Home Blog Page 13

மொனராகலையில் கோர விபத்து: அதிகாலையில் 5 பேர் பரிதாப மரணம்!

மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்று (21) அதிகாலை இடம்பெற்ற அதிர்ச்சி தரும் வீதி விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த கோர மோதல் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெல்லவாய – மொனராகலை பிரதான வீதியிலுள்ள களு பாலத்திற்கு அருகில், வெல்லவாய நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் எதிரே வந்த உழவு இயந்திரம் (Tractor) ஒன்றும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற தருணத்தில் உழவு இயந்திரத்தின் பின்பக்க பெட்டியில் 10 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோதலின் தீவிரத்தில் 8 பேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு மொனராகலை ஆதார வைத்தியசாலைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 5 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் தொதம்கஸ்லந்த, புத்தள மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்த 21, 26, 31, 55 மற்றும் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த ஏனைய மூவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உழவு இயந்திரத்தின் சாரதி ஆகிய இருவரையும் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். விபத்துக்கான பின்னணி மற்றும் கவனக்குறைவு குறித்து மொனராகலை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பம்! 3 நாட்கள் தேசிய துக்கம்!

இலங்கை இசை வரலாற்றின் அழியாத பொக்கிஷமும், பல தசாப்தங்களாகத் தன் வசீகரக் குரலால் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களின் இதயங்களை ஆட்டிப்படைத்த மூத்த இசைக்கலைஞருமான நந்தா மாலினி நேற்று (20) தனது 82 ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் ஏற்பட்ட இந்த எதிர்பாராத இழப்பு ஒட்டுமொத்த தேசத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இசைத்துறையில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில், இலங்கையில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுவதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தத் துக்க தினங்களை முன்னிட்டு, நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இன்று (ஆகஸ்ட் 21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் அரச கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

இது தொடர்பான விசேட வழிகாட்டல்கள் அடங்கிய 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை இன்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டாரவின் கையொப்பத்துடன் இச்சுற்றறிக்கை அனைத்து அரச திணைக்களங்களுக்கும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் என அனைத்து நிர்வாகப் பிரிவினருக்கும் இந்த உத்தரவை உரிய முறையில் நடைமுறைப்படுத்துமாறு தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்பிட்டி – தலவில கடற்கரையில் நள்ளிரவில் சிக்கிய மர்ம மூட்டைகள்!

ஜுட் சமந்த

கற்பிட்டி கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் நோக்கில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், தலவில கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை பாரிய கடத்தல் முயற்சி ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு வேளையில் மர்மமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வர்த்தகப் பொருட்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துத் தொகையை கடற்படையினர் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

தலவில கடற்படை முகாமின் உத்தியோகத்தர்கள் இன்று (20) அதிகாலை 1.00 மணியளவில் கடற்கரையோரப் பகுதியில் விசேட ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, சந்தேகத்திற்கிடமான முறையில் கரையில் குவிக்கப்பட்டிருந்த பல பொலித்தீன் உறைகளைக் கண்டறிந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், திட்டமிட்ட கடத்தல் நடவடிக்கை அம்பலமானது.

இதன்போது, 12 பொலித்தீன் உறைகளில் பொதி செய்யப்பட்டிருந்த 591 கிலோகிராம் உலர் இஞ்சி மற்றும் 3 உறைகளில் அடைக்கப்பட்டிருந்த 75 கிலோகிராம் ஏலக்காய்த் என்பன கைப்பற்றப்பட்டன. அத்துடன், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 100 மில்லி லீற்றர் கொள்ளளவைக் கொண்ட 200 ‘Tafgon’ பூச்சிக்கொல்லி திரவ போத்தல்களும், 100 ‘Leokem’ போத்தல்களும் கடற்படையினரால் முழுமையாகப் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்தியாவிலிருந்து சர்வதேச கடல் எல்லையைக் கடந்து படகுகள் மூலம் இந்த பொருட்கள் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காகவே கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இக்கடத்தல் வலையமைப்பின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்யும் நோக்கில் கற்பிட்டி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிலாபம் கடற்பரப்பில் படகு கவிழ்ந்து முதியவர் பலி!

