சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த அவஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மகேஷ் தீக்ஷன சிறப்பாக பந்து வீச்சை மேற்கொண்டதன் காரணமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
மகேஷ் தீக்ஷன முதலாம் இடத்திற்கு முன்னேறியதன் காரணமாக தரவரிசையில் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தானின் வீரர் ரஷீத்கான் இரண்டாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
மகேஷ் தீக்ஷன ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இதுவே முதன் முறையாகும்.
கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவ பிரதிவாதி கூண்டிலிருந்து இறங்கத் தயாரான போது, குறித்த நபர் சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த 09-02-2025 மன்னார் வடக்கு கடற்பரப்பின் கிளிநொச்சி நீரியல் வளத்திணைக்கள எல்லைக்குள் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களின் வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் முன்னிலையில் குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒரு படகில் இருந்த 11 மீனவர்கள் மீது ஐந்து முக்கிய குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 11மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
2. இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
3. இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடி படகைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமைக்காக 11 மீனவர்களுக்கும் 50,000 ரூபா குற்றம் பணம் அறவிடப்பட்டதுடன், இதனை செலுத்த தவறின் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
4. குறித்த 11மீனவர்களில் ஒருவர் உரிமையாளராகவும் படகு ஓட்டியாகவும் காணப்படுவதால், படகு ஓட்டிக்கு 6 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவற்றை செலுத்த செலுத்த தவறும் பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
5. படகு உள்ளிட்ட மீனவர்களின் தொலைபேசி பணம் தவிர்ந்த அனைத்தும் அரசுடமையாக்கப்படுவதாகவும் நீதிமன்ற நீதவான் இஸ்மத் ஜெமீல் அறிவித்தார்.
இதேவேளை மற்றோரு படகில் இருந்த 03 மீனவர்கள் மீதும் மூன்று குற்றங்கள் முன்வைக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
அனுமதியின்றி இலங்கை கடற்பரப்பில் ஊடுவி நுழைந்தமைக்காக 03 மீனவர்களுக்கும் 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட 12 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
இலங்கை கடல் எல்லையில் நுழைந்து மீன்பிடி உபகரணங்களைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டமைக்காக 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டது.
இலங்கையில் தடைசெய்யப்பட்ட இழுவை மடி படகைப்பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டமை இதற்காக 03 மீனவர்களுக்கும் 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், இதனை செலுத்த தவறும்பட்சத்தில் 06 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
குறித்த மூன்று இந்திய மீனவர்களில் ஒருவர் 2024ம் ஆண்டு மாச் மாதம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தினால் 5 வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு குற்றத்தை செய்தமையால் 18 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய முல்லைத்தீவில் தெரிவிப்பு
சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்கப்படமாட்டாது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கடந்த 16ஆம் திகதி முல்லைத்தீவு நகர மண்டபத்தில் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு முதல் பிள்ளைகளின் கற்றல் முறைகளை புதுப்பித்து ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சிகளை அளித்து பிள்ளைகள் மகிழ்ச்சியுடன் கற்கும் பாடசாலை முறைமையை உருவாக்க முயற்சித்து வருகிறோம்.
இந்த நாட்டை மாற்ற வேண்டுமாயின் கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என தற்போதைய அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்தால், அந்த மாற்றங்களை விரைவில் அடைய முடியும்.
நீங்கள் வழங்கிய மக்கள் ஆணையின் பேரிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்துள்ளோம், உங்களுடனேயே எங்களது உடன்படிக்கை உள்ளது. அனைவருக்கும் சமமான, அனைவரையும் அங்கீகரிக்கும், அனைவரும் பாதுகாப்பாக வாழக்கூடிய நாட்டை நாம் ஒன்றுசேர்ந்து கட்டியெழுப்புவோம். நாம் ஒற்றுமையாக இருக்கும் போது நாம் வலுவாக இருக்கிறோம், எவராலும் எங்களைப் பிரிக்க முடியாது. நீங்கள் இந்த நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அந்த மாற்றத்தை வேறு திசையில் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம். இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம். சட்டத்தை தாம் விரும்பியவாறு கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை மட்டும் பாதுகாக்கும் சட்டத்திற்கு இடமளிக்க மாட்டோம்.
