Wednesday, July 30, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 127

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு

0

அடுத்த 24 மணித்தியாலத்தில், நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பில் இடம்பெறவுள்ள வானிலை மாற்றங்கள் தொடர்பில் தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை  வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தேசிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாசவின் முதல் கூட்டம் குருநாகளில்!

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பங்கேற்ற முதல் பொதுக் கூட்டம் நேற்று (16) குருநாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியையும் ஐக்கிய மக்கள் கூட்டணியினையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொண்டதுடன், குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் திரளான மக்கள் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம், ஒப்பந்த அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒன்றாக அமையாது எனவும் மக்களுக்கான கொள்கைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட அரசாங்கமாக அமையும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

குருணாகலில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

நடைமுறை ரீதியாகவும் முற்போக்கு ரீதியாகவும் மக்களுக்காகக் கருத்துக்களை முன்வைத்துப் போராட்டங்களை நடத்தியுள்ளதுடன், ஊழல் மோசடியை இல்லாது ஒழிக்கின்ற நோக்கில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு சென்ற ராஜபக்ஸக்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

திருடப்பட்ட நாட்டின் வளங்களையும் திருடப்பட்ட நாட்டின் பணத்தையும் மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தனிநபர் சட்ட மூலத்தை ஐக்கிய மக்கள் சக்தியே முதலில் சமர்ப்பித்துள்ளது. 

மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைபேசப்படுகின்ற யுகத்தை நிறைவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பொருளாளர் பைசல் காசிம் மற்றும், கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ் தெளபீக் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவரான அலிஸாஹிர் மெளலான நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுடன் இணைந்தமை மக்கள் மத்தியில் பேசும்பொருளாக மாறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை மாறவேண்டும்!

0

ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இலங்கை நாடானது எதிர்காலத்தில் தெற்காசியாவின் அடையாளமாக மாற்றமடையும் என்று ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் குருநாகல் நகரில் தொழில் முனைவோர் சங்கப் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கௌரவ ஆளுனர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள்,
2022ம் ஆண்டு இலங்கை பாரிய பொருளாதாரநெருக்கடியை எதிர்கொண்ட போது இனி எந்த ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக இலங்கை தலை தூக்கவே முடியாது என்று பெரும்பான்மையான சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எதிர்வு கூறினார்கள். ஆனால் அந்த எதிர்வுகூறல்களை சில மாதங்களுக்குள்ளாகவே அடித்து நொறுக்கிவிட்டு மீண்டும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நோக்கி இலங்கை உறுதியான நடை போடத் தொடங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் செயற்பாடு ஒருபோதும் சாத்தியமாகாது என்று அப்பொழுது பலரும் பேசினார்கள். ஆனால் இரண்டே ஆண்டுகளுக்கு பிறகு உலக வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய சாதனையாக வியந்து பேசப்படுகின்றது.

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டுக்கு வழங்கிய தலைமைத்துவம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. உலகில் இலங்கையின் இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் பாரிய சவால்களை எதிர்கொண்டு ஈட்டிக்கொள்ளப்பட்ட மிகப்பெரும் சாதனையாகும் .

ஒருபுறம் பொருளாதார வளர்ச்சி, மறுபுறத்தில் கடன் தொகை தள்ளுபடி என சர்வதேசத்திலும், ஜனநாயகம், நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தி நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கட்டியெழுப்புதல் என உள்நாட்டிலும் அவர் பாரிய சாதனைகளை ஆற்றியுள்ளார். இரண்டே வருடங்கள் அளவிலான குறுகிய காலத்துக்குள்ளான அவரது சாதனைகள் முழு உலகையும் வியக்க வைத்துள்ளது.