ஜுட் சமந்த

வழமை போல தமது வாழ்வாதாரத்திற்காக அதிகாலை இருளோடு இருளாக கடலுக்குப் புறப்பட்ட மீனவர்களுக்கு எதிர்பாராத விதமாக பாரிய அனர்த்தம் ஒன்று காத்திருந்தது. சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகாமையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சிறிய ரகப் படகொன்று திடீரெனக் கவிழ்ந்து கடலில் மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) அதிகாலை 5.00 மணியளவில் தொழிலுக்காக ஆழ்கடலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து இடம்பெற்றுள்ளது. சிலாபம் – சேதவத்த பகுதியைச் சேர்ந்த 67 வயதான திசாநாயக்ககே ஜயரத்ன என்ற முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அதிகாலை வேளையில் கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இவ்விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்து இருவரும் கடலில் தத்தளித்த நிலையில், துரிதமாக செயற்பட்டு ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். காப்பாற்றப்பட்ட குறித்த மீனவர் காயங்களுடன் உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனவிலுந்தாவ பறவைகள் சரணாலயத்தில் பயங்கர தீ விபத்து!

ஜுட் சமந்த

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ஈரநில வலயமாகவும் பறவைகளின் புகலிடமாகவும் திகழும் ஆனவிலுந்தாவ ராம்சார் சரணாலயப் பகுதியில் நேற்று (19) இரவு திடீரென பாரிய தீ பரவல் ஏற்பட்டது. இரவு வேளையில் மளமளவெனப் பரவிய இந்தத் தீயானது சரணாலயத்தின் தாவரப் பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியதை அடுத்து பிரதேசத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

தீயின் வேகம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஆராச்சிக்கட்டுவ பொலிஸார், சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவு வாகனங்கள் மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் நீர் பவுசர்களைப் பயன்படுத்தி பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். பல மணிநேர இடைவிடாத முயற்சிக்குப் பின்னர் அதிகாலை 2.00 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

கடந்த காலங்களில் தாக்கிய ‘டித்வா’ சூறாவளியின் போது சரணாலயத்திற்குள் உள்ள ஆனவிலுந்தாவ மற்றும் பிங்கட்டிய குளங்களின் கரைகள் உடைந்து சேதமடைந்திருந்தன. இதனால் குளங்களில் தண்ணீர் தேங்காமல் நிலவிய வறட்சியும், அப்பகுதியில் வீசிய கடும் காற்றுமே தீ மிக வேகமாகப் பரவுவதற்கு பிரதான காரணமாக அமைந்ததாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச ராம்சார் ஈரநிலமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட 1393 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த இயற்கைச் சரணாலயத்தில், இத் தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மற்றும் விலங்கின சேதங்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கல்முனை சர்ச்சை: தற்காலிக இடமாற்றம் தீர்வல்ல; கொள்கை முடிவே தேவை!

தற்காலிக தீர்வுகளுக்குப்பதிலாக கொள்கை ரீதியான முடிவு அவசியம் – ரவூப் ஹக்கீம் வலியுறுத்து

நேற்றைய (19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக இடமாற்றங்களை வழங்காமல் சுற்றறிக்கைத் திருத்தங்களூடாக அரசாங்கம் உடனடியாக கொள்கை ரீதியான நிலையான தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அவர் தனதுரையில், ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்ததைப்போன்று, எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அமைச்சரைச் சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்ததாகத் தெரிவித்தார்.

அச்சந்திப்பின் போது, இந்த இடமாற்றம் என்பது தற்காலிகமானது தான். இது நிரந்தரத் தீர்வல்ல என்று அமைச்சர் கூறியிருந்த போதிலும், நாங்களும் நண்பர் ஆதம்பாவா போன்றவர்களும் எதிர்பார்ப்பது என்னவென்றால், இச்சீருடை விவகாரத்தில் முஸ்லிம் தாதி உதவியாளர்கள் மாத்திரமல்ல, சுகாதாரச் சேவையில் பணியாற்றுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் கலாசார அடையாளத்தைப் பேணுகின்ற அடிப்படையில் ஆடை அணிந்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டுமென்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறதா? என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

