இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் குழுக்களும் அரசியல் கூட்டணியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், இன்று (26) கலந்துரையாடல்கள் சில இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இது தொடர்பில் இன்று காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் மற்றும் சின்னம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதோடு, கூட்டணி அமையுமாயின் அதற்கு தேவையான அடிப்படை செயற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருக்கும் இடையில் இன்று மாலை 4.00 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.
அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்புவோம்
தேசியத்துவத்துடனும் ஐக்கியத்துடனும் ஒன்றுபட்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கௌரவ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க இன்று (23) காலை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய முழுமையான உரை:
மக்களால் ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது நமது நாட்டின் ஜனநாயகத்திலிருக்கும் மிக முக்கியமான அம்சமாகும். தேர்தலில் வாக்களித்தல் மற்றும் ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதோடு ஜனநாயகம் நிறைவு பெறுவதில்லை. இது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றாலும், நம் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த, கட்டமைப்புகளின் வலிமையும், சட்டங்களை வலுப்படுத்துவதும் அவசியம் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனவே, எனது பதவிக்காலத்தில் இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.
அத்துடன், இந்த நாட்டில் ஜனநாயக முறையில் அதிகாரப் பரிமாற்றம் நடந்த வரலாறும் உண்டு. தேர்தலில் நிகழும் அதிகாரப் பரிமாற்றத்தை எந்தத் தலைவரும் நிராகரித்ததில்லை. அதற்கமைய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த மக்கள்ஆணையை சுமூகமாக ஏற்றுக்கொண்டதுடன், ஜனநாயக ரீதியில் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான அவரின் அர்ப்பணிப்பிற்கும் முன்னுதாரணத்திற்கும் நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எமக்கு கிடைப்பது மிகவும் சவால் நிறைந்த நாடு என்பதை நன்கு புரிந்து கொண்டிருக்கிறோம். நமது அரசியலில் தூய்மையான, மக்களால் எதிர்பார்க்கப்படும் சிறந்த அரசியல் கலாசாரத்திற்காக அவசியம் காணப்படுகிறது.அதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
நம் நாட்டின் அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நல்லெண்ணம் இல்லை. எனவே, அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது மக்கள் மரியாதை மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்க எங்கள் தரப்பிலிருந்து முடிந்த அனைத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.
மேலும், நமக்கு முன் இருக்கும் இந்த ஆழமான நெருக்கடியை வெறும் அரசோ, வெறும் அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனி நபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை. ஏனென்றால், நான் முன்பு கூறியது போல், நான் ஒரு மாயாஜால வித்தைக்காரனல்ல. நான் மந்திரவாதியும் இல்லை. நான் இந்த நாட்டின் சாதாரண குடிமகன். எம்மிடம் திறமைகள் உள்ளன. இயலாமைகளும் உள்ளன. தெரிந்த விடயங்களும் உள்ளன அதேபோன்று, தெரியாத விடயங்களும் உள்ளன.
ஆனால் திறமைகளைப் பயன்படுத்தி தெரியாதவற்றை சேகரித்துக்கொண்டு சிறந்த முடிவுகளை எடுத்து இந்த நாட்டை வழிநடத்துவதே எனது தலையாய பணியாகும். அந்த கூட்டுப் பங்களிப்பின் ஒரு அங்கமாக மாறுவது எனது பொறுப்பாகும். மேலும், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதில் பொது மக்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை நிறைவேற்ற அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன்.
ஆனால், நாட்டின் ஜனாதிபதி என்ற முறையில், இந்தப் பணியை முன்னின்று நடத்துவதில் எனக்கு முதன்மையான மற்றும் மிக முக்கியமான பொறுப்பு இருப்பதை நான் ஏற்றுக்கொண்டேன். எனவே, இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்காக எனக்குக் வழங்கப்பட்டுள்ள பணியை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன் என்பதை செயற்பாடு மற்றும் நடைமுறை மூலம் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு வெளிப்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
மேலும் நமது நாட்டுக்கு சர்வதேச ஆதரவு தேவை. எனவே, உலகில் எத்தகைய அதிகாரப் பிளவுகள் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டையும் எமக்கு மிகவும் சாதகமாக கையாள்வதே நமது எதிர்பார்ப்பாகும். நாம் உலகில் தனிமைப்படுத்தப்பட்ட நாடு அல்ல. உலகத்துடன் கூட்டாக முன்னேற வேண்டிய ஒரு நாடாகும். அது தொடர்பில் தேவையான முடிவுகளை எடுக்க நாங்கள் சிறிதும் தயங்குவதில்லை.
மேலும், நம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு பெரும் பங்கு உள்ளது. எனவே, நாட்டை மேலும் வலுவாகக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் செயற்பாட்டிற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நான் கருதுகின்றேன்.
நம் நாட்டின் ஜனநாயகத்தின் ஊடாக நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அதற்காக மக்கள் எனக்கு வாக்களித்தனர்.
