Saturday, November 15, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 120

நாகவில்லுவில் களைகட்டிய உதைப்பந்தாட்டத் தொடர்!

அணிக்கு 7 பேர் கொண்ட லெஜண்ட் ப்ரோ சுபர் லீக் (LEGEND PRO SUPER LEAGUE) உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்றைய தினம் புத்தளம் எருக்கலம்பிட்டியில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற பழைய மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற குறித்த உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2022 அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

கடந்த இரு தினங்களாக (13,14) மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இச் சுற்றுப்போட்டியில் சுமார் 17 அணிகள் பங்குபற்றின. ஆரம்பம் முதல் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தி 2010 மற்றும் 2022 வகுப்பு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

பலப்பரீட்சை நடத்திய 2010 மற்றும் 2022 அணிகள் தண்ட உதை மூலம் வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக இறுதிப்போட்டி அமைந்தமை பார்வையாளர்களை மிகவம் உற்சாகமூட்டியது.

தண்ட உதை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் 2010 அணியை 2022 அணி வெற்றி கொண்டு சம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

இதன்மூலம் 2 நாட்களாக இடம்பெற்ற சுற்றுத்தொடர் மக்களின் அமோக வரவேற்புடனும், ஆதரவுடனும் இனிதே நிறைவுபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

0

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல்கள் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

சம்பந்தப்பட்ட தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அந்த மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி, தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சிகளின் செயலாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளது. 

சமாதான நீதிபதிகளால் பிறப்புச் சான்றிதழ்களை சான்றளிப்பது மற்றும் அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல சுயேச்சைக் குழுக்களிடமிருந்து பல வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 

இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தன. 

அதன்படி, மனுக்களை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பிரிவுகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மீண்டும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டது. 

இதற்கமைய அந்த வேட்புமனுக்கள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுத்த அரசியல் கட்சிகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு மனுக்கள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்களை வழங்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் ஆணைக்குழு கோரியுள்ளது.

வசூல் வேட்டையில் அதிவேக நெடுஞ்சாலை!

0

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக கடந்த 4 நாட்களில் 17.4 கோடி ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 

கடந்த 11 ஆம் திகதி முதல் நேற்று வரை 17.4 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. 

குறித்த காலப்பகுதியில் சுமார் 5 இலட்சம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

அதிவேக நெடுஞ்சாலைகளினூடாக நேற்றைய தினத்தில் மாத்திரம் 19,637 வாகனங்கள் பயணித்துள்ள நிலையில், அதன் மூலம் 39 மில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!

0

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 292.8 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட இலங்கை மின்சார சபையின் குறுகிய கால கடன்கள் மற்றும் பொறுப்புகள் 2024 ஆம் ஆண்டில் 123.6 பில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

அதே போன்று நீண்டகால கடன்கள் 413.3 பில்லியன் ரூபாவில் இருந்து 409 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது. 

அதேநேரம், இலங்கை மின்சார சபை அதன் செலவுகளைக் குறைக்காமல் மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என மத்திய வங்கி அதன் வருடாந்த பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அவ்வாறு இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபையின் நிதி செயல்திறன் குறையலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது. 

கடந்த ஆண்டு இலங்கையில் உற்பத்தியான மொத்த மின்சாரத்தில் 32.6 சதவீதம் அனல் மின்னுற்பத்தியின் ஊடாகவும், 32.3 சதவீதம் நீர் மின்னுற்பத்தி நிலையங்கள் ஊடாகவும் பெறப்பட்டுள்ளது. 

21.2 சதவீத மின்னுற்பத்தி பாரம்பரியமற்ற முறைமைகளின் அடிப்படையிலும், 13.9 சதவீத மின்சாரம் எரிபொருளைக் கொண்டும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கிய தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் இலங்கையர்கள்!

0

கடந்த வருடத்தில் மாத்திரம் 314,828 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது 5.8 சதவீதம் அதிகமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, 2023ஆம் ஆண்டில் 297,656 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைப்பற்றப்பட்ட பெருந்தொகை போதைப்பொருள்!

0

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் படி, மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூருக்கு சொந்தமான நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் ஆறு (06) சந்தேக நபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்டனர்.