இதன் மூலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இலங்கையானது எந்தவொரு கட்டத்திலும், எவ்வாறான சவால்களையும் தாக்குப்பிடித்து சரித்திரத்தில் சாதனைமிகு வெற்றிகளைப் பதிவு செய்யும் வல்லமை கொண்டது என்பதை நாங்கள் வலுவான முறையில் சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

அது சாதாரணமான ஒரு விடயமல்ல, மிகப்பெரும் செய்தியை உலகுக்கு உணர்த்தியுள்ளது. இலங்கை இனி தெற்காசியாவின் ஒரு சாதாரண நாடு மட்டும் அல்ல, நவீன தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய நாடு, சர்வதேச மட்டத்தில் சவால்களை எதிர்த்து வெற்றி கொண்டு தெற்காசியாவின் வரலாற்றை திருத்தி எழுதப்போகும் நாடு என்பதை உணர்த்தியுள்ளோம்.

2022 ஆண்டு வீழ்ச்சியடைந்திருந்த இலங்கைக்கான சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச ரீதியில் நாம் பெற்றுக் கொண்டுள்ள நம்பகத்தன்மை கொண்ட வளர்ச்சியே அதன் காரணமாகும்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை ஊடாக வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமன்றி, நம் நாட்டைப் பற்றிய சர்வதேச மட்டத்திலான பிம்பத்திலும் ஒரு மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பொதுவான சாதனையின் பின்னால் நாடும் பொருளாதார ரீதியாக துரிதமாக மீட்சி பெற்றது.

தற்போதைய நிலையில் இலங்கையின் ஒவ்வொரு அசைவுகளும் உலகை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு இருக்கிறது. எதிர்காலத்தில் தெற்காசியாவின் தலைமைத்துவத்திற்குத் தகுதியான நாடாக, சர்வதேச மட்டத்தில் தெற்காசியாவின் அடையாளமாக இலங்கை திகழ வேண்டும். அதற்கான தகுதியான தலைமைத்துவத்தினை ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வழங்க முடியும் என்றும் ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் அவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் வடமேல் மாகாண தொழில்முனைவோர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி வர்த்தகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

மலையக மக்கள் பிரேமதாசவை மறக்கவே மாட்டார்கள்!

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், ராஜபக்சர்களுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று (10.08.2024)  இடம்பெற்ற மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளோம்.

மேற்படி கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

மலையக மக்களுக்கு 1988 இல் ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலத்தில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரே அவர்களின் வாழ்வில் சுதந்திர காற்று வீச ஆரம்பித்தது. அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

பிரேமதாசவின் இந்த நடவடிக்கையால்தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எனவே, அதற்கான நன்றி கடனாகவும் நாம் சஜித்தை ஆதரிக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், நாட்டில் நல்லாட்சியே இடம்பெற வேண்டும், அதனை சஜித் செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கள்வர்கள் எல்லாம் இன்று அவர் பக்கமே அணிதிரண்டுள்ளனர்.

அதேவேளை, கட்சி முடிவை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தது. இதனால் ஹரின் பெர்னாண்டோ, மனுச நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ளனர்.

ராஜபக்சவின் சகாக்கள் இன்று ரணிலுடன் உள்ளனர், எனவே, ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவால் விடுக்கின்றேன் என மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரன், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பில் அவசரமாக கூட்டப்பட்ட முஸ்லிம் எம்.பி.க்களின் கூட்டம்

0

ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் விஷேட சந்திப்பு நேற்று கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அலிசப்றி ரஹீம், இஷாக் ரஹ்மான், முஷாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.சீ.இஸ்மாயீல் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் கல நிலவரம் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் அடைந்துகொள்ள உள்ள அபிவிருத்திகள், வேலைத்திட்டங்கள் மற்றும் நாட்டின் ஸ்திரத்தன்மை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெளிவுபடித்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தவிர மாற்று ஜனாதிபதி ஒருவர் தேர்தலில் தெரிவுசெய்யப்பட்டால் இந்த நாட்டை மூன்று மாதங்களுக்கு கூட அவர்களினால் கொண்டு செல்ல முடியாதென அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் முஸ்லிம் தலைமைகள் சரியான நேரத்தில் எடுக்க தவறிய முடிவுகளினால், முஸ்லிம் சமூகம் மிகவும் பின்னோக்கி சென்றுள்ளதாகவும், முஸ்லிம் மக்களுக்கான அடிப்படை தேவைகள் மற்றும் அபிவிருத்திகள் இல்லாமலாக்கப்பட்டதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்தார்.

