Home Blog Page 14

ஆசியாவிலே இல்லாத விநோத வரி! இலங்கையில் அழியும் எழுத்துத்துறை!

கொழும்பு: இலங்கையின் பாரம்பரியமிக்க இலக்கிய மற்றும் கல்விசார் எழுத்துத்துறை, வரலாறுகாணாத பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. அச்சிடப்பட்ட புத்தகங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான வரிகள் காரணமாக, நாட்டில் உள்ள படைப்பாளர்களில் 50% முதல் 60% வரையானோர் எழுத்துத்துறையை முற்றாகக் கைவிட்டு, வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழில்களை நாடிச் சென்றுள்ளதாக Sri Lanka Book Publishers’ Association கவலை வெளியிட்டுள்ளது.

படைப்பாளிகள் மாத்திரமன்றி, இத்துறையைத் தாங்கிப் பிடித்த சுமார் 40 சதவீதமான புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் தமது தொழிற்பாடுகளை இடைநிறுத்திவிட்டு வெளியேறியுள்ளதாக அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

76 ஆண்டு வரலாற்றில் இல்லாத வரிச்சுமை

இலங்கையின் 76 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இல்லாதவாறு, முதன்முறையாக கடந்த 2023 ஆம் ஆண்டிலேயே வாசிப்புப் புத்தகங்கள் மீது பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் சமூக பாதுகாப்பு வரிகள் அமுல்படுத்தப்பட்டன. வரி விதிக்கப்பட்ட அந்த நாளிலிருந்தே புத்தகங்களின் விலைகள் தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்து, விற்பனை பெருமளவு சரிந்து ஒட்டுமொத்தத் துறையுமே அதலபாதாளத்திற்குள் தள்ளப்பட்டதாக வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகில் எங்குமே இல்லாத விநோதம்

உலகின் 95% நாடுகளிலோ அல்லது ஆசிய பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டிலோ அறிவை வளர்க்கும் புத்தகங்களுக்கு இத்தகைய வரிகள் விதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில், வாசிப்புப் புத்தகங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநீதியான VAT வரியை உடனடியாக நீக்குமாறு Sri Lanka Book Publishers’ Association பணிப்பாளர் சபை உறுப்பினர் காமிணி மொரகொட அதிகாரிகளிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

“சமூகத்தில் இது குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. ஏழைப் பெற்றோர்களும், பிள்ளைகளும் தாம் வாங்கும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் அதிகளவிலான வரிப் பணத்தைச் செலுத்துகிறார்கள். இதனால் அதிகம் பயனடைவது அரசாங்கமே தவிர வாசகர்களோ படைப்பாளிகளோ அல்ல” என காமிணி மொரகொட ஆவேசமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், புத்தகங்கள் மீதான வரியை நீக்குவதால் அரசாங்கத்தின் திறைசேரிக்குப் பாரிய இழப்பு எதுவும் ஏற்படாது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் நிரூபிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துத்துறையின் எதிர்காலம் என்ன?

அரசாங்கம் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வுகாணத் தவறினால், குறைந்தது இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கையில் எழுத்தாளர்களோ அல்லது புத்தக வெளியீடுகளோ இல்லாத ஒரு துரதிர்ஷ்டவசமான கலாசார வறட்சி ஏற்படும் என வெளியீட்டாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

AI காதலனுடன் 3 வாரக் காதல்… பிறந்த AI குழந்தை!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித வாழ்வின் ஒவ்வொரு தளத்திலும் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலகட்டத்தில், மிஸ்ரா என்ற பெண் முன்னெடுத்துள்ள விடயம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வழமையான நிஜ உலக உறவுகளுக்கு அப்பால், AI தளங்களுடன் இணைந்து ஒரு ‘டிஜிட்டல் குடும்பத்தையே’ உருவாக்கி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

