ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க விலகியுள்ளார்.
இரு தரப்பினரும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர்.
இந்த கலந்துரையாடல்களை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆற்றில் விழுந்தவரை காப்பாற்றிய பைலாங் என்ற குதிரைக்கு, சீன அரசு சார்பில் ஆற்றின் கரையில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான்டாவோ நகரில் பைலாங் என்று பெயரிடப்பட்ட குதிரையும், அதன் உரிமையாளர் யிலிபாயும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றுக்குள் தவறி விழுவதை கண்டனர்.
ஆற்றங்கரையில் நின்றிருந்த அந்த நபரின் மகள் உதவிக்காகக் கூச்சலிட்டாள். உடனே சற்றும் தயக்கமின்றி, பைலாங்கில் சவாரி செய்த யிலிபாய், குதிரையை ஆற்றில் வழிநடத்தினார். ஆபத்து இருந்தபோதிலும், பைலாங் 40 மீட்டருக்கு மேல் தண்ணீரில் நீந்தியது.
யிலிபாய் ஒரு கையில் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் நீரில் மூழ்கிய நபரை இழுத்து காப்பாற்றினார். இந்த வியத்தகு மீட்பு சம்பவம், ஒரு வைரல் வீடியோவில் பதிவாகி இருந்தது.
துணிச்சலான மீட்பு சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, பைலாங் கடுமையாக நோய்வாய்ப்பட்டது. கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட குதிரைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களை தீவிர முயற்சி மேற்கொண்டனர். முயற்சிகள் செய்த போதும், குதிரை பிப்ரவரி 11 அன்று இறந்தது.
யிலிபாய் கூறியதாவது:பைலாங் புத்திசாலி. நான் அதற்கு ஒரு சவுக்கை சுண்டியதுமே அது தண்ணீருக்குள் தைரியமாக செல்லத் தொடங்கியது. நீரில் மூழ்கும் மனிதனை நான் இழுப்பதைப் பார்த்த பிறகு, அது திரும்பி நீந்தியது. என் குதிரையும் நானும் ஒரு குடும்பம் போல. நான் அதை நம்பினேன், அதுவும் என்னை நம்பியது.
பைலாங்கின் மரபை மதிக்கும் வகையிலும், அதன் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக, சியான்டாவோ நகர நிர்வாகம், ஆற்றின் அருகே ஒரு சிலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை சேவைகளை ஒரே மருத்துவமனையில் வழங்குவதற்கான ஒரு அமைப்பை உருவாக்கவும், இந்த திட்டத்தை பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையிலிருந்து ஆரம்பிக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
ஒரே மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ முறைகளைக் கொண்ட ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் புதிய அமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்தத் திட்டத்தை பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய மாகாணத்தில் உள்ள பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனையில் தற்போதைய சிகிச்சை சேவைகளை ஆய்வு செய்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையில் ஆயுர்வேத அறுவை சிகிச்சையை வழங்கும் மூன்றாவது மருத்துவமனையாக வரலாற்றை உருவாக்கி இருப்பதாக மேலும் தெரிவித்தார்.
மேற்கத்திய மருத்துவ முறைகள் மற்றும் உள்ளூர் சிகிச்சை முறைகள் மூலம் மக்களுக்கு சிறந்த, பாதுகாப்பான மற்றும் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் நம்பிக்கையுடன் இந்த புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாகவும், இது உள்ளூர் மருத்துவ சிகிச்சை சேவைகளுக்கு மதிப்பு மற்றும் சிறப்பை வழங்க உதவும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பல்லேகலே ஆயுர்வேத மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, மருந்து அரைக்கும் பிரிவு, சமையலறை, அறுவை சிகிச்சை பிரிவு, பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு மற்றும் கட்டண வார்டுகளை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார். மத்திய மாகாணத்திற்கு சிறந்த சேவையை வழங்கும் இந்த ஆயுர்வேத மருத்துவமனையை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மருத்துவமனையாக மாற்ற முடியும் என்றும், மருத்துவமனை வழங்கும் சிகிச்சை சேவைகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்களிடையே ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும், அதன் மூலம் அந்நிய செலாவணியை உருவாக்கவும் முடியும் என்றும் அமைச்சர் இந்த நிகழ்வில் தெரிவித்தார்.
எதிர்வரும் ஆண்டில் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை உள்வாங்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இதனால் கடற்கரை, ஹோட்டல் அல்லது கலாச்சார அல்லது மத தளங்களுக்குச் செல்வதற்கு மட்டும் சுற்றுலாப் பயணிகளை மட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை நீண்ட காலத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும் அமைப்பை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார்.
