கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைவாக கடற்படை மற்றும் மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இன்று (6) காலை நடுக்குடா கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நான்கு(4) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை புலனாய்வு பிரிவு வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மதுவரி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கடற்படையினர் மற்றும் மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி டி.பி.அலவத்தகம தலைமையிலான மது வரிஅதிகாரிகள் இணைந்து மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா கடற்கரை பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சந்தேகத்திற்கிடமான இரண்டு படகுகளில் காணப்பட்ட பொதிகளை சோதனை செய்த போது குறித்த படகுகளில் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1250 கிலோ பீடி இலைகள் இவ்வாறு மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மன்னார் மதுவரி நிலைய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 05) கல்பிட்டி மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகளை அப்பகுதியில் உள்ள புதரில் மறைத்து வைத்திருந்த நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட கடற்படையினர் குழுவினால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மோத்துவாரம் கடற்கரைப் பகுதியில் உள்ள ஒரு அடர்ந்த காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான 64 பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு கடத்தல்காரர்களால் மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இரண்டாயிரத்து நூற்று இருபத்து மூன்று (2,123) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பத்தொன்பதாயிரம் (19,000) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன.
அனைவரும் நல்வாழ்வு வாழ இந்த உயரிய நாளில் பிரார்த்திப்போம்
தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பேருவகையும் பெருமகிழ்சியும் அடைகின்றேன்.
புனித மிக்க இந்த தியாகத் திருநாளில் எம் அனைவர் மீதும் ஏக இறைவனின் பேரருள் பொழியட்டுமாக!
இவ்வாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இறைத் தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த தியாகத்தினை வரலாறு நெடுகிலும் நினைவு கூறப்படுகின்ற தினமாக இந்த ஹஜ் பெருநாளை உலக முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர்.
ஏகத்துவம் ,இறையச்சம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், விட்டுக்கொடுப்பு போன்ற உயரிய குணவியல்புகளை வருடாவருடம் புனித ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கும் உலகத்திற்கும் போதித்துச் செல்கின்றது.
தினந்தினம் துயரமிகு வாழ்வை அநுபவிக்கும் பலஸ்தீன் மக்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்து இந்தப் புனித ஹஜ்ஜுப் பெருநாளை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஆரவாரமின்றி அனுஷ்டிக்கும் படி உங்களை நான் பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
பொருளாதாரத்தில் வீழ்ந்த எம்தாய்நாடு தற்பொழுது அந்நிலையில் இருந்து விடுபட்டு பொருளாதாரத்தில் ஓரளவு தன்னிறைவடைந்து வருகிறது . இந்நிலை மேலும் முன்னேற்றமடைந்து விரைவில் நாட்டில் பொருளாதாரம் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளும் முற்று முழுதாக நீங்க ஏக இறைவனை இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி. கே.காதர் மஸ்தான் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
போர் முடிந்த கையோடு பல அமைப்புக்கள், நிறுவனங்கள் உதவிகளை வழங்குவதற்கு முன்வந்திருந்தாலும் தற்போது நிலைமை அவ்வாறில்லை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் குறிப்பிட்டார்.
வன்னி வாழ் மக்களுக்கான மனிதநேய நம்பிக்கை நிதியம், மெத்தா புனர்வாழ்வு நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்ட ‘வலுவிழந்தோர்களுக்கான புனர்வாழ்வு மையம்’ வடக்கு மாகாண ஆளுநரால் இன்று வெள்ளிக்கிழமை (06.06.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர்,
மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராக 2003ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதிலிருந்து மனிதநேயம் அமைப்பை தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டார். போருக்கு முன்னரும், போரின் பின்னரும் அந்த அமைப்பு இந்தப் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது எனவும் தெரிவித்தார். அத்துடன் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கும் உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.
இந்த நிறுவனத்தின் தலைவி திருமதி கைலாசபிள்ளை அவர்கள் பல தடவை ஒரு விடயத்தை திரும்பத் திரும்பக் கூறுவார். நாங்கள் தொடர்ச்சியாக உதவிகளைச் செய்வதைவிட அவர்களை வலுப்படுத்தி சொந்தக் காலில் நிற்பதை உறுதி செய்யவேண்டும் எனக் குறிப்பிடுவார். அது மிகச் சரியானது. அந்த வழியில் பயணிப்பதை நான் வரவேற்கின்றேன், என்றார் ஆளுநர்.
புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தமாக ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள Renovation, General work, Ceramic Tiling, Plastering work ஆகியவற்றில் பணிபுரிய 148 இலங்கையர்கள் கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேல் சென்றுள்ளனர்.
தொழில் நிமித்தம் பயணிக்கும் 6வது குழுவாக இந்தக் குழு இஸ்ரேல் சென்றுள்ளதுடன், அவர்களை மூன்று பிரிவுகளின் கீழ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இந்தக் குழுவுடன் மொத்தமாக 413 இலங்கை இளைஞர்கள் இஸ்ரேலின் புதுப்பித்தல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளமாய் குறிப்பிடத்தக்கது.
சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்கும் சிறந்த நோக்கத்துடன், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் முதலாவது தொகுதி தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.
நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (Cluster Health Information System) (CHIS) நேற்று (05) தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு நாட்டின் சுகாதார அமைப்பின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய படிக்கல்லாகும் என்றும், நாட்டில் சுகாதார சேவைகளை மறுசீரமைக்க சுகாதார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் மற்றொரு பகுதியாகும் என்றும் கூறினார்.
