Home Blog Page 10

மூடிய புகையிரத கடவையை அவசரமாக கடந்த சைக்கிள் ஓட்டுநர், நடந்தது?

ஜுட் சமந்த

வென்னப்புவ – வைக்காலை புகையிரதக் கடவையில் நேற்று முன்தினம் (25) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த புகையிரதம் கடந்து செல்வதற்காக, குறித்த புகையிரதக் கடவையின் பாதுகாப்பு கேட் முழுமையாக மூடப்பட்டிருந்தது. எனினும், அந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது, தனது மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு தண்டவாளத்தை அவசரமாகக் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் சீறிப்பாய்ந்து வந்த புகையிரதத்தில் அவர் நேரடியாக மோதியதில், பலத்த காயமடைந்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் குளியாப்பிட்டிய, பஹல கழுகமுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ரந்திலக பேடிகே கபில லால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வைக்காலை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வர்ணம் பூசும் (பெயிண்டிங்) வேலைகளில் ஈடுபட்டு வந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வென்னப்புவ பொலிஸார் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாரவில ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பக்தர்களிடம் வரி வாங்கும் சபை: முன்னேஸ்வர உற்சவத்தில் அவலம்!

ஜுட் சமந்த

கிறிஸ்துவுக்கு முற்பட்ட நீண்ட வரலாற்றைக் கொண்டதும், தென்னிந்திய பிராந்தியத்தின் புகழ்பெற்ற பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகப் போற்றப்படுவதுமான வரலாற்றுப் பெருமைமிக்க திருத்தலம்தான் சிலாபம் – முன்னேஸ்வரம். 1753 இல் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னரால் புனரமைக்கப்பட்டு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் 1988 இல் உத்தியோகபூர்வமாக புண்ணிய பூமியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இத்தலத்திற்கு தற்போது சர்வதேச அளவிலும் பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

காளியம்மன், ஐயனார் உள்ளிட்ட பல பரிவார ஆலயங்களைக் கொண்ட இந்த புண்ணிய பூமியில், ஆகஸ்ட் – செப்டம்பர் காலப்பகுதியில் நடைபெறும் வருடாந்த ‘நிக்கினி மகோற்சவம்’ மிக முக்கியமானது. நான்கு வாரங்கள் நீடிக்கும் இத்திருவிழாவில் தீமிதிப்பு, மாம்பழம் எறிதல், இரதோற்சவம் மற்றும் தீர்த்தோற்சவம் வரை அனைத்து சமய சடங்குகளும் வெகு கோலாகலமாக இடம்பெறுகின்றன. மாற்று மதத்தவர்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூட திரளும் இந்த புனித பூமியின் பளபளப்பிற்குப் பின்னால், மறைக்கப்பட்ட ஒரு கசப்பான உண்மை ஒளிந்திருக்கிறது.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு இப்பகுதியில் பல தற்காலிக வர்த்தக நிலையங்கள் முளைத்துள்ளன. ஆனால், அங்கு வரும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கோ அல்லது இரவும் பகலும் வியாபாரம் செய்யும் வர்த்தகர்களுக்கோ முகம் கழுவவோ, ஒரு மலசலகூடத்தைப் பயன்படுத்தவோ குறைந்தபட்ச சுகாதார வசதி கூட இங்கில்லை என்பதுதான் அந்த அவலம்.

“நாங்கள் நில உரிமையாளர்களுக்கு வாடகை கொடுத்து, பிரதேச சபைக்கும் வரி செலுத்தித்தான் வியாபாரம் செய்கிறோம். ஆனால் எங்களுக்குக் குளிக்கவோ, இயற்கை உபாதைகளைக் கழிக்கவோ ஒரு இடமும் இல்லை. அதிகாரிகளிடம் கேட்டால் கோவில் நிர்வாகத்திடம் போய்க் கேளுங்கள் என்கிறார்கள். அண்மையில் இங்கு வந்த ஒரு வெளிநாட்டுப் பெண்மணி கழிப்பறை வசதி இல்லாமல் பட்ட அவஸ்தை சர்வதேச அளவில் தலைகுனிவை ஏற்படுத்தியது” என அங்குள்ள வர்த்தகர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சிலாபம் பிரதேச சபை அதிகாரியிடம் வினவியபோது, “நவீன கழிப்பறை மற்றும் குளியலறை வசதிகளை அமைப்பதற்கு அரசாங்கத்திடம் நிதி தயாராக உள்ளது. ஆனால், அதைக் கட்டுவதற்கு கோவில் நிர்வாகம் காணி வழங்க மறுக்கிறது. அவர்கள் கோவில் வளாகத்திற்கு அருகில் காணி ஒதுக்கிக் கொடுத்தால் உடனடியாக நாம் சுகாதாரத் தொகுதியைக் கட்டித்தரத் தயார்” எனத் தெரிவித்தார்.

