Home Blog Page 112

பாகிஸ்தான் தலைநகரில் தற்கொலை தாக்குதல் – 69 பேர் பலி:

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 69 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ஷியா சமூகத்தினர் சுமார் 20 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகையில் 10-12 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் வழக்கம் போல் மக்கள் கூடியிருந்தனர். மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 69 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 169 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனம் மற்றும் சிடிஏ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுதாரி ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடையவர் என்று இஸ்லாமாபாத் போலீசார் கூறுகின்றனர். டிடிபி தாக்குதல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள “நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின்” எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறான ஓய்வூதியச் சலுகைகளை வழங்குவது அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமாக இருக்கவில்லை என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய ஓய்வூதியச் சட்டம், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்காகக் காணப்படுவதாகவும், புதிய சட்டமூலம் அந்த விதிவிலக்கை நீக்கி சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகவும் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

இந்தச் சட்டமூலமானது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களின் போது தற்போதைய அரசாங்கத்திற்கு மக்களால் வழங்கப்பட்ட தெளிவான ஆணையின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டு வந்த இந்த ஓய்வூதிய முறைமையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைப் பரிசீலித்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் கீழ் இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இது தொடர்பான தமது வியாக்கியானத்தை இரகசியமாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தது.

அதற்கமையவே இந்த வியாக்கியானம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெற்று வந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் மாகாண பாடசாலைகளில் 2,834 ஆசிரியர் வெற்றிடங்கள்!

தென்னிலங்கை மாணவர்களின் கல்விக்கனவு சிதையுமா?

இலங்கையின் தென் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கான புதிய முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தென் மாகாண சபைக்கும் அதற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கும் இடையில் நிலவும் இந்த இடைவெளியை நிரப்புவது ஒரு சவாலான காரியமாக மாறியுள்ளது.

தென் மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளில் தற்போது 2,834 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக தென் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.கே.ஆர்.பத்திரண தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான இடமாற்றங்கள், ஆசிரியர்களின் ஓய்வு மற்றும் பாட ரீதியாக நிலவும் வெற்றிடங்கள் குறித்த விரிவான தகவல்கள் தற்போது வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வியைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, நிலவும் வெற்றிடங்களில் 1,417 இடங்களை இந்த வருடத்திற்குள் நிரப்புவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்குத் தனியான பரீட்சை மூலமும், ஏனைய பட்டதாரிகளுக்குத் திறந்த போட்டிப் பரீட்சை மூலமும் ஆசிரியர்களைத் தெரிவு செய்ய கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைபவர்களின் விபரங்கள் மாகாண கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட பின், மாகாண சபையினால் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.

இதேவேளை கல்வித்துறை சார்ந்த விசேட பட்டதாரிகளை (Bachelor of Education) எவ்வித போட்டிப் பரீட்சைகளுமின்றி நேரடியாக ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளில் ஆசிரியர் இன்றித் தவிக்கும் பிள்ளைகளின் ஏக்கத்தைப் போக்கி, அவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். முறையாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் ஊடாக, தென் மாகாணத்தின் கல்வித் தரம் மீண்டும் புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பிள்ளையும் தனது கல்வி உரிமையைப் பெறுவதை உறுதி செய்வதே ஒரு சமூகத்தின் கடமையாகும். அந்த வகையில், இந்த 1,417 புதிய ஆசிரியர்களின் வருகை தென் மாகாணக் கல்வித்துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என நம்பலாம்.

மூன்று ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 30% குறையும்!

இலங்கை மக்கள் நீண்டகாலமாகச் சுமந்து வரும் பாரிய பொருளாதாரச் சுமைகளில் ஒன்றான மின்சாரக் கட்டண விவகாரத்தில், தற்போது ஒரு புதிய நம்பிக்கை ஒளி தென்படத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி பாராளுமன்றத்தில் நேற்று (05) உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

மின்சார உற்பத்திச் செலவைக் குறைக்காமல், நுகர்வோருக்கான கட்டணத்தைக் குறைக்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அரசாங்கம் பொறுப்பேற்ற போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய 37 ரூபா செலவான நிலையில், தற்போது அது 29 ரூபாவாக (22%) குறைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்திச் செலவை மேலும் 25 ரூபா வரை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்காமல், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நீண்டகாலத் திட்டங்களையும் அரசாங்கம் வகுத்துள்ளது.