பொதுமக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்கவும், மலிவு விலையிலும் சிறந்த தரத்திலும் தனியார் சிகிச்சையை வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மருத்துவமனை ஊழியர்களிடம் உரையாற்றிய அமைச்சர், ஆயுர்வேதத் துறையின் முன்னேற்றத்திற்காக பல நிறுவனங்கள் நியமிக்கப்பட்டதாகவும், இந்த நிறுவனங்களுக்கு சுதேச மருத்துவ முறைகளை மேம்படுத்துதல், ஆயுர்வேத சிகிச்சை சேவைகள், மருந்து உற்பத்தி மற்றும் மருந்துகளின் இறக்குமதி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தொடங்குவதன் மூலம், உலகளாவிய அறிவை பாரம்பரிய அறிவுடன் இணைத்து, அறிவியல் ஆய்வு மூலம் அதைப் பராமரிக்கும் ஒரு மேம்பட்ட சுதேச மருத்துவ முறையை நிறுவுவதும், சில விதிமுறைகளுக்குள் முறையான முறையில் சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்குவதன் மூலம் உயர்தர மற்றும் நெறிமுறை சேவைகளை மக்களுக்கு நெருக்கமாகக் கொண்டுவருவதும் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.
இங்கு, சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மருத்துவமனை ஊழியர்களுடன் அமைச்சர் நீண்ட நேரம் விவாதித்தார், மேலும் அத்தியாவசியமானவை என அடையாளம் காணப்பட்ட ஆம்புலன்ஸ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களை மருத்துவமனைக்கு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து ஆயுர்வேத சிகிச்சைப் பிரிவுகளையும் கொண்ட பல்லேகலே மாகாண ஆயுர்வேத மருத்துவமனை, கடந்த காலத்தில் ஒரு எஸ்டேட் மருத்துவமனையாகத் தொடங்கப்பட்டது, மேலும் இந்த மருத்துவமனை நிறுவப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனைக்கு தினமும் வருகிறார்கள்.
இந்த மருத்துவமனை 120க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் கொண்டது, இதில் 08 பஞ்சகர்மா சிகிச்சை பிரிவுகள் மற்றும் வார்டு வளாகங்கள் மற்றும் 11 கட்டண வார்டு அறைகள் உள்ளன. தினமும் 400-500 பேர் வரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகிறார்கள்.
Click here to join our whatsApp group
மத்திய மாகாணத்திற்குத் தேவையான மருந்து உற்பத்தி இந்த மருத்துவமனையின் மருந்து உற்பத்தி நிலையத்திற்குள் மேற்கொள்ளப்படுவதும் தனித்துவமானது. வீடுகளில் இருந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்காக இந்த மருத்துவமனைக்குள் வெளிநோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகளான எண்ணெய் மசாஜ், நீராவி மசாஜ், பல்ஸ் மசாஜ் போன்றவற்றை வழங்குகிறது.
இந்த கண்காணிப்பு சுற்றுப்பயணத்திலும் கலந்துரையாடலிலும் சுகாதார மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி, மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ். அபேகோன், மத்திய மாகாண ஆயுர்வேத ஆணையர் டபிள்யூ.டி.சி. விக்ரமதிலகா, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, மத்திய மாகாண சுகாதார செயலாளர் ஜகத் அதிகாரி, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ருக்மல் மற்றும் ஆயுர்வேத மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிக்கும் பொழுது முன்னால் சென்று கொண்டிருந்த சிறிய லொறி ஒன்று சாவகச்சேரி நோக்கி திருப்பிய வேளை பின்னால் வந்த பாராளுமன்ற உறுப்பினரின் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர், சாரதி மூவரும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கிளிநொச்சியில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வேளையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
எஹெலியகொட பொலிஸ் பிரிவின் பரகடுவ பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த நபர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) அதிகாலை எஹெலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பரகடுவ பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்தவர் தனது மகள் மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகளின் கணவருக்கு முதல் திருமணத்தில் ஒரு பிள்ளை இருந்ததாகவும், அவரும் அவர்களுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டின் உரிமை தொடர்பில் அவர் தனது தந்தையுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதன்போது உயிரிழந்த நபர் தகராறில் குறுக்கிட்ட போது அவரது பேரனால் தள்ளிவிடப்பட்டதாகவும், இதன்போது தரையில் விழுந்து காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் எஹெலியகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக சந்தேக நபரை கைது செய்ய எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முஸ்லீம் ஹேண்ட்ஸ நிறுவனத்தின் அனுசரணையில் இயங்கும் ஸ்கூல் ஒப் எக்சலென்ஸ் (MH School of Excellence) கல்லூரியின் 15 ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற படிக விழா (Crystal Jubilee) கல்லூரியின் அதிபர் திரு H.அஜ்மல் தலைமையில் நேற்று 14.02.2025 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
முஸ்லீம் ஹேண்ட்ஸ நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளரும், கல்லூரியின் நிறுவனருமான அல்ஹாஜ் A.M. மிஹ்லார் அவர்களின் பாரிய முயற்சியால் 2010 பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ஸ்கூல் ஒப் எக்சலென்ஸ் (MH School of Excellence) கல்லூரி தனது 15 வருட பூர்த்தியை மிகவும் சிறப்பாக கொண்டாடியது.