இதுவரை இந்நாட்டின் அபிவிருத்தி எல்லாப் பிரதேசங்களுக்கும் ஒரே மாதிரியாக இடம்பெறவில்லை. முழு நாட்டையும் மையமாகக் கொண்ட ஒரு அபிவிருத்தி முறைமையை நாங்கள் திட்டமிட்டு வருகிறோம்.
அஸ்வெசும நிவாரண உதவி பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்குப் போன்றே 300க்கும் குறைவான பிள்ளைகளைக் கொண்ட பாடசாலைகளின் பிள்ளைகளுக்கும் பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு ரூபா 6000/= வவுச்சரை வழங்கியுள்ளோம்.
2026 இல் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாடசாலை கல்வியை முடித்து சமூகத்திற்குச் செல்லும் பிள்ளைக்கு எதிர்கால பாதையை தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்வது எளிதானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையும் எளிதானது அல்ல, ஆனால் அதை எப்படியாவது செய்தாக வேண்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் பாதுகாப்போம்” .
அனைவருக்கும் வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்குவதற்காக நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வேண்டுகோள் விடுத்தார்.
கண்டியை உலக புராதன கேந்திரத் தலம் ஒன்றாக மாற்றுவதற்குத் திட்டம்
கண்டி நகரை மையமாகக் கொண்ட 168 அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
2035 ஆம் வருடமாகும் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட பாரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் குமுது லால் தெரிவித்தார்.
இப்பாரிய கண்டி நகர அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
“கந்த உடரட தேஜாத்வித அகநகரய (மலைப்பகுதியில் மலை நாட்டின் புகழ்பெற்ற தலைநகரம்)” எனும் இந்த கண்டி நகரில் சமய, கலாச்சார, வரலாற்று மற்றும் கலாச்சார உரிமைகள் பரவலாக உள்வாங்கப்படும் விதமாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கண்டி மாநகர சபை உட்பட உள்ளுராட்சி நிறுவனங்கள் 15 ஐ மையப்படுத்தியதாக 600 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் இத்திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தேச திட்டம் 168 இல் 13 திட்டங்கள் கண்டி நகரத்திலும் செயற்படுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இங்கு பொது வாகனத் தரிப்படங்களை நிருமாணிப்பதுடன் நுவரவெல மற்றும் சிங்க ரெஜிமேந்து வளாகங்கள் அமைந்துள்ள பிரதேசத்திற்கு அண்மையில் பொது போக்குவரத்து வாகனத் தரிப்பிடங்கள் இரண்டை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டது.
பல்நோக்கு போக்குவரத்து வாகனத் தரிப்பிடம் அமைத்தல், ஹிருஸ்ஸகல சந்திக்கு அண்மையிலிருந்து வில்லியம் கொபல்லாவ மாவத்தை ஊடாக வைத்தியசாலை சந்தி வரையான வீதி அபிவிருத்தி, மஹிய்யாவை சுரங்கப்பாதை நிருமாணம், குடாரத்வத்த வீதி மற்றும் வில்லியம் கொபல்லாவ மாவத்தை அபிவிருத்தி, தென்னேகும்புறயிலிருந்து தர்மராஜ வித்தியாலயத்திற்கு அண்மையில் வரையான பிரதான வீதி ஆகியவற்றின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.
அமெரிக்காவில் புயல் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்தனர். 39 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கென்டக்கியில் மட்டும் 8 பேர் உயிரிழந்தனர்.
இவர்கள் உயிரிழப்புக்கு பலத்த மழை மற்றும் நீரில் மூழ்கிய சாலைகள் காரணம் ஆகும். 39 ஆயிரம் வீடுகளில் மின் துண்டிப்பு ஏற்பட்டது. மேலும் நிலைமை மோசமடையக்கூடும் என்று கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியுள்ளார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து, கென்டக்கி கவர்னர் பெஷியர் கூறியதாவது: வெள்ளத்தில் சிக்கித் தவித்த நூற்றுக்கணக்கான மக்களை மீட்க வேண்டியுள்ளது. தாய் மற்றும் 7 வயது குழந்தை உட்பட பெரும்பாலான இறப்புகள் கார்கள் அதிக நீரில் சிக்கியதால் ஏற்பட்டது.
மக்கள் சாலைகளில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். புயல் தொடங்கியதிலிருந்து, மாநிலம் முழுவதும் 1,000 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் கடுமையான காற்று வீசுவதால் மின் தடைகள் அதிகரிக்கக்கூடும், என்றார்.
