Home Blog Page 9

22 ஆவது திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் NPP எம்.பி. அதிரடி மனு!

இலங்கை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் புதியதொரு சட்ட மோதலாக உருவெடுத்துள்ளது. முன்மொழியப்பட்டுள்ள இந்தத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) முக்கியஸ்தர்கள் தாக்கல் செய்த மனுவை முற்றாகத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மண் நிபுண ஆராய்ச்சி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதனால் இதற்கு மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) கோரப்பட வேண்டும் எனவும் தெரிவித்து, BASL இன் பொருளாளர் மற்றும் உதவிச் செயலாளர் ஆகியோர் விசேட மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையிலேயே, இந்த வழக்கில் தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தோன்றி வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி NPP நாடாளுமன்ற உறுப்பினர் களமிறங்கியுள்ளார்.

குறித்த சட்டத்தரணிகள் சங்க மனுதாரர்களின் வாதங்கள் அடிப்படை ஆதாரமற்றவை எனவும், சட்ட ரீதியாக நிலைநிறுத்த முடியாதவை எனவும் லக்ஷ்மண் நிபுண ஆராய்ச்சி தனது மனுவில் மிகத் தெளிவாக நிராகரித்துள்ளார். உரிய தரப்பினருடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு மற்றும் அரசியலமைப்பு பேரவை பொறிமுறையை தவிர்ப்பதாக கூறப்படும் வாதங்கள் அனைத்தும் தவறானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, உச்ச நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தல், பிரதம நீதியரசரின் ஓய்வுபெறும் திகதி தொடர்பான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய மாற்றங்களே கொண்டுவரப்படவுள்ளன.

இவ்வாறான சீர்திருத்தங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடுகளையோ, சட்டத்தின் ஆட்சியையோ அல்லது நீதித்துறையின் சுயாதீனத்தையோ எவ்விதத்திலும் மீறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். மேலும், இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரமுள்ளதால், மக்கள் தீர்ப்பு எதனையும் நாட வேண்டிய அவசியமில்லை எனவும், BASL மனுவை முழுமையாகத் தள்ளுபடி செய்து தீர்ப்பளிக்குமாறும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இந்தத் திருத்தச் சட்டமூலத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது சட்டமாக மாறினால் இதன் மூலம் நேரடிப் பலனைப் பெறப்போகும் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி தற்போதைய பிரதம நீதியரசரே ஆவார். எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதியுடன் நிறைவடையவுள்ள அவரது பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசர அவசரமாக முன்னெடுக்கப்படுவதாக மக்கள் மத்தியில் ஒரு வலுவான சந்தேகம் நிலவி வருவதாக சட்டத்தரணிகள் சங்கம் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை, நாடாளுமன்ற விவாதங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நீதித்துறை மற்றும் பிரதம நீதியரசரை இலக்கு வைத்து அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் சங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு நிறுவனத்தையும் போலவே, நீதித்துறையும் சட்டபூர்வமான கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டது என்பதை சங்கம் திட்டவட்டமாக வலியுறுத்துகிறது.

நீதித்துறையின் சுயாதீனம் என்பது தவறுகளையோ பொறுப்புக்கூறலையோ மறைப்பதற்கான ஒரு கேடயம் அல்ல. மாறாக, சட்டத்தின் ஆட்சி, பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கைப் பாதுகாக்கும் ஒரு முக்கிய அரணாகும். எனவே, நீதித்துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதேவேளை, உண்மையான பிரச்சினைகளைச் சட்ட வழிமுறைகளின் ஊடாகத் தீர்க்க முன்வருமாறு அரசு, ஊடகங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் நளின் டி சில்வா ஆகியோர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

வான்வழித் தாக்குதலில் இருந்து பொருளாதாரத் தடைக்கு மாறிய அமெரிக்கா!