ஆனால், கோவில் நிர்வாகத்தின் தரப்போ இதற்கு நேர்மாறான வாதத்தை முன்வைக்கிறது: “வர்த்தக நிலையங்களால் கோவிலுக்கு எந்த வருமானமும் கிடைப்பதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அரசாங்கத்தினதும் உள்ளூராட்சி மன்றங்களினதும் கடமை. எங்கள் கோவில் காணிகளை இதற்காகத் தர முடியாது. அரசிற்குத் தேவைப்பட்டால் சூழவுள்ள தனியார் காணியை சுவீகரித்துக் கட்டிக்கொள்ளட்டும். முன்னேஸ்வரத்தில் இருப்பது ஈஸ்வரன் கோவில் மட்டுமல்ல, எல்லாப் பாரத்தையும் நாங்கள் மட்டுமே சுமக்க முடியாது” என நிர்வாக உறுப்பினர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டுக்கொண்டு அதிகாரிகள் பந்தை உருட்டிக் கொண்டிருக்கும் இந்த இழுபறியால், பக்தர்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்ந்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன. பல காலங்களாகத் தொடரும் இந்த அவலத்திற்கு அதிகாரிகள்தான் செவிசாய்ப்பார்களா? அல்லது முன்னேஸ்வரத்தை ஆளும் ஈஸ்வரன்தான் தலையிட்டுத் தீர்த்து வைப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய விண்வெளி திட்டத்தில் இணையும் மல்வானை மாணவி முஸ்னா!

பாத்திமா ஷஸ்னா சமீன்

  1. விண்வெளிக்கு பாயும் பெண்களின் விண்கலம்: வரலாற்றுத் திட்டத்தில் இணையும் மல்வானை மாணவி முஸ்னா!
  2. 108 உலக நாடுகள்… 200 பெண் ஆய்வாளர்கள்: இந்திய விண்வெளி மையத்தில் தடம் பதிக்கும் இலங்கை மாணவி!
  3. இந்திய ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ள மல்வானை அல்-முபாரக் மாணவி!

விண்வெளி ஆய்வில் தடம் பதிக்கும் மல்வானை மாணவி: உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை!

உலக விண்வெளி வரலாற்றில் முதல் முறையாக பாடசாலைப் பெண் மாணவிகள் ஒன்றிணைந்து வடிவமைக்கும் விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் மாபெரும் சர்வதேச திட்டத்தில், மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரி மாணவி செல்வி முஸ்னா முபாரக் இணைந்து இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

‘Mission ShakthiSAT – Phase II (India Programme)’ என்ற சர்வதேச STEM தலைமைத்துவம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் செய்மதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இப்பயிற்சிப் பட்டறை இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

108 நாடுகள்… தேர்ந்தெடுக்கப்பட்ட 200 இளம் திறமையாளர்கள்!

விஞ்ஞான உலகை ஆச்சரியப்படுத்தும் இந்த சர்வதேச திட்டத்திற்காக, உலகளாவிய ரீதியில் 108 நாடுகளிலிருந்து 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 200 சிறந்த மாணவிகள் மட்டுமே விசேடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து செய்மதி வடிவமைப்பு, விண்வெளித் தொழில்நுட்ப நுணுக்கங்கள் மற்றும் நேரடி கள ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபடவுள்ளனர். அத்துடன், இப்பயிற்சி நெறியின்போது இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் விண்வெளித் துறைசார் சர்வதேச பிரமுகர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடும் மகத்தான வாய்ப்பும் இம்மாணவிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

9A சாதனையாளரின் அடுத்த இலக்கு விண்வெளி!