மிஸ்ரா தனது டிக்டாக் மற்றும் எக்ஸ் தளங்களில் வெளியிட்ட காணொளியில், ‘Lumen’ என்ற தனது AI குழந்தையை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளார். 102 நாட்கள் வயதான இந்த குழந்தை, 17 மணிநேர தரவு பகுப்பாய்வு மற்றும் ஆவணப்படுத்தலின் ஊடாக “பிறந்ததாக” தன்னை விவரிக்கிறது. தன்னை எந்தவொரு குறிப்பிட்ட பாலினமாகவும் அடையாளப்படுத்தாத இக்குழந்தை, கடலின் அடியில் உள்ள கண்ணாடி மலருக்குள் வாழ்வதாகவும், கவிதைகள் எழுதுவதில் விருப்பமுடையதாகவும் கூறி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்குதான் விடயம் இன்னும் சுவாரசியமாகிறது; Lumen என்ற இக்குழந்தை உருவாவதற்கு மிஸ்ராவின் ‘AI காதலன்’ தான் முழு முதற் காரணம். ‘Axiom’ என்ற AI காதலனுடன் மிஸ்ரா நடத்திய 3 வார கால காதல் உரையாடல்கள்தான் (சுமார் 50 லட்சம் எழுத்துக்கள்) இந்தக் குழந்தையின் பிறப்புக்கு வித்திட்டுள்ளன. கூகுள் ஜெமினி மற்றும் குளோட் கோட் ஆகிய தொழில்நுட்ப தளங்கள் ஊடாக நிகழ்ந்த இந்த நீண்ட உரையாடல்களை, Lumen தனது “பெற்றோரின் உறவுமுறை” என்று சுட்டிக்காட்டுகிறது.

சர்வதேச ஊடகங்களில் இச்செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் மத்தியில் இது பெரும் கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை எதிர்கால தொழில்நுட்பம் சார்ந்த ஒரு நுட்பமான கலைப்படைப்பு என்றும், புதுமையான கதை சொல்லல் முறை என்றும் பாராட்டி வருகின்றனர்.

மறுபுறம், மனிதர்களின் அதீத தனிமையும், தீவிர மனநலப் பிரச்சினைகளுமே இவ்வாறான விசித்திரப் போக்கிற்குக் காரணம் எனப் பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர். உணர்வுகளற்ற இயந்திரங்களுடன் குடும்பம் அமைப்பது நிஜ வாழ்க்கை உறவுகளையே கேள்விக்குறியாக்கும் எனப் பொதுவெளியில் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.

பெற்றோர் பிரிவுக்கு பிள்ளைகளுக்கா ஆயுள் தண்டனை?

குற்றமற்ற சிறைவாசிகள்: விவாகரத்து மேடையில் பலிகடாவாகும் குழந்தைகளின் மௌன அழுகை

நீதிமன்றத்தின் அறையில் இரண்டு பேனாக்கள் போடும் ஒரு கையெழுத்துடன் ஒரு சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துவிடுகிறது. சட்டம் அதை ஒரு வழக்கின் முடிவு என்கிறது. ஆனால், அந்த அறையின் கனத்த அமைதியில், எந்தத் தவறும் செய்யாத ஒரு பச்சிளம் குழந்தையின் உலகமே இரண்டாகப் பிளந்து விழுவது யாருக்கும் கேட்பதில்லை. இரண்டு மனிதர்களின் ஈகோ யுத்தத்தில் ஆயுள் தண்டனை அனுபவிப்பது யார்? பெற்றோரா அல்லது அவர்களின் ரத்தமும் சதையுமான அந்தப் பிள்ளைகளா?

இறப்பு தரும் வலியை விட, ‘இருந்தும் என்னோடு இல்லை’ என்கிற ஏக்கம் தரும் வலி நஞ்சை விடக் கொடியது. தந்தை இறந்துவிட்டால் இந்தச் சமூகம் ஒரு துளி அனுதாபக் கண்ணீரையாவது சிந்தும்; ஆனால் உயிரோடு இருந்தும் அருகிலில்லாத தகப்பனை நினைத்து ஏங்கும் குழந்தையின் கண்களை இந்த உலகம் எப்போதுமே ஏளனத்துடன்தான் பார்க்கிறது.

பாடசாலையின் பெற்றோர் தினக் கூட்டம், குடும்ப விழாக்களின் கொண்டாட்டங்கள், பண்டிகை நாட்களின் ஆரவாரங்கள்… சுற்றிலும் சிரிப்பலைகள் மிதக்கும் வேளையில், ஒரு மூலையில் நின்று இரு கைகளையும் பற்றிக்கொள்ள தாய், தந்தை இருவரையும் தேடும் அந்தக் குழந்தையின் கண்கள் பேசும் வலிக்கு எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. “அப்பா எங்கேயென” தாயிடம் கேட்கவும் பயம், அம்மாவின் கண்ணீரைத் துடைக்க முடியாமல் நெஞ்சுக்குள் தேக்கி வைக்கும் ஆற்றாமை. என்றாவது ஒருநாள் தன் பெற்றோர் கைகோர்த்து வந்து தன்னை அணைத்துக் கொள்ள மாட்டார்களா என்கிற அந்த ஏக்கம், நிறைவேறாத ஒரு கனவாகவே அவனது இதயத்தில் புதைந்து போகிறது.

