இன்று கல்பிட்டியில் “STREET FOOD FESTIVAL” நிகழ்வு
கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அங்கமாக இன்றைய தினம் (26) மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை “STREET FOOD FESTIVAL” நிகழ்வு கல்பிட்டி நகரில் இடம்பெறவுள்ளது.
பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாகக் காணப்படும் கல்பிட்டிப் பிரதேசத்தில் இத்துறையை மேலும் வளர்ச்சி பெற வைத்து, இப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமேல் மாகாண சபை, தொழில்துறை சேவைகள் பணியகம், கல்பிட்டி பிரதேச சபை மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் இந் நிகழ்வு இடம்பெற உள்ளது.
கல்பிட்டி சுற்றுலா தொடர்பான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் (KALPITIYA FOOD FESTIVAL) எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெறுகின்றது.
இதில் பல வகையான உணவுப் பண்டங்களைக் கொண்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையில், அறிவு மாதத்தை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நிதியறிவுக்கண்காட்சி இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய முகாமையாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டிருந்தார். குறித்த நிகழ்வில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், மத்திய வங்கியின் பிராந்திய அபிவிருத்திக்கான பணிப்பாளர் சதுர ஆரியதாச உள்ளிட்டோர் கலந்து கொண்டு குறித்த கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.
மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் நிதி கல்வியறிவை மேம்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக, மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்திய அலுவலகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இக் கண்காட்சியில் உரிமம் பெற்ற வங்கிகள் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர் (MSMEs) காட்சிக் கூடங்கள், கொழும்பு பங்கு பரிவர்த்தனை (CSE) முதலீட்டு வழிகாட்டுதல்கள், ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய (ETF) சேவைகள், கொடுகடன் தகவல் பணியக சேவைகள் (CRIB) மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் என்பன இடம்பெறகின்றன.
மேலும், பார்வையாளர்களுக்கு இலங்கை நாணயங்களின் வரலாறு, அரிய மற்றும் நினைவு நாணயங்கள். நாணய அமைப்பின் வளர்ச்சி போன்றவற்றை உள்ளடக்கிய நாணய அரும்பொருட்காட்சியகமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வானது தனிநபர் நிதியியல் முகாமைத்துவம், வங்கிச் சேவைகள், டிஜிட்டல் வங்கி சேவைகள், நிதியியல் மோசடிகள் மற்றும் தொழிற்பயிற்சி வழிகாட்டுதல்கள் போன்றவை குறித்து பொதுமக்கள் பயனுள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் தேவையான நிதிக் கல்வியறிவு மற்றும் அவற்றின் பிரயோகம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த கண்காட்சி இன்று பிற்பகல் 5.00மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா தலைமையில் இக்குழுவின் கூட்டம் அண்மையில் (23) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போது இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை நீடிப்பதற்கு இந்த ஒழுங்குவிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கு முன்னர் 2024 மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் 1,000 புதிய வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனங்களை சுற்றுலா அமைச்சினால் வழங்கப்படும் விசேட அனுமதிபத்திரத்தின் கீழ் மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும் என்பதுடன், 2025 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் இந்த அனுமதி சுற்றுலா மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கும் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சரின் முன்மொழிவைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2025 இல் இந்த வசதியை மேலும் மூன்று மாதங்களுக்கு, அதாவது 2025 செப்டம்பர் 30 வரை நீடிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்தது.