இதன்படி, தேசிய மின் கட்டமைப்பில் சூரிய மற்றும் காற்று போன்ற இயற்கை எரிசக்தி ஆதாரங்களை அதிகளவில் உள்வாங்குதல், தேசிய மின் விநியோக மற்றும் கடத்தல் கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதுடன், எரிசக்தி சேமிப்பு வசதிகளை (Storage systems) அறிமுகப்படுத்துதல், காலாவதியாகும் மின் நிலையங்களுக்குப் பதிலாக நவீன வெப்ப மின் நிலையங்கள் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) மின் நிலையங்களை நிறுவுதல், தற்போது இயங்கி வரும் நீர் மின் நிலையங்களின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்தத் திட்டங்கள் வெற்றியடையும் பட்சத்தில், ஒவ்வொரு சாதாரணக் குடும்பமும் தமது மாதாந்த வரவு செலவுத் திட்டத்தில் மின்சாரத்திற்காகச் செலவிடும் தொகை கணிசமாகக் குறையும். இருளில் தவிக்கும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரும் நிம்மதியையும், ஒளிமயமான எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் வழங்கியுள்ளது.

இலங்கையின் பாடசாலைக் கல்வியில் பாரிய நெருக்கடி!

அறிவொளி மங்கும் வகுப்பறைகள்: இலங்கையின் பாடசாலைக் கல்வியில் நிலவும் பாரிய நெருக்கடி

இலங்கையின் இலவசக் கல்வி முறையானது ஆசியாவிற்கே முன்மாதிரியாகக் கருதப்பட்டாலும், இன்று அது ஒரு பாரிய சவாலை எதிர்நோக்கி வருவதை அண்மைக்கால புள்ளிவிபரங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. நாட்டின் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் சிறுவர்களின் கல்வி கற்கும் சூழல், ஆசிரியர்களின் பற்றாக்குறையாலும் மாணவர்களின் வரவு வீழ்ச்சியாலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இலங்கையிலுள்ள மொத்தப் பாடசாலைகளின் எண்ணிக்கை 10,047 ஆகும். இவற்றுள் 3,065 இற்கும் அதிகமான பாடசாலைகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை 10 இற்கும் குறைவாகவே உள்ளது என்பது கவலைக்குரிய விடயமாகும். இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால், ஒரு தேசியப் பாடசாலையும் இந்த குறைந்த ஆசிரியர் எண்ணிக்கையைக் கொண்ட பட்டியலில் உள்ளடங்கியுள்ளது.

பாடசாலைகளில் ஆசிரியர்கள் மட்டுமல்லாது, மாணவர்களின் எண்ணிக்கையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. நாடு முழுவதும் உள்ள 1,645 அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை 50 இற்கும் குறைவாகவே காணப்படுகிறது. இவ்வாறு மிகக்குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளில் ஒரு தேசியப் பாடசாலையும் அடங்குவது கல்வியமைப்பின் தற்போதைய நிலையைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும், 51 முதல் 100 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 1,648 ஆகும், இவை அனைத்தும் மாகாணப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்கால சந்ததியினரின் கல்வி ஆர்வத்தைக் காட்டும் முதலாம் தர அனுமதி வீதமும் 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு 266,281 பிள்ளைகள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி என்பது ஒரு நாட்டின் உயிர்நாடி. ஆனால், ஆயிரக்கணக்கான பாடசாலைகள் மிகக்குறைந்த ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும் இயங்கி வருவது அந்த உயிர்நாடி மெல்ல மெல்லப் பலவீனமடைந்து வருவதையே காட்டுகிறது. இந்த நெருக்கடி நிலை தொடருமானால், கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமை கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது.