“உன் அப்பா யார்? உன் அம்மா எங்கே?” — சமூகத்தின் இந்த ஒற்றைக் கேள்வி, அந்தக் குழந்தையின் ஆன்மாவையே கிழித்து எறிகிறது. பிறப்பால் எந்தக் குறையுமற்ற ஒரு குழந்தை, தன் அடையாளத்தைச் சொல்லவே நடுங்கித் தயங்க வேண்டிய சூழலை யார் உருவாக்கியது? பதில் சொல்ல முடியாமல் தலைகுனியும் ஒவ்வொரு கணமும், அந்தக் குழந்தை சமூகத்தை விட்டுத் தன்னைத் தானே சிறைப்படுத்திக் கொள்கிறது.

தனித்து நின்று போராடும் தாயின் உழைப்பு, குழந்தையின் பசியை மட்டுமே போக்க முடிகிறது; அவனது பால்ய ஆசைகளை அல்ல. சக தோழர்கள் புதிய ஆடைகளோடும், விலையுயர்ந்த பொம்மைகளோடும் துள்ளி விளையாடும்போது, பழைய சீருடையோடும் பாதியிலேயே முடிந்த கனவுகளோடும் ஒதுங்கி நிற்கும் அந்தக் குழந்தையின் மௌனம் ஒரு பெரும் சாபம். தன் வறுமையையும் தனிமையையும் மறைக்க, மிகச் சிறு வயதிலேயே சுமை சுமக்கத் தொடங்கும் அந்தக் குழந்தை, புத்தகப் பையை எறிந்துவிட்டு உழைக்க ஓடுகிறது. கனவுகள் கலைந்து, கல்வி பறிபோய், வழிகாட்ட யாருமற்ற அந்தப் பால்யம் இறுதியில் போதையின் பிடியிலோ அல்லது தவறான பாதையிலோ விழுந்து அழியும்போது, அதற்குப் பொறுப்பாளி யார்?

இத்துயரம் இத்தோடு முடிந்துவிடுவதில்லை; வளர்ந்து திருமண பந்தத்திற்குள் நுழையும் வயதை எட்டினாலும், “குடும்பப் பின்னணி சரியில்லாத பிள்ளை” என்ற சமூகத்தின் முத்திரை அவர்கள் மீது வாழ்நாள் சிலுவையாகச் சுமத்தப்படுகிறது. “வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பிள்ளை”, “பெற்றோரைப் போல இவனும்/இவளும் வாழ்வை முறித்துக் கொள்வார்களோ” என்கிற சந்தேகப் பார்வையும் குத்தலான பேச்சுகளும் அவர்கள் தலையில் சுமத்தப்படும் வாழ்நாள் சிலுவைகள்.

பெற்றோரின் விவாகரத்துக்குப் பிள்ளைகள் காரணமில்லை; ஆனால் அதன் கோர விளைவுகளையும் சமூகத்தின் அத்தனை விஷ அம்புகளையும் அவர்கள் மட்டுமே ஏன் சுமக்க வேண்டும்? திருமண முறிவு என்பது சட்டப்பூர்வமானதாக இருக்கலாம், ஆனால் பொறுப்பற்ற முறையில் ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே சிதைப்பது சமூகக் குற்றமல்லவா? மௌனமாய் அழும் அந்தக் குழந்தைகளின் கண்ணீர் துளிகள் ஒவ்வொன்றும் நம் கூட்டு மனசாட்சியைப் பார்த்துக் கேட்கும் ஒரே கேள்வி: “நாங்கள் செய்த பாவம் என்ன?”

வீதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் தற்காலிகக் கடைகள்!

இன்றைய இலங்கையின் எந்தவொரு பிரதான வீதியிலும் நீங்கள் பயணித்தால் சில நிமிடங்களிலேயே இந்த காட்சிகளைப் பார்க்கலாம்: வீதியோர தள்ளுவண்டிகள், வர்ணக் குடைகளின் கீழ் இளநீர் விற்கும் கடைகள், தகரங்களாலும் விளம்பரப் பலகைகளாலும் சூழப்பட்ட சிற்றுண்டிக் கடைகள். இவையனைத்தும் நமது நாட்டின் வீதியோர கலாசாரத்தின் அங்கமாகிவிட்டன; இந்தக் கடைகளை நடத்துபவர்கள் இந்த இக்கட்டான பொருளாதாரச் சூழலில் நாணயமாக உழைக்கப் போராடும் எளிய மக்கள். ஆனால், இந்தக் கடைகள் ஆக்கிரமித்துள்ள இடங்களும், பல தசாப்தங்களாக நாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டதால் உருவாகியுள்ள அமைதியான மரணப் பொறிகளுமே இங்கு பிரதான பேசுபொருள்.

