Thursday, November 13, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 140

காணாமல்போன தேசபந்து தென்னகோன்!

0

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார். 

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பல பொலிஸ் குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், அவர் தற்போது சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் தலைமறைவாக உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். 

நீதிமன்ற உத்தரவை மீறி தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நடைமுறையின் கீழ், முன்னாள் பொலிஸ்மா அதிபரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

மேலும், யாராவது அவர் தலைமறைவாக இருப்பதற்காக உதவி புரிவார்களானால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்வதற்கான முயற்சிகள் வழக்கத்தை விட அதிக முயற்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல்!

0

இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல் அறிமுகப்படுத்தப்பட்டது.

நவீன தொழில்நுட்பத்தையும் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் அறிவையும் பயன்படுத்தி, நாட்டில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக் கப்பல், கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

சோமாலிய மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திற்காக, Dhanusha Marine நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்தக் கப்பல், உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கிய இலங்கையின் பயணத்தில் ஒரு விசேட திருப்புமுனையைக் குறிக்கிறது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

2028 இல் நாட்டின் நிலை இதுதான்!

0

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிப் பத்திரத்தை கிழித்தெறிந்த ஜனாதிபதியும் அரசாங்கமுமே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றது. 2022 இல் நாம் சந்தித்த தேசியப் பேரவலமாக அமைந்த நாட்டின் வங்குரோத்து நிலை ஏற்படும் என யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை.

அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய நாட்டிலேயே பெரும்பான்மையினர் மிதந்து கொண்டிருக்கின்றனர். 2028 ஆம் ஆண்டே நாடு எதிர்கொள்ளும் மிகக் கடினமான காலமாக அமையும். 2028 இல் நாம் கடனை செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்குத் தேவையான பணம் நாட்டில் கையிருப்பில் இருந்தாக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

களனி தேர்தல் தொகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். 

கடனை செலுத்துவதற்கான பணம் அரசாங்கத்தின் வருமானம் மூலம் ஈட்டப்பட வேண்டும். உற்பத்திப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் இருந்து ஈட்டப்பட வேண்டும். கடந்த காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இந்நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும், இங்கு எம்மால் செய்ய முடியாத விடயங்களுக்கு இணக்கப்பாடுகளை தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் தொடர்ச்சியாக கூறி வந்தது. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தற்போது இணக்கப்பாடு காணப்பட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மக்கள் சார்பான ஒன்றாக மாற்றியமைப்போம் என நாம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* நாட்டை சிக்கலுக்குள் ஆழ்த்தி ஆட்சியை பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எமக்கில்லை. 

நமது நாட்டை சிக்கலில் தள்ளி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து, உயர் பதவிகளுக்கு வர நாம் ஒருபோதும் தயார் இல்லை. அசாதாரணமான, கடினமான இலக்குகளுடனான உடன்பாடுகளை ஏற்படுத்தியதன் காரணமாக ஒரு நாடாக நாம் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு கண்டுள்ள இந்த நிபந்தனைகளைத் திருத்தி, மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சுமையை குறைக்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தானும் திசைகாட்டியும் இந்த இணக்கப்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான எதிர்பார்ப்புகளை மக்களுக்கு வழங்கினோம். ஆட்சிக்கு வந்த திசைகாட்டியானது ஏலவே இருந்த சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டை எந்த மாற்றமுமின்றி முன்னெடுத்து வருகின்றது. இதன் ஊடாக இந்த அரசாங்கமானது மக்களின் நம்பிக்கைகளுக்கும் எதிர்பார்ப்புகளுக்கும் துரோகமிழைத்துள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையைப் பார்க்கும் போது எந்த அபிமானமும் கொள்ள முடியாது. இன்று சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கைகள் வெளியாகும் வரையில் அரச ஊழியர்களால் சம்பள அதிகரிப்பை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

* 6 மாதங்களுக்கு ஒரு தடவை சம்பள அதிகரிப்பு என்பது கனவாகவே காணப்படுகின்றது. 

ஒவ்வோரு 6 மாதங்களுக்கு ஒருமுறையும் 20,000 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத் தருவதாக கூறிய ஜே.வி.பி அதைச் செய்யாமல், இந்த தருணத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறது. ஒரு நாடாக நாம் 2 ஆபத்தான நிபந்தனைகளில் கையெழுத்திட்டுள்ளோம். அதாவது, முதன்மை செலவினத்தை 2.3 சதவீதமாகக் கட்டுப்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முதன்மைச் செலவினத்தை 13 சதவீதமாக பேணவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இலகுபடுத்திச் சொல்வதானால், மக்களுக்காக அரசாங்கம் செலவிடக்கூடிய தொகையை மிகவும் சுருக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். 

அரசாங்கம் முன்வைத்த தமது சொந்த கொள்கைப் பிரகடனத்தை துண்டு துண்டாக கிழித்து, முன்னாள் ஜனாதிபதியின் அடிச்சுவடுகளை பின்பற்றிச் செல்ல தீர்மானித்துள்ளதுடன், வழங்கிய வாக்குறுதிகளையும் மீறிக் கொண்டு, போதா குறைக்கு பொய்களையும் உரைத்துக் கொண்டு வருகின்றது. இதனால் மக்களே பெருமளவில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

காலை கைது, மாலை பிணை!