எதிர்கால சந்ததியினரின் கனவுகள் கருகிவிடாமல் இருக்க, சிதைந்து வரும் இந்தப் பாடசாலைக் கட்டமைப்பைச் சீரமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

காலியில் இடம்பெற்ற விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (05) மாலை பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார் ஒன்று, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் மோட்டார் சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் பின்னால் பயணித்த இருவர் காயமடைந்து கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்னால் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்கள் வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 36 மற்றும் 16 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என தெரியவந்துள்ளது. 

விபத்து தொடர்பில் குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலியகொட – புத்தளம் வீதியில் மாரவில நகருக்கு அருகில், சிலாபத்திலிருந்து வென்னப்புவ நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

விபத்தில் காயமடைந்த பாதசாரி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஒருவராவார். 

குறித்த விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாடாளுமன்றில் மீண்டும் சூடுபிடித்த மன்னார் – புத்தளம் வீதி விவகாரம்!

மன்னார் மற்றும் வடமாகாண மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான எழுவன்குளம் வீதி விவகாரம், நாடாளுமன்றத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இது வெறும் வீதி பற்றிய சர்ச்சை மட்டுமல்ல; ஒரு இனத்தின் வரலாற்று வழித்தடத்திற்கும், இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையிலான ஒரு தீர்க்கப்படாத போராட்டமாக உருவெடுத்துள்ளது.

மன்னார் – எழுவன்குளம் வீதி என்பது நேற்று இன்று உருவானதல்ல; இது நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு பாரம்பரிய வழித்தடம். வில்பத்து சரணாலயத்தின் ஊடாகச் செல்லும் இவ் வீதி, வடபகுதிக்கும் தென்பகுதிக்குமான தூரத்தைக் குறைக்கும் மிக முக்கிய இணைப்பாகக் கருதப்படுகிறது.

எனினும், 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, 2018 முதல் இவ்வீதியின் பராமரிப்புப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நிலவும் சட்டச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.

2018 ஆம் ஆண்டு முதல் இவ்வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இவ்வீதியில் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அதன்படி சரணாலயப் பகுதிக்குள் பொதுப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரைத் தவிர மற்றவர்கள் அனுமதியின்றி நுழைய முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கியமாக, சூழலியல் சமநிலையைப் பேண இந்த வீதியை சரளைக் கல் வீதியாக மட்டுமே பராமரிக்க முடியும்; தார் இட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மற்றும் வடமாகாண மக்களுக்கு இந்த வீதி ஒரு வரப்பிரசாதம். கொழும்பு நோக்கிய பயண தூரத்தை இது பெருமளவு குறைக்கிறது. 2022 டிசம்பரில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற காடழிப்புகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உருவானதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது நிலவும் முட்டுக்கட்டைகளை உடைக்க, சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், சட்டச் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, அத்தியாவசியத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, மன்னார் – எழுவன்குளம் வீதி குறித்து அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி பிழையாகவே அவரை வழிநடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஹா மஸ்தான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இப்பாதை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் சில பிரதிவாதிகள், தற்போது அதிலிருந்து பின்வாங்கி, மன்னார் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், இது தொடர்பில் பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் நீண்டகாலக் கனவான இந்த வீதி, இயற்கையைச் சிதைக்காமல் நவீன தொழில்நுட்பங்கள் அல்லது மாற்று வழிகள் மூலம் பயன்பாட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

“ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி என்ன? நடப்பது என்ன?