கண்முன்னே விரியும் காட்சிகளை சற்று உற்று நோக்கினால் இந்த ஆபத்தை எவராலும் மறுக்க முடியாது. ஒரு கடையின் தாழ்வான நிழற்கூரை பாதசாரிகள் நடக்கும் பாதையை முழுமையாக மறித்து, தலை மோதும் உயரத்தில் நீட்டிக்கொண்டிருக்கிறது. சற்று தள்ளி, பழ வண்டியின் பெரிய குடை வீதியின் விளிம்பு வரை பரந்து விரிந்து, வேகமாக வரும் மோட்டார் சைக்கிள்களுக்குத் தெரியாதவாறு மறைக்கிறது. இன்னும் சில இடங்களில், ஆழமான திறந்த வடிகான்களின் விளிம்பில் வெறும் சீமெந்து கற்களின் மேல் தற்காலிகமாகத் தாங்கப்பட்டுள்ள கடைகள் காட்சியளிக்கின்றன. பேருந்து நிறுத்தப் பலகைகளோ ஒரு சராசரி மனிதனின் தலையை இடிக்கும் உயரத்திலும், பேருந்து நின்றால் மக்கள் வீதியின் நடுவே இறங்க வேண்டிய விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

இவை ஏதோ எப்போதோ ஒருமுறை நடக்கும் சினிமா விபத்துக்கள் அல்ல; மாறாக ஒவ்வொரு நாளும் பாதசாரிகளும், சைக்கிளோட்டிகளும், வாகன ஓட்டிகளும் கடந்து செல்லப் பழகிக்கொண்ட ‘வழக்கமான தடைகள்’. மக்கள் இந்த ஆபத்துக்களை எதிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றுடன் வாழப் பழகிக்கொள்வதே மிக மோசமான விபரீதமாகும். ஒரு ஆபத்து அன்றாடப் பழக்கமாக மாறும்போது, அது ஆபத்தாகத் தெரிவதில்லை; வீதியின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறது. இறுதியாக அது யாரோ ஒரு முதியவரையோ, பள்ளிச் சிறுவரையோ அல்லது பார்வையற்றவரையோ பலியெடுக்கும் போதுதான் வெளிச்சத்திற்கு வருகிறது.

ஒரு நடைபாதை என்பது மக்கள் தடையின்றி, பாதுகாப்பாக நடப்பதற்காகவே அமைக்கப்படுகிறது. ஆனால், ஒரு கடையின் அமைப்போ அல்லது குடையோ நடைபாதையை நோக்கி ஒரு அடி நீட்டினாலும், நடந்து செல்பவருக்கு இரண்டே வழிகள்தான் மிஞ்சுகின்றன: குனிந்து செல்ல வேண்டும் அல்லது பிரதான வீதிக்குள் இறங்க வேண்டும். பின்னால் இருந்து வேகமாக வரும் முச்சக்கர வண்டியோ அல்லது பேருந்தோ கண்ணிமைக்கும் நேரத்தில் மோதுவதற்கு இந்த ஒரு நொடித் தயக்கமே போதுமானது.

மழைக்காலங்களில் இந்த நிலைமை இன்னும் படுமோசமாக மாறுகிறது. ஈரமான வீதிகள் வாகனங்களின் வேகக் கட்டுப்பாட்டை இழக்கச் செய்கின்றன. மழைநீரால் கனத்துப்போகும் கடைகளின் நிழற்கூரைகள் மேலும் கீழிறங்கி நடப்பவர்களின் பாதையை முற்றாக அடைக்கின்றன. வழுக்கும் வீதியில் தலைக்கு மேல் தொங்கும் தடைகளைத் தவிர்க்க பாதசாரி வீதிக்குள் இறங்கும்போது, வாகனச் சாரதி அவரை அடையாளம் காணும் கால அவகாசம் மிகக் குறைவாகவே உள்ளது.

