பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நேற்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றதுடன், இதில் குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 151வாக்குகள் அளிக்கப்பட்டன. இதற்கு எதிராக எந்த வாக்கும் அளிக்கப்படவில்லை.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் 115 பேரின் கையொப்பத்துடன் கடந்த மார்ச் 25ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தின் பின்னர் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது மதிப்பீட்டையடுத்து வாக்கெடுப்பு இன்றி இச்சட்டமூலம் நேற்று (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
மியான்மரில் சமீபத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அனர்த்த நிவாரண மீட்புப் பணிகளுக்கு உதவ அனுப்பப்பட்ட, முப்படைப் வீரர்களைக் கொண்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு, மியான்மரில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதேயன்று யங்கோன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கை குழுவினர், யங்கோனிலிருந்து 450 கி.மீ தொலைவிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதியான Nay Pyi Taw மாகாணத்தில் நிலைகொண்டு அங்கிருந்து திங்கட்கிழமை (ஏப்ரல் 7), அந்நாட்டு அதிகாரிகளின் உதவியுடன் இரண்டு நடமாடும் மருத்துவ முகாம்களை நடத்துவதற்காக அவர்கள் Pobba Thiri நகரத்திற்கு அனுப்பப்பட்டனர்.
Pobba Thiri யில், அவசர மருத்துவத் தேவைகளைக் கண்டறிய சூழ்நிலை மதிப்பீட்டை மேற்கொண்டு அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. பிரதானமாக அத்தியாவசிய சுகாதாரப் தேவைகளை வழங்குதல், காயங்களுக்கு சிகிச்சை அளித்தல் மற்றும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவற்றில் அவர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் நிவாரண குழுவினரின் தொழில்முறை மற்றும் மனிதாபிமான சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவை பாராட்டுக்குட்பட்டுள்ளதுடன் அவசர காலங்களில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமைக்கான இலங்கையின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமையும்.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு இந்தப் குழுவினரின் நிவாரண பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும் தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் பயனுள்ள உதவிகளை வழங்குவதற்கான படைப்பிரிவின் திறனில் நம்பிக்கையை வெளிப்படுத்தி, அதன் முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2025 உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அதன்படி, இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மார்ச் 3 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 13 ஆகும்.
அதனுடன், 42 கட்சி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 11 வாகனங்களும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
நேற்று (08) காலை 6.00 மணி முதல் இன்று (06) காலை 6.00 மணி வரை தேர்தல் தொடர்பான குற்ற முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது. அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறியதாக 12 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்ச் 3 முதல் இன்றுவரை பதிவான மொத்த குற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 24 ஆகும். அந்தக் காலகட்டத்தில், தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 99 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக மட்டக்களப்பில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (08) முற்படுத்தப்பட்ட போது நீதவான் பிணை வழங்கிய உத்தரவிட்டுள்ளார்.
இன்று (08) இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் தனூஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரான சாமர சம்பத் தசநாயக்கவை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து சரீரப் பிணைகளிலும் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், சந்தேக நபரின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடை செய்யவும் உத்தரவிடப்பட்டது.
2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சாமர சம்பத் தசநாயக்க, அம்மாகாணத்தில் உள்ள முன்பள்ளி மாணவர்களுக்கு பைகள் வழங்குவதற்காக ஒரு அரச வங்கியிடம் நிதி உதவி கோரினார். ஆனால், அந்த வங்கி அவரது கோரிக்கையை நிராகரித்ததை அடுத்து, ஊவா மாகாண சபைக்கு சொந்தமான 06 நிரந்தர வைப்பு கணக்குகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டுவந்து, அந்தப் பணத்தை எடுத்தார். இதன் காரணமாக, மாகாண சபைக்கு 17.3 மில்லியன் ரூபாய்க்கு (173 லட்சம் ரூபாய்) மேல் நட்டம் ஏற்பட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்தல்.