மன்னார் – புத்தளம் பாதையை திறந்து மக்கள் பாவனைக்கு விடுவோம் என தேர்தல் வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி அனுர குமாரவின் அரசு, 15 வருடங்களுக்கு முன் அப் பாதைக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து செயற்படுவது கண்டிக்ககூடியவது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்,

இன்று (05) பாராளுமன்றில் ஆற்றிய உரையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு உரையாற்றும் போது,

”மன்னார் புத்தளம் பாதையை திறந்து தருவோம் என்று சொல்லி விட்டு இன்று, நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த இனவாத தரப்புடன் இணைந்து அவர்களின் அமைச்சின் திணைக்களங்கள் கூறுவது வேடிக்கையானது. இன்று அமைச்சர் பிமல் ரத்நாயக் அவர்கள், இந்த பாதை தொடர்பில் குறிப்பிட்ட விடயம், ஒரு நியாயமானதாக, எனக்கு தெரியவில்லை.

விமல் ரத்நாயக்க அவர்களின் மீது ஒரு பெரிய நல்லெண்ணம் கொண்டவனாக நான் இன்று வரை இருந்தேன். ஆனால், மன்னார் புத்தளம் பாதை சம்பந்தமாக, அவருடைய கருத்து, ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நூறு வருடம் பழமைவாய்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான, B(பீ) வகையான பாதையே மன்னார்- புத்தளம் பாதை ஆகும். 

நான் அமைச்சராக இருந்த பொழுது, அந்த பாதையை, மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தேன். அதற்கு முன்னர் நூறு (100) வருடங்களுக்கு முன்னால் அந்த பாதை, வீதி அபிவிருத்தி அதிகார சபை பாதையாக இருந்த பாதை, எங்களை எல்லாம் அன்று அந்த மண்ணிலிருந்து, பயங்கரவாதம் வெளியேற்றிய பொழுது, அந்தப் பாதையும் மூடப்பட்டு, வாழ்ந்த மக்கள் எல்லாம் விரட்டி அடிக்கப்பட்டதனால், அந்தப் பகுதியில், யாரும் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 

இரண்டாயிரத்தி ஒன்பதாம் ஆண்டு, சமாதானம் வந்த பிறகுதான், சொந்த ஊருக்கு, அந்த மக்கள், குறிப்பாக மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, பாலக்குழி, பெரியமடு, முள்ளிக்குளம் மக்கள் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் மீள் குடியேறச்சென்றார்கள்.

அவ்வாறு செல்லுகின்ற பொழுது, பாரம்பரியமாக மக்கள் வாழ்ந்த பெரியமடு, மரிச்சுக்கட்டு, பாலக்கூலி, கரடிக்குழி, முள்ளிக்குளம், கொண்டச்சி, அளக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகள் இவ்வாறு வன வள திணைக்களத்திற்கு கீழ் 2012ஆம் ஆண்டு, அந்த மக்களுக்கே தெரியாமல் அன்றிருந்த அரசாங்கம் இரகசியமாக வர்த்தமானி அறிவித்தல் செய்து கையகப்படுத்தினார்கள்.  

இதற்கு எதிராக, அன்று நான் ஆளும் கட்சியில் இருந்தாலும் இவ் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக தொடர் முயற்சியாக போராடிக்கொண்டு எதிர்த்து பல போராட்டங்களை நியாயபூர்வமாக நாங்கள் செய்த பொழுது இந்த நாட்டில் இருந்த மதவாதம் குறிப்பாக, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மதகுருமார் ஒரு சிலர் மன்னாரோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் மன்னாருக்குள்ளே வந்து ஆர்ப்பாட்டங்களை செய்து என்னை  ”ஒரு காடுகளை அழிக்கின்ற” ஒருவராக காட்டுகின்ற, ஒரு மோசமான ஒரு இனவாத செயலைச் செய்தார்கள்.

எந்த ஊடகத்தை எடுத்தாலும் எனக்கு எதிராக அந்த மக்களுடைய குடியேற்றத்திற்கு எதிராக ஒரு பெரிய அநியாயமாக அன்று பேசப்பட்ட ஒரு காலமாக இருந்தது.

