுப்புவதனூடாக, நீடித்திருக்க பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதனை இலக்காகக்கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் நலிவுற்ற சமூகக்குழுக்களின் அரசியல் உரிமைகள் ஊக்குவிக்கப்பட்டு, பாதுகாக்கப்படல் வேண்டும், ஆட்சியில் அவர்களது சமமான பங்கேற்பு உறுதிப்படுத்தப்படல் வேண்டும், அரசியல் உள்ளடக்கம், நியாயமான பிரதிநிதித்துவம் ஆகியவை விருப்பத்தெரிவுகளாக இல்லாமல் அவை ஜனநாயகத்தை உண்மையான அர்த்தத்தில் உணர்வதற்கு அடிப்படையானதாக அமைந்திருத்தல் வேண்டும் என்பதை வலியுத்தி பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன.

நிகழ்வில் பங்குபற்றிய அரசியல் கட்சிகளின் பிரதான தலைவர்களுக்கு, அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் நடைமுறைகளில் நலிவுற்ற சமூகக்குழுக்களின் அரசியல் உள்ளடக்கம் குறித்த ஆதரவுப் பரப்புரைப்பத்திரம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கற்பிட்டி, கண்டக்குடாவில் ஒருவர் தாக்கப்பட்டு மரணம்!

கற்பிட்டி கண்டக்குடாவில் குடும்பஸ்தர் தாக்கப்பட்டு மரணம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி, கண்டக்குடா சலாமத்புரம் பிரதேசத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் வைத்து இனம்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கண்டக்குடா சலாமத்புரம் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர் மற்றும் உயிரிழந்தவரின் அயல் வீட்டு உரிமையாளர் ஆகியோர் கற்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கற்பிட்டியில் கலைகட்டவுள்ள இரவு நேர உணவகங்கள்!

கற்பிட்டியில் பிரதேச சபையின் ஏற்பாட்டில் உதயமாகிறது இரவு நேர உணவு விற்பனை நிலையங்கள்!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி சுற்றுலா துறையை மேம்படுத்தும் முகமாக வாரத்தில் ஒரு நாள் பாதை ஓரங்களில் இரவு நேர உணவு விற்பனை நிலையங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை கற்பிட்டி பிரதேச சபை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பிரதேச சபையின் மண்டபத்தில் தவிசாளர் எம் எஸ் எம் றிகாஸ் தலைமையில் இடம்பெற்றது.

கற்பிட்டி பிரதேசத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு செயல் திட்டத்தின் கீழ் கற்பிட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில், கற்பிட்டி பிரதேச எல்லைக்குட்பட்ட சிறு உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபார உணவு உற்பத்தியாளர்கள் வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் கற்பிட்டி பிரதேசத்திற்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் வினோதமான பொழுதுபோக்குடன் கூடிய உணவு வகைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கோடு இந்த இரவு நேர உணவக செயல் திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இந்த இரவு நேர உணவு விற்பனை நிலையங்கள் எதிர் வரும் செப்டம்பர் 26 ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மாலை 6:00 மணி தொடக்கம் அதிகாலை ஐந்து மணி வரை கற்பிட்டி அல் அக்ஸா சந்தியிலிருந்து திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கற்பிட்டி பிரதேசம் சுற்றுலா துறையினால் அபிவிருத்தி அடைய உள்ளதுடன், உள்ளூர் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உணவு விற்பனையாளர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்கள் புனரமைப்பு!

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக நாடு முழுவதும் 50 பேருந்து நிலையங்களை தூய்மைப்படுத்தல் மற்றும் புனரமைத்தல் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மாகாணமட்ட குழுவின் முதலாவது கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று திங்கட் கிழமை (18.08.2025) நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், நெல்லியடி, பளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, மன்னார், நானாட்டான், வவுனியா, வெங்கலச்செட்டிக்குளம் ஆகிய 9 பேருந்து நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள பிரதேச செயலர் பிரிவு ரீதியாக பிரதேச மட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுக்களின் தலைவர்களாக அந்தந்த பிரதேச செயலர்கள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகளின் மேம்பாடுகள், விரிவாக்கம் தொடர்பிலும் அவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தயாரிக்குமாறும், பிரதேச மட்டக் குழுவில் அவற்றை ஆராய்ந்து அதன் பின்னர் மாகாண மட்டக் குழுவில் அதனைச் சமர்ப்பிக்குமாறும் ஆளுநர் இன்றைய கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

வடக்கின் சகல மாவட்டங்களினதும் பிரதான நகரங்களிலுள்ள பேருந்து நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளபோதும், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் கிளிநொச்சி நகர பேருந்து நிலையம் தெரிவு செய்யப்படாமையால் அதனையும் இதில் உள்வாங்குமாறு போக்குவரத்து அமைச்சைக் கோருவதற்கு இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

அதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர பேருந்து நிலையம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமையால் அதற்குப் பதிலாக மாங்குளம் பேருந்து நிலையத்தை இந்தத் திட்டத்தில் உள்வாங்குவது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டு அது தொடர்பான கோரிக்கையும் முன்வைக்கத் தீர்மானிக்கப்பட்டது.

இஸ்ரேலில் வெடித்த மிகப் பயங்கர போராட்டம்!

