Monday, June 22, 2026
Sponsored advertisementspot_img
Home Blog Page 117

கனடாவில் இடம்பெற்ற 35வது ஆண்டு நினைவு நாள்!

வடக்கு முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதன் 35வது ஆண்டு நினைவு நாள்

கனடா வாழ் வட புல முஸ்லீம் மக்களால் ஏற்பாடு செய்யபட்ட இந்நிகழ்வில்
தமிழர்கள், முஸ்லிம்கள், தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள், கனடிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு கனடா, டொரெண்டோவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த இனச்சுத்திகரிப்பு என்றுமே ஏற்றுக்கொள்ள முடியாத துன்பவியல் நிகழ்வு என்றும், காலம் கடந்தாலும் இம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் இடம்பெற்ற கருப்பு அக்டோபர் நினைவேந்தல்!

கறுப்பு அக்டோபர் 2025 – புத்தளத்தில் நினைவேந்தல் ஒன்று கூடல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

1990 ஆம் ஆண்டில் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருப்பு அக்டோபர் நினைவேந்தல் நிகழ்வு புத்தளத்தில் இன்று 31.10.2025 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வை 1990 ஆம் ஆண்டில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டோரின் சங்கம் (Forcibly Evicted Association – 1990) ஏற்பாடு செய்தது. பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் வெளியேற்றப்பட்ட குடும்பங்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்று, தங்களது நில உரிமைகள், மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

நிகழ்வில் கலந்துகொண்டோர் பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்த அநீதிக்கு விரைவான தீர்வை அரசிடம் கோரினர்.

இந்நிகழ்வில் “எங்கள் வீடுகள், எங்கள் நிலங்கள், எங்கள் உரிமைகள்” என்ற வாசகம் ஒலித்ததுடன் நிகழ்வின் முடிவில் அமைதி, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக பிரார்த்தனை செய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு நிறைவுபெற்றது.

முன்னுதாரணமாக செயற்பட்ட வடக்கு மாகாணம்!

வட மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனைகளை நடத்தி தேவையான மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்கி இலங்கையில் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமான செயற்பாட்டை வட மாகாணம் மேற்கொண்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக முன்பள்ளி மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண்பரிசோதனை நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வட மாகாண பாடசாலை மாணவர்களுக்கான, ‘நகுலேஸ்வரி வாசுதேவன் இலவச கண் பரிசோதனை மற்றும் கண்ணாடி விநியோகத் திட்டம்’ வடக்கு மாகாண சுகாதார மற்றும் கல்வி அமைச்சுக்களுடன் இணைந்து யாழ்.போதனா மருத்துவமனையின் கண் மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கான நிதி அனுசரணையை அலாகா அறக்கட்டளை (மலேசியா) மூலம், அசிஸ்ட் ஆர்ஆர் (இங்கிலாந்து மற்றும் இலங்கை) ஊடாக வழங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கண்பரிசோதனை முன்னெடுப்பதற்காக 1,150 ஆசிரியர்கள் பயிற்றப்பட்டனர்.

அவர்கள் ஊடாக கண்டறியப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவ நிபுணர் எம்.மலரவன் தலைமையிலான குழுவினர் கண்பரிசோதனைகளை மேற்கொண்டனர். வடக்கிலுள்ள 9,313 மாணவர்களில் சுமார் 4.49 சதவீதத்தினர் கண்ணாடி தேவையுடையவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த ஒட்டுமொத்த செயன்முறை மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய ‘தெளிந்த பார்வை, ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஒன்றும் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை (31.10.2025) ஆளுநர் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

திட்டமிட்ட காலத்துக்குள் விரைவாக இதனைச் செய்து முடித்த மருத்துவ நிபுணர் மலரவன் தலைமையிலான குழுவினருக்கு ஆளுநர் நன்றிகளைக் தெரிவித்தார். இதற்கு நிதியுதவி வழங்கக் காரணமான மருத்துவர் வேலாயுதம் சர்வேஸ்வரனுக்கும் நன்றிகளை தெரிவித்ததுடன், இந்தச் செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது எனவும் எமது மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும் கெளரவ ஆளுநர் தெரிவித்தார்.

கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவமனைக்குச் செல்வதில்லை. பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில் குறைபாடு உள்ளது என்பதே தெரியாது. இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும் வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம் வெற்றியளித்திருக்கின்றது.

இந்தத் திட்டத்துக்கு அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு நல்கியிருக்கின்றார்கள். மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிச் செயலாளர்கள், பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வடக்கிற்கு உலக வங்கி 24 மில்லியன் நிதி உதவி!

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் மூலம் வடமாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு 24மில்லியன் ரூபா பெறுமதியான உழவியந்திரம் மற்றும் வயல் மட்டப்படுத்தும் இயந்திரங்கள் இன்று 31.10.2025 வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கிளிநொச்சியிலுள்ள காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பிரதித்திட்டமிடல் அலுவலகத்தில் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் A.C பாபு தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உலக வங்கியின் பணிக்குழு தலைவர் Dr Sheu Salau கலந்து கொண்டு குறித்த உபகரணங்களை வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் திட்டப்பணிப்பாளர் சமன் பந்துலசேன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேல்மாகாண ஆளுநருக்கு மற்றொரு பதவி!

0

மேல்மாகாண ஆளுநருக்கு மற்றொரு பதவி!

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, மேல்மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப்பை வெளிநாட்டு முதலீட்டுக்கான ஜனாதிபதியின் சிறப்புத் தூதராக நியமித்துள்ளார்.

அரசியலமைப்பின் 41(1) வது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

உலகளாவிய முதலீட்டு கூட்டாண்மைகளில் திரு. யூசூப்பின் அனுபவத்தையும், இலங்கையின் தனியார் துறையின் வளர்ச்சிக்கு அவர் அளித்த நீண்டகால பங்களிப்பையும், அரசாங்கத்தின் பொருளாதார மறுமலர்ச்சித் திட்டத்தில் உதவுவதற்கான அவரது திறனையும் இது அங்கீகரிக்கிறது.

அதன்படி, சர்வதேச முதலீட்டாளர்கள் மற்றும் மூலோபாய கூட்டாளர்களுடன் உயர் மட்ட ஈடுபாட்டை எளிதாக்குதல், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்கு வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரித்தல், முக்கிய முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் கண்டு ஊக்குவித்தல் மற்றும் முதலீட்டு வாரியம் (BOI), ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB), துறைமுக நகர ஆணையம் மற்றும் தொடர்புடைய வரி அமைச்சகங்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றுதல் ஆகியவை அவரது பொறுப்புகளில் அடங்கும்.

இந்த முயற்சி நாட்டிற்குள் நிலையான வெளிநாட்டு முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்கவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார ஸ்திரத்தன்மையில் சர்வதேச நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ஹனிஃப் யூசுப், மேல் மாகாண ஆளுநராக தனது கடமைகளுக்கு மேலதிகமாக இந்தப் பணியை ஒரு கௌரவ சேவையாகவும் மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வசமாக சிக்கிய சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர்!

0

பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஐவர் கைது

2025.06.05 அன்று கொழும்பு 11, செட்டியார் தெருவில் உள்ள இரண்டு நகைக் கடைகளில் ரூ.102,000,000/= ( பத்து கோடி இருபது இலட்சம் ரூபாய்) கொள்ளைச் சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுக் கொள்ளை விசாரணைப் பிரிவு, நடத்திய விசாரணையில், 05 சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஐவரும், கொஸ்கம, ஹன்வெல்ல, தங்கொட்டுவ, மில்லேவ மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 30 முதல் 46 வயதுக்குட்பட்ட இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றுபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் சட்டபூர்வமான சோதனை நடத்துவது போல் தங்க ஆபரணக் கடைகள் இரண்டுக்குள் சென்று, அங்கிருந்து பத்து கோடி இருபது இலட்சம் ரூபா பணத்தை கைப்பற்றி அங்கிருந்த ஏழு ஊழியர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களில் நான்கு பேரிடம் சட்டவிரோத சிகரெட்டுகள் இருந்ததாக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திவிட்டு, கொண்டு செல்லப்பட்ட பணத்தில் சுமார் ஐந்து கோடி ரூபாவை அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நேற்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அடையாள அணிவகுப்புக்காக 2025.11.07 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டிய, நீர்கொழும்பில் சிக்கிய கடத்தல் பீடி இலைகள்!