0

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்சி ஆச்சி என்ற யோசித்த ராஜபக்ஷவின் பாட்டியான டெய்சி ஃபாரஸ்ட் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்க கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தம்?

0

‘தமிழன் பத்திரிகையின் செவ்வாய்க்கிழமை (04) ஆசிரியர் தலையங்கம் 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

இந்த அறிக்கைகள் அரச புலனாய்வு சேவை (SIS) மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் தெரிவித்துள்ளார்..

சில மத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்களை அவதானிக்கும்போது, ​​குறிப்பாக சிறுவர்கள் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்று கூறும் அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த தீவிரவாத சித்தாந்தங்கள் இஸ்லாத்தின் போதனைகளுக்கு முரணானவை என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

“இதுபோன்ற பெரும்பாலான நடவடிக்கைகள் கல்முனைப் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளன, மேலும் அரச புலனாய்வுத்துறை மற்றும் இராணுவப் புலனாய்வு இரண்டும் இந்த நடவடிக்கைகள் மீதான கண்காணிப்பை அதிகரித்துள்ளன. நாட்டில் மீண்டும் தீவிரவாதமும் இனவெறியும் பரவ அனுமதிக்க மாட்டோம். இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார் அமைச்சர் ஆனந்த விஜேபால.

இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபரில் அறுகம்பே விரிகுடா பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என புலனாய்வு அமைப்புகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் தொடர்பான அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளது. கண்ணியமிக்க புனித ரமழான் மாதம் ஆரம்பமாகியிருக்கும் தறுவாயில் அரசாங்கத்தின் மேற்படி கருத்து வெளியாகியுள்ளது அந்த மக்கள் மத்தியில் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் இஸ்லாமிய மக்கள் கணிசமான ஆதரவை இந்த ஆட்சியாளர்களுக்கு வழங்கியிருந்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூரவேண்டியுள்ளது. அப்படியாக ஆதரவை வழங்கினாலும் தேசிய மக்கள் சக்தி அரசின் அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவர் இல்லை என்ற ஆதங்கம் இருக்கின்றபோதிலும் அது இன ரீதியாக பார்க்கப்படக் கூடாது என்று அமைதிகாத்த இஸ்லாமிய சமூகத்தின் மீது இப்போது அபாண்டம் சுமத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மீது இப்போது அமைதியான அடக்குமுறையொன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது. தரமான இஸ்லாமிய நூல்களையும் சுங்கத் திணைகளத்தில் தீவிர பரிசோதனைக்குட்படுத்தியே அனுப்புகின்றனர். கிழக்கில் அவர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் இப்போது தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புகிறார்கள்  என்ற தகவலை அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருக்கிறார்.

இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து புலனாய்வுத்துறை அறிக்கை கிடைக்குமாயின் அது தொடர்பில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களுடன் பேசுவதற்கு அரசு ஆவண செய்யவேண்டும். அதைவிடுத்து இதை பகிரங்கமாக கூறுவது, தென்னிலங்கையில் இஸ்லாமியர்கள் தொடர்பில்  மாற்றுச் சிந்தனைக்கு வழிவகுக்கும். ஏற்கனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்  சம்பவத்தால் பாதிக்கப்பட்டு அந்த நிலைமையிலிருந்து மீண்டெழும் முஸ்லிம் சமூகம் மீது  இப்படியான குத்துமதிப்பு கதைகள் கூறப்படுவது நியாயமானதல்ல.”இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின்  ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்பில் நியாயப்படுத்தலில் கூட அவர்கள் ஈடுபடவில்லை என்பதுதான் உண்மை.

இஸ்லாமியர்கள் மத்தியில் தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதாக கூறப்படும் தகவல்கள் குறித்து அரசுக்கு அறிக்கை கொடுக்கும் இதே புலனாய்வுத்துறைதான், கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் பலவற்றின் பின்னணியில் இருந்ததாகவும் விமர்சனங்கள் உள்ளன.

அதுமட்டுமல்ல பல சம்பவங்கள் தொடர்பில்  அவர்கள் சரியான தகவல்களை ஆட்சியாளர்களுக்கு வழங்கவில்லையென்ற சாடல்களும் உள்ளன. அதனால் இப்போது இந்த தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புவதான செய்தி குறித்தும் அதன் உண்மைத்தன்மை குறித்து அரசு உடனடியாக ஆராயவேண்டும்.

குறிப்பாக இந்த நோன்பு காலத்தில் விசேட பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் இஸ்லாமியர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இடம்பெறும் சூழ்நிலை இருக்கிறது. அதேபோல அதையொட்டிய நிகழ்வுகளும் நாடாளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளன.