மத்திய கிழக்கைத் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஆரம்பித்த ஈரான் மீதான போர், இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள போதிலும் ஒரு முடிவற்ற இழுபறி நிலையிலேயே தொடர்கிறது. ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டு, ஆட்சிக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்ட போதிலும், தெஹ்ரான் அரசு கவிழ்ந்துவிடாமல் தனது அதிகாரத்தை மிக இறுக்கமாகத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இராணுவ ரீதியான வான்வழித் தாக்குதல்களுக்கு அப்பால், தற்போது களத்தை ஈரானின் எண்ணெய் வருமானம், வங்கிகள் மற்றும் சர்வதேச வர்த்தகப் பங்காளிகளை நோக்கிய பொருளாதாரப் போராக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மாற்றியுள்ளார். அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை மூலம் ஈரானின் அந்நியச் செலாவணி வருவாயை முடக்க வாஷிங்டன் திட்டமிட்டுள்ள போதிலும், ஈரானின் பொருளாதாரத்திற்குத் தோள் கொடுக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் மீது அமெரிக்காவால் முழுக் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது என ஈரான் உறுதியாக நம்புகிறது.

அமெரிக்காவின் இந்த அதிரடி அழுத்தங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், செங்கடலில் யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய உத்தியை ஈரான் கையில் எடுக்கக்கூடும் என சர்வதேச பாதுகாப்பு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதாவது, நேரடிப் போரில் ஈடுபடாமல் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்துவது, துறைமுகங்கள், கப்பல்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற தொடர் இடையூறுகளின் மூலம் வளைகுடா நாடுகளுக்குப் பெரும் பொருளாதார நெருக்கடியை உருவாக்குவதே ஈரானின் வியூகமாக அமையக்கூடும்.

மறுபுறம், ஈரானியத் தலைமைகளுக்குப் பொருளாதாரத் தடைகளை விடவும், அதனால் வெடிக்கக்கூடிய உள்நாட்டு மக்கள் புரட்சியே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நாட்டில் பணவீக்கம் 66% ஆகவும், உணவுப் பொருட்களின் விலை 128% வரையிலும் உயர்ந்துள்ள நிலையில், வருமானம் வீழ்ச்சியடைந்து பிரச்சினைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதை ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். போராட்டங்களை அடக்குவதில் தீவிரமான ‘பசிஜ்’ (Basij) துணை இராணுவப் படைகள் மீண்டும் களமிறக்கப்பட்டு மக்கள் அமைதியின்மை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த மோதலில் வளைகுடா நாடுகள் மிக இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ள நிலையில், போர் தீவிரமடைவதையோ அல்லது ஈரான் இதில் வெற்றியாளராக உருவெடுப்பதையோ வளைகுடா நாடுகள் விரும்பவில்லை. வாஷிங்டன், தெஹ்ரான் மற்றும் வளைகுடா நாடுகள் ஆகிய முத்தரப்பும் தத்தமது நிலைப்பாடுகளில் விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாததால், இந்த யுத்தம் சர்வதேச ரீதியில் பெரும் பொருளாதாரத் தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு நீண்டகால இழுபறியாகத் தொடர்கிறது.

பனிப்பாறை சரிந்து நேபாளத்தில் கோர வெள்ளம் – 1,000 பேருக்கு மேல் மாயம்!

இமயமலையின் உறைபனிப் பிரதேசம் கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பேரழிவுக் களமாக மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. நேபாள மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதியில் அமைந்திருந்த பிரதான பனிப்பாறையொன்று திடீரென உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்ததைத் தொடர்ந்து, வரலாறு காணாத திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பனி, பாறை மற்றும் சேறு கலந்த இந்த இராட்சத வெள்ளப்பெருக்கு 350-க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்களைப் பறித்துள்ளதுடன், 1,000-க்கும் அதிகமானோரை அடித்துச் சென்றுள்ளது.