நீண்ட நாள் மீன்பிடி கப்பல், திக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த சுமார் 77 கிலோ 484 கிராம் ஹெரோயின் மற்றும் சுமார் 42 கிலோ 334 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட குறித்த போதைப்பொருட்கள், சந்தேக நபர்கள் மற்றும் நீண்ட நாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

கடற்படைத் தளபதியினால் 2025 ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி திக்கோவிட்ட துறைமுகத்தில் போதைப்பொருட்கள் அவதானிக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிப்பதற்கு பங்களித்த அனைத்து கடற்படை வீரர்கள் மற்றும் நடவடிக்கைக்கு பங்களித்த பிற தரப்பினரையும் கடற்படைத் தளபதி பாராட்டினார்.

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காகவும் தேவையான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க இலங்கை கடற்படையினர் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன், மீனவ சமூகத்திற்குள் ஒரு சிறிய குழுவினரால் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் தொடர்பாக கடற்படை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.

விபத்தில் உயிரிழந்த எருக்கலம்பிட்டி இளைஞன்!

திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் கன்னியா பகுதியில் யானை மீது மோதி மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியது.

வவுனியா புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கி காயமடைந்த உயிரிழந்த இளைஞனின் 22 வயதுடைய நண்பன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் யானை மீது மோதியதினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க முயன்ற போது குளிரூட்டி பழுதடைந்து காணப்பட்டதால் சடலத்தை மூதூர் அல்லது கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி!

0

நாட்டின் வெற்றிக்காக, அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம்..

நாட்டின் வெற்றிக்காக, அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் கொண்டாடுகிறோம்.

வீழ்ச்சியடைந்திருந்த நமது நாட்டை கடந்த சில மாதங்களாக மீண்டும் கட்டியெழுப்பி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக புதிய நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளோம். அந்த வெற்றிகள் அனைத்தும் இந்நாட்டு மக்களுக்கே உரித்தாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் மக்கள் எம் மீது வைத்த நம்பிக்கையே நாட்டில் மாற்றம் ஏற்படுவதற்கு வழிவகுத்தது என்பதையும் வலியுறுத்த வேண்டும்.

சவால்களுக்கு மத்தியில் சரிந்துவிடாமல் நாட்டிற்காக நமது பொறுப்பை மேலும் வலுவாக நிறைவேற்றும் துணிச்சல் எமக்கு உள்ளது. மேலும் பூகோள அரசியலை போன்றே தேசிய ரீதியாக நாட்டின் முன்பிருக்கும் அனைத்து விதமான சவால்களையும் எதிர்கொள்ளத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது செயல்படுத்தி வருகிறது.

மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான பௌதீக மற்றும் ஆன்மீகத் தொடர்புகளின் தனித்துவம் புத்தாண்டு மரபுகளினால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவை சிங்கள மற்றும் தமிழ் இனங்களுக்கு இடையில் காணப்பட்ட வரலாற்று பிணைப்பு மற்றும் சகவாழ்வின் உயிர்ப்புள்ள சான்றாக விளங்குகின்றன.

இன்றைய சமூகம் பல்வேறு பிரிவுகளால் வேறுபட்டிருந்தாலும், புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் அத்தகைய பிரிவுகளை கலைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வைப் பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன. சகவாழ்வை ஊக்குவித்து மற்றவர்கள் மீது கருணை காட்டும் ஒழுக்கத்தின் இருப்பை எமக்குள் எற்படுத்திக்கொள்வதே இந்தப் புத்தாண்டில் நமது பொறுப்பாகும்.

மேலும், மக்கள் வாழ்வை புதுப்பித்துக்கொள்ளவும் பிற்போக்கான மனப்பாங்கு மற்றும் சிந்தனை அற்ற புதிய மனிதனை உருவாக்குவதுமே சூரிய பெயர்ச்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் அனைத்து சம்பிரதாயங்களினதும் பொதுவான எதிர்பார்ப்பாகும். இவ்வாறு நாம் புதிதாவதால் மாத்திரமே புத்தாண்டு நமது வாழ்விற்கு புதிய ஆரம்பத்தை தரும்.

நாட்டிற்குத் தேவையான புதிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான தேசிய திட்டத்தை வெற்றிபெறச் செய்யவும் நாட்டையும் மக்களையும் வெற்றிபெறச் செய்வதற்காகவும் இந்த புத்தாண்டில் அனைவரும் மேலும் வலிமையுடனும் ஒற்றுமையுடனும் ஒரே நோக்கத்திற்காக ஒன்றுபடுவோம் என அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” நோக்கிய பயணத்தின் எதிர்பார்ப்புக்களை ஔிரச் செய்யும் செழிப்பான புத்தாண்டாக அமையட்டும்!

அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
2025 ஏப்ரல் 14 ஆம் திகதி

புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம்!