மேலும் எனக்கு வழங்கப்படாத வாக்குகளும் உள்ளன. எனவே, எங்களின் வெற்றியின் உள்ளடக்கம் மற்றும் அளவு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. எனவே, எங்களுக்கு ஆதரவு வழங்காத மற்றும் எங்களை நம்பாத பிரஜைகளின் ஆதரவையும் நம்பிக்கையையும் பெறுவதே எனது நிர்வாகத்தின் போது எனக்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும். அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எதிர்காலத்தில் இவை அனைத்தையும் நீங்கள் நடைமுறையில் கண்டுகொள்ள முடியும். அதற்கு அனைத்து மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றேன்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்களிப்பு நாடாளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.
பல முக்கிய சர்வதேச ஊடகங்களின் பிரதான தலைப்புச் செய்திகளாக இலங்கையில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தல் மாறியுள்ளது.
BBC, REUTERS, CNN மற்றும் NDTV போன்ற ஊடங்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இலங்கையில் கோட்டா கோ மக்களின் போராட்டத்தின் பின்னர் புதிய தலைவரை தெரிவு செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
BBC செய்தி சேவை அதன் தலைப்பில், “மக்கள் எதிர்ப்புகளால் ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இலங்கையில் நடைபெறும் முதல் தேர்தலில் வாக்களிப்பு” என குறிப்பிட்டுள்ளது.
போராட்டங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதன் பின்னர் இலங்கை தனது முதலாவது ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில், நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்ப்புக்களில் ஜனாாதிபதி வெளியேற்றப்பட்ட பின்னர் முதல் தேர்தலில் புதிய ஜனாதிபதிக்கு வாக்களிக்க உள்ளனர்.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை ஒரு பரந்த அரசியல் சூழ்நிலையாக, போராட்டத்திற்குப் பிறகு நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் பொருளாதார சீர்திருத்தங்கள் மீதான வாக்கெடுப்பாக பிபிசி செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
ஆனால், வரி அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் நலன்புரி குறைப்புக்களால் பலர் இன்னும் வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள்
நிறைவேற்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், REUTERS செய்திச் சேவை தனது தலைப்புச் செய்தியில், “நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பொருளாதார எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தலில் மக்கள் வாக்களிக்கின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் பிற தேவைகள் முடிந்த பிறகு, மாலை 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி பிற்பகல் 4.15 மணிளவில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் 21ம் திகதி வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் பெறப்பட்டதும், அதிகாரிகள் மற்றும் இதர தேவைகள் முடிந்ததும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இரவு 7.00 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
மாலை 4.15 மணிளவில் தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகும்.
அத்துடன் மாவட்ட அளவில் ஒவ்வொரு வட்டாரத்திலும் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறும்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முடிவுகள் கிடைத்தவுடன் ஊடகங்களுக்கு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையே முதலில் எண்ணப்படும்.
அந்தக் கணக்கெடுப்பின் பின்னர் (மாவட்ட அளவில் எண்ணும் பணி) முதலில் வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.
அதன் பிறகு, ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, தொகுதி மற்றும் மாவட்ட அளவில் அது தயாரிக்கப்படுகிறது.
தேர்தல்கள் செயலகமே ஒட்டுமொத்த முடிவுகளைக் கணக்கிடும்.
எந்த வேட்பாளரும் 50 வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றுள்ளாரா என சரிபார்க்கப்படும்.
அப்படியானால், அந்த நேரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்தப்படும்.
அப்போது ஜனாதிபதியை நாங்கள் அறிவிப்போம்.
எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்காவிடின், விருப்பு வாக்கு எண்ணிக்கைக்கு செல்ல வேண்டும்.
அங்கு, அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் போட்டியில் வைத்து விட்டு மீதமுள்ள 36 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து நீக்கப்படுவர்” என்றார்.
2023 ஆம் ஆண்டு இறுதியில் காணப்பட்ட இலங்கையின் 17.5 டொலர் பில்லியன் தனியார் வணிகக் கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான இணக்கப்பாடு இன்று (19) எட்டப்பட்டது.
சர்வதேச முதலீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (Ad Hoc Group of Bondholders – AHGB) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் (Local Consortium of Sri Lanka – LCSL) கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர், தனியார் பிணைமுறி வழங்குநர்களுடனான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்நாட்டின் தனியார் பிணைமுறிகளில் 50% இற்கும் அதிகமானவற்றை இந்த குழுக்கள் கொண்டுள்ளன.
இந்த இணக்கப்பாடுகளுக்கமைய பிணைமுறிதாரர்கள் 11% தள்ளுபடி விகிதத்தின் அடிப்படையில் தற்போதைய கடன் பெறுமதியில் 40.3% தள்ளுபடியை வழங்க இணங்கியுள்ளனர்.
இந்த இணக்கப்பாடுகளுக்கு அமைய, 2024 ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு வரைவை விடவும் பெருமளவான கடன் சலுகை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதோடு,புதிய நிபந்தனைகள் அடிப்படையில் வட்டிக் கொடுப்பனவிலும் குறைப்புச் செய்யப்படும்.