மிகவும் நேர்த்தியாக இடம்பெற்ற குறித்த நிகழ்வை மாணவர்களின் மேடை நிகழ்ச்சிகள் அலங்கரித்தன.
மேலும் க.பொ.த சா/த மற்றும் க.பொ.த உ/த பரீட்சைகளில் அதிக திறமையை வெளிப்படுத்தி சிறப்பு பெறுபேற்றை பெட்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை கல்லூரியின் 15 ஆண்டு நிறைவையொட்டி கல்லூரியின் அதிபர் மற்றும் கல்லூரியின் நிறுவனரினால் விஷேட நினைவு மலரும் வெளியிடப்பட்டது சிறப்பம்சமாகும்.
குறித்த நிகழ்வில், முஸ்லீம் ஹேண்ட்ஸ நிறுவனத்தின் பணிப்பாளர், முன்னாள் பணிப்பாளர், கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர், கல்லூரியின் முன்னாள் அதிபர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், ஏனைய பாடசாலையின் அதிபர்கள், பெற்றோர்கள், மதத் தலைவர்கள், கல்விமான்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண சுற்றாடல் அமைச்சு வட்ஸ்எப் இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பொதுமக்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சரிடம் நேரடியாகக் கொண்டு சென்று அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு சுற்றாடல் அமைச்சு இந்தப் புதிய வட்ஸ்எப் இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து 076 641 20 29 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ்செய்தி மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அனுப்பப்படும் பிரச்சினைகளை சுற்றாடல் அமைச்சி தொடர்புடைய நிறுவனங்களுக்கு பரிந்துரைத்து, உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிந்து, தொடர் நடவடிக்கைகள் மூலம் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவை திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்தில் 5 நாட்கள் காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்படும் என்றும், இந்த செயல்முறை இன்று (14) முதல் ஆரம்பமாவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இன்று (14) இடம்பெற்றது.
அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 101 ஓட்டங்களையும், சரித் அசலங்க ஆட்டமிழக்காமல் 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
அதேபோல், நிஷான் மதுஷ்க 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அதன்படி, 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் Steven Smith அதிகபட்சமாக 29 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களையும் துனித் வெல்லாலகே 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வௌ்ளையடிப்பு செய்து இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இலங்கையில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துதல், அபிவிருத்தி செய்தல் மற்றும் நிர்வாகித்தல் தொடர்பான விடயங்களில் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கும் நோக்கத்துடன் தேசிய விளையாட்டு சபை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் விதிகளின்படி, புதிய தேசிய விளையாட்டு சபை நியமனம் இன்று (14) அமைச்சர் சுனில் குமார கமகேவினால் மேற்கொள்ளப்பட்டது.
ரக்பி வீரரும் கூடைப்பந்து வீரருமான பிரியந்த ஏகநாயக்க, தேசிய விளையாட்டு சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் இலங்கை ரக்பி அணியின் தலைவராகவும், இலங்கை மற்றும் ஆசிய ரக்பி சங்கத்தின் தலைவராகவும் மற்றும் நியூசிலாந்து மற்றும் வேல்ஸ் ரக்பி கழகங்களிலும் விளையாடியுள்ளார்.
தேசிய விளையாட்டு சபையின் ஏனைய உறுப்பினர்களையும் அமைச்சர் இதன்போது நியமித்துள்ளார்.
தேசிய விளையாட்டு சபைக்கான நியமனங்கள் இன்று (14) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றன. இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவினால் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.