வெள்ளம் பாய்ந்தோடிய பாதையில் மலையேற்றப் பாதைகளும், யாத்ரீகர்கள் பயணித்த முக்கிய வீதிகளும் அமைந்திருந்ததே மனித இழப்பு இவ்வளவு தீவிரமடைய பிரதான காரணமாக அமைந்தது. மாயமானவர்களில் சுமார் 700 பேர் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் என்பதால், சர்வதேச அளவில் பெரும் பதற்றமும் சோகமும் நிலவுகிறது. தரைவழிப் பாதைகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஹெலிகொப்டர்கள் மூலமாகவே உயிருடன் இருப்பவர்களைத் தேடும் பணிகளும், உணவு மற்றும் கூடாரங்களை வழங்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பகுதியில் ஏற்பட்டுள்ள அழிவின் உக்கிரம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சம்மேளனத்தின் (IFRC) பேச்சாளர் டொமாசோ டெல்லா லோங்கா (Tommaso Della Longa) வெளியிட்ட தகவல்கள் உலகை உலுக்கியுள்ளன. “8 முதல் 10 மீற்றர் உயரத்திற்கு எழுந்த அசுர அலைகள் ஒட்டுமொத்த கிராமங்களையே அடித்துச் சென்றுவிட்டன. முன்னொரு காலத்தில் மக்கள் வாழ்ந்த பகுதிகள் இப்போது உலக வரைபடத்திலேயே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது; சுமார் 10,000 குடும்பங்கள் தமது வீடுகளை இழந்துள்ளன” என அவர் உருக்கமாகத் தெரிவித்தார். வெள்ள நீர் வடிந்த பின்னரே உண்மையான பேரழிவின் முழுப் பரிமாணமும் தெரியவரும் என்பதால், இயல்பு வாழ்க்கை திரும்ப பல மாதங்கள் அல்லது வருடங்கள் கூட ஆகலாம் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், இந்த அவலத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மற்றுமொரு பாரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது. பனிப்பாறை இடிந்து ஆற்றுப் பாதையை மறித்ததால் வெள்ளப் பெருக்கப் பகுதியில் இயற்கையாக ஒரு பாரிய தற்காலிக ஏரி உருவாகியுள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருவதால், அது எந்தக் கணத்திலும் உடைந்து அடுத்தகட்ட பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என நேபாள அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பனிப்பாறை வெடிப்புகள் எப்போதும் பேரழிவையே தந்துள்ளன:

  • 1941 (பெரு – ஹுவாராஸ்): பனி ஏரி உடைந்ததில் ஹுவாராஸ் நகரின் மூன்றில் ஒரு பகுதி அழிந்து 5,000 பேர் பலியாகினர்.
  • 1962 (பெரு – ரன்ராஹிர்கா): 10 மில்லியன் கன மீற்றர் பனிக்கட்டி மற்றும் பாறைகள் சரிந்து 4,000 பேரை உயிரோடு புதைத்தது.
  • 1970 (பெரு – யுங்காய்): 7.9 ரிக்டர் நிலநடுக்கத்தால் பனிப்பாறை உடைந்து 25,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
  • 1981 (திபெத் – சிரென்மா கோ): நேபாள எல்லைக்கு அருகே ஏற்பட்ட பனிப்பாறை வெடிப்பில் 200 பேர் உயிரிழந்தனர்.
  • 2021 (இந்தியா – சாமோலி): நந்தா தேவி அருகே பனிப்பாறை உடைந்து உத்தராகண்டில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தற்போது 2026-இல் நேபாள-திபெத் எல்லையில் ‘லெண்டே கோலா’ (Lhende Khola) ஆற்றுப் படுகையைத் தாக்கியுள்ள இந்த அனர்த்தம், நவீன வரலாற்றின் மிகக் கொடூரமான பனிப்பாறைப் பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளதுடன், எல்லை தாண்டிய அனர்த்த முகாமைத்துவத்தின் அவசியத்தை உலகிற்கு மீண்டும் உணர்த்தியுள்ளது.

புத்தளம் பச்சக் காட்டு முந்தல் வெள்ளப் பிரச்சினைக்குக் கிடைத்த அதிரடி தீர்வு!

புத்தளம், பச்சக் காட்டு முந்தல் கிராம மக்கள் மழைக்காலம் என்றாலே எதிர்கொள்ளும் பிரதான அச்சம் வெள்ளப்பெருக்கு. புத்தளம் சோல்ட் லிமிடட் மற்றும் ரைகம் சோல்ட் லிமிடட் நிறுவனங்களுக்கு முன்னால் அமைந்துள்ள பிரதான கால்வாயின் ஊடாக ஏற்பட்ட இந்தத் தொடர் வெள்ள அனர்த்தம், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் மிகக் கடுமையாகப் பாதித்து வந்தது.