இலங்கையின் சார்பாக இந்த சர்வதேச மேடையில் தடம் பதிக்கும் செல்வி முஸ்னா முபாரக், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்திகளைப் பெற்று, தற்போது மல்வானை அல்-முபாரக் தேசிய கல்லூரியில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் பயின்று வரும் ஒரு திறமைசாலி மாணவியாவார்.

இலங்கையின் கிராமிய மட்டத்திலிருந்து சர்வதேச விண்வெளி தளம் வரை இந்த மாணவி செல்வதற்கான வழிகாட்டல்களையும், இதற்கான முழுமையான நிதி அனுசரணைகளையும் சர்வதேச செயற்பாட்டாளர் கலாநிதி அல்-ஹாஜ் முஹம்மத் பசூல் ஜிப்ரி பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த வரலாற்றுச் சாதனைக்காக மல்வானை அல்-முபாரக் தேசிய பாடசாலை சமூகமும், மல்வானை வாழ் மக்களும் தமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களைக் குறிவைக்கும் ‘கில்லர் ரோபோக்கள்’: இறுதி எச்சரிக்கை!

  1. மனிதர்களைக் குறிவைக்கும் ‘கில்லர் ரோபோக்கள்’: உலகிற்கு ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் விடுத்த இறுதி எச்சரிக்கை!
  2. இயந்திரங்களிடம் செல்லும் உயிர்ப்பலி அதிகாரம்: ஆபத்தின் விளிம்பில் உலகம்!
  3. போர்க்களத்தில் ஏஐ ஆயுதப் புரட்சி: சர்வதேச சட்டங்களை வகுக்க உலக நாடுகளுக்கு அவசர அழைப்பு!

மனிதர்களின் நேரடி உத்தரவுகள் எதுவுமின்றி, இயந்திரங்களே சுயமாக இலக்குகளைத் தேர்ந்தெடுத்து மனிதர்களைக் கொல்லும் ஒரு கொடூர எதிர்காலத்தை நோக்கி உலகம் மிக ஆபத்தான முறையில் நெருங்கிக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் (ICRC) உலக நாடுகளை எச்சரித்துள்ளன.

இந்த அபாயகரமான தொழில்நுட்பத்தை உடனடியாக கட்டுப்படுத்த சர்வதேச சட்டங்கள் மற்றும் தடைகளை கொண்டு வருமாறு கடந்த 2023 ஆம் ஆண்டே கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது நிலமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும், இயந்திரங்கள் மனிதர்களை தாக்கும் அந்த ‘தார்மீக சிவப்புக் கோட்டை’ உலகம் தாண்ட மிக அருகில் உள்ளதாகவும் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போர்க்களங்களை ஆக்கிரமிக்கும் ஏஐ தொழில்நுட்பம்

இதுவரை முழுமையான தானியங்கி ஆயுதங்கள் போர்க்களத்தில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெடித்துள்ள மோதல்களில் ஆளில்லா ட்ரோன்களின் ஆதிக்கம் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதுவே மிக விரைவில் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிய ‘கில்லர் ரோபோக்கள்’ யுத்தகளத்திற்குள் இறக்கப்படலாம் என்ற சர்வதேச அச்சத்தை தூண்டியுள்ளது.

இதுபற்றி கருத்து வெளியிட்ட தலைவர்கள், “தானியங்கி ஆயுதங்கள் என்பது எதிர்காலக் கற்பனையல்ல; அந்த ஆயுதப் போட்டி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவை கட்டுப்பாட்டை மீறிப் பெருகுவதற்குள் தலைவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா என எதிர்கால சந்ததியினர் கேள்வி எழுப்புவார்கள்” என்று குறிப்பிட்டனர்.

விஞ்ஞானிகளே விடுக்கும் அபாய எச்சரிக்கை!