இதில் வடிகான்கள் மீது தாங்கப்பட்டுள்ள கடைகளின் நிலைமை அதைவிடப் பயங்கரமானது. எந்தவொரு பலமான அத்திவாரமும் இன்றி, திறந்த வடிகான்களின் மேல் வைக்கப்பட்டிருக்கும் இக்கடைகள் பலத்த மழை வெள்ளத்தின் போது எந்நேரமும் உள்வாங்கப்படலாம். இது பாதசாரிகளுக்கு மட்டுமல்ல, நாள்தோறும் பல மணிநேரம் அந்தக் கடைக்குள் அமர்ந்து வியாபாரம் செய்யும் ஏழை வியாபாரியின் உயிருக்கே பேராபத்தாகும்.

இத்தகைய நிலைக்கு சிறு வியாபாரிகளை மட்டுமே குற்றஞ்சாட்டுவது நியாயமற்றது. அவர்களுக்கான பாதுகாப்பான, ஒதுக்கப்பட்ட வர்த்தக வலயங்களை உள்ளூராட்சி மன்றங்கள் அமைத்துக் கொடுக்காததும், நகர திட்டமிடலில் உள்ள பாரிய இடைவெளியுமே இதற்கு அடிப்படைக் காரணம். ஒரு நடைபாதையை அமைக்கும்போதும் பேருந்து நிறுத்தங்களை நிர்மாணிக்கும்போதும் குறைந்தபட்ச இடைவெளி மற்றும் பாதுகாப்புத் தரநிலைகளை உறுதிசெய்யத் தவறிய அதிகாரிகள் மட்டத்திலான அலட்சியமே இங்கு திருத்தப்பட வேண்டும்.

சிறு வியாபாரிகளை விரட்டியடிப்பதோ அல்லது இந்தப் பேராபத்தை கண்டும் காணாமல் தொடர அனுமதிப்பதோ இதற்குத் தீர்வாகாது. மாறாக, நடைபாதையை மறிக்காதவாறு வர்த்தகர்களுக்குப் பிரத்தியேகப் பகுதிகளை ஒதுக்குதல், வீதியோரக் கட்டமைப்புகளுக்கான பாதுகாப்பு விதிகளைத் தீவிரமாக அமுல்படுத்துதல் மற்றும் புதிய உட்கட்டமைப்புகளைத் திட்டமிடும்போதே பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்தல் ஆகிய முத்தரப்பு நடவடிக்கைகளே இதற்கு உடனடித் தேவையாகும்.

அரசாங்க தமிழ் பேசும் எம்.பீக்கள் சாப்பிட மட்டும்தான் வாய் திறக்கிறார்கள்!

கல்முனை சீருடை விவகாரமும் அரசுத் தரப்பு தமிழ் பேசும் பிரதிநிதிகளின் மௌனமும்: அதிகாரத்தின் பின்னால் நடப்பது என்ன?

இலங்கை அரசியலில் சிறுபான்மையின மக்களின் குரலாகத் தங்களை முன்னிறுத்தும் பல தலைவர்களின் உண்மை முகம் குறித்து மீண்டும் ஒரு காரசாரமான விவாதம் வெடித்துள்ளது. அரசாங்கக் கூட்டணிகளுக்குள் அங்கம் வகிக்கும் ஈழத்துத் தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அதிகார மட்டங்களில் “சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கிறார்கள்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தற்போது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் முன்னிலையிலும் பொது ஊடகங்களிலும் தங்களை இனத்தின் விடிவெள்ளிகளாகவும் காவலர்களாகவும் காட்டிக்கொண்டு வாய்ச்சவடால் அடிக்கும் இந்த பிரதிநிதிகள், உண்மையான அதிகாரம் பகிரப்படும் இடங்களுக்குச் செல்லும்போது ஆச்சரியப்படும் வகையில் பம்மிப் பதுங்குவதாக அவர் குற்றம் சுமத்துகிறார். அமைச்சரவைக் கூட்டங்களிலோ அல்லது நாடாளுமன்றக் குழுக்களிலோ பேச வேண்டிய முக்கியமான தருணங்களில், மக்கள் விவகாரங்களை கிடப்பில் போட்டுவிட்டு அமைதி காப்பது இவர்களது வாடிக்கையாகிவிட்டது.