தங்கள் அவல நிலையைத் தீர்க்கக் கோரி, அப்பகுதி மக்கள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகோதரர் முஹம்மட் பைசலிடம் முறைப்பாடு செய்தனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைக் கேட்டறிந்த அவர், இதனைப் வெறும் கோரிக்கையோடு நிறுத்திவிடாமல், புத்தளம் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் உடனடியாக விவாதப் பொருளாக முன்வைத்தார்.

பேச்சுவார்த்தைகளோடு நின்றுவிடாது, உரிய திணைக்கள அதிகாரிகள் சகிதம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடி களவிஜயமும் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் பலனாக, வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் நிர்மாணப் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டன.

இன்று (27.08.2026) வியாழக்கிழமை, குறித்த பகுதியில் மும்முரமாக நடைபெற்று வரும் நிர்மாணப் பணிகளைப் பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவருமான முஹம்மட் பைசல் நேரில் சென்று மேற்பார்வையிட்டார்.

இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்கள், நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பாலாவி கிராம மக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். இந்தத் துரித நடவடிக்கையானது, பச்சக் காட்டு முந்தல் கிராம மக்களின் நீண்ட கால அச்சத்தைப் போக்கி பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளப் பெருக்கு! இதுவரை 165 பேர் பலி !

திடீர் சேற்றுப் பேரலை… கண்முன்னே கரைந்துபோன கிராமங்கள்: நேபாள – சீனா எல்லையில் கோரத்தாண்டவம்!

எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி நொடிப்பொழுதில் பாய்ந்துவந்த பல மாடி உயர சேற்றுப் பிரவாகம், நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் எல்லைப் பகுதிகளைத் தரைமட்டமாக்கியுள்ளது. வரலாறு காணாத இந்த திடீர் வெள்ளப் பெருக்கில் இதுவரை 165 க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோரின் நிலை இன்னும் தெரியவில்லை.

நேபாள பொலிஸார் இதுவரை 162 சடலங்களை மீட்டுள்ள நிலையில், சீனாவின் கீரோங் பகுதியில் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் சேற்றுப் பெருக்கில் ஒரு மாடிக் கட்டிடம் மீது சேறு பாய்ந்து அமுக்கும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், சீனா தனது பகுதியில் 260 வெளிநாட்டவர்கள் உட்பட 558 பேர் மாயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்குப் பெயர்போன இந்த பிராந்தியத்தில், 142 இந்தியர்கள், 34 அவுஸ்திரேலியர்கள் மற்றும் மலேசியா, தென் கொரியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் உட்பட 579 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்களுடன் 28 நேபாள பொலிஸ் உத்தியோகத்தர்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

“எங்கள் கண்முன்னே ஒரு பெரும் சேற்று மலை திரண்டு வந்தது. வீட்டுக்குள் சேறு புகுந்ததும் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு மொட்டை மாடிக்கு ஓட முயன்றேன்; ஆனால் என் கண்முன்னே அவளை அந்த சேற்றுப் பிரவாகம் இழுத்துச் சென்றுவிட்டது,” என மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 68 வயதான கேஷவ் பிரசாத் பரால் என்ற முதியவர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

போதே கோசி மற்றும் திரிசூலி நதிகளின் வழித்தடத்தில் அமைந்திருந்த பாடசாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதில் ஒட்டுமொத்த கிராமங்களே வரைபடத்தில் இருந்து துடைத்தெறியப்பட்டுள்ளன. நேபாளத்தின் 430 மெகாவாட் நீர்மின் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்து முழு பிராந்தியமும் இருளில் மூழ்கியுள்ளதுடன், நதி பாயும் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் 6 மாவட்ட மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

நேபாள பிரதமர் பாலேந்திர ஷா மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளனர். நேபாள இராணுவம் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கியுள்ள போதிலும், பல அடி ஆழத்திற்கு புதைந்துள்ள வண்டல் சேறு, தகர்க்கப்பட்ட பாதைகள் மற்றும் தொடரும் மழை காரணமாக இயந்திரங்களை அங்கு கொண்டுசெல்வதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளுக்காக அமெரிக்கா 5 இலட்சம் டொலர்களை உதவியாக அறிவித்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரணங்களை அனுப்பி வருகிறது.