அப்படியான நிலையில் இஸ்லாமியர்கள் மீது புதிய லேபல் ஒன்றை இடாமல் பொறுப்புடன் செயற்படவேண்டியது அரசின் பொறுப்பும் கடமையாகிறது. அப்படியே சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் இருப்பதாக அரசாங்கம் கருதுமானால் மார்க்க அறிஞர்கள், அந்த சமூகத்தின் புத்திஜீவிகள், அரசியல்வாதிகளை அழைத்துப்பேசி இந்த விடயத்தினை ஆராயும் பொறுப்பை அவர்களிடம் விடவேண்டும். எடுத்த எடுப்பில் ஒரு தீர்மானத்திற்கு வந்து ஒட்டுமொத்த சமூகத்தையும் சந்தேகக் கண்கொண்டு நோக்க  வைத்துவிடக்கூடாது.

ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி அறிவிப்பு!

0

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார். 

செம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இந்த முடிவை அறிவித்துள்ளார். 

35 வயதான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை அவுஸ்திரேலிய அணிக்காக 170 போட்டிகளில் விளையாடியுள்ளார். 12 சதங்கள் மற்றும் 35 அரைசதங்களுடன் 5,800 ஓட்டங்களை குவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிராக 2016 ஆம் ஆண்டு 164 ஓட்டங்கள் குவித்தது இவரது அதிகபட்சமாகும். 

லெக்ஸ்பின்னராக கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி 90 பிடியெடுப்புக்களை எடுத்துள்ளார். 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண தண்டனை நிறைவேற்றம்!

0

குழந்தையை கொன்றதாக கைது செய்யப்பட்ட 33 வயது உ.பி., மாநில பெண்ணுக்கு, ஐக்கிய அரசு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பண்டா மாவட்டத்தை சேர்ந்த ஷாஸாதி கான், குழந்தையை கொலை செய்த வழக்கில் அபுதாபி நகரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவரது பாதுகாப்பில் இருந்த ஆண் குழந்தையை கொலை செய்ததாக, பெற்றோர் அளித்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவாகியிருந்தது.

வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், 2023ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது. கடந்தாண்டு அவரது மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அவர் வாத்பா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை காப்பாற்றவும், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தவும் இந்திய துாதரகம் சார்பில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

எனினும், மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த அந்நாட்டு நீதிமன்றம், அவரது மரண தண்டனையை உறுதி செய்தது. அவரது மரண தண்டனை பிப்.,15ல் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில், டில்லி உயர்நீதிமன்றத்தில் இந்த தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.அவரது குடும்பத்தினர், அமீரகம் சென்று இறுதிச்சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

5 மணி நேரம் வாக்குமூலம்!

0

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிப்பாளர்கள் குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தை அவமானப்படுத்தும் நோக்கில், எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை சீர்குலைக்க இந்த பிரதிநிதிகள் முயற்சிப்பதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்றிருந்தது.

அதன்படி, இந்தக் குழுவை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களத்தின் அதிரடி அறிவிப்பு!

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் (2024) உயிரியல் தொழில்நுட்பவியல் பாடத்துடன் தொடர்புடைய செயன்முறைப் பரீட்சை குறித்து பரீட்சைத் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

குறித்த செயன்முறைப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 08ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 75 செயன்முறைப் பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளது. 

அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை செயன்முறைப் பரீட்சை முழுமையாக முடிவடையும் வரை, பரீட்சை விண்ணப்பதாரிகளுக்காக உதவி வகுப்புகளை நடத்துவது, ஒழுங்கமைப்பது மற்றும் வகுப்புகளை நடத்துவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு விவசாயிகளுக்கு உலக வங்கி உதவி!

0

உலக வங்கியின் நிதியுதவியுடன் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் மூலம் கிளிநொச்சி மற்றும் முலைத்தீவு மாவட்ட விவசாயிகள் பலர் பொருளாதார, மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நன்மைகளை பெற்றுள்ளனர்.

இன்று கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த திட்டத்தின் பிரதிப்பணிப்பாளர் A.G.C பாபு இவ்விடயத்தை தெரிவித்தார்.

மேலும், விவசாய அமைச்சின் கீழ் உலக வங்கியின் நிதியுதவியில் 2019ம் ஆண்டு குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஆறு மாகாணங்களை உள்ளடக்கி 11 மாவட்டங்களில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக்கல்லாறு ஆற்றுப்படுக்கையை மையப்படுத்தியும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பேராறு ஆற்றை மையப்படுத்தியும் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

காலநிலை பாதிப்பிலிருந்து விவசாயிகள் விரைவாக மீண்டெழுவதே இதன் நோக்கம் எனவும் 125 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்த திட்டத்திற்கு உலக வங்கியினால் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்;

இந்த ஆண்டு 29 குளங்கள் புனரமைப்பு செய்வதற்காக 1500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதே வேளை விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ரீதியான ஆலோசணைகளும் உபகரணங்களும் வழங்கப்பட்டு விவசாயிகள் செலவீனங்களை குறைத்து தமது உற்பத்தியில் அதிக இலாபம் ஈட்டி வருகின்றனர். விதை நடுகை கருவி, சூரியகல நீர்விநியோக கட்டமைப்பு போன்ற பல்வேறு தொழில்நுட்ப ரீதியான விடயங்களையும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி விவசாயிகளை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி செய்தியாளர் ஆனந்தன்