Wednesday, November 12, 2025
Sponsored advertisementspot_img
Home Blog Page 153

கடற்படையினரின் அதிரடி நடவடிக்கை!

0

இலங்கைக்கு கிழக்கே திருகோணமலை ஆழ்கடலில் விபத்துக்குள்ளான மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவரை உடனடியாக வெளிநாட்டு கப்பலின் பங்களிப்புடன் தரையிறக்கப்பட்டு திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கடற்டையினரால் 2025 பெப்ரவரி 06 அன்று அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் காயமடைந்துள்ளதாக கடற்படைத் தலைமையகத்தில் அமைந்துள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளித்த கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், நோய்வாய்ப்பட்ட நோயாளியை தரையிறக்க உதவுவதற்காக கிழக்கு கடலில் பயணம் செய்து கொண்டிருந்த MV SSI Surprise கப்பலை எச்சரித்தது.

அதன்படி, ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை MV SSI Surprise என்ற கப்பலில் ஏற்றிச் சென்று, அடிப்படை முதலுதவி அளித்து, இன்று காலை (2025.06.02.) கரைக்கு அருகில் கொண்டு வரப்பட்ட பின்னர்,கடற்படையின் வேக தாக்குதல் கப்பல் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க கடற்படையினர் ஏற்பாடு செய்தனர்.

சிக்கினார் புத்தளம் மாவட்ட முன்னாள் எம்.பி!

0

புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர பயன்படுத்தியதாகக் கூறப்படும், சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட பிராடோ வாகனம், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இன்று (06) காலை பகுதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தற்போது குறித்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டார், இதன் காரணமாக விசாரணை அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட வாகனம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை.

சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட லேண்ட் குரூசர் வகை பிராடோ காரைப் பயன்படுத்தியதாக முன்னாள் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அதன்படி, பல நாட்களாக தொடர்புடைய தகவல்களை ஆராய்ந்த பின்னர், வாகனத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு விசாரணை அதிகாரிகள் குழு இன்று காலை புத்தளம் சென்றது.

அங்கு தொடர்புடைய வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் சோதனை செய்ததில், வாகன பாகங்கள் துண்டு துண்டாக பிரிக்கப்பட்டு இரண்டு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான புத்தளத்தில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்திலும், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.

அதன்படி, வாகனத்தின் உடல் பாகங்கள் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன, மேலும் இயந்திரம் உட்பட பல பாகங்கள் அவரது தென்னந்தோப்பில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டன.

முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையில், சம்பந்தப்பட்ட வாகனம் ஏற்கனவே விவசாயத் திணைக்களத்தின் ஊடாக தற்போது பயன்படுத்தப்படும் பிராடோ வாகனத்தின் இயந்திர எண் மற்றும் Chassis  எண்ணைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பயன்படுத்திய வாகனத்தில் தொடர்புடைய எண்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாட்களாக சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்துவரும் நிலையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகரவும் அவரது மகனும் வாகனத்தை பிரித்து மறைத்து வைத்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரிகள் நேற்று (05) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்த போதிலும், அவர் பிரதேசத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முழுப்பொறுப்பும் யார் ஏற்பது?

0

தொடர்ச்சியாக கொள்கலன் பரிசோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் நெரிசலுக்கு மத்தியில், சுங்கப் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் தொடர்பில் நாட்டில் பேச்சு இடம்பெற்று வருகின்ற வேளையில், இது தொடர்பில் நாட்டுக்கு உண்மைகளை வெளிப்படுத்த துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் தற்போதைய ஜனாதிபதி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல துறைகளுக்கு  மறைமுகமாக பாதிப்பு ஏற்படுவதால் இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் இன்று (06) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் கொள்கலன் சோதனை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதம், ஏற்றுமதி மற்றும் மீள் ஏற்றுமதி மூலம் அதிக வருமானம் ஈட்டும் எம்மைப் போன்ற நாட்டிற்கு நல்லதல்ல. இது தொடர்பில், பரிசோதிக்கப்படாமல் வெளியிடப்பட்ட ‘கட்டாயம் சோதனைக்குட்படுத்த வேண்டும் என சிவப்பு முத்திரை’ பொறிக்கப்பட்ட 323 கொள்கலன்களை விடுவித்தமையை யார் பொறுப்பேற்பது? ஏன் அவ்வாறு விடுவிக்கப்பட்டன என்றும் அரசாங்கத்திடம் அவர் கேள்வி எழுப்பினார். 

