Friday, November 14, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 122

விஷேட வீதிப் பாதுகாப்புத் திட்டம் ஆரம்பம்!

0

வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன்களை வளர்ப்பதற்கான தேசிய திட்டம் ஆரம்பம்.

நாட்டிலுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பெருந்தெரு அமைப்பில் வீதி விபத்துகளைக் குறைக்கும் வகையில், பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ‘தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்’ நேற்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நிகழும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீதி விபத்துகளைக் குறைப்பதும், சுமார் இரண்டாயிரத்து ஐநூறு விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதுமே இத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அபராதம் விதித்தல் ஆகியவற்றுடன், பொதுமக்கள் மற்றும் சாரதிகளின் மனப்பாங்கை இது மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ‘தேசிய வீதிப் பாதுகாப்பு மற்றும் சாரதி பயிற்சி திறன் மேம்பாட்டுத் திட்டம்’ உயிர்களைக் காப்பாற்றும் என்றும், வீதி விபத்துகளால் குடும்ப பொருளாதாரம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய வானிலை முக்கிய அறிவித்தல்!

0

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அநுராதபுரம், மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

கொழும்பிலிருந்து காலி ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், மின்னல் அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று (11) நண்பகல் 12.11 அளவில் மாணின்கமுவ, ரம்பேவ, கஹட்டகஸ்திகிலிய, மற்றும் மூதூர் பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

உலமா சபை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு!

0

மேற்படி தேர்தலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றமை தொடர்பில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தொடர்ந்து தெளிவுகள் கோரப்பட்ட வண்ணமுள்ளதால் அது பற்றி கலந்தாலோசனை செய்வதற்காக கடந்த 2025.04.08 ஆம் தேதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அதில் உள்ளூராட்சித் தேர்தலில் ஜம்இய்யத்துல் உலமா சபையின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் வேட்பாளர்களாகக் களமிறங்கி உள்ளமை பற்றிப் பல்வேறு கேள்விகள் தலைமையகத்துக்கு தினமும் வந்து கொண்டிருக்கின்றமை பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கடந்த 100 வருடங்களாக பக்கசார்போ அல்லது கட்சி அரசியல் சார்போ இன்றி இலங்கை முஸ்லிம்களுக்கு மார்க்க ரீதியிலான வழிகாட்டல்களைச் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது என்ற அடிப்படையில், மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் நேரடியாக கட்சி அரசியலில் ஈடுபட்டு வேட்பாளர்களாக செயல்படுகின்றமை ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கும் பாதகமாக அமையும் என்று அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எனவே, மேற்படி தேர்தலில் வேட்பாளர்களாக இருக்கும் பதவிதாங்குனர்கள் தாங்களாகவே தமது பதவியில் இருந்து விலகிக்கொள்ளல் வேண்டும் எனவும் அவ்வாறு விலகிக்கொள்ளாத பட்சத்தில் யாப்பின்,

‘8 – 08 (இ) ஜம்இய்யாவின் நோக்கங்களை அடைவதற்குத் தடையாகவிருத்தல்’ அல்லது

‘9 – 25 (ஃ) பொதுவாக ஜம்இய்யாவின் குறிக்கோள்களை எய்துவதற்கு தேவையானதும் அல்லது இடைநேர்விளைவானதுமான வேறு எல்லாச் செயல்களையும் கருமங்களையும் செய்தல்’

’10 – 04 (ஈ) தனது கடமையைப் புரிய முடியாமை அல்லது மத்திய சபையின் கூட்டுப் பொறுப்மை மீறல்’ அல்லது

’11-18 (ஈ) மாவட்டக் கிளையின் கூட்டுப் பொறுப்பை மீறல்’ அல்லது

’11-33 (ஈ) தனது கடமையைப் புரிய முடியாமை அல்லது பிரதேசக் கிளையின் காரியக் குழுவின் கூட்டுப் பொறுப்பை மீறல்’ அல்லது

’11-37 (ஐ) காலத்துக்குக் காலம் பிரதேசக் கிளையின் காரியக் குழுவால் தீர்மானிக்கப்படும் ஜம்இய்யாவின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத அனைத்துக் கடமைகளையும் அவர் செய்தல் வெண்டும்’ அல்லது