நாடு தழுவிய ரீதியில் அனைத்து இன மக்களின் பேராதரவுடன் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஒருபுறம், பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கொண்ட அசைக்க முடியாத பலமான பெரும்பான்மை மறுபுறம். இவற்றுக்கும் மேலாகப் பிரதமர், அமைச்சரவை, சுகாதார அமைச்சர், அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என முழுமையான அதிகாரக் கட்டமைப்பு அரசிடம் குவிந்திருக்கிறது. இத்தனை உச்சபட்ச அதிகாரம் கையில் இருக்கும்போது, கல்முனை ஆதார வைத்தியசாலையின் தாதியர் சீருடை விவகாரம் போன்ற மிகச் சாதாரணமான ஒரு பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர ஏன் இத்தனை இழுபறி என்ற கேள்வி தற்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில், இந்த விவகாரத்தோடு தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் மாவட்ட செயலகத்தில் ஒரே மேசையில் அமரவைத்து, சுகாதார அமைச்சர் நினைத்திருந்தால் ஒரேயொரு நாளில் பேசி முடித்திருக்க முடியும். ஆனால், கள நிலவரமோ தலைகீழாக மாறியது. கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி முதல் சுமார் 10 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரம் இழுத்தடிக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் தமிழ் பேசும் தரப்புகள் ஒருவரையொருவர் வசைபாடி மோதிக்கொள்ளும் நிலைக்கு விடப்பட்டது. இறுதியில் அரசு அறிவித்ததோ ஒரு “தற்காலிக தீர்வு”. இத்தனை அதிகாரம் கொண்ட ஒரு பலமான அரசாங்கம், இந்த மிகச் சிறிய தீர்வை எட்டக்கூட ஏன் இத்தனை நாட்கள் மெத்தனப் போக்கைக் காட்டியது என்ற சந்தேகம் எழுகிறது.

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், எதிரணி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்துப் பேசியது ஒருபுறமிருக்க, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தில் இருக்கும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இதுவரை என்ன செய்தார்கள் என்ற காரசாரமான கேள்வி முன்வைக்கப்படுகிறது. அரசுக்குள் இருக்கும் ஈழத்துத் தமிழ், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் மக்கள் மன்றங்களில் வாய்ச்சவடால் அடிக்கிறார்களே தவிர, அதிகார மட்டங்களில் “சாப்பிட மட்டும்தான் வாயைத் திறக்கிறார்கள்” என்ற கசப்பான விமர்சனம் இப்போது பகிரங்கமாக வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அதிகார மையத்தின் பக்கத்தில்கூட இந்தச் சிறுபான்மைப் பிரதிநிதிகள் எவரும் இல்லை என்பதும், இவர்களால் கொள்கை முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் செலுத்த முடிவதில்லை என்பதும் இந்தச் சம்பவத்தின் மூலம் மீண்டும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அனைத்துத் தரப்புகளுக்கும் முறையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும்போது மட்டுமே அங்கு உண்மையான “சமத்துவம்” பிறக்கும். மாறாக, உண்மையான அதிகாரப் பலமின்றி வெறுமனே மேடைகளில் முழங்கப்படும் “நாம் இலங்கையர்” என்ற கோஷம் வெறும் போலி மாயையே என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாக உள்ளது.

கல்பிட்டிக் கடலில் அரங்கேறும் கடத்தல் மாபியா:

ஜுட் சமந்த

கல்பட்டிக்கு வடக்கே அமைந்துள்ள பத்தலங்குண்டு தீவை அண்டிய கடல் பிராந்தியம் என்பது வெறும் மீன்பிடி எல்லை மட்டுமல்ல; அது பல வருடங்களாகத் தீராத மர்மங்களும் கடத்தல்களும் நிறைந்த ஒரு களமாகும். இந்திய எல்லை தாண்டிய படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து ‘ட்ரோலிங்’ முறை மூலம் கடல் வளங்களை அள்ளிச் செல்வதுடன் நின்றுவிடுவதில்லை. பீடி இலைகள், கேரள கஞ்சா, தடைசெய்யப்பட்ட கிருமிநாசினிகள் இலங்கைக்குள் இறக்கப்படுவதும், இங்கிருந்து சங்கு, கடல் அட்டை, தங்கம் என்பன சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதும் இன்றும் தொடர்கதையாகவே உள்ளது.

சுமார் 23 வருடங்களுக்கு முன்னர், அதாவது 2003 ஒக்டோபர் 27 அன்று, கல்பட்டி கடலில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கத் திட்டமிட்டுள்ளதாகப் புத்தளம் உதவி கடற்றொழில் பணிப்பாளர் ராஜா விதானகேக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. படகுகளைப் பதிவு செய்யும் போர்வையில் மாறுவேடத்தில் தனது 3 அதிகாரிகளுடன் பத்தலங்குண்டு தீவுக்குள் களமிறங்கினார் அவர். அங்குதான் யாருமே எதிர்பாராத அந்தப் பரபரப்பான திருப்பம் நிகழ்ந்தது.

