Wednesday, July 30, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 128

நாகவில்லு பாடசாலையில் முப்பெரும் விழா-2024

0

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாளயத்தின் முப்பெரும் விழா பாடசாலை அதிபர் ஜனாப் எஸ்.எம். ஹுசைமத் அவர்களின் தலைமையில் மிகவும் விமர்சையாக இன்று இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் மூலம் பாடசாலைக்கான உள்ளக வீதி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கான அடிக்கல் நாட்டு வைபவமும் இன்றைய நிகழ்வில் இடம்பெற்றது.

சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை ஒன்று இப்பாடசாலைக்கு கண்டிப்பாக தேவை என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களிடம் ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்ததின் மூலமாக குறித்த ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை பாடசாலைக்கு தருவதாக வாக்குறுதி அளித்தார்.

மேலும் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் “அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு’’ எனும் செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கற்றல் உபகரணங்கள் பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் சொந்த நிதியில் இருந்து பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டுக்கு பிறகு ஈ நியூஸ் பெஸ்ட் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இதேவேளை 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்களும் பாடசாலைக்கு மிக விரைவில் வழங்கப்படும் என பாரளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களினால் உறுதியளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பாரளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவ்ஸி, இணைப்புச் செயலாளர் எச். அமீர் அலி, ஊடகசெயலாளர் எம்.எம்.நௌபர், பாடசாலை அபிவித்தி சங்கம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் எவார்ட்ஸ் சமூக அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை ஏற்றுக்கொள்ளவே முடியாது – பதரிய ஜனாதிபதி

0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின்  அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியா கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்.

இது குறித்து ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், “சகோதரர், தலைவர், போராளி இஸ்மாயில் ஹனியா ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடந்த இஸ்ரேல் தக்குதலில் கொல்லப்பட்டார்” எனத் தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர படைகளும் இந்தச் சம்பவத்தை உறுதி செய்துள்ளது. ஹனியா தங்கியிருந்த இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் அவரும், அவரது மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர் என்று ஈரானிய புரட்சிப் படைகள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலை அடுத்து இஸ்ரேல் – ஹமாஸ் படைகளுக்கு இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதில் இதுவரை உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்துள்ளது. 1 இலட்சம் பேர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் ஈரானில் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலகில் ஏற்படக் கூடிய நிலைமையினால் இலங்கைக்கு ஏற்படக் கூடிய பாதுகாப்பு, பொருளாதார பாதிப்புக்களை எதிர்கொள்வதற்கான முன் ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவையும், பொருளாதாரம் தொடர்பான குழுவையும், இவற்றைக் கண்காணிக்க உயர் மட்டக் குழுவையும் நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இணைந்த 116 உறுப்பினர்கள்!

0

பாரபட்சமின்றி நாட்டை புதிய கோணத்தில் முன்னோக்கி கொண்டுச் செல்லவே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மத்திய அரசாங்கம், 09 மாகாண அரசாங்கங்கள் உள்ளடங்களாக 10 அரசாங்கங்களின் கீழ் உள்ள அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி நாட்டை முன்னேற்றுவதாக உறுதியளித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண சபைகளின் முன்னாள் பிரதிநிதிகளுடன் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (31) இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு அர்ப்பணிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.

“நாட்டில் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீற முடியாது. தேர்தல் நடத்தப்பட்டாலும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2022 இல் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் பெரும்பான்மையானவர்கள் என்னை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர். அந்த ஆதரவு இல்லாவிட்டால் இன்று நாடு இந்த நிலையை அடைந்திருக்காது. எனவே அந்த தீர்மானத்தை எடுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நன்றி கூறுவதாக இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இந்த இடத்தில் உள்ளனர். ஆனால் மக்களுக்காக இணைந்து பயணிக்க வேண்டும். சம்பிரதாய அரசியல் இனி செல்லுபடியாகாது. ரணில் விக்ரமசிங்கவைத் தவிர வேறு வழியில்லை” என்று பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பியதர்ஷன யாப்பா, இராஜாங்க அமைச்சர் டி. பி. ஹேரத், பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஆஷு மாரசிங்க, முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் மாகாண அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியிடம் படையெடுத்த மொட்டு எம்.பிக்கள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நூற்று ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (ranil wickremesinghe) வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன (vajira abeywardena) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 75 பேர் நேற்று (29) பிற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்தனர்.

அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள்

இவ்வாறு சென்றவர்களில் பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, கஞ்சன விஜேசேகர, ரமேஷ் பத்திரண, கனக ஹேரத், ஜனக வக்கம்புர, மொஹான் பிரதர்ஷன ஆகிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுன தனியான ஜனாதிபதி வேட்பாளரை முன்வைப்பதற்கான தீர்மானத்துடன், ஜனாதிபதிக்கு ஆதரவை தெரிவிக்கத் தயாராக உள்ள ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் வேகமெடுக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பால் அபிவிருத்தி பணிகள் இடைநிறுத்தம்?

0

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு தாம் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பெஃப்ரல் அமைப்பு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.

குறித்த திட்டங்களைத் தடுக்கும் வகையில் பெஃப்ரல் அமைப்பு செயற்படுவதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்குமாறே உயர்நீதிமன்றிடம் தங்களால் கோரப்பட்டுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும்போது, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளைப் பின்பற்றப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளதாக பெஃப்ரல் அமைப்புகுறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனம் திறந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

0

நாட்டை மீட்டெடுக்கும் பயணத்தில் ஆரம்பம் முதல் தம்முடன் இணைந்து பயணித்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்களில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு நெருக்கடியில் இருந்தபோதும் எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்காக மக்கள் போராடும்போதும் என் மீதும் எனது திட்டத்தின் மீதும் நீங்கள் நம்பிக்கை வைத்திருந்தீர்கள்.

சவால்களைச் சமாளிக்க முடியாததாகத் தோன்றிய சந்தர்ப்பத்தில் உங்களது அர்ப்பணிப்புக்கள் அளப்பரியன.

இப்போது எங்களுடன் இணைந்திருப்பவர்களை வரவேற்கிறோம்.

நேர்மறையான சிந்தனைகளைப் பகுத்தறிந்து கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றாக இணைவதன் முக்கியத்துவத்தை நீங்கள் தற்போது புரிந்துள்ளீர்கள்.

ஒன்றாக இணைவதால், நாம் இன்னும் சாதிக்க முடியும்.

அதேநேரம் செழிப்பான, ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கான எமது பணி தொடரும் என்பதை உறுதிப்படுத்துவதுடன், அதனை நனவாக்க ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும்.

இந்த பயணம் எளிதானதல்ல ஆனால் ஒன்றாக இணைவதன் மூலம் நிலைபேற்றை அடையலாம்.

அனைவரும் ஒன்றிணைந்து எமது எதிர்பார்ப்புடனான இலங்கையை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார்.”உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது.நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.

மொட்டுக்கட்சிக்கு எதிராக நிற்கும் முக்கிய அமைச்சர்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக மொட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளரை இந்த வாரம் அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்காதிருக்கவும், மொட்டு சின்னத்தில் தனியாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பியிருந்த கடிதம் நேற்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தினால் அரசியல் குழுவில் முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அந்த கடிதத்தை நிராகரிக்க அரசியல் குழுக் கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுவில் 82 பேர் அங்கம் வகிப்பதுடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் 72 பேர் பங்கேற்றனர்.

இதன்போது, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த 11 பேர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தானந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, பிரதீப் உந்துகொட, கோகிலா ஹர்ஷனி குணவர்தன, சஹன் பிரதீப், ரமேஸ் பத்திரன, கஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க, கனக ஹேரத், மொஹான் பிரியதர்ஷன ஆகியோர் கட்சியின் சார்பில் தனியான வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் பிறிதொரு கட்சியின் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் உறுப்பினர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் யோசனைக்கு 6 பேர் எதிராக வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறப்பட்ட தம்மிக பெரேரா தொடர்பில் அரசியல் குழுக் கூட்டத்தின்போது எந்தவித கருத்துக்களும் பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்காத 11 பேர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தனவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மீண்டும் கட்சியில் இணைந்த ஆப்தீன் எஹியா!

0

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தராசுக் கூட்டணியில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா மீண்டும் மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளத்தின் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்தவும், கட்சியின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவும் இப்பயணத்தில் இணைந்து கொண்டதாக ஆப்தீன் எஹியா தெரிவித்தார்.