கடுமையான மழை இல்லாத நிலையிலும் இந்த அனர்த்தம் ஏற்பட்டமைக்கு, பனிப்பாறைச் சரிவு ஒன்று நதியின் ஓட்டத்தை இடைமறித்து திடீரென பெருக்கெடுத்தமையே காரணம் என காலநிலை நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உயிர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுக்கள் இரவும் பகலுமாகப் போராடி வருகின்றன.

வீட்டில் 18 இலட்சம் ரூபா கொள்ளை: முந்தல் பகுதியில் அதிர்ச்சி!

ஜுட் சமந்த

பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் உள்ள ஒரு கிராமத்து வீட்டில், திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் முந்தல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மங்களஎலிய – நுகசெவன கிராமத்தைச் சேர்ந்த முருகன்கங்கானம்கே தேஷிகா (வயது 40) என்ற பெண் முந்தல் நகரில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வருகின்றார். இவரது கணவர் தொழில் நிமித்தம் ருமேனியா நாட்டுக்குச் சென்றுள்ளதால், இவர் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் திகதி காலையும் வழமைபோல் வீட்டைப் பூட்டிவிட்டு அவர் பணிக்குச் சென்றுள்ளார்.

பணி முடிந்து மாலையில் வீடு திரும்பிய அவருக்கு வாயிலிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் அறைகள் கலைக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டு பதறிப்போனார்.

உடனடியாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சோதனையில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 17 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும், அவசரத் தேவைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 70,000 ரூபா ரொக்கப் பணமும் சுருட்டப்பட்டிருப்பது தெரியவந்தது.

கொள்ளையன் வீட்டின் முன்பக்கக் கதவை உடைக்காமல், எவருக்கும் சந்தேகம் வராத வகையில் வீட்டின் குளியலறை காற்றுத் துவார (Ventilator) ஜன்னல் ஊடாக மிக நைச்சியமாக வீட்டிற்குள் ஊடுருவியுள்ளான். பின்னர் தனது கைவரிசையைக் காட்டிவிட்டு, சமையலறையின் கதவைத் திறந்து கொண்டு தடையின்றி தப்பிச் சென்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனிமையில் வசிப்பதையும், பகல் வேளையில் அவர் வேலைக்குச் செல்வதையும் மிகத் துல்லியமாக நோட்டமிட்ட ஒருவரே இச்செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை வலைவீசிப் பிடிக்க பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவலாளி தூங்கிய நேரம் கைவரிசை: கஜு மூட்டை முதல் பேட்டரி வரை கொள்ளை!

ஜுட் சமந்த

25 ஏக்கர் தோட்டத்தில் துணிகர கொள்ளை: தடயங்களை அழிக்க சிசிடிவி கேமராக்களையே அள்ளிச் சென்ற பலே திருடர்கள்!

பரந்து விரிந்த 25 ஏக்கர் தென்னந்தோட்டம், சுற்றிலும் அதிநவீன சிசிடிவி கேமராக்களின் தீவிர கண்காணிப்பு; ஆனாலும் தடயமே இல்லாமல் அனைத்தையும் அள்ளிச் சென்று பொலிஸாருக்கே சவால் விட்டுள்ளனர் ஒரு மர்மக் கும்பல்.

ஆனைமடுவ – சேருகெலே, சியம்பலாகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த அக்குரண பத்திரணலாகே விஜேரத்ன (வயது 69) என்பவருக்குச் சொந்தமான 25 ஏக்கர் தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இந்தத் துணிகரத் திருட்டு இடம்பெற்றுள்ளது. வழமைபோல கடந்த 25 ஆம் திகதி மாலை வீட்டைச் சுற்றிலும் மின்விளக்குகளைப் பொறுத்திவிட்டு, அவர் தோட்டத்திலுள்ள காவல் கொட்டகைக்கு (முரமடுவ) சென்றுள்ளார்.