ஏனென்றால், இது தான் இன்று இச்சிக்கலுக்கு மூலக்காரணமாக இருக்கிறது எனச்சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் பக்கத்திலுருக்கின்ற நியாயத்தை ஏற்றுக்கொண்டு, தாதி உதவியாளர்கள் மாத்திரமல்லாது, அரசு சேவையில் அனைத்திடங்களிலும் சீருடைகள் சம்பந்தமான சுற்றறிக்கைகளுக்கமைவாகவும் கலாசார சமய ஏற்பாடுகளுக்கமைவாகவும் ஆடை அணிந்து வருவதற்கு தகுந்த துறைகளில் பாரிய பாதிப்பில்லாத விவகாரங்களுக்கு இடமளிப்போம் என்ற கொள்கை ரீதியான முடிவை அரசாங்கம் எடுத்து விட்டது என்ற செய்தியையே எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

அத்துடன், சமூக வலைத்தளங்களின் கருத்துப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது, இச்சிக்கலைத் தொடர்ந்து வைத்திருப்பது நாகரிகமானதல்ல. ஆபத்தானது என்றும் தெரிவித்த அவர், அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் “முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்” என்று கூறியதன் பின்னணியை விளக்கினார்.

சுகாதார சேவையில் உள்ளூர் நிர்வாகம் என்ற முள்ளால் உருவான பிரச்சினையை, அரச மேலிடம் என்ற அடுத்த முள்ளைப் பயன்படுத்தித்தான் எடுக்க வேண்டுமென்றும், அரசாங்கத்தின் தலையீடு இதனை முளையிலேயே கிள்ளியெறிவதாக இருக்க வேண்டும். சுற்றறிக்கையிலுள்ள குறைபாடுகளை நீக்கக் கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டோம் என அறிவிப்பது, சில நாட்கள் தாமதமானாலும் பதற்றத்தைத் தணிப்பதற்கு அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 2019ம் ஆண்டின் 13ம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையைச்சுட்டிக்காட்டி பேசினார்.

இச்சுற்றறிக்கை சுகாதாரத்துறைக்கும் பொருந்தக்கூடிய மேலதிகச் சுற்றறிக்கை என்றும், பொதுச்சேவையின் கண்ணியத்தைப் பேணும் வகையில் அதிகாரிகள் எவ்வாறான கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டுமென்பது அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பொதுப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு காதுகள் தவிர்த்து முகத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஆடை இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உட்பிரிவு 4-இல் குறிப்பிட்டவாறு ஆடை வழக்கங்களின் போது கலாசாரத்திற்கமைவாக மேலதிக ஆடைகளை அணிய அனுமதியுண்டு என்பதையும் நினைவூட்டினார்.

2022 இல் இச்சுற்றறிக்கையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தித்தான் கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் இந்த நெருக்கடியை உருவாக்கியுள்ளதென்பது மிகத்தெளிவான விடயம். பழைய சுற்றறிக்கையை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து அதை இரத்துச் செய்தாலே இத்தகைய பாரிய குழப்பத்தைத் தவிர்க்க முடியுமென்றும் தெரிவித்தார்.

மேலும், கல்முனையில் ஆங்காங்கே இன முரண்பாடுகள் இருந்தாலும், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் ரமலான் காலத்தில் முஸ்லிம்கள் கூட்டாக நோன்பு திறப்பதற்கும், அனைத்தின சகோதரர்களும் சேர்ந்து நோன்பு திறப்பதற்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்ததையும், தொழுகைக்கான அறையை ஒதுக்கீடு செய்திருந்ததையும் பாராட்டி வரவேற்பதாகக் கூறினார்.

குற்றங்களை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல் தவறைத் திருத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், சுகாதார ஊழியர்களைப் பயன்படுத்தி வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்வதும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதும் ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய விடயமாகும் என்றார்.

யார் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை விட, சேவைக்கு வந்து ஓரிரு நாட்களிலேயே பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்த உதவியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

பொதுச்சேவைக்குள் அனைத்தினங்களையும் உள்வாங்கும் வகையில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு வெறும் 32 சதவீதமாக மிகக்குறைவாகவுள்ளது. ஆடைத்தொழிற்சாலைகள் இல்லையென்றால் இது இன்னும் குறைவாகிவிடும் என்றும் கூறினார்.