அவ்வாறே, கொழும்பு துறைமுகத்தில் நாளொன்றுக்கு பெறப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, தற்போது காணப்படும் கொள்கலன் சோதனை ஆய்வு வசதிகளால் ஒரு நாளைக்கு சோதனை செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை, இந்த சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்து பேணிச் செல்ல முடியுமா? இலங்கையில் கொள்கலன்களை விரைவாக சோதனை செய்து விடுவிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

அத்துடன், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் விடுவிக்கப்படுவதில் ஏற்பட்ட பாரிய நெரிசல் மற்றும் காலதாமதத்தினால் திருப்பியனுப்பப்பட்ட கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் அதனால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதன் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பாதகமான நிலைமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த கொள்கலன்களில் உள்ள பொருட்கள் என்ன? அவற்றை சபைக்கு சமர்ப்பியுங்கள் என்றும், அவை சட்டவிரோதமானை அல்லது மனித நுகர்வுக்கு தகுதியற்றவை அல்ல என்று பரிசோதனை மேற்கொள்ளாமல் முடிவு செய்தவர்கள் மற்றும் அவற்றை இறக்குமதி செய்தவர்கள் யார் என்பதையும் சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பில் யார் முழுப்பொறுப்பெடுப்பது? என்றும் கேள்வி எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பினார்.

அத்துடன், இவை சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்கள் அல்ல என்பதற்கு என்ன உத்தரவாதம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் கேள்வி எழுப்பினார்.

இல்லாத வேலைக்கு போலியான விளம்பரம்!

0

அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் சின்னங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி தொழில் வாய்ப்பு விளம்பரங்களில் இடம்பெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது.

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மேலும் தெரிவிக்கையில், 

கடந்த நாட்களில் பொதுமக்கள் மத்தியில் இவ்வாறான மோசடிகள் அதிகம் இடம்பெறுகின்றன.

அண்மையில், இலங்கை மத்திய வங்கி, தமது சின்னத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிரப்படும் போலி விளம்பரங்கள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சின்னத்தைப் பயன்படுத்தியும் பல போலி விளம்பரங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன.

இவ்வாறான போலி விளம்பரங்கள் மூலம் பொதுமக்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை பெற்று அவர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்!

0

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள் அவர்களிற்கு ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைளிற்கும்  இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா  என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து பிள்ளையானின் முன்னாள் செயலாளர் ஆசாத் மௌலானா வெளியிட்டுள்ள  தகவல்கள் குறித்து டெய்லிமிரருக்கு பதில் அளிக்கையில் பிள்ளையான் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உயிர் அச்சுறுத்தல் என தெரிவித்து வெளிநாட்டில் நிரந்தரவதிவிடத்தை பெறும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆசாத் மௌலானா ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆறுவருடங்களிற்கு முன்னர் இடம்பெற்றது. ஏன் அவர் அந்தவேளை அது குறித்த விபரங்களை அம்பலப்படுத்தாமல் நான்கு வருடங்கள் காத்திருந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கும் சனல் 4ற்க்கும் சென்றார்?

தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ண உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடியின் தலைவராக பணியாற்றினார்.

ஜனாதிபதியும் சிஐடியினரும் முட்டாள்கள்.அவர்களிற்கு  ஆயுதங்களை கைவிட்டவர்களிற்கும், ஐஎஸ் மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளிற்கும் இடையிலான  வித்தியாசத்தை புரிந்துகொள்ள முடியாதா?

நான் ஆயுதப்போராட்டத்தை விரும்பாததால் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து முதலமைச்சரானேன்.

2015 முதல் 2020 வரைசிறையிலிருந்த ஒருவரால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற பேரழிவு தாக்குதலை எவ்வாறு திட்டமிட முடியும்.

ஆசாத் மௌலானவை நாட்டிற்கு மீண்டும் அழைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளமை சிறந்த விடயம்.