இதன்போது, முன்னாள் வட மேல்மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளருமான M.T.M. தாஹிர், புத்தளம் முன்னாள் நகரபிதா A.O. அலிகான், மௌலவி பஸால் இஸ்மாயீல், சகோதரர் முயீன், ஆசிரியர் முஸ்பர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அமான் அஷ்ரஃபின் “ஓட்டமாவடி” திரைப்படம் ரிலீஸ் ஆனது

0

அமான் அஷ்ரஃப் இயக்கத்தில் வெளியான “ஓட்டமாவடி” திரைப்படம், கடந்த புதன்கிழமை (10) கொழும்பு PVR இல் பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் இலங்கையின் முதல் பெண்மணி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் அரச பிரதிநிதிகள், இராஜதந்திர உறுப்பினர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கொவிட்-19 தொற்றுநோயின் போது இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட போராட்டத்தின் சொல்லப்படாத ஒரு கடுமையான பயணத்தின் கதையை இந்த ஆவணப்படம் வெளிப்படுத்தியுள்ளதோடு, கொரோனா வைரஸ் காரணமாக இறந்த தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்களின் கட்டாய தகனங்கள் மூலம் அவர்களுக்கு உண்டான சோதனையை பார்வையாளர்களுக்கு இந்தத் திரைப்படம் எடுத்துக் கூறுகின்றது.

2019 இன் பிற்பகுதியில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று, இலங்கையில் பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, சுமார் 17,000 உயிர்களை அது காவு கொண்டது. நாடு முழுவதிலும் உள்ள குடும்பங்கள் தங்களது உறவினர்களின் இழப்புக்களுக்காக துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த நிலையில், ​​இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மற்றுமொரு துன்பத்தை எதிர்கொண்டது. இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் மரபுகளுக்கு நேரடியாக முரண்பட்ட ஒரு நடைமுறையான, தங்களது இறந்த உறவினர்களின் உடல்களின் கட்டாய தகனமே அதற்கான காரணமாகும்.

Black Coffee Films தயாரிப்பில் வெளியிடப்பட்டுள்ள “ஓட்டமாவடி”, சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், அரசாங்க பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆழமான நேர்காணல்கள் மூலம், குறித்த சர்ச்சைக்குரிய காலகட்டத்தை ஆழமாக ஆராய்ந்துள்ள ஆவணப்படமாகும்.

இந்தத் திரைப்படம் ஓட்டமாவடி எனும் தொலைதூர கிராமத்தின் பெயரைக் கொண்டதாக பெயரிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் கட்டாய தகனக் கொள்கையை மாற்றிய பின், அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட இடமாக இது விளங்குகின்றது.

Black Coffee Productions நிறுவனத்தின் முதலாவது தயாரிப்பான, “ஓட்டமாவடி” திரைப்படம், இலங்கையின் ஆவணப்படத் துறையில் ஒரு முக்கிய பங்களிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை திருந்துவைத்த ஜனாதிபதி

0

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான காலம் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மட்டக்களப்பு பூனானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை இன்று (20) மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து பல்கலைக்கழகத்தை மாணவர்களிடம் கையளித்த ஜனாதிபதி, அதனைப் பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

இதன்போது, பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் இலங்கையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேலும், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வையொட்டி நினைவு முத்திரை ஒன்றும் வெளியிடப்பட்டது.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

”1985 இல் ஹிஸ்புல்லாஹ்வை நான் முதன் முதலில் இளைஞர் சேவை மன்றத்தில் சந்தித்தேன். அவர் இன்று இந்த சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பல்கலைக்கழகம் நமது பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான அறிவைக்கொண்ட மக்களே நமது நாட்டிற்கு அவசியமாகும். அதனால் தான் இந்தப் பல்கலைக்கழகம் நாட்டுக்கு மிகவும் முக்கியமானது.

நமது நாட்டின் பிள்ளைகளுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அறிவை வழங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மிகவும் நன்றி. இப்பல்கலைக்கழகத்துடன் தற்போது கிழக்கு மாகாணத்தில் மூன்று பல்கலைக்கழகங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் அல்ல. இந்நிறுவனத்திற்கும் கிடைக்கும் நிதி சேமிக்கப்பட்டு, குறித்த நிதி இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் இலாபம் ஈட்டாத தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ளன.