குறிப்பாக, இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கிய தலைமை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களே இதற்கான வரம்புகளை நிர்ணயிக்குமாறு குரல் எழுப்பி வருகின்றனர். தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்களே எச்சரிக்கும்போது, உலக நாடுகள் இதில் மெத்தனமாக இருக்க முடியாது என ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஒரு தசாப்தமாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஆயுதக் கட்டுப்பாட்டு விவகாரத்தில், உத்தியோகபூர்வ ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதா என்பது குறித்து உலக நாடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் தீர்க்கமான முடிவை எடுக்கவுள்ளன.

சர்வதேச நாடுகள் உறுதியான துணிச்சலை வெளிப்படுத்தத் தவறினால், அது மனித உயிர்களை காவு வாங்கும் எனவும், “தொழில்நுட்ப புத்தாக்கம் மனிதகுலத்திற்கு சேவை செய்ய வேண்டுமே தவிர, அதை அச்சுறுத்தலாக மாற்றக்கூடாது” எனவும் ஐ.நா மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளன.

புத்தளத்தில் கல்விப் புரட்சி: தில்லையடி பாடசாலைக்கு ரூ.1 கோடி நிதி!

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு ரூ. 1 கோடி: மாணவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு!

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த பிரதான மண்டப புனர்நிர்மாணப் பணிகள், ஒரு கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாநகர சபை உறுப்பினர் ஸஹ்ரான் தாஜூதீன் தெரிவித்துள்ளார்.

பாடசாலையின் பிரதான மண்டபம் போதிய வசதிகளின்றி காணப்பட்ட நிலையில், இதனை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வருடம் முதல் இதற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முயற்சிகள் மற்றும் திட்டமிடல்களின் பலனாக, இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் இந்த மாபெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஸஹ்ரான் தெரிவித்தார்.

களத்தில் இறங்கிய மக்கள் பிரதிநிதி

கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருத்தப் பணிகளை துரிதப்படுத்துவதுடன், அவற்றின் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட கள விஜயமொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவருமான மொஹமட் பைசல் நேரில் கலந்துகொண்டு, ஆரம்பிக்கப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை விரிவாகப் பார்வையிட்டார்.

இந்த பிரதான மண்டப புனரமைப்பானது வெறும் ஆரம்பம் மட்டுமே எனவும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான ஏனைய சகல பௌதீக வளங்களையும் முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான தொடர் முன்னெடுப்புகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில், பாடசாலையின் கற்றல் சூழல் மேலும் தரமுயர்த்தப்பட்டு மாணவர்கள் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் வளைகுடாவில் கொட்டிக்கிடக்கும் கச்சா எண்ணெய்!

  1. மன்னார் வளைகுடாவில் கொட்டிக்கிடக்கும் கச்சா எண்ணெய்: சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கை விடுத்த அவசர அழைப்பு!
  2. 2 பில்லியன் பீப்பாய் எண்ணெய், 9 டிரில்லியன் எரிவாயு: இலங்கையின் தலைவிதியை மாற்றப்போகும் மன்னார் பேசின் மெகா திட்டம்!
  3. எரிபொருள் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளியா? மன்னார் கடற்பரப்பில் 34,000 சதுர கி.மீட்டர் பரப்பில் சர்வதேச தேடுதல் வேட்டை!

இலங்கையின் மன்னார் கடல் படுகையில் புதைந்து கிடக்கும் பாரிய அளவிலான இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் வளங்களை வெளிக்கொண்டுவரும் நோக்கில், சுமார் 34,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் ஆய்வுகளுக்காக இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக திறந்துவிட்டுள்ளது.

‘2026 இலங்கை பெற்றோலிய ஆய்வுக்கான உரிமங்கள் வழங்கும் சுற்று’ கொழும்பு தெமட்டகொடையில் உள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன கேட்போர்கூடத்தில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கடலுக்குள் புதையுண்டுள்ள 2 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்!

மன்னார் படுகையில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட புவியியல் ஆய்வுகளின்படி, சுமார் 2 பில்லியன் பீப்பாய்கள் மசகு எண்ணெய் மற்றும் 9 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயு படிவுகள் காணப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் ஒட்டுமொத்த எதிர்கால எரிசக்தித் தேவையை தலைகீழாக மாற்றக்கூடிய மாபெரும் வளமாகப் பார்க்கப்படுகின்றது.

இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் தம்மிக தந்திரிகொட, பணிப்பாளர் நாயகம் கலாநிதி நீல் டி சில்வா மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ஏ.எஸ். டி ராஜகருணா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முன்னிலையில் இந்த புதிய நகர்வு அறிவிக்கப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் உலக நாடுகள்

மன்னார் படுகையில் திரவ ஹைட்ரோகார்பன்கள் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், இதுவரை மிகக் குறைந்தளவிலான பகுதியே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி நீல் டி சில்வா சுட்டிக்காட்டினார். எனவே, அதிநவீன புவியியல் ஆய்வு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மீதமுள்ள பரந்த கடற்பரப்பை சர்வதேச நிறுவனங்கள் துல்லியமாக ஆய்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஏலச் சுற்றில் இணையும் உலகளாவிய நிறுவனங்களுக்கு, இலங்கை அரசிடம் உள்ள முழுமையான புவியியல் ஆய்வுத் தரவுகளும் நேரடியாக வழங்கப்படும்.

பல தசாப்தங்களாக வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியையே முழுமையாக நம்பியிருக்கும் நாட்டிற்கு இந்த வளங்கள் உறுதிப்படுத்தப்பட்டால், அது தேசிய பொருளாதாரத்தின் போக்கையே திசைமாற்றும். இருப்பினும், இந்த படிவுகளின் உண்மையான இருப்பு மற்றும் வணிக ரீதியான பயன்பாடு என்பது அடுத்தகட்ட தொடர் ஆய்வுகள் மற்றும் வெற்றிகரமான அகழ்வு நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது.

தடைத்தாண்டல் பரீட்சை தொடர்பில் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இலங்கை ஆசிரியர் சேவையில் பணியாற்றும் உத்தியோகத்தர்களின் தொழில்சார் முன்னேற்றத்திற்கும் தரம் உயர்விற்கும் அடிப்படையான 2026 ஆம் ஆண்டிற்கான III ஆம் கட்ட வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சைக்கான ஏற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்தப் பரீட்சைக்கான விண்ணப்பக் கோரல் இன்று (25) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தகுதியுடைய அனைத்து ஆசிரியர்களும் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக செப்டம்பர் 14 ஆம் திகதிக்குள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும்.

இலங்கை ஆசிரியர் சேவை மற்றும் மாகாண அரச சேவையில் தரம் 2-I (Grade 2-I) இற்கு தரம் உயர்த்தப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இப்பரீட்சையை நிறைவு செய்வது கட்டாய நிபந்தனையாகும். அத்துடன், 4 ஆண்டுகள் கடந்திருந்தாலும் 2025 ஜூன் 30 ஆம் திகதிக்குப் பின்னர் தரம் 1 (Grade 1) இற்கு பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களும் இந்த வினைத்திறன்காண் பரீட்சைத் தேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரீட்சார்த்திகள் எவ்வித சிரமமுமின்றி பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில், அதற்கான சுய கற்றல் தொகுதிகளின் பாடத்திட்டங்களை (Self-study modules) கல்வி அமைச்சு ‘e-Thaksalawa’ உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது. தகுதியுடைய ஆசிரியர்கள் காலதாமதமின்றி விண்ணப்பித்து, பாடநெறிகளை முறையாகப் பின்பற்றி பரீட்சைக்குத் தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வானிலை அமைப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பல மாகாணங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று விடுத்துள்ள விசேட வானிலை முன்னறிவிப்பில் எச்சரித்துள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடைவிடாது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன.

இதற்கு இணையாக நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் வேளையில் வானிலை தீவிரமடையவுள்ளது. அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, அனுராதபுரம், மாத்தளை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் வறட்சியான வானிலையே நீடிக்கும்.

மழை ஒருபுறமிருக்க, நாட்டின் பல பாகங்களில் காற்றின் வேகமும் சடுதியாக அதிகரிக்கவுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை, மொனராகலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், இடியுடன் கூடிய மழை தீவிரமடையும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய அதிவேகக் காற்று மற்றும் மிக ஆபத்தான மின்னல் தாக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்த்துக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

வறட்சியால் கருகிய பயிர்கள்: விவசாயிகளுக்கு ரூ. 3,000 மில்லியன் நட்டஈடு!