0

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவுடன் இணைந்து, கல்பிட்டி, இப்பன் தீவிலும் நீர்கொழும்பு மாஓயா களப்பு பிரதேசத்திலும் கடந்த 2025 அக்டோபர் 28 ஆம் திகதி சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று தொண்ணூற்று மூன்று (793) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய, புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவின் ஒத்துழைப்புடன் கல்பிட்டி, இப்பன்தீவில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, தீவின் ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினைந்து (15) பைகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. அங்கு, பைகளில் பொதிசெய்யப்பட்ட சுமார் நானூற்று எண்பத்து நான்கு (484) கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டன.

இதேபோல், மேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் கெலனி, கடலோர காவல்படையுடன் இணைந்து நீர்கொழும்பின் மாஓயா களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அங்கு எட்டு (08) பைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் முன்னூற்று ஒன்பது (309) கிலோகிராம் பீடி இலைகளுடன் (01) டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.

அதன்படி, இந்த நடவடிக்கைகளின் மூலம் வடமேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் புத்தளம் மதுவரி சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன, மேலும் மேற்கு கடற்படை கட்டளையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அத்தியட்சகர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஹுஸைன் அஹமட் பைலா பிணையில் விடுதலை!

0

ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹுஸைன் அஹமட் பைலா என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும், சந்தேகநபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த சமர்ப்பணங்களை கவனத்தில் எடுத்துக்கொண்ட பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்தார். 

2015 ஆம் ஆண்டில் குறித்த கூட்டுத்தாபனத்திற்குப் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மீறி, தேவையில்லாத நிலையில் 50 தற்காலிக களஞ்சியசாலைகளை (கொட்டகைகள்) இறக்குமதி செய்ததன் மூலம், கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 99,679,799.70 நட்டம் ஏற்படுத்தியதாகவும், அத்துடன் அதே மதிப்புள்ள நன்மையை வெளித்தரப்பினருக்கு வழங்கியதன் மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இவரைக் கைது செய்திருந்தது.

நிகழ்வில் இணைந்த மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்!

0

“போதைப் பொருளுக்கு இல்லை என்று சொல்லுங்கள், வாழ்க்கைக்கு ஆம் என்று சொல்லுங்கள்” என்னும் கருப்பொருளில் இலங்கை முழுவதும் போதை அற்ற சமுதாயத்தை உருவாக்கும் செயற்திட்டத்தின் அங்குராபண நிகழ்வு மேன்மை தங்கிய ஐனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய அலுவலர்கள் என பலரும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அந்த வகையில் மன்னார் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களும் காணொளி மூலம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

நிகழ்வின் போது போதைப் பொருளுக்கு எதிரானவன் நான் எனவும், போதைப் பொருள் ஒழிப்பு செயற்பாடுகளுக்கு இலங்கை பிரஜை என்ற அடிப்படையில் ஆதரவு தருவேன் என சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் இன்று காலை 8.00 மணி முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த சங்கம் இதனை அறிவித்துள்ளது. 

நேற்று (30) இரவு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ (தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு), சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இடையே நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட இணக்கங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையை மீறி, தன்னிச்சையாக நடைமுறைப்படுத்த முயற்சித்த வைத்தியர்களின் இடமாற்றங்களை இடைநிறுத்தவும், அதற்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையின் மூலம் ஒரு கால அட்டவணையுடன் வைத்தியர்களின் இடமாற்றங்களை நடைமுறைப்படுத்தவும் இணக்கம் ஏற்பட்டதாக அந்த சங்கம் தெரிவிக்கின்றது. 

அத்துடன், இந்த இணக்கங்கள், இன்று நடைபெறும் சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் விசேட கலந்துரையாடலில் உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, அந்த இணக்கங்களை கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சின் நிர்வாக வைத்தியர்களின் கலந்துரையாடலில் குறித்த இணக்கங்கள் உறுதிப்படுத்தப்பட்டு எழுத்துப்பூர்வமாக கிடைக்கும் வரை, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபையால் அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தத்தை இன்று நண்பகல் 12.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த இணக்கங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.