ஆனால், மறுநாள் 26 ஆம் திகதி அதிகாலை 5.30 மணியளவில் அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது காத்திருந்தது பேரதிர்ச்சி. வீட்டின் பாதுகாப்பிற்காக நான்கு பக்கங்களிலும் பொருத்தப்பட்டிருந்த 8 அதிநவீன சிசிடிவி கேமராக்களும் மாயமாகியிருந்தன.

உடனடியாக வீட்டைச் சோதனையிட்டபோது, திருடர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து கைவரிசையைக் காட்டியிருப்பது அம்பலமானது. தங்களின் அடையாளங்கள் எக்காரணம் கொண்டும் பதிவாகிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்த கொள்ளையர்கள், சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்யும் டி.வி.ஆர் (DVR) இயந்திரத்தையும் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் திருப்தியடையாத அவர்கள், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 35 கிலோகிராம் கஜு (முந்திரி) அடங்கிய மூட்டை, குழாய் கிணற்றின் நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் அங்கிருந்த டிராக்டரின் பிரதான பேட்டரி உள்ளிட்ட பெறுமதிமிக்க பல பொருட்களையும் சுருட்டிக்கொண்டு இரவோடு இரவாகத் தப்பியோடியுள்ளனர்.

திட்டமிட்டு சாட்சியங்களை அழித்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், உப பொலிஸ் பரிசோதகர் சுனில் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் கொள்ளையர்களைக் கைது செய்ய தீவிர வலைவீசி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீட்டுக்குள் கசிப்பு தொழிற்சாலை: பல்லம பொலிஸாரின் அதிரடி!

ஜுட் சமந்த

அமைதியான கிராமத்து வீடொன்றுக்குள் அதியுயர் திட்டமிடலுடன் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை, பல்லம பொலிஸார் மேற்கொண்ட மின்னல் வேக அதிரடிச் சோதனையின் மூலம் தகர்த்தெறிந்துள்ளனர்.

பல்லம – வத்துப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் எவருக்கும் சந்தேகமில்லாத வகையில் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி செய்யப்படுவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று (26) மாலை குறித்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸ் குழுவினர், அங்கு முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத உற்பத்தியைக் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

இந்த அதிரடிச் சோதனையின்போது, விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 69,000 மில்லிலீட்டர் (92 போத்தல்கள்) கசிப்பு, கசிப்பு உற்பத்திக்குத் தேவையான 210 லீட்டர் கோடா அடங்கிய பீப்பாய், செப்புச் சுருள் (Copper coil), எரிவாயு அடுப்பு மற்றும் சிலிண்டர் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பொலிஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

குறித்த சந்தேகநபர் இங்கிருந்து மிகவும் நுணுக்கமாக ஏனைய வெளிப் பிரதேசங்களுக்கும் கசிப்பை விநியோகித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, வரவிருக்கும் நிக்கினி போயா தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் சூழலைப் பயன்படுத்தி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த பாரிய உற்பத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட அனைத்து சான்றுப் பொருட்களையும் ஆனைமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்லம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுரேஷ் பிரதீப் ஜயவர்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினரே இந்த அதிரடிச் சுற்றிவளைப்பை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர்.

ஆற்றுக்குள் மூழ்கும் துட்டகைமுணு காலத்து ரகசியங்கள்: சிலாபத்தில் பேரதிர்ச்சி!

ஜுட் சமந்த

வரலாற்றை விழுங்கும் தெதுரு ஓயா: சிலாபத்தில் அழியும் விளிம்பில் துட்டகைமுணு காலத்து புராதன விஹாரை!

இலங்கையின் வரலாற்றுக் களஞ்சியங்களில் ஒன்றான வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சிலாபம் – ஆரியகம புராதன சேத்திய ரஜமகா விஹாரை, தெதுரு ஓயா ஆற்றில் மூழ்கி முற்றாக அழிந்துபோகும் அதியுச்ச ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. பல நூறு ஆண்டுகால பழைமைவாய்ந்த தூபியின் செங்கற்கள் ஒவ்வொன்றாக ஆற்றுக்குள் சரிந்து விழுந்துவரும் காட்சிகள் அங்குள்ள மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

துட்டகைமுணு மன்னனின் காலத்தில் அவரது பிரதான தளபதியான ‘நந்தமித்திர யோதயா’ என்பவரால் சிலாபம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் பல விஹாரைகள் நிர்மாணிக்கப்பட்டன. அவற்றுள் பல்லம நந்தமித்திர விஹாரையும், இந்த ஆரியகம சேத்திய ரஜமகா விஹாரையும் தலையாயவை. பல வரலாற்றுச் சின்னங்களையும், சிதைவடைந்த ஒரு புராதன தூபியையும் தன்னுள் கொண்டுள்ள இந்த புனித பூமி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டு பொறுப்பேற்கப்பட்டது.