0

புதிய அகவையில் தடம் பதிக்கும் ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும் நாமமாக ரவூப் ஹக்கீம் மாறியிருக்கிறார்.

இந்த நாமத்திற்குச் சொந்தக்காரரான ரவூப் ஹக்கீமுடைய ஆளுமை விருத்தியில் பங்களிப்புச்செய்த பல காரணங்கள் இருக்கின்றன.

முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாதவொரு சக்தியாகத் திகழும் ரவூப் ஹக்கீம், தன்னகத்தே பல ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

இவ்வாறான ஆளுமைப்பண்புகளை வளர்த்துக் கொள்வதில் ரவூப் ஹக்கீமுக்கு உறுதுணையாக அவரின் குடும்ப கல்விப்பாரம்பரியம் இருந்தைக் காண முடியும்.

ரவூப் ஹக்கீம் வசீகரமான தோற்றமுடையவர், புன்னகையோடு பலரோடும் பழகக்கூடியவர், சரளமாக மும்மொழிகளிலும் பேசக்கூடியவர்.

குறிப்பாக, இலங்கை திருநாட்டின் எப்பாகத்திலுள்ள மக்களின் பேச்சு வழக்கில் அந்த பிரதேசத்து மக்களைப் போல் மொழியை கையாளும் தன்மை கொண்டவர்.

குறித்த தன்மை இலங்கையில் மாத்திரமல்லாது, இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அதிதியாகக் கலந்து கொண்டு அவர்களின் மொழியை அழகாக கையாண்டு பேசுவது அங்கிருக்கு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதையும், பல பிரபலங்கள் இவர் இலங்கையில் பிறந்தவரா? அல்லது இந்தியாவில் பிறந்தவரா? என வியந்து பேசியதையும் குறிப்பிடலாம்.

இவர் சர்வதேச ரீதியாக நன்கறியப்பட்ட ஒரு தலைவராவார்.

கவி இயற்றும் கவிஞன், கவி பாடும் வல்லவன். இந்த ஆளுமையை யாவரும் வியந்து பாராட்டுவதுமுண்டு. குறுகிய நேரத்திற்குள், வேலைப்பளுக்களுக்கு மத்தியிலும் பல கவிகளை இயற்றி பாராட்டுக்களைப் பெற்ற சம்பவங்களுமுண்டு. அழகு சுந்தர மொழியான தமிழை அழகாக கையாண்டு அழகு கவி இயற்றி, அந்தந்த பிராந்திய பேச்சு வழக்கு மொழியில் கவி பாடும் அழகு தனிச்சிறப்பாகும்.

அரசியல்வாதியாக அறியப்பட்ட ரவூப் ஹக்கீம் சிறந்த பேச்சாளர், எழுத்தாளரும் கூட. அதிக வாசிப்புப் பழக்கமுடையவராக ஆரம்பம் காலந்தொட்டு இன்றுவரை காணப்படுகிறார். இதன் காரணமாக தனது பேச்சுக்களில் புதுமையான தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்திப் பேசி பலரையும் சொல்லுக்கு அர்த்தம் தேடி அகராதி படிக்க வைத்தவர். எழுத்துத் துரையில் கவிதைகள் மாத்திரமின்றி, முஸ்லிம் சமூகம் தொடர்பில் நூலொன்றையும் வெளியிட்டிருந்தார்.

சட்டத்தரணியாக நீண்டகாலம் பணி செய்வதற்கான வாய்ப்புகள் அரசியலுக்குள் பிரவேசித்ததால் கிடைக்காது போனாலும், அவர் திறமையான சட்டத்தரணி என்பதற்கு பல சான்றுகள் உண்டு.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி இலங்கை வங்கிக்கொள்ளை வழக்கில் வாதாடி தனது தரப்பிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தததையும் இங்கு நினைவுபடுத்துகிறேன். மேலும், அரசியலில் செயற்பாடுகள், வேலைப்பளுக்களுக்கு மத்தியில் சட்டக்கற்கையின் தனக்கிருந்த ஆர்வத்தினால் சட்டமுதுமானி கற்கையை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து, சட்டமுதுமானியாக வெளிவந்திருக்கிறார்.

அரசியல் பிரவேசம் என்பது தனது ஆளுமைகளைக் கண்டு தன்னை அரசியலுக்குள் அழைத்த முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹும் அஷ்ரஃப்போடு ஆரம்பமாகியது.