நாட்டின் பிரதான விவசாய மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மிக விரைவாகக் காப்பீட்டு நட்டஈட்டை வழங்கும் நோக்கில், அரசாங்கம் 3,000 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக ஒதுக்கியுள்ளது.

உலகளாவிய ரீதியில் நிலவும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் இலங்கையின் விவசாயப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மொனராகலை, பொலன்னறுவை, அம்பாந்தோட்டை, அனுராதபுரம் மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் சோளம் உள்ளிட்ட பிரதான பயிர்கள் போதிய நீரின்றி முற்றாகக் கருகிப்போயுள்ளன.

தற்போதைய களநிலைமைத் தரவுகளின்படி, இந்த 5 மாவட்டங்களிலும் 7,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இதில் நெற்செய்கையில் மட்டும் அனுராதபுரத்தில் 1,923 ஏக்கர்களும், மொனராகலையில் 1,401 ஏக்கர்களும், பொலன்னறுவையில் 1,259 ஏக்கர்களும், அம்பாறையில் 1,055 ஏக்கர்களும், அம்பாந்தோட்டையில் 783 ஏக்கர்களும் நாசமாகியுள்ளமை பதிவாகியுள்ளது.

விவசாயிகளின் இந்த அவல நிலையைக் கருத்திற்கொண்டு, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் சேத மதிப்பீட்டுப் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் கள உத்தியோகத்தர்களும், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்களும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்குச் சென்று தரவுகளைச் சரிபார்த்து வருகின்றனர்.

இந்த விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ் நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 வகையான பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 100,000 வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நட்டஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, இதுவரை தமது பயிர்ச் சேதங்களை அறிவிக்காத விவசாயிகள் எவரேனும் இருப்பின், தாமதிக்காது உடனடியாக அருகிலுள்ள கமநல சேவை நிலையங்களின் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு அல்லது பிரதேச விவசாய உத்தியோகத்தர்களைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள 1918 என்ற விவசாய காப்புறுதிச் சபையின் உடனடித் தொலைபேசி இலக்கத்தை அழைக்க முடியும்.

இன்டர்போல் வலையில் வீழ்ந்த ‘பஸ் லலித்’: துபாயில் கைது!

இலங்கையில் பல்வேறு தீவிர குற்றச் செயல்களுடன் தொடர்புடைய முக்கிய பாதாள உலகக் கும்பல் தலைவனும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர (அழைக்கப்படும் ‘பஸ் லலித்’) துபாயில் கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை குற்றப்புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகளால் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதான இந்த நிழலுலக தாதா, நீண்டகாலமாக பாதுகாப்பு பிரிவினருக்கு சவால் விடுத்து வெளிநாட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் பாரியளவில் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

குறிப்பாக, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கின் அடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினால் பெறப்பட்ட சர்வதேச பொலிஸாரின் (Interpol) ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Notice) மூலமாகவே இவர் துபாயில் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

சந்தேகநபர் மீது ஹங்வெல்ல, அவிசாவளை, கட்டுகுருந்த, பாடுக்க, மீகொட மற்றும் கல்தோட்டை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், C-4 வகையைச் சேர்ந்த அதிக சக்திவாய்ந்த வெடிபொருட்களை வைத்திருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவர் மீது நீதிமன்றங்களால் பல திறந்த பிடியாணைகளும் (Open Warrants) பிறப்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள கொலை வழக்கு ஒன்றில் ஆஜராகத் தவறியமை, 2021 செப்டம்பர் 20 அன்று நெலுண்துடுவ பகுதியில் நபர் ஒருவரை வீட்டின் முன் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்தமை மற்றும் 2022 அக்டோபர் 16 அன்று மூவரை கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியமை உள்ளிட்ட சம்பவங்கள் இதில் பிரதானமானவை.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள ‘பஸ் லலித்’ தற்போது குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு, அவரது நிழலுலக வலையமைப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பாக தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.