அரசியல் அழுத்தங்களின்றி தகைமைகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் அரச துறைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
கொவிட் 19 தொற்றுநோய் மற்றும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையும், தற்போதுள்ள அரச நிதி நிலைமையையும் கருத்தில் கொண்டு, அரச சேவையில் அத்தியவசிய வெற்றிடங்கள் 30,000 ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2025 வரவு செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்திற்கு பாராளுமன்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அரச சேவையில் பல்வேறு 5 நிறுவனங்களில் பணிக்குழாமினரை மீண்டும் மீளாய்வு செய்து, அத்தியவசிய ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் தற்போது அரச சேவையில் புதிய ஆட்சேர்ப்புக்கள் 18,853 இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கிணங்க, பொது நிருவாக, உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு “2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30,000 பேரை அரச சேவையில் இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம்” கீழ் நியமமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளுக்கமைய விண்ணப்பங்களைக் கோரி குறித்த ஆட்சேர்ப்புக்களை செய்வதற்கான ஏற்புடைய அமைச்சுக்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
விசேட அதிரடிப்படையணியின் 82 ஆவது குழுவின் பயிற்சி நிறைவு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு
சட்டம், ஒழுங்கு மற்றும் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்கு இலங்கை பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
களுத்துறை, கட்டுகுருந்த விசேட அதிரடிப்படை பயிற்சி முகாமில் இன்று (07) நடைபெற்ற 82 ஆவது அடிப்படைப் பயிற்சி பாடநெறியை நிறைவு செய்தோர் வெளியேறும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தமது தொழிற்துறைக்கு ஒருவர் எந்தளவு நியாயத்தை நிலைநாட்டியுள்ளார், கௌரவமளித்துள்ளார் என்பது அவரின் தொழில் வாழ்க்கையின் ஊடாகப் பிரதிபலிக்கிறது எனவும் அந்த தொழில் முறையை அடைந்து இந்த நாட்டுக்கு அவசியமான மாற்றத்தை ஏற்படுத்த பங்களிக்குமாறு பயிற்சி பெறும் இளம் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
பல துறைகள் வீழ்ச்சியடைந்துள்ள தருணத்தில், நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி அரசியல் அதிகாரத்தை மாற்ற பிரஜைகள் நடவடிக்கை எடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் அதிகாரத்தை மாற்றுவதன் மூலமாக மாத்திரம், ஒரு நாடு வெற்றிபெறாது என்றும், அனைத்து துறைகளிலும் சாதகமான மாற்றம் தேவை என்றும் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு புதிய பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், அதனைப் பாதுகாக்கும் அதே வேளையில், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருட்களுக்கு இந்த நாடு பலியாக இடமளிக்கக்கூடாது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
இளைய தலைமுறையினர், தாய்நாட்டின் பொறுப்பை தங்கள் தோள்களில் ஏற்று, தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் சாதகமான திசையில் கொண்டு செல்ல பாடுபட வேண்டும் என்றும், இன்று இலங்கை பொலிஸ் நிரந்தர சேவையில் இணைவது வலுவான முன்னெடுப்பாகும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அவசர நிலைமைகளில் பிரஜைகளுக்கு விசேட அதிரடிப்படை வழங்கி வரும் சேவை மிகவும் பாராட்டத்தக்கது என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த அணிவகுப்பில் 118 உப பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் 231 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தங்கள் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து வெளியேறினர்.
பயிற்சி நெறியின் போது விசேட திறமையை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.
போர் களத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் கண்காட்சியொன்றும் இங்கு காண்பிக்கப்பட்டது.