1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தலைவர் அஷ்ரஃபின் வேண்டுகோள்களின்படி சிறப்பாகச் செயற்பட்டது மாத்திரமின்றி, கட்சி வளர்ச்சிப் பணிகளிலும் ஹக்கீம் அயராது பாடுபட்டார். 1992ம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். கட்சிக்குள் ஏற்பட்ட நெருக்கடிகளின் போது அவர் தலைமைக்குப் பக்கபலமாகச் செயற்பட்டார்.

ரவூப் ஹக்கீமின் ஆளுமை பண்புகள், கட்சி செயலாளராக சிறப்பாக செயற்பட்டமை, கட்சி வளர்ச்சியில் அவரது பங்களிப்பு என்பவற்றோடு தலைமைத்துவ விசுவாசம் கருத்திற் கொள்ளப்பட்டதால் 1994ம் ஆண்டு ரவூப் ஹக்கீமின் 34வது வயதில் தேசியப்பட்டியலூடாக பாராளுமன்ற உறுப்புரிமை அஷ்ரஃப்பினால் வழங்கப்பட்டது. அத்தோடு, பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தலைவராகவும் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

1998ம் ஆண்டு அரசியல் மற்றும் அரசாங்க விவகாரங்களுக்காக ஜெய்சீஸ் அமைப்பு வருடாவருடம் வழங்கும் சிறந்த இளைய அரசியல்வாதிக்கான விருதை வென்றுள்ள ரவூப் ஹக்கீம் ,கொழும்பு மாவட்ட பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப்பையும் வென்றவராவார் .

1999ம் ஆண்டு தலைவர் அஷ்ரஃப், தூரநோக்கோடு தேசிய ஐக்கிய முன்னணி கட்சியை ஆரம்பித்தார். முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அப்பதவியில் இருந்து அகற்றி , தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளராக ஹக்கீமை அஷ்ரஃப் பதவி மாற்றம் செய்தார்.

2000ம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி, ஆனால் மரச் சின்னத்தில் பாராளுமன்ற தேர்தலில் அஷ்ரஃப்பினால் ரவூப் ஹக்கீம் களமிறக்கப்பட்டார். வடக்கு, கிழக்கிற்கு வெளியே பிரதான அரசியல் நீரோட்ட தேசிய கட்சிகளில் அல்லாது ஒரு முஸ்லிம் கட்சியிலிருந்து ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றமை அதுவே முதல் தடவையாகும்.

2000ம் ஆண்டு பெருந்தலைவர் அஷ்ரஃப்பின் திடீர் மறைவைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிக்குள் தலைமைத்துவ வெற்றிடம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மற்றும் பேரியல் அஷ்ரஃப் ஆகிய இருவரும் கட்சி தலைமைத்துவத்திற்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். அதன் பின், சிறிது காலத்திலேயே சில முரண்பாடுகள் ஏற்பட, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக பேரியல் அஷ்ரஃப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக ரவூப் ஹக்கீமும் நியமிக்கப்பட்டார்கள்.

2000ம் ஆண்டு ரவூப் ஹக்கீம், உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தகம், முஸ்லில் சமய விவகாரங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சராக சந்திரிக்கா அம்மையாரின் தலைமையிலான அமைச்சரவையில் நியமிக்கப்பட்டார்.

2001ம் ஆண்டு மாவனெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற இணக்ககலவர்த்தின் பின்னணியில் அரச சார்பு அரசியல்வாதிகள் இருந்ததனை ஹக்கீம் வெளிப்படையாகவும் பலமாகவும் கண்டித்ததன் காரணமாக தனது அமைச்சரவையிலிருந்து சந்திரிக்கா அம்மையார் ரவூப் ஹக்கீமை அமைச்சுப் பதவில் இருந்து இரவோடிரவாக அதிரடியாக நீக்கினார். அதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதனால் சந்திரிக்கா அரசு பெரும்பான்மையை இழந்து தடுமாறி கவிழ்ந்தது.

2001ம் ஆண்டு ஒக்டோபரில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டது. அதே ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து கண்டியில் போட்டியிட்டு ரவூப்ஹக்கீம் மீண்டும் அங்கு வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அமைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் துறைமுக அபிவிருத்தி, கப்பல் துறை , முஸ்லிம் விவகார மற்றும் கிழக்கு அபிவிருத்தி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார்.