இது நேபாளத்தை விடக்குறைவு என்றும், நம்மை விடக் குறைவாக பாகிஸ்தான் மட்டுமே உள்ளது. இது பொருளாதாரத்திற்குப் பாதிப்பானது எனப்பொருளாதார வல்லுநர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள பெண் தொழிலாளர்களில் பௌத்தர்கள் 83 சதவீதமாகவும், இந்துக்கள் 10.6 சதவீதமாகவுமுள்ள நிலையில், முஸ்லிம்கள் வெறும் 4.3 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், அவர்களும் பெரும்பாலும் கல்வித்துறையில் ஆசிரியர்களாக பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதுதான் முஸ்லிம்கள் தாதியர்துறைக்கு வரத்தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் பணி புரியும் பெண் ஊழியர்கள் தங்களது தலையை மூடி ஹிஜாப் அணிந்து ஆடை அணிவதை, அங்கிருக்கும் வைத்திய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அவர்களை அங்கனமே பின்பற்ற அனுமதித்து வருகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனால், அதே ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் வண்டிகளுக்குள்ளேயே தங்களது தலையை மூடியிருக்கும் ஹிஜாபைக் கழற்றி விட்டு வேறு வைத்தியசாலைகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும், இத்தகைய பயத்திலும் பீதியிலும் தான் அவர்கள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலைக்குரிய நிலைமையையும் அவர் அம்பலப்படுத்தினார்.

நேற்றைய தினம் தங்களைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்த சுகாதார அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்விவகாரத்தில் வெறும் தற்காலிகமான நடவடிக்கைகளை எடுத்து “சீலைக்கு மேலே சொறிகிறது” எனப்பொருள் கொள்ளாத வகையில், உண்மையிலேயே நிலையான தீர்வைத்தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை வெளிப்படையாகச்சொல்ல வேண்டுமெனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

ஈரானுக்கு உதவும் நாடுகளுக்குப் பேரழிவு: ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

உலகளாவிய பொருளாதார ஒழுங்கையே புரட்டிப்போடும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Truth Social பக்கத்தில் அதிர்வூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஈரானுடன் எவ்வகையிலேனும் வணிகத் தொடர்புகளைப் பேணும் அல்லது அந்நாட்டுக்கு நிதி மற்றும் வர்த்தக வழிகளில் உயிர்நாடியாக இருக்கும் எந்தவொரு நாடும் “மிகப் பாரிய பொருளாதார விளைவுகளை” எதிர்கொள்ள நேரிடும் என அவர் தனது பதிவில் வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலினால் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மோதலில், அறிவிக்கப்பட்டிருந்த 60 நாள் போர்நிறுத்த உடன்படிக்கை எவ்வித இராஜதந்திர தீர்வுமின்றி முடிவுக்கு வந்துள்ள நிலையிலேயே இந்த அதிரடி நகர்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவுடன் முறையான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஈரான் தவறிவிட்டதால், ஒரு நாட்டின் மீது திணிக்கப்படும் வரலாற்றின் மிகக் கடுமையான “பொருளாதார டி-டே” (Economic D-Day) தாக்குதலைத் தாம் தொடங்குவதாக ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நின்றுவிடாமல், கள்ள எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றங்கள், நாணய மாற்று நிலையங்கள், கப்பல் பதிவுகள் மற்றும் போலி நிறுவனங்களின் மறைமுக வர்த்தகங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “நீங்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரானிய நிறுவனங்கள் நீண்டகாலமாக துபாயின் நிதி அமைப்பைப் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மைய ஏவுகணை அச்சுறுத்தலைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஈரானுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் முறித்துக்கொள்வதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ஈரானின் பிரதான எண்ணெய் கொள்வனவாளரான சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுக அழுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அமெரிக்கத் திறைசேரி திணைக்களம் முன்னெடுத்து வரும் ‘Operation Economic Fury’ திட்டத்தின் விரிவாக்கமாக, உலகம் இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரத் தனிமைப்படுத்தல் ஈரானை நோக்கி கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகிறது.