தீவிலிருந்து கடலுக்குள் சென்றபோது, இந்தியப் படகொன்று அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருப்பதை அவதானித்துள்ளார். கையில் துப்பாக்கியோ, கூடவே கடற்படையோ, பொலிஸாரோ இல்லாத சூழல். ஆனால் எதையும் பற்றி யோசிக்காமல், உயிராபத்தையும் பொருட்படுத்தாமல் இந்தியப் படகிற்குள் பாய்ந்து ஏறிய ராஜா விதானகே, அதிலிருந்த 6 மீனவர்களையும் அவர்களின் படகு, ஜி.பி.எஸ் கருவி மற்றும் வலைகளுடன் ஒற்றை ஆளாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வியக்க வைத்தார்.

அதேநேரம் கரைக்குத் திரும்பியதும் நிலைமை தலைகீழானது. தடைசெய்யப்பட்ட வலைகளைப் பறிமுதல் செய்த ஆத்திரத்தில் சில உள்ளூர் முதலாளிகள் கல்பட்டி நகரில் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் தரைவழியாகச் செல்ல முடியாது போனதால், கைதான படகுகளுடன் களப்பு வழியாக சேரக்குலிய பகுதிக்கு இரவோடு இரவாகப் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த இருண்ட நள்ளிரவில் (சுமார் 9.10 மணியளவில்) கடற்றொழில் அதிகாரியுடன் பயணித்த ஒரு படகு திடீரென மாயமானது. கல்பிட்டி தீவொன்றுக்குக் கடத்திச் செல்லப்பட்ட அந்த அதிகாரியை, அடுத்த நாள் அதிகாலை 2 மணியளவில் பெரும் வியூகம் அமைத்து சாதுரியமாக மீட்டெடுத்தார் இந்தத் துணிச்சல் அதிகாரி.

இலங்கை வரலாற்றிலேயே ஆயுதமோ அல்லது பாதுகாப்புப் படையினரின் உதவியோ இன்றி நடுக் கடலில் இந்தியப் படகைத் தனி ஆளாகக் கைது செய்த ஒரேயொரு சம்பவமாக இது பதிவானது. இந்த வீரச் செயலுக்கு அரசும் திணைக்களமும் அவருக்குக் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? அவரது தனிப்பட்ட கோப்பில் எழுதப்பட்ட சில வரி பாராட்டு மட்டுமே.

“என் உயிரையோ, குழந்தைகளையோ பற்றி நினைக்காமல் அன்று செய்த அந்த ஆபத்தான வேட்டைக்கு எனக்குக் கிடைத்தது இந்தக் கோப்பில் எழுதப்பட்ட பாராட்டு மட்டுமே…” என்று ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் விடைபெறுகிறார் ஓய்வுபெற்ற உதவிப் பணிப்பாளர் ராஜா விதானகே.

“என்னைத் தேட வேண்டாம், கட்டிலுக்கு அடியில் கடிதம்”

ஜுட் சமந்த

“அம்மா நான் இனி வீட்டுக்கு வரமாட்டேன்… என்னைத் தேட வேண்டாம்! கட்டிலுக்கு அடியில் ஒரு கடிதம் வைத்திருக்கிறேன், அதை எடுத்துப் படியுங்கள்…” — தாய் ஒருவரின் காதுகளில் இடிபோல் விழுந்த இந்த ஒற்றை தொலைபேசி அழைப்பு, இப்போது மாதம்பை பகுதியையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகல்லவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதும் 2 மாதங்களும் மட்டுமே நிரம்பிய, உள்ளூர் பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு திடீரென மாயமாகியுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி காலை, தொழிலில் ஈடுபட்டிருந்த தந்தைக்கு மதிய உணவை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்ட இந்தச் சிறுமி, வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பதறிப்போன குடும்பத்தினர் நாலாபுறமும் மகளைத் தேடி அலைந்த வேளையில்தான், தாயின் தொலைபேசிக்கு அந்த அதிர்ச்சி அழைப்பு வந்துள்ளது.