2004ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அதாவுல்லாஹ் , ஹரீஸ் , அன்வர் இஸ்மாயில் ஆகியோர் முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி, சந்திரிக்கா அணியோடு இணைந்து ஒரு சவால் மிக்க சூழலை கிழக்கு அரசியலில் தோற்றுவித்த போதும், மிகவும் துணிச்சலோடு களத்தில் இறங்கிய ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அமோக வெற்றியை ஈட்டி, மீண்டும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியை இழந்ததன் காரணமாக பங்காளிகட்சியான முஸ்லிம் காங்கிரஸும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது.

2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சு வழங்கப்பட்டது. அதே வருடம் டிசம்பர் மாதம் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து வெளியேறியது.

2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற போது ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது. கட்சியின் மட்டக்களப்பு முக்கிஸ்தர் திடீர் என கட்சி தாவியதால் உருவான சவால் மிக்க சூழலை தைரியமாக எதிர்கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம், தனது பாராளுமன்ற ஆசனத்தை இராஜினாமா செய்துவிட்டு திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய வாக்குகளால் வெற்றி பெற்றார். கிழக்கு மாகாண சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கைப்பற்றியதன் காரணமாக ரவூப் ஹக்கீம் மாகாண சபை உறுப்பினர் பதவியைவிட்டு விலகி ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியலூடாக மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.

2010ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ரவூப் ஹக்கீம், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொண்டதன் காரணமாக நீதி அமைச்சராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.

மகிந்த ராஜபக்ஷ அரசின் இனவாத செயற்பாடுகள் முஸ்லிம் சமுகத்தை மிகவும் இக்கட்டான சூழ் நிலைக்கு ஆளாக்கி இருந்த்ததனால் அரசுக்குள் இருந்து கொண்டே சமூகத்திற்கான போராட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்கின்ற சாணக்கியமான நகர்த்தல்களை மேற்கொண்டிருந்த ஹக்கீம் , 2014ம் ஆண்டு இறுதிப்பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அன்றைய எதிரணி பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு கொடுப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினார்.

2015ம் ஆண்டு மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ரவூப் ஹக்கீம் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது. இதன் போது ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அமைச்சரவையில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சராக அவர் இருந்தார்.அந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 52 நாள் அரசியல் குழப்பத்தின் பின்னர் ரவூப் ஹக்கீமுக்கு முன்னைய அமைச்சுக்களுடன் சேர்த்து உயர்கல்வியமைச்சும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் 2019ம் ஆண்டு பாராளுமன்ற அரசியல் வாழ்வில்தொடர்ச்சியாக 25 வருடங்களை நிறைவுசெய்து வெள்ளி விழா கண்ட ரவூப் ஹக்கீம், 2024ம் ஆண்டு பாராளுமன்ற வாழ்வில் மூன்று தசாப்தங்களை நிறைவு செய்து “முத்து விழா” கண்ட அரசியல்வாதியாகினார் .

சமூகம் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் போது அமைச்சுப் பதவிகளைத் துறந்து வெளியேறி துணிச்சலுடன் சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றிகண்டவர் ரவூப் ஹக்கீம் . ஆட்சியாளர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை அழிக்க அந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்திய போது கட்சியை அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கோடு அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைகள் உருவாக்கப் பட்டபோது அவற்றிற்கும் ரவூப் ஹக்கீம் முகம் கொடுக்க நேர்ந்தது .

2020ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் சஜித் பிரமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டு முதன்மை வெற்றியாளராக வெற்றி பெற்றார். பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதால், எதிர்க்கட்சி அரசியலை ரவூப்ஹக்கீம் முன்னெடுத்துக் கொண்டிருந்தார்.

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றுவரை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இனவாதச்சக்திகளின் நெருக்குவாரங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

ஜனாஸா எரிப்பு, முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம், முஸ்லிம் விவாக, விவாகரத்து, காதி நீதி மன்றத்திற்கெதிரான நிலைப்பாடு, மத்ரஸாவுக்கெதிரான கருத்து எனப்பலவாறான பிரச்சனைகளுக்கு சமூகம் முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் போது, தனது கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், சமூக உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த ஆட்சி நாட்டு மக்களை வீதிக்கு இறக்கும் நிலையைத் தோற்றிவித்தருப்பதை கண்டித்து தனி நபராக தன்னாலான அனைத்து வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் தலைவராக ரவூப் ஹக்கீம் திகழ்ந்தார்.

முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், பெண் அடிமைவாதிகள் என பிழையான கருத்தியலை பிரசார உத்தியாக இனவாதிகள் கையில் எடுத்திருந்த சூழலில் , போது ரவூப் ஹக்கீம் அவ்விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் நோக்கில் “WE ARE A PART , NOT APAART ” (நாம் ஒரு பிரிவினரேயன்றி , பிரிந்து வாழ்பவர்கள் அல்லர்) என்ற நூலை எழுதி 2020ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டார். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு இந்த வருடம் “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தார்.