’14 – ஜம்இய்யாவின் நோக்கத்தை அடைவதற்குத் தடையாகவிருத்தல்’ என்ற யாப்பு விதிகளின் அடிப்படையிலும்

2000ஆம் ஆண்டின் – 51ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் எந்தப் பதவிதாங்குனர்களும் நேரடி அரசியலில் இது கால வரையில் ஈடுபடவில்லை என்பதுடன், இவ்வாறு அரசியலில் வேட்பாளர்களாக இருப்பது ஜம்இய்யாவின் இலக்குகளை அடைந்துகொள்வதற்கும் அதன் கூட்டுப் பணிகளுக்கு பாதகமாக அமையும் என்பதாலும் இவ்வாறு அரசியலில் ஈடுபடும் ஜம்இய்யாவின் மாவட்ட அல்லது பிரதேசக் கிளைகளின் பதவிதாங்குனர்கள் பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி
தலைவர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை

வடக்கிற்கு விரைந்த மாஸ்டர் பிளாஸ்டர்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவானும், அணியின் தற்போதைய தலைமை பயிற்றுநருமான சனத் ஜெயசூரியா கிளிநொச்சிக்கு அதிரடி விஜயம் மேற்கொண்டார்.

கிளிநொச்சிக்கு மத்திய கல்லூரி மைதானத்திற்கு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜெயசூரியா இன்று பிற்பகல் விஜயம் மேற்கொண்டு மைதானத்தை பார்வையிட்டார்.

குறித்த மைதானத்தை புற்தரை மைதானமாக மாற்றி கிளிநொச்சி மாவட்டத்தின் கிரிக்கெட் துறையை வளர்க்கும் நோக்குடன் மைதானத்தை பார்வையிட்டதாக தெரிவித்தார்.

குறித்த விஜயத்தின்போது பாடசாலையின் முதல்வர் சவரி பூலோகராஜா, மற்றும் கிளிநொச்சி மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடக்கை கெளரவப்படுத்திய வீர வீராங்கனைகள்!

தேசிய மட்ட மாற்று வலுவுள்ளோருக்கான போட்டியில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மாவட்ட வீர வீராங்கனைகளை கெளரவிக்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

2025ம் ஆண்டுக்கான தேசிய மட்ட மாற்று வலுவுள்ளோருக்கான விளையாட்டு நிகழ்வு கடந்த 03-04-2025 அன்று ஹோமாகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

25 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாற்று வலுவுள்ளோர் கலந்து கொண்டனர்.

குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச்சேர்ந்த 21 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் 50 புள்ளிகளைப்பெற்று முதலிடத்தை பெற்றுக்கொண்டது. குறித்த போட்டியில் 6 தங்கப் பதக்கதையும் 10 வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.

43 புள்ளிகளைப் பெற்று கம்பஹா மாவட்டம் இரண்டாம் இடத்தினையும், 3 6புள்ளிகளைப்பெற்று முல்லைத்தீவு மாவட்டம் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கெளரவிப்பு நிகழ்வில் மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ்-முரளீதரன், மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுவலுவுள்ளோர் வீர வீராங்கனைகள் கலந்து கொண்டிருந்தனர்.

தேசபந்துவுக்கு பிணை!

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. 

அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு வெலிகம பெலேன பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன், 20 நாட்கள் கடந்து மார்ச் 19ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

அவர் சரணடைந்ததைத் தொடர்ந்து, மாத்தறை நீதவான் அவரை இன்று (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் கையளிப்பு!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை சட்ட சிக்கல் நிலவுகின்ற நிலையில் பூநகரி பிரதேச சபைக்கான அஞ்சல் மூல வாக்கு சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டது.

இன்று பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் அஞ்சல் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்காக 370 பேர் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை பூநகரி பிரதேச சபையில் அஞ்சல் மூலம் வாக்களிக்க 531பேர் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணியின் தலைவராக மீண்டும் தோனி!

0

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக மீண்டும் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணியின் தலைவராக செயற்பட்ட ருத்ராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக விலகியுள்ளார். 