அதற்கமைய, 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதியிலான 2449/60 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட புதிய ஒழுங்குவிதிகள், 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் அனுமதிக்காக தற்பொழுது பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மானிய விலையில் போக்குவரத்துத் திறனை அதிகரிக்குமாறு தொழில்துறையினரின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதி குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், தற்போதைய கொள்கை கட்டமைப்பின் கீழ் அத்தகைய சலுகைகளை வழங்க முடியாது என அதிகாரிகள் விளக்கினர். மேலும், ஒரு துறையினருக்கு நிவாரணம் அளிப்பது ஏனைய தொழில்துறைகளிலும் சமநிலை மற்றும் நியாயம் பற்றிய கரிசனைகளை எழுப்பும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், சுற்றுலா அபிவிருத்தி வரியை (Tourism Development Levy – TDL) அறவிடுவதில் காணப்படும் சவால்களையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள் மற்றும் முறையான நிறுவனங்கள் இந்த வரிக்கு பங்களித்தாலும், பல சுற்றுலா ஓய்வு விடுதிகள் மற்றும் எயார்பிஎன்பி (Airbnb) இயக்குநர்கள் இந்த அமைப்பின் ஒரு பகுதியாக இல்லை என்பதால் அவர்கள் பணம் செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. இது தொழில்துறையில் சமநிலையற்ற போட்டிச் சூழலை உருவாக்கியுள்ளதுடன், சுற்றுலா அபிவிருத்திக்குக் காணப்படும் நிதியையும் குறைத்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டது.
அதற்கமைய, விரிவான பரிசீலனையைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
கிளி. இராமநாதபுரம் கிராமத்தில் காட்டு யானை வேலி அமைக்கும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து ஆராய்வு!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் இராமநாதபுரம் கிராமத்தில், காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யானை வேலிகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பகுதிகளில், சுமார் 05 கிலோமீற்றர் நீளமான யானை வேலிகளை அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட காணி பிரச்சினை காரணமாக இதன் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த பகுதிக்கு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.அஜிதா, கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வனஜீவராசிகள் திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று (25.09.2025) குறித்த பகுதிக்கு நேரடியாக சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர்.
காணி அனுமதிப் பத்திரம் உள்ள மக்களின் காணிகளை நில அளவைத் திணைக்களமூடாக அடையாளப்படுத்திய பின்னர் வனவளத் திணைக்களத்துடன் கலந்துரையாடி காணி பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டது. அதுவரை காணிகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபடவேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேலும், மக்களின் உறுதிக் காணிகளில் உள்வாங்காத பிரதேசம் ஊடாக யானை வேலிகளை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டு, குறித்த பகுதி மக்களுக்கு காண்பிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. மேலும் இதை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
மேற்படி கிராமத்தில் காட்டு யானைகளால் தமது விவசாயப் பயிர்கள் அழிக்கப்பட்டு வரும் அதேநேரம், உயிராபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர்-4 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிப் பெற்றுள்ளது.
டுபாயில் இன்று இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Mohammad Haris 31 ஓட்டங்களையும், Mohammad Nawaz 25 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed 03 விக்கெட்டுக்களையும், Mahedi Hasan, Rishad Hossain ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதற்கமைய 136 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை சந்தித்தது.
துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Shamim Hossain அதிகட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் Shaheen Shah Afridi மற்றும் Haris Rauf ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதன்படி பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இதற்கமைய 2025 ஆம் ஆண்டு ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணியும் தகுதிப் பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கையின் தேசிய ஊடக கொள்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் புத்தளம், கருவலகஸ்வெவ தப்போவ லேக் ரிசோட்டில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களுக்கான குறித்த விஷேட கலந்துரையாடல், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் அமைப்பாளர் திரு. லசந்த டி சில்வா தலைமையில் இடம்பெற்றது.
நாட்டில் இதுவரை ஸ்திரமான ஊடக கொள்கை ஒன்று இல்லாத நிலையில், அரசாங்கத்தினால் தற்போது அதற்கான வரைவு இடம்பெற்று வருவதால், அது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் இதுவரை பல துறைகளுக்கான கொள்கைகள் வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஊடகத்திற்கான தேசிய ஊடக கொள்கை ஒன்றின் அவசியம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
தற்போதைய புதிய அரசாங்கத்தினால் தேசிய ஊடக கொள்கை ஒன்று வரையப்பட்டு, அமைச்சரவை அங்கீககாரத்திற்காக காத்திருக்கின்ற நிலையில், மாவட்ட மட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, குறித்த தேசிய ஊடக கொள்கையில் உள்ளீர்க்கப்படவேண்டிய விடயங்கள் குறித்தும் இலங்கை சுதந்திர ஊடக அமைப்பினால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட குறித்த ஊடக அமைப்பு, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டது.
மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் பொருளாதார ரீதியான தடைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை சோஷலிச குடியரசின் தேசிய ஊடக கொள்கை ஒன்றின் மூலம் மாத்திரமே ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படும் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும் தேசிய ஊடக கொள்கையின் தேவை, குறிக்கோள், கொள்கைப்பிரகடனம் மற்றும் மூலோபாயங்கள் குறித்து மிக ஆழமாக பரிசீலிக்கப்பட்டதுடன், குறித்த தேசிய ஊடக கொள்கையில் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்படவேண்டிய மற்றும் நீக்கப்படவேண்டிய விடயங்கள் பற்றியும் பரிசீலிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல முக்கிய விடயங்கள் தேசிய ஊடக கொள்கை வரைவை மேற்கொண்டுள்ள குழுவிற்கு பரிந்துரைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில், இலங்கை சுதந்திர ஊடக அமைப்பின் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலக அதிகாரிகள், மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்பினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
காலநிலைக்கு அமைவான விவசாய சமூக பண்ணை அமையவுள்ள பிரமந்தனாறு பகுதிக்கு மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் இன்று திடீர் விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், கிராமிய அபிவிருத்தி பணியகத்தின் மேற்பார்வையில் சுமார் 75.63 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் காலநிலைக்கு சீரமைவான விவசாய செய்கைக்காக ஒதுக்கப்பட்ட 10 ஏக்கர் பகுதியில் ஆரம்பகட்ட பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இப்பகுதியை பகுதியை குறித்த குழுவினர் பார்வையிட்டனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், தமித் சந்திரசேகர (UNDP திட்ட பணிப்பாளர்), மாவட்ட மேலதிக அரசாங் அகதிபர் நளாயினி இன்பராஜ், மாவட்ட காணி மேலதிக அரசாங்க அதிபர் அஜிதா பிரதீபன், கண்டாவளை பிரதேச செயலாளர் தங்கவேலாயுதம் பிருந்தாகரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கே.கருணாநிதி உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த விவசாய சமூக பண்ணை மூலம் குறித்த பகுதியின் விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டு, வருடம் முழுவதும் பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் குறித்த பகுதியின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் எனவும், இது சுழற்சி முறையில் அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார்.
குற்றச் செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கைதுசெய்ய பொலிசார் அவரின் வீடு சென்றபோது, பொலிசாரை கண்டு ஓடிய குடும்பஸ்தர் அருகிலுள்ள வீட்டின் கிணற்றினுள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி, இராமநாதபுரம் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்ட விரோத கசிசிப்பு உற்பத்தியில் ஈடுபடுவதாக நேற்றிவு 24.09.2025 சுமார் 6.30 மணி அளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய 6ம் யூனிட் இராமநாதபுரம் ஆலடி பகுதிக்கு விரைந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரை கைதுசெய்ய முயன்றபோது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விமானம் மூலம் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ரூ.155,60,000 மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருள், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு சென்ற வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (24) காலை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் 36 வயதான இந்திய பிரஜை எனவும், அவர் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து இந்த “குஷ்” போதைப்பொருளை வாங்கி, இந்தியாவின் பெங்களூருக்கு கொண்டுவந்து, அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
அவர் தனது பொருட்களுடன் 03 பொதிகளில் பொதிசெய்யப்பட்ட 1.56 கிலோகிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருளை மறைத்து கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பயணியும் அவர் கொண்டு வந்த “குஷ்” போதைப்பொருள் கையிருப்பும் மேலதிக விசாரணைக்காக இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவானதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இன்று (24) பாராளுமன்றத்தில் தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர், வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் பெருந்தெருக்கள் போன்ற இடங்களில் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகுவதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.