1983 ஆம் ஆண்டு “நியதை ஜய” (வெற்றி நிச்சயம்) என்ற தொனிப்பொருளுடன் நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை தற்போது பிரபுக்கள் பாதுகாப்பு, குற்றங்கள், திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுத்தல் மற்றும் போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கீர்த்திமிக்க பிரிவாகும்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சமந்த டி சில்வா, பொலிஸ் அதிகாரிகள், பயிற்சி பெற்று வெளியேறும் பொலிஸ் அதிகாரிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை, தமிழ் மக்களின் ஒரு வாக்கு கூட உள்ளூராட்சி சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு போகக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தில் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
எங்கள் கட்சி மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பு காரணமாக இவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். அந்த பரிசோதனையை மக்கள் இந்த உள்ளூராட்சியிலும் செய்வதற்கு நாங்கள் பரிசோதனை எலிகள் இல்லை. ஒருவாக்கு கூட தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் போடக்கூடாது என தெரிவித்தார்.
புதிய அரசாங்கம் சில வேளைகளில் சபைகளை கைப்பற்றினால் சபைகளின் கீழுள்ள சந்தைகளின் கடைகளைக்கூட தேசிய ரீதியில் கேள்வி கோரலை மேற்கொள்ளுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகள் என்பது எமது அடிமட்ட அரசியலை கொள்கை ரீதியான அரசியல் பயணமாக மேற்கொள்வதே எனவும், ஆனையிறவு உப்பை ஆனையிறவின் பெயரை மாற்றி இன்று ரஜ லுணு என மாற்றியுள்ளனர். சபைகள் எமது கைகளில் இருக்கும் போது இந்த விடயங்கள் எல்லாம் நடைபெறாது என அவர் சுட்டிக்காட்டினார்.
வடபகுதி மக்கள் தமிழ்த்தேசியத்தை கைவிட்டுள்ளனர். ஏன் பிரித்தானியா நான்கு பேர் மீதும் தடை கொண்டு வருகின்றனர் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறியுள்ளார் என்பதை சிந்திக்க வேண்டும்.
நாங்கள் விட்ட மிகப்பெரிய தவறு, பொது வேட்பாளருக்கு ஒட்டு மொத்த மக்களும் ஆதரவளித்து ஐந்து இலட்சத்திற்கும் மேலான வாக்குகளை அளித்திருந்தால் பிரித்தானியா போன்ற நாடுகள் தமிழர்கள் தனித்துவமாக உள்ளார்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். நான்கு பேரை தடை செய்ததை விட பெரிய வெற்றியை தவறை விட்டுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ் -சிறீதரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்படையினரால், கல்பிட்டி மாம்புரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, கடத்துவதற்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று என்பத்தி ஏழு (1287) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் லொறி ஒன்றும் (2025 ஏப்ரல் 04) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடல் வழிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடற்படையினர், தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் கடற்கரையை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படைக் கப்பலான விஜயாவுடன் இணைக்கப்பட்ட கடற்படை மரைன் படைப்பிரிவு அதிகாலை கல்பிட்டி மாம்புரி பகுதியை உள்ளடக்கிய இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான லொறி (01) அப்பகுதியில் அவதானித்து சோதனையிடப்பட்டது.
அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு லொறியில் கொண்டு செல்வதற்காக தயார்படுத்தப்பட்ட முப்பத்தாறு பைகளில் (36) பொதி செய்யப்பட்ட சுமார் ஆயிரத்து இருநூற்று ஏழு (1287) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், லொறியொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர், பீடி இலைகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் விஷேட பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் 07 சந்தேகநபர்கள் கைது
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகுடன் ஏழு (07) சந்தேகநபர்கள் ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நிபுணத்துவ அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக சோதனையின் போது மிக நுணுக்கமாக மறைத்து நாட்டிற்கு கொண்டு வர முயற்சித்த 191 கிலோ 752 கிராம் ஹெரோயின் மற்றும் 671 கிலோ 452 கிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, திக்கோவிட்ட துறைமுகத்திற்கு மீன்பிடி படகு கொண்டுவரப்பட்டது
போதைப்பொருள், சந்தேக நபர்கள் மற்றும் நெடுநாள் மீன்பிடி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.