இதேவேளை, உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) சுமார் 20% கொண்டு செல்லப்படும் ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால், சர்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் விண்ணை முட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இந்த யுத்தமானது உலகப் பொருளாதாரத்தையும் நுகர்வோரையும் எந்தளவு தூரம் பாதிக்கப்போகிறது என்ற பெரும் அச்சம் சர்வதேச அரங்கில் தற்போது எழுந்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முடங்கும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

இன்று (20) முதல் நாடு தழுவிய ரீதியில் அனைத்து டெங்கு கட்டுப்பாட்டுக் கடமைகளில் இருந்தும் விலகுவதற்கு இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தின் சிரேஷ்ட சுகாதார வைத்திய அதிகாரியை தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று (19) இரவு கூடிய தமது சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் பிரதான செயலாளர் சமில் முத்துக்குட குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு மேலதிகமாக, நாளை (21) நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமில் முத்துக்குட தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றில் சஜித் – தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள் திடீர் சந்திப்பு!

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று (19) இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்பு அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நேரில் அழைத்து இந்த அவசரக் கலந்துரையாடலை முன்னெடுத்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் தீர்க்கப்படாத பிரச்சினைகள், சமூக மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் பிரதேச மட்டத்திலான அபிவிருத்தி முட்டுக்கட்டைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்கு விரிவாகக் கொண்டுவந்தனர்.

இப்பிரச்சினைகளை வெறும் கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தாமல், பாராளுமன்ற தளத்தில் மிக வலுவாகவும் பரந்தளவிலும் முன்வைப்பதற்கும், தேவையான உரிய அழுத்தங்களையும் தலையீடுகளையும் மேற்கொள்வதற்கும் இச்சந்திப்பில் முக்கிய தீர்மானம் எட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், சாணக்கியன் இராசமாணிக்கம், செல்வம் அடைக்கலநாதன், டொக்டர் அர்ச்சுனா இராமநாதன், எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, காதர் மஸ்தான், ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமா லெப்பே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை முன்வைத்தனர்.

செப்டெம்பர் முதல் போக்குவரத்து அபராதங்கள் ஆன்லைன் ஊடாக மட்டுமே!

இலங்கையில் வாகன சாரதிகள் எதிர்நோக்கும் நீண்ட நாள் இழுபறிக்கு முடிவு கட்டும் வகையிலான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. போக்குவரத்து அபராதங்களைச் செலுத்துவதற்காக இனி தபால் நிலையங்களிலோ அல்லது பொலிஸ் நிலையங்களிலோ வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் மற்றும் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அனைத்து வாகனப் போக்குவரத்து அபராதங்களும் முழுமையாக ஆன்லைன் (Online) தொழினுட்பம் ஊடாக மட்டுமே செலுத்தப்படுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த அதிரடி டிஜிட்டல் மாற்றமானது வாகன சாரதிகளுக்கு மட்டுமல்லாது, முழு அரச நிர்வாகத்திற்கும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தவுள்ளது. அரச சேவையின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மாற்றத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், தகவல் தொழில்நுட்பத் தேவைகளுக்கான சேவைகளை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுவான சேவையாக நிறுவுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு நேரடியாக அறிவுறுத்தல் வழங்கினார்.

அரசின் இந்த வேகமான நகர்வுகளுக்குப் பின்னால் மிகப்பெரிய பொருளாதார இலக்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் மதிப்பை 30 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆட்பதிவுத் திணைக்களம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, கணினி அவசர கால பதிலளிப்பு பிரிவு, தரவுப் பாதுகாப்பு அதிகாரசபை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் திட்டங்கள் மற்றும் தொலைக்காட்சி டிஜிட்டல் மயமாக்கல் செயற்திட்டம் குறித்து தனித்தனியாக ஆராயப்பட்டது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒட்டுமொத்த நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இலங்கையின் முதல் “டிஜிட்டல் அடையாள அட்டை” (Digital ID) வழங்கும் திட்டம் குறித்த இறுதி விபரமும் இக்கூட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி இந்த ஆண்டின் இறுதிக்குள் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என்றும் அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.