ஆனால், இயற்கையின் திசைமாற்றமும் அதிகாரிகளின் மெத்தனமும் இந்த வரலாற்றுப் பொக்கிஷத்தை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளன. கடந்த சில வருடங்களாக தெதுரு ஓயா தனது இயற்கையான ஓட்டப் பாதையை மாற்றத் தொடங்கியுள்ளது. ஆற்றின் வடகரையில் பாரிய அளவில் மணல் மேடுகள் குவிந்து வருவதால், நீர் தெற்குக் கரையை நோக்கிப் பாய்ந்து அதிதீவிரமாக கரையை அரித்துச் செல்கிறது. இதனால், தெற்குக் கரையில் நந்தமித்திர தளபதியால் கட்டப்பட்ட புராதன தூபி மெல்ல மெல்ல சரிந்து ஆற்றுக்குள் பலியாகி வருகிறது.

ஊடகங்கள் மூலம் இது வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, நீர்ப்பாசன திணைக்களமும் தொல்பொருள் திணைக்களமும் இணைந்து பாறாங்கற்கள் மற்றும் மணல் மூடைகளை அடுக்கி பாதுகாப்பு வேலிகளை அமைத்த போதிலும், அந்தப் பாதுகாப்புத் தடுப்புகளையும் தாண்டி தூபியின் பாரிய செங்கற்கள் தொடர்ந்தும் ஆற்றுக்குள் சரிந்து விழுந்து கொண்டிருக்கின்றன.

இது தொடர்பில் தீவிர கவலை வெளியிட்டுள்ள விஹாராதிபதி வணக்கத்துக்குரிய நல்லூருவே சுமனசார தேரர், “நான் இங்கு வந்து 30 வருடங்களுக்கும் மேலாகிறது. தெதுரு ஓயா அன்று ஓடிய வழியில் இன்று ஓடவில்லை. வடகரையில் சேர்ந்துள்ள மணல் மேடுகளால் தெற்குக் கரையை உடைத்துக்கொண்டு ஆறு பாய்கிறது. புராதன தூபியின் ஒரு பகுதி ஏற்கனவே ஆற்றுக்குள் போய்விட்டது. இந்த நிலம் இப்போது தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமானது என்பதால் எங்களால் சுயமாக எந்த புனரமைப்பும் செய்ய முடியாது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அழிவை நேரில் வந்து பார்க்கக்கூட எவரும் வரவில்லை. அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் விஹாரை வளாகமே ஆற்றுடன் கரைந்துபோகும்” என எச்சரிக்கிறார்.

மறுபுறத்தில் கிராம மக்களும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். “வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் போதெல்லாம், கிராம மக்கள் அனைவரும் விஹாரை வளாகத்தில் உள்ள இரண்டு மாடி தர்ம மண்டபத்திலேயே தஞ்சம் புகுவோம். அந்த நேரங்களில் தேரரே எங்களுக்கு உணவளித்துப் பாதுகாப்பார். வரவிருக்கும் மழைக் காலத்தில் ஆறு பெருக்கெடுத்தால், விஹாரை மட்டுமல்லாமல் முழு கிராமமுமே பேரழிவைச் சந்திக்கும்” என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆற்றின் போக்கை பழைய நிலைக்கு மாற்றி, வடகரையில் உள்ள மணல் குவியல்களை அகற்றுவதே இதற்குரிய ஒரே உடனடித் தீர்வாகும். தொல்பொருள் திணைக்களம் என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பெயர் பலகைகளை நடுவதோடு தனது கடமையை முடித்துக் கொள்ள முடியாது; எதிர்கால சந்ததியினருக்காக எமது வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பதும் அவர்களின் தலையாய பொறுப்பாகும்.