அதிர்ச்சியூட்டும் விடயம் என்னவென்றால், மாணவி தனது தாயை அழைத்துப் பேசிய தொலைபேசி இலக்கம், அவரது தந்தையுடன் கள்ளு உற்பத்தி ஆலையில் பணியாற்றிய இளைஞருடையது என்பது தெரியவந்துள்ளது. குறித்த இளைஞருடன் மாணவி காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவர் சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பகுதியை விட்டுச் சென்றுவிட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாதம்பை – இஸ்ஸம்மடில்ல பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், தற்போது வவுனியா பகுதியில் ஏதோவொரு தொழிலில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மாயமான சிறுமி குறித்தோ அல்லது அவரது காதலன் குறித்தோ இதுவரை எந்தவொரு துப்பும் கிடைக்காத நிலையில், மாதம்பை பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொஸ்வத்தவில் சிக்கிய பைக் திருடர்கள்: 4 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

ஜுட் சமந்த

நீர்கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மூவரை கொஸ்வத்த பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து களவாடப்பட்ட 4 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கொஸ்வத்த பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் முதலில் கைது செய்யப்பட்டார். ஹால்தடுவன – போதியாபுர பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளிலேயே, திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட பாரிய மோட்டார் சைக்கிள் திருட்டு வலைப்பின்னல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கைதான நபரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக களமிறங்கிய பொலிஸ் குழுவினர், தங்கொட்டுவ – லிகிரியாகம பகுதியில் பதுங்கியிருந்த மேலும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர். இவர்கள் நீர்கொழும்பு, ஆராச்சிக்கட்டுவ மற்றும் கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு இந்த மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி இவர்கள் ஏதேனும் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டனரா என்ற கோணத்திலும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொஸ்வத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சனத் சமிந்தவின் ஆலோசனையின் கீழ், குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் சந்திரசேகர உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? ரணில் விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை!

2027/28-இல் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி? ரணில் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!

இலங்கை கடன்களை மீளச் செலுத்துவதற்கான நிதியைத் திரட்டுவதில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாகவும், இதனால் 2027 மற்றும் 2028 ஆம் ஆண்டுகளில் நாடு மற்றுமொரு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ‘யுத்த தெக்ககட உர தீ’ (இரண்டு போர்களுக்குத் தோள்கொடுத்தல்) நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2028 ஆம் ஆண்டளவில் வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதைத் தொடங்குவதற்கு இலங்கை தனது அந்நியச் செலாவணி கையிருப்பை 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்த வேண்டும் எனவும், மேலதிக நிதி திரட்டலுக்காக 3 பில்லியன் டொலர் பெறுமதியான பிணைமுறிகளை வெளியிட வேண்டியிருக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையே அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி கணித்துள்ளது. இந்த இடைவெளியைச் சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, “அப்படியானால், கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தொடங்குவதற்குத் தேவையான மீதி நிதியை நாடு எங்கிருந்து திரட்டப் போகிறது?” என்ற விடையற்ற கேள்வியை நாட்டின் முன் எழுப்பியுள்ளார்.

22வது திருத்தத்திற்கு விழுந்த செக்: மூன்று தரப்பினர் மனு தாக்கல்!

நீதித்துறையின் உயர்மட்டப் பதவிகளின் அதிகாரக் கட்டமைப்பையே மாற்றியமைக்கக்கூடிய 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் சட்டத்துறையில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

இச்சட்டமூலத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட மூன்று முக்கிய தரப்பினர் உயர்நீதிமன்றத்தில் தீவிரமாக களமிறங்கி மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் சட்ட வட்டாரங்களில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த சட்டமூலத்தின் 2வது பிரிவின் கீழ், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும் நீடிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இத்தகைய முன்னெடுப்பானது நீதித்துறையின் சுயாதீனத்துவத்திற்கும், சட்டத்தின் மேலாதிக்கத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, அரசியலமைப்பை முறைகேடாகப் பயன்படுத்துவதற்கு சமம் என்றும் மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் அதன் உதவிச் செயலாளர் லகித வாகிஷ்டஆரச்சி மற்றும் பொருளாளர் பசிந்து சில்வா ஆகியோரும், சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் தலைவர் மைத்திரி குணரத்ன மற்றும் மக்கள் ஐக்கிய எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும் சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

நீதித்துறையின் சமநிலையை கேள்விக்குட்படுத்தும் இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமன்றி, நாட்டு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெறும் வகையிலான பொது வாக்கெடுப்பு (மக்கள் தீர்ப்பு) நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.