அதையெல்லாம் தாண்டி அம்மக்களை நான் குடியேற்றினேன். அவ்வாறு இருக்கின்ற பொழுது இந்த மன்னார்-புத்தளம் பாதையை மூடுமாறு மேல் மாகாணத்தில் இருக்கின்ற, அந்த பாதைக்கு, சம்பந்தமில்லாத ஒரு சில சிங்கள மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டார்கள்.  மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் அன்று வழக்கு போடுகின்ற பொழுது நானும் அதில் நான்காவது  குற்றவாளியாக பெயரிடப்பட்டேன். அதுபோல் வனவள திணைக்களத்திற்கும், அன்று இருந்த முன்னாள் அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, சேர்த்து வழக்குதாக்கல் செய்தனர். 

இதன் போது அன்றைய காலம் தொட்டு அனுரவுக்கு முன்னர் இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன , கோட்டாபாய ராஜபக்‌ஷ, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைத்து ஆட்சியாளர்களின் அமைச்சின் திணைக்களங்கள் மக்களுக்கு சார்பாகவே இருந்தனர், குறிப்பாக வனவளத்திணைக்களம், வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம் மக்களுக்காக அப்பாதையை திறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலலையே இருந்தனர்.

ஆனால் இன்று இருக்கின்ற ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் ஆட்சியிலுள்ள அமைச்சரின் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியோர் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளனர், 

இந்த வீதியூடாக மன்னாரிலே இருந்து, புத்தளத்துக்கு வருகின்ற பொழுது, சுமார் 100 கி.மீ குறைவாக உள்ளது.

இந்த பாதையை திறப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய அனுரகுமார திஸ்ஸநாயக்க மீது, இனவாதம் இல்லாத ஓர் அரசாங்கம் என்றும்,  முஸ்லிம் சமூகத்தினர் ஜனாதிபதி அனுர மீது நல்லெண்ணம் கொண்டிருந்தோம். நீங்கள் செய்யும் நல்ல விடயங்களுக்கு நாம் ஆதரவுகளை வழங்கி இருந்தோம், ஆனால் அப்படிப்பட்ட இந்த அரசாங்கம் இந்த பாதையை நிரந்தரமாக மூடுவதற்கான துரோகத்தை செய்கின்றது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்கின்ற பொருட்களை கொழும்புக்கு கொண்டு வருவதன் மூலம் எவ்வளவு பொருளாதாரம் மிச்சம் என்று சிந்தியுங்கள். நூறு கிலோமீட்டர் குறைகின்ற பொழுது, நாட்டுக்கு வருகின்ற சுற்றுலா பயணிகள், அந்த பிரதேசத்துக்கு செல்லுகின்ற பொழுது, அந்த பிரதேசம் முன்னேறும். அதேபோல, நூறு கிலோமீட்டர் கூடுதலாக செல்லுகின்ற பொழுது, எவ்வளவு சுற்றாடல் மாசடையும் என்று  சிந்தியுங்கள்.

இலங்கையின் 78 வது சுதந்திரத்தினை அரசு கொண்டாடிய போது வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்கள் சுதந்திர தினத்தை கறிநாளாக கொண்டிாடியதுடன், தமது எதிர்ப்பு ஊர்வலங்களை நடத்தினர். ஆனால் நாங்கள் உங்களிடம் நாட்டை பிரித்து கொடுங்கள் என்று கேட்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, தயவு செய்து விலங்குகளை பாதுகாக்கிறோம் என்று மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை இந்த அரசாங்கம் எடுக்கக் கூடாது. இது தொடர்பாக அவசரமாக பொறுப்பான அமைச்சர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஓர் மேசையில் உட்கார்ந்து பேசுங்கள் தீர்வைப் பெற்றுத்தாருங்கள்.

ஜனாதிபதி அவர்கள், புத்தளத்துக்கு சென்ற பொழுது மன்னார் புத்தளம் பாதையில் ஒரு பெரிய அணைக்கட்டை கட்டுவதற்கு 600 மில்லியன் தருவதாக முடிவெடுத்துள்ள நிலையில், இந்த வரலாற்று துரோகத்தை நீங்கள் செய்துவிடாதீர்கள். அந்த அணைக்கட்டு திட்டத்தை விட இந்த வீதி முக்கியம், அதை திறந்து மக்கள் பாவனைக்கு கையளியுங்கள், இல்லையெனின் நாட்டிற்கு அது பெரும் பாதிக்கப்பாக அமையும்.” என இன்றைய பாராளுமன்ற உரையில் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவித்தார்.