பெரும்பாலான பகுதிகளில் 15 செ.மீ., வரை மழை பெய்துள்ளது. நிறைய நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது என வானிலை ஆய்வாளர் பாப் ஓரவெக் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் இன்று (17) நிறைவேற்றப்பட்டது.
உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79வது உறுப்புரைக்கு அமைய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
இந்தச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து குழுநிலையில் சட்டமூலம் கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் சட்டமூலத்திற்கான மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சட்டமூலத்திற்கு ஆதரவாக 158 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக எந்த வாக்குகளும் அளிக்கப்படவில்லை. அதற்கமைய, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மூன்றாம் மதிப்பீடு விசேட பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய இந்த சட்டமூலம் 2025 ஆம் ஆண்டில் 1 ஆம் இலக்க உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமாக அமுலுக்கு வரவுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று (17) காலை பாராளுமன்றத்தில் கூடினர்.
இந்த விசேட கூட்டத்தில் வரவு செலவுத்திட்டம் மற்றும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அரசாங்கம் தேர்தல் மேடையில் வழங்கிய வாக்குறுதிகளை இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிறைவேற்றியுள்ளதா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும், மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கத்துக்கு உந்துதல் அளிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
எஸ். ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தயாசிறி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, வி. இராதாகிருஷ்ணன், பத்மநாதன் சத்தியலிங்கம், ஜே.சி.அலவத்துவல, சாமர சம்பத் தசநாயக்க, ரவி கருணாநாயக்க, டி.வி சானக்க, காதர் மஸ்தான், முஹமது இஸ்மாயில் முத்து முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் பூரண ஆசாரணையில் இயங்கிவரும் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலைக்கான புதிய கட்டிட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று 16.02.2025 மன்னார் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இளமையில் கல்வி சிலைமேல் எழுத்து எனும் தொனிப்பொருளுக்கு அமைய, சிறார்களின் கல்விக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் (சுங்கத் திணைக்கள பிரதி அத்தியட்சகர்) தலைமையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் மிகவும் சிறப்பாக இயங்கி வரும் குறித்த பாலர் பாடசாலை, சகல வசதிகளுடன்கூடிய, தேசிய தரத்திலான முன்மாதிரி பாலர் பாடசாலையாக உருவாகவேண்டும் என்ற அடிப்படையில், எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் லுக்மான் சஹாப்தீன் அவர்களின் குடும்பத்தில் மரணித்த மர்ஹூம்களின் நினைவாக, குறித்த முன்பள்ளியின் நான்காவது வகுப்பறைக்கான புதிய கட்டிடம், தேசிய நல்லிணக்கத்திற்கான பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் மற்றும் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் ஆகியோர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் அதிகமான சிறார்கள் கல்விகற்று வரும் இப்பாலர் பாடசாலையில், விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், விளையாட்டு உபகரணங்களும், கற்றல் உபகரணங்களும் மாணவர்களுக்கு இன்றைய நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் நிலையான தர்மத்தின் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் அடிப்படையில் இருநூற்றுக்கும் அதிகமான மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் இன்றைய தினம் இடம்பெற்றது.
இதேவேளை மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் எதிர்கால திட்டம், கல்லூரியின் அபிவிருத்திக்கான மூலோபாயங்கள் குறித்த விஷேட கலந்துரையாடலிலும் பிரதி அமைச்சர். முனீர் முலப்பர் கலந்து சிறப்பித்தார்.
A.Baur & Co.(Pvt.) Ltd. நிறுவனத்தின் இறக்குமதி முகாமையாளர் திரு. ரவிச்சந்திரன் குறித்த நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்துகொண்டதுடன், 75 மாணவர்களுக்கான சுமார் 50 லட்சம் பெறுமதியுடைய தளபாட உபகரணங்களையும் வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.
மேலும் சின்னஞ் சிறார்களின் மேடை நிகழ்ச்சிகள் நிகழ்வை அலங்கரித்ததுடன், வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களின் விஷேட வழிகாட்டல் சொற்பொழிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
குறித்த நிகழ்வில் எருக்கலம்பிட்டி ரினைசன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள், ஷஹாப்தீன் குடும்பத்தினர்கள், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரியின் அதிபர், முன்னாள் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊர் ஜமாத்தார்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.