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை கோரியும் இஸ்ரேலில் லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காசா நகரத்தின் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவம் தீவிரப்படுத்தி, பல்லாயிரக்கணக்கான பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை அநியாயமாக கொல்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்காக கூடியிருந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய காவல்துறை தண்ணீர் பீய்ச்சி அடித்ததுடன், பலரை கைதுசெய்துள்ளனர்.

நேற்று இரவு டெல் அவிவில் இரவு நேரத்தில் கிட்டத்தட்ட ஐந்து லட்சம் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போர் தொடங்கியதிலிருந்து இன்றுவரை இடம்பெற்ற மிகப்பெரிய மற்றும் கடுமையான போராட்டம் ஆகும் என அவர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய பள்ளிகள், வணிகங்கள் மற்றும் பொது போக்குவரத்து மூடப்பட்டு முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மூடப்பட்டன, இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ், இஸ்ரேலிய கலைஞர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் வணிக மன்றம், ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தின.மேலும் சண்டை நடந்தால் காசாவில் எஞ்சியிருப்பதாக நம்பப்படும் 50 கைதிகள் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று அஞ்சும் போராட்டக்காரர்கள், அவர்களில் சுமார் 20 பேர் மட்டுமே உயிருடன் இருப்பதாகக் கருதப்படுகிறார்கள், “நாங்கள் பணயக்கைதிகளின் உடல்களை எதிர்த்துப் போரில் வெற்றி பெற மாட்டோம்” என்று கோஷமிட்டனர்.

“இராணுவ அழுத்தம் பணயக்கைதிகளை மீண்டும் கொண்டு வராது – அது அவர்களை மட்டுமே கொல்கிறது” என்று முன்னாள் கைதி அர்பெல் யெஹூட் டெல் அவிவின் “பணயக்கைதிகள் சதுக்கத்தில்” நடந்த ஆர்ப்பாட்டத்தில் கூறினார். “அவர்களை மீண்டும் கொண்டு வருவதற்கான ஒரே வழி, ஒரே நேரத்தில் ஒரு ஒப்பந்தம் மூலம் மட்டுமே.” என அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆர்வலர்கள் காசாவில் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் முகங்களால் மூடப்பட்ட ஒரு பெரிய இஸ்ரேலிய கொடியை ஏந்திச் சென்றனர். உள்ளூர் அறிக்கைகளின்படி, டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை இணைக்கும் நெடுஞ்சாலை உட்பட முக்கிய சாலைகளையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அங்கு டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

கைதிகளின் உறவினர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்தது.

“இஸ்ரேலியர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல. உத்தியோகபூர்வ கொள்கையை எதிர்க்கும் ஒரு கணிசமான பகுதியினர் இங்கு உள்ளனர்,” என்று போராட்டக்காரர்கள் கூறினர், அவர்களில் சிலர் “681” பொறிக்கப்பட்ட கொடிகளை ஏந்திச் சென்றனர்.

மேலும் ஒற்றுமையைக் காட்டும் விதமாக ஏராளமான வணிகங்களும் நகராட்சிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. டெல் அவிவில் உள்ள இரண்டு முக்கிய திரையரங்குகளும் தங்கள் நிகழ்ச்சிகளை நிறுத்தின. ஜெருசலேமில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்புகளில் இணைந்ததால் வணிகங்கள் மூடப்பட்டன.

“போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது. அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டிய நேரம் இது. மேலும் இஸ்ரேல் மீண்டு, மிகவும் நிலையான மத்திய கிழக்கை நோக்கி நகர உதவ வேண்டிய நேரம் இது” என்று AFP இடம் பேசிய 54 வயதான சுற்றுலா வழிகாட்டி டோரன் வில்ஃபாண்ட் கூறினார்.

“அவர்கள் எங்களைத் தடுக்க மாட்டார்கள், அவர்கள் எங்களை சோர்வடையச் செய்ய மாட்டார்கள், அவர்கள் எங்களை சோர்வடையச் செய்ய மாட்டார்கள். பணயக்கைதிகள் வீடு திரும்பும் வரை, ஒரு ஒப்பந்தம் ஏற்படும் வரை, போர் முடியும் வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

சொந்த வீட்டையே எரித்து சாம்பலாக்கிய பெரிய மனுஷன்!

0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பத் தகராறு காரணமாக வீட்டு உரிமையாளரினால் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த இடத்துக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் ஹர்த்தால் முன்னெடுப்பு தோல்வி!

யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 

யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர். 

இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 

யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார். 

ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார். 

இதனை அவர் ஹர்த்தாலின் வெற்றியாகக் கருதுவதாகக் கூறினார். இந்த ஹர்த்தால் ஒரு அடையாளப் போராட்டமாக இருந்தாலும், இராணுவ முகாம்களை அகற்றக் கோரி எதிர்காலத்தில் மேலும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என்று சிவஞானம் உறுதியளித்தார்.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காத நிலையில் வழமைபோன்று இன்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், கிளிநொச்சி நகர வர்த்தக சங்கம் காலை 10மணி வரை கதவை மூடுமாறு அறிவித்த நிலையில் கிளிநொச்சி நகரத்தில் உள்ள கடைகள் சில 10மணி வரை மூடப்பட்டு, பின்பு மீண்டும் திறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் பரந்தன் உள்ளிட்ட மாவட்டத்தில் ஏனைய சிறிய நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.