இலங்கை 3.3 பில்லியன் டொலர் தனியார் கடனை மறுசீரமைப்பு செய்வதற்கான நிதி நிபந்தனைகள் தொடர்பில் சீன அபிவிருத்தி வங்கியுடன் (CDB) கொள்கை ரீதியான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது.
சீன எக்ஸிம் வங்கி, ஸ்ரீ லங்கா உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு (OCC), சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் பிணைமுறிதாரர்களுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பலனாக, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்ட காலப்பகுதிக்குள் இலங்கை 17 டொலர் பில்லியனுக்கும் அதிகமான கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதில் சீன எக்ஸிம் வங்கியின் 2.4 டொலர் பில்லியன்களும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவின் 2.9 டொலர் பில்லியன்களும், சீன அபிவிருத்தி வங்கியின் (CDB) 2.5 டொலர் பில்லியன்களும், பிணைமுறிதாரர்களின் 9.5 டொலர் பில்லியன்களும் அடங்கும்.
இந்த செயன்முறை முழுவதிலும் இலங்கையின் கடன் வழங்குநர்களும் சர்வதேச நாணய நிதியமும், உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களின் செயலகமும் வழங்கிய தொடர்ச்சியான ஒத்திழைப்பிற்கு இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தொகுதி மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள அனைத்து தேர்தல் அலுவலகங்களையும் அகற்றுவது அவசியம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பிரதான அலுவலகம் மாத்திரமே திறக்கப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
முன்னர் நிறுவப்பட்ட மற்றைய அனைத்து அலுவலகங்களையும் அந்தந்த வேட்பாளர்கள் அகற்ற வேண்டும் என்றும், அகற்றாவிட்டால் காவல்துறையினரால் அகற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் எண்ணும் பணி மாலை 04.15 மணியளவில் ஆரம்பமாகும் என்றும், எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் உரிய முடிவுகளை ஊடகங்களுக்கு வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிரதான வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 7 மணிக்கு ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ முடிவுகள் கிடைக்கும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டதோடு, ஜனாதிபதித் தேர்தலில் தனது விருப்பத்தை எவ்வாறு சரியாகக் குறிப்பிடுவது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
அதன்படி, விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்க, வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்தின் முன் பகுதியில் ‘1’ என்ற எண்ணைக் குறிக்க வேண்டும்.
‘2’ மற்றும் ‘3’ என்ற எண்களை குறியிட்டு, தனக்கு விருப்பமான மற்ற வேட்பாளர்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்னுரிமை அளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை தெரிவிப்பதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதனூடாக, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வாக்கெடுப்பின் போதான சட்ட விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இராஜகிரிய தேர்தல் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவுக்கு இது தொடர்பான முறைப்பாடு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மக்களிடம் கோரியுள்ளது.
மீலாதுன் நபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணல் நபிகள் நாயகம் பிறந்த நாளான இன்றைய திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாக விளங்கியவர் நபிகள் நாயகம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய கொண்டாட்டங்களில் ஒன்றாக நபிகளார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டம் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய பெருமக்கள், இரக்கத்தையும், கருணையையும் நினைவூட்டும் நாளாக கொண்டாடி வருகின்றனர்.
துயர்மிகு சூழலை இளம் வயதிலேயே எதிர்கொண்டு வளர்ந்து, ஏழைகளின் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைத்து ஆதரவுக் கரம் நீட்டுபவராகவும் கருணையின் அடையாளமாகவும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் விளங்கினார்கள்.
“கோபம், பொறாமை, புறம் பேசுதல்” ஆகியவற்றை அறவே துறந்து, உயரிய பண்புகளுடன் வாழ்வதற்கான சிந்தனைகளை மனித சமுதாயத்துக்குச் சொன்னவர். “ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்” என்ற மகத்தான மனிதநேயத்திற்குச் சொந்தக்காரர். அண்ணல் நபிகளாரின் சீரிய போதனைகளும், சிறந்த அறிவுரைகளும், செழுமையான வழிகாட்டுதல்களும், ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டியவை மட்டுமின்றி, அவை பொன்னேபோல் போற்றி, ஒழுகிப் பாதுகாக்கப்பட வேண்டியவை என்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்அலிசப்ரி ரஹீம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தமைக்கான தீர்வு திசைக்காட்டிக்கு வாக்களிப்பதல்ல என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரியில் விவசாயத்தை நவீனமயமாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும், சர்வதேச இரத்தினக்கல் வலயமொன்றை உருவாக்கவும், இரத்தினக்கல் தொழிலை மேம்படுத்தவும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஏற்றுமதி பொருளாதாரம், விவசாய நவீனமயமாக்கல், டிஜிட்டல், பசுமை மற்றும் அறிவு சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்கிப் புதிய பொருளாதாரத்தை உருவாக்கும் புரட்சியை முன்னெடுக்க எதிர்பார்கிறேன்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு வாக்களித்தவர்கள் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பர்.
ஆனால் அவர்கள், தற்போது திசைக்காட்டிக்கு வாக்களிப்பது அதற்குத் தீர்வாக அமையாதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.