எனவே அவருக்கு பதிலாக மீண்டும் மகேந்திரசிங் தோனி தலைவராக நியமிக்கபட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்

அரசாங்கத்தை கிழித்து தொங்கவிட்ட சஜித்!

0

எமது நாட்டின் ஏற்றுமதித் துறை பாரிய சவால்களை எதிர்நோக்கி வரும் இவ்வேளையில், பாராளுமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் எனது கருத்துக்களை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்காதிருக்கின்றனர். ஏப்ரல் 9 ஆம் திகதிக்குள் நமது நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% பரஸ்பர வரி விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை உலகமே அறிந்திருந்தும், நமது அரசு அறியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். அமெரிக்காவை முதன்மையாக முன்னிறுத்துவதே ஜனாதிபதி டிரம்பின் தேர்தல் மேடைகளில் முக்கிய கருப்பொருளாக அமைந்து காணப்பட்டன. அந்த வாக்குறுதியின் பிரகாரம் இந்த வரிகளை விதித்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

ஜனாதிபதி டிரம்ப் தனது கொள்கை (தேர்தல் விஞ்ஞாபனத்தில்) அறிக்கையில் இதனை குறிப்பிட்டிருந்தார். நமது அரசாங்கமானது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை மறந்தாலும், டொனால்ட் டிரம்ப் தனது விஞ்ஞாபனத்தை அமுலுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த வரிகளினால் எமது நாட்டுக்கு பாரிய பாதிப்புகள் ஏற்படும் என பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் தூதுக்குழுவை அனுப்பியுள்ளதாக பதிலளித்தனர். இன்று இது தொடர்பான கேள்விகளை எழுப்பிய போது, ​​அரசாங்கத்திடம் பதில் இல்லை. பின்பற்ற வேண்டிய மூலோபாயங்கள் குறித்து யோசனைகளையும் நான் இன்று முன்வைத்தேன். அரசாங்கம் அன்று போலவே தொடர்ந்தும் தடைகளை ஏற்படுத்தி வருகிறது. 44% பரஸ்பர வரி விதிப்பை விட அரசாங்கத்திற்கு நிலையியற் கட்டளை பெரியதாகிப்போயுள்ளது. இந்த நிலையியற் கட்டளை புத்தகத்தைப் பயன்படுத்தி, எதிர்க்கட்சியினரை வலுக்கட்டாயமாக வாயடைக்க முயற்சிக்கின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

நமது நாட்டின் மொத்த ஏற்றுமதி 12.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதில் பெரும் பங்கு அதாவது 22.8% ஏற்றுமதிகள் ஐக்கிய அமெரிக்காவிற்கே செல்கின்றன. இது 2911 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையாகும். இந்த ஏற்றுமதியில், ஆடைத் துறை மட்டும் 1885 பில்லியன் மதிப்பைக் கொண்டுள்ளன. இது 64% உள்ளடிக்கியுள்ளன. இதற்கிடையில், இரப்பர் அமெரிக்க டொலர் 328 மில்லியனையும், தேங்காய் அமெரிக்க டொலர் 73 மில்லியனையும், எக்டிவேடட் கார்பன் அமெரிக்க டொலர் 49 மில்லியனையும், தேயிலை அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், இரும்பு அமெரிக்க டொலர் 48 மில்லியனையும், மற்றும் இலவங்கப்பட்டை அமெரிக்க டொலர் 29 மில்லியனையும் கொண்டுள்ளதோடு, ஆடை ஏற்றுமதியில் 38-40% அமெரிக்காவிற்கே ஏற்றுமதியாகின்றன. இந்தத் தரவுகள் குறித்து அரசாங்கத்திற்கு புரிதல் காணப்படுகின்றதா என்பதில் பிரச்சினை காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

பெறுமதி சேர் வரி திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற விவாதத்தின் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைக்கு அமெரிக்க வர்த்தகக் கொள்கையில் செல்வாக்குச் செலுத்தும் சந்தர்ப்பம் காணப்படுகின்றன. இந்த அதிகாரம் அமெரிக்க அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ளன. சட்டங்களை உருவாக்குவதற்கும் வர்த்தக உடன்படிக்கைகளை அங்கீகரிப்பதற்கும் கூட அதிகாரங்கள் இவற்றுக்கு அதிகாரம் காணப்படுகின்றன. ஒருதலைப்பட்சமாக வரி விதிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்பட்டாலும், இந்த சபைகளினது உறுப்பினர்களுக்கு இதில் செல்வாக்கு செலுத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதால் அரசாங்கம் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். செனட் சபையிலும், பிரதிநிதிகள் சபையிலும் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கிறார்களா என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார். 