இந்நூலில் ” இஸ்லாம் பயங்கரவாதம், பெண்ணடிமைத்துவமும் கொண்ட மார்க்கமல்ல” என்ற கருதுகோளை அவர் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகிறார். இந்நூல் காலத்திற்குப் பொருத்தமான நூலாக நோக்கப்படுகிறது.

இவ்வாறு தனது வாழ்நாளில் பல படித்தரங்களைப் பெற்று முன்னேறி இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தோடு செயற்படும் தலைவராக, பெரும்பான்மை இன மக்களின் ஆதரவையும் ஒரு சேரப் பெற்ற முஸ்லிம் அரசியல் தலைவர் என்ற தகமை ரவூப் ஹக்கேமிற்கே உரியது.அவர் சிங்கள மக்களோடும்,தமிழ் மக்களோடும் சிறந்த உறவைப் பேணி வருகிறார்.ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் இனநல்லுறவைப் பலப்படுத்தும் தலைவராக ரவூப் ஹக்கீம் இருப்பதனால், “அமரபுர நிக்காயவின் சம்புத்த சாசனோதய மகா சங்கத்தினால்” அதன் துணை பீடாதிபதி கொடுகொட தம்மவாச நாயக்க தேரரின் தலைமையிலான சங்க சபை “சர்வ சமய சாமகாமீ தேச அபிமானி லங்கா புத்ர” எனும் விருதை கண்டி புஷ்பானந்த கேட்போர் கூடத்தில் வைத்து ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி கௌரவித்துள்ளது.

2024ம் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி சார்பான இடதுசாரி ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட பின்னணியில் 2025ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஏனைய கட்சிகளுக்கு பெரும் சவாலாக காணப்பட்டபோது, பெரும் அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி கண்டுவிடுவோம் என்று ஒதுங்கிய நிலையில், ரவூப் ஹக்கீம் போன்றவர்களை தோற்கடிக்கவேண்டும் என நாலா பக்கத்தாலும் சதிவலைகள் பின்னப்பட்டு கொண்டிருந்த சூழலில் உறுதியான குரலை பாதுகாக்கவேண்டும் என எடுத்துக் கொண்ட முயற்சியின் பலனாக இறைவன் உதவியால் சதிகளை முறியடித்து ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முதன்மையாக மீண்டும் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய இடதுசாரி ஆட்சி தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற பலமும் ஆட்சியாளர் கைவசம் இருக்கத்தக்கதாக பாராளுமன்றத்தில் நாட்டின் நலனுக்காக,சிறுபான்மை மக்களின் உரிமைக்காக,தான் சார்ந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச் சொல்பவராக,குரல் கொடுப்பவராக ரவூப் ஹக்கீம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளதை காணமுடிகிறது.

பாராளுமன்றத்தில் இன்று அனுபவமில்லாத பலர் இருக்கத்தக்கதாக ரவூப் ஹக்கீம் போன்றவர்களின் மூன்று தசாப்த பாராளுமன்ற அனுபவம் என்பது இன்றியமையாத ஒன்றாக மக்களால் உணர முடிந்திருக்கிறது.

வசூல் சாதனை படைத்த சுற்றுலா துறை!

0

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையின் மொத்த சுற்றுலா வருமானம் 1,122.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மார்ச் 2025 இல் மட்டும் 354 மில்லியன் டொலர்கள் சுற்றுலா வருமானமாகப் பதிவாகியதன் மூலம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சுற்றுலா வருமானம் ஒரு பில்லியன் டொலர் எல்லையை கடந்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட 1,025.9 மில்லியன் டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 9.4% அதிகரிப்பைக் காட்டுவதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிவரங்களின்படி, 2025 முதல் மூன்று மாதங்களில் 722,276 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இதன்படி, ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து சராசரியாக 1,553.83 டொலர் வருமானம் கிடைத்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 635,784 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து 1,025.9 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டது.

இதன்போது ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து சராசரியாக 1,613.59 டொலர் வருமானம் கிடைத்திருந்தது.

இதன்படி, 2025 முதல் காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலா வருமானம் ஆண்டு அடிப்படையில் உயர்ந்திருந்தாலும், ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து கிடைக்கும் சராசரி வருமானம் 2024ஐ விட சற்று குறைந்திருப்பது கவனிக்கத்தக்கது.