சில முஸ்லிம் தலைமைகளே முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்த நயவஞ்சகர்கள் என ஆக்ரோஷமாக பேசிய வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட், ஆளும் அரசாங்கத்துடன் பயணிப்பதன் மூலம் மாதிரமே எதிர்பார்க்கபடுகின்ற அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் கூட்டத்தில் கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பேசுகையில், அரசியல் முதிர்ச்சிகொண்ட, வங்குரோத்து அடைந்த நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்காவினால் மாத்திரமே தற்போதைய சூழலில் நாட்டை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார்.

இதேவேளை கூட்டதில் கலந்துகொண்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம் சில முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார்.

அவர் பேசுகையில், நாடு பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்திருந்த நிலையில் வேறு எவரும் நாட்டை பொருப்பெடுக்காத தருணத்தில், நாட்டை பொறுப்பேற்று, மிக குறுகிய காலத்தில் நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டு, நாட்டை தூக்கி நிறுத்தி சர்வதேச அளவில் நாட்டை திரும்பி பாரக்கவைத்த அதிசிறந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான ஒரு அதிசயம் வேறு எந்த தலைவர்களாலும் செய்திட முடியாது என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்றி ரஹீம், இவ்வாறான அதிசயத்தை நிஜமாக நிகழ்த்தி வரலாற்று சாதனை படைத்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் தமது பிரதேசங்களில் உள்ள முக்கிய குறைபாடுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா அவர்களிடம் முன்வைத்தனர்.

மிக முக்கியமாக தீர்க்கப்படவேண்டிய குறைபாடுகளை மிக அவசரமாக தாம் தீர்த்து தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உறுதியளித்தார்.

குறித்த விஷேட சந்திப்பில் அரச உயரதிகாரிகள், அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆளும் கட்சியை பிரதிநிதுத்துவப்படுத்தும் குறித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் விஷேட கூட்டம்!

0

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள், சமூக முன்னோடிகள் மற்றும் புத்திஜீவிகளுடனான விஷேட சந்திப்பு அண்மையில் இடம்பெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றிய கருத்தறியும் நிகழ்வே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் கொழும்பு, வெள்ளவத்தை கிறீன் பலஸ் ஹோட்டலில் (05) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இந் நிகழ்வுக்கு எமது கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தவிசாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி, கட்சியின் அரசியல் அதிகார சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், சட்டத்தரணி என்.எம்.ஷஹீத், கலாநிதி யூஸூப் மரிக்கார், கலாநிதி அனீஸ் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நௌசாட், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் ரிஸ்லி முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள் என பல்வேறு பட்ட துறைசார்ந்தவர்களும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேற்பாளரை ஆதரிப்பது தொடர்பில் இதுவரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவெடுக்காத நிலையில் குறித்த விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இடைநிறுத்தப்பட்ட அரசாங்கத்தின் முக்கிய திட்டங்கள்!

0

சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டம் மற்றும் உறுமய காணி உறுதித் திட்டம் ஆகிய இரண்டு முக்கிய அரசாங்கத் திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு இலங்கை தேர்தல்கள் ஆணையகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை இந்த வேலைத்திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதாக நாட்டின் தேர்தல் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேர்தல்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L Rathnayake) இந்த திட்டங்களில் உள்ளார்ந்த பிரச்சினைகள் எதுவும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதுடன்  நியாயம் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த குறித்த திட்டங்களின் தற்காலிக இடைநிறுத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டை விட்டு தப்பியோடிய பிரதமர். நடந்தது என்ன?