ஹார்வர்ட், ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்களை இலாப நோக்கமற்ற பல்கலைக்கழகங்கள் என்று அழைக்கலாம். கொத்தலாவல பல்கலைக்கழகம், NSBM பசுமைப் பல்கலைக்கழகம், SLIIT நிறுவனம் போன்றவையும் இலாப நோக்கமற்றவை.

சிலர் இவற்றை பட்டங்களை விற்பனை செய்யும் கடைகள் என்று கூறினர். அப்படியானால், கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட், ஒக்ஸ்போட் பல்கலைகழகங்களும் பட்டங்களை விற்கும் கடைகளா? அந்த மனப்பான்மையால்தான் இந்நாட்டின் அரச பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சியுற்று வருகின்றன. எனினும், இவற்றை நாம் மேலும் மேம்படுத்த வேண்டும்.

அன்று இருந்தது போன்று இன்று பல்கலைக்கழகங்கள் இல்லை. இன்று பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் கல்வியை சீர்குலைக்கும் குழுக்கள் உள்ளன. அந்தக் குழுக்கள் ஒரு சர்வாதிகாரத்தைப் போல மாணவர்களைக் கையாளுகின்றன. இத்தகைய சூழலில் கற்பிக்கும் விரிவுரையாளர்களைப் பாராட்டுகிறேன்.

பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களை பட்டங்களை விற்கும் கடைகள் என்ற கேவலமான பேச்சுக்கு நாம் செவிசாய்க்கக் கூடாது. பிள்ளைகள் சுதந்திரமாக கல்வி கற்கும் வகையில் இந்நாட்டில் உள்ள பல்கலைக்கழக முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும். நாளை முதல் சமூக வலைதளங்களில் இதனைச் சொல்லி என்னைக் குறை கூறலாம். பல்கலைக்கழகத்தில் அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

பல்கலைக்கழகக் கட்டமைப்பில் இருந்து அச்சுறுத்தும் அரசியலை அகற்ற வேண்டும். பல்கலைக்கழகத்திற்குள் தங்களுக்கு விருப்பமான கற்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். நமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்குலையாமல் முறையான கல்வி நிறுவனங்களாக மாற வேண்டும்.

இப்பல்கலைக்கழகம் அபிவிருத்தியடைந்தால் ஏனைய பல்கலைக்கழக கட்டமைப்புகளும் அபிவிருத்தியடையும் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும் இது போன்ற பல பல்கலைக்கழகங்கள் இன்னும் உருவாகும் என்று எதிர்பார்க்கின்றேன்.

இந்நாட்டில் உயர்கல்விக்காக விசேட பணியை ஆற்றிய லலித் அத்துலத்முதலி பெயரில் கல்வி நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கவும் நாம் எதிர்பார்த்துள்ளோம். தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் உட்பட நான்கு கல்வி நிறுவனங்களை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

”இந்த பல்கலைக்கழகத்தை திறந்து வைக்க வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதனை நிர்மாணிக்க பல இடங்களை தேடினோம். இறுதியில் குறைந்த வருமானம் ஈட்டுவோர் அதிகளவில் வாழும் ஊவா, வட மத்திய, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க தீர்மானித்தோம். இந்த பல்கலைக்கழகம் மூன்று மாகாணங்களினதும் மக்களுக்கு பயனளிக்கும் என்று கருதுகிறேன்.

பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் 1,200 மாணவர்கள் தற்போதும் இங்கு கல்வி பயில்கின்றனர். இது ஒரு இனத்திற்காகவோ மதத்துக்காகவோ தனியாக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்ல. அனைத்து இன, மத மாணவர்களுக்கும் இங்கு இடமுண்டு.

நாட்டில் நல்ல பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அன்று எமது நாடு நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை கட்டியெழுப்பியதால் நாம் இலங்கையர் என்று உலகத்திற்கு பெருமிதமாக சொல்லிக்கொள்ள முடிகிறது.” என்று தெரிவித்தார்.

சர்வமதத் தலைவர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்களான பிரமித்த பண்டார தென்னகோன், சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியூதீன், ரவூப் ஹக்கீம், அலி சாஹிர் மவூலானா, பைசால் காசிம், ஜகத் சமரவிக்ரம, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் லால் ரத்னசேகர, பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.முபாரக், பதிவாளர் பீ.டீ.ஏ.ஹசன், விஞ்ஞான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தலைவர் ஹிராஸ் ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் சவூதி இராஜதந்திரிகளும், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பெருந்திரளான பிரதேச மக்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.