விரைவில் ஒரு தூதுக்குழுவை அனுப்புங்கள். 

தூதுக்குழுவை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுப்பாது, பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் விதமாக அனுப்ப வேண்டும். தற்போது, ​​செனட்டில் உள்ள குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் ஒன்றிணைந்து, இந்த வர்த்தகக் கொள்கை தொடர்பாக புதிய சட்டமொன்றை கொண்டு வர தயாராகி வருகின்றன. இதன் மூலம், ஜனாதிபதி தன்னிச்சையாக விதிக்க வரும் வரிகளை காங்கிரஸில் அனுமதியைப் பெற வேண்டும். எனவே இவ்விரு சபைகளினது பிரதிநிதிகளுடனும் எமது நாட்டில் இருந்து செல்லும் தூதுக்குழுவினர் கலந்துரையாட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 

2033 ஆம் ஆண்டு முதல் செலுத்த முடியுமாக இருந்த கடன் காலக்கெடுவை 2028 ஆம் ஆண்டில் இருந்து செலுத்துவதற்கான இணக்கப்பாட்டிற்கு முந்தைய அரசாங்கம் வந்தது. 

ஒரு நாடாக, நாம் அமெரிக்கப் பிரதிநிதிகளை இராஜதந்திர ரீதியாக நேரடியாக சந்திக்க வேண்டும். கடிதம் அனுப்பினால் மட்டும் போதாது. 44% தீர்வை வரி விதிப்பு நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு விழுந்த பெரும் அடியாகும். சகல தொழிற்துறைக்கும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வரிகளால் தொழில்கள் வீழ்ச்சியடையும். வேலைகள் இழக்கப்படும். வருமானம் குறையும். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் இதனால் 2028 இல் கடனைத் திருப்பிச் செலுத்துவது கூட கடினமாக மாறும். சர்வதேச நாணய நிதியம் 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனைத் திருப்பிச் செலுத்த முன்வந்த போதிலும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் அவதானத்தைப் பெறுவதற்கு முந்தைய அரசாங்கம் 2028 இல் இருந்து திருப்பிச் செலுத்தும் விதமாக கால அவகாசத்தைக் குறைத்தது. இதற்கு துரித பொருளாதார வளர்ச்சி விகிதம் காணப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். 

உடனடியாக சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டுங்கள். 

ஆடைத் துறை மற்றும் இதர ஏற்றுமதி துறைகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு இந்தியப் பிரதமருடனான சந்திப்பின் போது நான் யோசனை முன்வைத்தேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, இனம், மதம், சாதி, வர்க்கம், அந்தஸ்து என்ற வேறுபாடின்றி இதனை நாம் எதிர்கொள்ள வேண்டும். சகல கட்சிகளையும் கூட்டி பொதுவான வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டும். கடுமையான பொருளாதாரப் பேரழி ஏற்பட முன்னதாக நாம் ஒற்றுமையாகவும், பொதுவான ஒருமித்த நிலைப்பாட்டின் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வடக்கில் சிக்கிய பெருந்தொகை கேரள கஞ்சா!

0
121 மில்லியன் ரூபாவை விட பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கிளிநொச்சியில் கடற்படையினரால் கைது.

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதியில் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

சுமார் முன்னூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரை நேற்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்தனர்.

சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின்போது குறித்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை அவதானித்து சோதனை செய்தபோது, குறிப்பிட்ட டிங்கி படகில் இருந்து முந்நூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் சந்தேக நபர் ஒருவரையும் (01) கடற்படையினர் கைது செய்தனர்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, இதன் மதிப்பு நூற்று இருபத்தொரு (121) மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், கேரள கஞ்சா பொதி மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மரதன்கேனி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.