அகிலத்தின் அருட்கொடை: இலங்கை முஸ்லிம்களின் பக்திப் பெருவிழா!

  • அகிலத்தின் அருட்கொடை: உலகை மாற்றிய உன்னத வாழ்வும் இலங்கை முஸ்லிம்களின் பக்திப் பெருவிழாவும்!
  • வெறுப்பை வென்ற கருணை: நபிகளாரின் வாழ்வியல் வழிகாட்டலும் களைகட்டும் மீலாத் தின நிகழ்வுகளும்!
  • மன்னிப்பின் சிகரம் நபிகள் நாயகம் (ஸல்): ரபிஉல் அவ்வல் மாதத்தில் இலங்கையில் மிளிரும் சமய நல்லிணக்கம்!

அறியாமை, அநீதி மற்றும் பாகுபாடுகளின் இருளில் மூழ்கியிருந்த ஓர் அரபுச் சமூகத்தில், ஆன்மீக ஒளியையும் சமத்துவத்தையும் விதைத்த உன்னத சரித்திரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது. அகில உலகிற்கும் ஓர் அருட்கொடையாக, நல்வழிகாட்டியாகத் தோன்றிய இஸ்லாத்தின் இறுதித் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித பிறந்த தினத்தை, உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் ஆழ்ந்த ஈமானோடும் பக்தியோடும் இன்று நினைவுகூருகின்றனர்.

ஆன்மீக வழிகாட்டலுக்கு அப்பால், அண்ணலாரின் வாழ்வு சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள் மற்றும் நீதியின் முழுமையான அடையாளமாகத் திகழ்ந்தது. நபித்துவத்திற்கு முன்னரே தனது வாய்மையினால் “அல்-அமீன்” என அனைவராலும் போற்றப்பட்ட அவர், மக்கா வெற்றியின் போது தம்மைத் துன்புறுத்திய எதிரிகளுக்கே பொதுமன்னிப்பு வழங்கி மன்னிப்பின் சிகரமாய் நின்றார். இறுதிப் பேருரையில் மனித சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தி, நாட்டின் தலைவராக இருந்தும் எளிய ஈச்சம்பாய் படுக்கையில் உறங்கி எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து காட்டினார்.

இந்த உன்னத வழிகாட்டலின் தொடர்ச்சியாக, இலங்கையிலும் ரபிஉல் அவ்வல் பிறந்தது முதல் ஆன்மீக மணம் கமழத் தொடங்குகிறது. நாட்டின் அனைத்து பள்ளிவாசல்கள், தக்கியாக்கள் மற்றும் இல்லங்களில் நபிகளாரின் புகழ்பாடும் சுப்ஹான மௌலித் மற்றும் புர்தா காவியங்கள் பக்திபூர்வமாக பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் மாணவர்களுக்கான போட்டிகளுடன் தேசிய மீலாத் விழாவும் மிக விமரிசையாகக் களைகட்டுகின்றது.

ஆன்மீக நிகழ்வுகளையும் தாண்டி, அண்ணலாரின் கருணைச் செய்தியை மக்கள் களத்தில் செயலாக மாற்றும் காட்சிகளே இங்கு தனித்துவமானது. ஏழை எளியவர்களுக்கான உதவிகள், இரத்ததான முகாம்கள் மற்றும் தபர்ருக் எனப்படும் ‘நேர்ச்சை சாப்பாடு’ தயாரித்து அண்டை வீட்டாருடனும் மாற்று மத சகோதரர்களுடனும் பகிர்ந்து உண்ணும் வழக்கம் இலங்கையின் பல்லின நல்லிணக்கத்தை மென்மேலும் மெருகூட்டுகிறது.

ஆகவே, வெறுமனே கொண்டாட்டங்களோடு நின்றுவிடாமல், நபிகளார் காட்டித்தந்த பொறுமை, வாய்மை, மனிதநேயம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற விழுமியங்களை நமது அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே, நாம் அண்ணலாருக்குச் செலுத்தும் மிக உன்னதமான நன்றிக்கடனாகும்.