0

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பங்களாதேஷ் (Bangladesh) தலைநகர் டாக்காவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.  

இதேவேளை, தன்மோண்டியில் உள்ள அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவின் அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் அங்கிருந்து இராணுவ உலங்கு வானூர்தி மூலம் இந்தியாவுக்குப் (India) புறப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்ற நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளது.

வங்காளதேசத்தில் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு நடைமுறைக்கு முடிவு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

நடந்து வரும் போராட்டத்தில் கடந்த மாதத்தில், வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்து இருந்தது. 

இந்த நிலையில் ஆளும் அவாமி லீக் அரசின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நேற்று மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

அரசுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் நேற்று முதல் பங்களாதேஷில் காலவரையற்ற முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன், இன்று முதல் 3 நாட்கள் பொது விடுமுறையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் இணைய சேவைகளை முடக்குவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்கள் ஆரம்பித்த ஆர்ப்பாட்டமானது பின்னர் அந்த நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்பட்டதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த பின்னணியில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலவச கண்புரை(CATARACT) ஸ்கிரீனிங் முகாம்

0

ISRC SRI LANKA மற்றும் HRC SRI LANKA சமூக சேவை அமைப்பின் கீழ் இலவச கண்புரை (CATARACT) ஸ்கிரீனிங் முகாம், கடந்த 27 ஜூலை 2024 (சனிக்கிழமை) கொழும்பு டெமட்டகொட அல் ஹிஜ்ரா முஸ்லீம் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

ISRC சமூக சேவை அமைப்பின் பிரதம பணிப்பாளர் அஹமட் செய்யாப் அவர்களின் தலைமையில் காலை 9.30 தொடக்கம் மாலை 2.00 PM வரை நடைபெற்ற குறித்த கண் பரிசோதனை நிகழ்வில் இன மத வேறுபாட்டின்றி 1000 யிர்க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர்.

அத்துடன் கண் பரிசோதனை செய்த நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு கண்புரை (Cataract ) அதிகமாக இணங்காணப்பட்டதுடன் அவர்களுக்கான இலவச சத்திரசிகிச்சை எதிர்வரும் மாதங்களில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் அஹமட் செய்யாப் தெரிவித்தார்.

ISRC SRI LANKA மற்றும் HRC SRI LANKA சமூக சேவை அமைப்பின் கீழ் இலவச கண்புரை (CATARACT) ஸ்கிரீனிங் முகாம் கொழும்பின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ.முஸ்லிம் காங்கிரஸ் கூட்டத்தில் அமைதியின்மை?

0

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விஷேட உயர்பீட கூட்டம் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது லுஹர் தொழுகைக்கான பாங்கு ஒலித்த சமயம் கூட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டது.

கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகான் சில புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமையால் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

புகைப்படங்களை எடுத்து முகநூலில் பதிவிறக்கம் செய்தமை மற்றும் விஷமிகளுக்கு கட்சியை அநாகரிகமாக முகநூலில் விமர்சிக்க இடமளித்தமை போன்ற காரணங்களால் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்  உயர்பீட உறுப்பினர் ஏ.ஸி. யஹியாகானை உடனடியாக வெளியேறுமாறு பணித்தார்.

கட்சியின் தற்போதைய உயர்பீடக் கூட்டம் மற்றும் அடுத்த உயர்பீடக் கூட்டம் ஆகிய இரு அமர்வுகளில் யஹியாகான் பங்குபற்றுவதனை இடைநிறுத்துவதாக தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்தார்.

யஹியாகானுடைய வகிபாகம் பற்றி பாராட்டிய தலைவர் ரவூப் ஹக்கீம், இந்த முடிவை மிகவும் மனவருத்தத்துடன் எடுக்கவேண்டிய சூழ்நிலையை உண்டாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தலைவரோடு கைகுலுக்கி, மிகவும் முன்மாதிரியான நற்பண்போடு  யஹியாகான் சிரித்த முகத்துடன் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.