சுதந்திரமா? சுமையா? – வடக்கு கிழக்கில் வெடித்த “கரிநாள்” எழுச்சி!

இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் தெற்கில் களைகட்டியுள்ள நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் சோகம் தோய்ந்த கறுப்பு நிறம் வீதிகளை ஆக்கிரமித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்திருந்தன.

“தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் அல்ல, இது ஒரு கரிநாள்” என்ற கோஷத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடித்திருக்கிறது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த ஒருமித்த அழைப்பு, இன்று ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளனர்.

போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகி, நகரத்தை நோக்கி ஒரு பெரும் பேரணியாக உருவெடுத்தது.

  • வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்: கைகளில் படங்களை ஏந்தி, நீதிக்காகக் காத்திருக்கும் அந்த விழிகளில் தெறிப்பது வெறும் கண்ணீரல்ல, அது காலங்காலமான வலி.
  • இளைஞர் மற்றும் மாணவர்கள்: வருங்கால சந்ததியினரின் உரிமையை உறுதிப்படுத்த வீதியில் இறங்கியுள்ளனர்.
  • தென்னிந்திய ஆதரவு: இந்த போராட்டத்திற்கு எல்லை கடந்து தென்னிந்தியப் பிரபலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளமை, ஈழத் தமிழர்களின் கோரிக்கைக்கு சர்வதேசப் பரிமாணத்தை வழங்கியுள்ளது.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ள ஊடக அறிக்கையில், தமிழர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போராட்டம் நடைபெறும் வீதிகளெங்கும் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், இந்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், மக்கள் எவ்வித அச்சமுமின்றித் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இலங்கை, சுதந்திர தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடும் இவ்வேளையில், வடக்கு கிழக்கில் ஒலிக்கும் இந்த “கரிநாள்” முழக்கம், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வுக்கான அவசியத்தை உலக நாடுகளுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற சுதந்திர தின விழா!

புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா: “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் மகுடத்தில் சிறப்பான கொண்டாட்டம்

இலங்கை திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழா, “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக அவர்களின் தலைமையில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த கயான் ஜானக உள்ளிட்ட அதிதிகளை, புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியின் (St. Andrew’s College) மாணவர் படைப் பிரிவினரும், ஆனந்தா கல்லூரியின் பேண்ட் வாத்தியக் குழுவினரும் அணிவகுப்புடன் கௌரவமாக வரவேற்றனர்.

புனித ஆண்ட்ரூ கல்லூரி மாணவர்களின் தேசிய கீதத்துடனும், ஆனந்தா கல்லூரி மாணவர்களின் ஆசீர்வாதப் பாடல்களுடனும் விழா இனிதே ஆரம்பமானது.

விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன:

கருவலகஸ்வெவ கலாசார மத்திய நிலையத்தின் பூஜா நடனம், இந்து கல்லூரி மாணவிகள் வழங்கிய பரதநாட்டிய கலைநிகழ்ச்சி, புத்தளம் மற்றும் பல்லம கலாசார மத்திய நிலையங்களின் புதுமையான நவீன நடனங்கள், ஆனமடுவ கலாசார மத்திய நிலையத்தின் பாரம்பரிய ‘வெஸ்’ (Wes) நடனம் நிகழ்வை மேலும் மெருகூட்டின.

புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. இந்திக்க மஞ்சுள சில்வா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து, இந்த நன்நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தமிழ் மொழியில் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சிங்கள மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக சில்வா, மேலதிக மாவட்டச் செயலாளர்களான புபுதிகா எஸ். பண்டார (நிர்வாகம்) மற்றும் சதுரிகா ஜயசிங்க (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.