நான் சிஐடியினருக்கு ஒத்துழைப்பு வழங்கி போலியான கட்டுக்கதைகளை உருவாக்கியமைக்காக ஆசாத்மௌலானவை கைதுசெய்ய உதவுவேன் என தெரிவித்துள்ளார்.

லசந்தவின் வழக்கில் திடீர் திருப்புமுனை!

0

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் என சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரை செய்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி அவரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி கோரி சுதந்திர ஊடக இயக்கமும் ஏனைய ஊடக நிறுவனங்களும் கறுப்பு ஜனவரியை அனுஷ்டிக்கும் தருணத்தில் லசந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் விடுதலை செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டும் சட்ட மாஅதிபர் பரிந்த ரணசிங்க கையொப்பமிட்ட கடிதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் உச்சம் தொடும் டெங்கு தொற்று!

0

2025 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 04.02.2025 தினம் வரையில் நாட்டில் டெங்கு நோய் தொற்று மிகவும் வேகமாக பரவிவருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருடம் ஆரம்பித்து இதுவரையான காலப்பகுதியில் 5459 பேர் டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மேல் மாகாணத்திலே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 740 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கம்பகா மாவட்டத்தில் 849 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் 4943 பேர் டெங்கு தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதத்தில் நேற்றைய தினம் வரையான காலப்பகுதி வரை 516 பேர் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலே குறைந்தளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 15 பெறும் டெங்கு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் டெங்கு தொற்று சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன், 16 சுகாதார வைத்திய நிலையங்கள் (MOH) அடங்கிய பிரதேசங்கள் டெங்கு தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் டெங்கு தொற்றால் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன், கடந்த வருடத்தில் மாத்திரம் 49873 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை இராணுவத்திற்கு புதிய பதவிநிலை பிரதானி!

0

இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 9 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 45 ஆவது பிரதி பதவிநிலை பிரதானியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, கஜபா படைப்பிரிவில் இணைந்து பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற இராணுவ அதிகாரி ஆவார்.

மாத்தளையில் பிறந்த இவர், மாத்தளை விஜயா வித்தியாலயம் மற்றும் கண்டி தர்மராஜா வித்தியாலயத்தின் புகழ்பெற்ற பழைய மாணவராவார். மேலும் 1989 ஆம் ஆண்டு இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

நாமல் எம்.பி கிளப்பிய புதிய சர்ச்சை!

0

இலங்கையில் உள்ள அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாட்டு உதவிகளை எவ்வாறு கையாண்டன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தனது “X” தளத்தில் பதிவொன்றை இட்டு, இலங்கை மட்டும் அண்மைய ஆண்டுகளில் USAID இலிருந்து மில்லியன் கணக்கான டொலர்களை ரொக்கமாகவும் மானியங்களாகும் பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கிலும் ஏராளமான திட்டங்களுக்கு நிதியளித்துள்ள USAID, மேற்கத்திய ஊடகங்களுடன் சர்ச்சையில் சிக்கியுள்ளது என்றும், மனிதாபிமான உதவி என்ற போர்வையில் மற்ற நாடுகளில் பிரச்சினைகளையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்க தனது நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தங்கள் மானியங்கள் மற்றும் உதவி நிதிகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றிய தெளிவான பதிவு எதுவும் இல்லை எனவும் USAID இன் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சலுகைகளைப் பெற்ற அரசு சாரா நிறுவனங்கள் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசு சாரா நிறுவனங்களுக்கு நிதியளிப்பதற்கான விதிமுறைகள் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தாலும், அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை, எனவே வெளிப்படைத்தன்மையைப் பேண இந்த விதிமுறைகளைக் கொண்டுவருமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்று நாமல் ராஜபக்ஷ அந்த பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாளை வரை மாத்திரமே வவுச்சர்கள்!

0

பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

காலணிகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் நாளை, 5 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான 6000 ரூபாய் கொடுப்பனவை நாளை (05.02.2025) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் கொடுப்பனவில் உள்வாங்கப்படாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த உதவி திட்டங்கள் வழங்கப்படவுள்ளன.