இந்த சுகாதார அமைப்பு வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட பராமரிப்பு சேவையை வழங்கவும், பெற்றுக்கொண்ட தரவு அடிப்படையிலான முடிவுகளை வழங்கவும் உதவும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியின் சுகாதாரப் பதிவுகள், எக்ஸ்ரேக்கள், ஆய்வக சோதனை முடிவுகள், மருந்துச்சீட்டுகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாறு குறித்த தரவுகளைப் பெற்றுக்கொள்ள இலகுவாக அமையும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிகிச்சை பெறுவோரின் உடல்நலம் குறித்த சரியான தரவுகள் மற்றும் உண்மைகளை மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியும் என்பதால், இது சிறந்த சிகிச்சை வழங்குவதை எளிதாக்கும்.
ஒரு பிராந்திய மருத்துவமனையில் ஆய்வகம் இல்லையென்றால், அதே கிளஸ்டருக்குள் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சோதனை மாதிரிகளை அனுப்பும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்வதைக் குறைத்து, நோயாளிகளுக்குத் தேவையான பராமரிப்பை திறமையாகப் பெறுவதை எளிதாக்கும். மேலும், மருத்துவப் பதிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு வர வேண்டிய அல்லது முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்தப் புதிய சுகாதாரத் தகவல் அமைப்பு, அந்த சிரமங்களை நீக்கி, நேரத்தை மிச்சப்படுத்தி, செலவுகளைக் குறைத்து, சிறந்த பராமரிப்பை வழங்குவதன் மூலம் சிறந்த மற்றும் நோயாளிகளுக்கு உகந்த சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை உருவாக்க உதவும். மேலும், மக்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில், தேவையற்ற தாமதங்கள் அல்லது செலவுகள் இல்லாமல் சரியான பராமரிப்பைப் பெறுவதையும் இது உறுதி செய்யும்.
சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் Health System Enhancement Project கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சுகாதார தகவல் அமைப்பை உருவாக்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளது.
இந்தக் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் மூலம், கல்னேவ, எப்பாவல, தலாவ, ராஜாங்கனய யாய 5 மற்றும் யாய 7, நெகம்பஹா, கட்டியாவ ஆகிய பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் கல்னேவ, தலாவ மற்றும் ராஜாங்கனய சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் தம்புத்தேகம அடிப்படை மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இந்த அமைப்புடன் படிப்படியாக இணைக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் தொடக்கத்திற்குப் பிறகு, அமைச்சர் தம்புத்தேகம அடிப்படை மருத்துவமனையின் கண்காணிப்பு விஜயத்திலும் பங்கேற்றார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
அதில் 13 வயது சிறுவனும் அடங்குவார்.
இறந்தவர்களில் மூன்று இளைஞர்கள் மற்றும் 20-30 வயதுக்குட்பட்ட ஆறு பேரும் அடங்குவர்.
அவர்களில் பெரும்பாலோர் தங்கள் நண்பர்களுடன் வந்து 18 வருட காத்திருப்புக்குப் பின்னர், ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற தங்கள் அணியான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை உற்சாகப்படுத்தியவர்கள் ஆவர்.
இவர்களில் பலர் பெங்களூருவைச் சேர்ந்தவர்கள்.
ஆனால் சிலர் மற்ற மாவட்டங்களிலிருந்தும் பயணம் செய்தனர்.
ஒரு பெரிய கொண்டாட்டமாகத் தொடங்கிய இந்த நிகழ்வு மிகப்பெரிய கூட்ட நெரிசல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி சோகத்தில் முடிந்தது.
அனர்த்தத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் 47 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் ஏ.எஸ்.திவ்யன்ஷி (13), டோரேஷா (32), பூமிக் (20), சஹானா (25), அக்ஷதா (27), மனோஜ் (33), ஷ்ரவன் (20), தேவி (29), சிவலிங்கா (17), சின்மயி (19), பிரஜ்வல் (20) ஆகியோர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவசர ஏற்பாடுகள், போதுமான திட்டமிடல் இல்லாமை மற்றும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததே இந்த துயர சம்பவத்திற்குக் காரணம்.
பெங்களூரு விதானசௌதாவின் முன்பகுதியில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில், ஆளுநர், முதலமைச்சர் சித்தராமையை, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விராட் கோலி மற்றும் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
ரசிகர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், விதான சௌதாவில் இருந்து சின்னசாமி மைதானம் வரை நடைபெறவிருந்த பேரணி ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே, 35,000 இருக்கைகள் மட்டுமே கொண்ட சின்னசாமி மைதானத்துக்கு வெளியே மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
போதுமான ஏற்பாடுகள் இல்லாததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா ஒரு செய்தியாளர் சந்திப்பில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
குளோரின் மற்றும் Caustic Soda உற்பத்தி செய்யும் நோக்குடன் மக்கள் எதிர்பார்த்த பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலை மிக விரைவில் மீள இயக்கப்படவுள்ளதாக பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் சதானந்தம் நேசராஜன் தெரிவித்துள்ளார்.
பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையை மீள விரைவாக இயக்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆராயும் நோக்குடன் பரந்தன் கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையைச்சேர்ந்த உறுப்பினர்கள் இன்றைய தினம் கள விஜயம் மேற்கொண்டனர்.
அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
1954 பரந்தன் பக்றி என்ற பெயரில் ஆரம்பித்த குறித்த இரசாயன தொழிற்ச்சாலை பின்பு பரந்தன் கெமிக்கல் கோப்பிரேசன் என்ற பெயரில் இயங்கி வந்தது. நாட்டின் யுத்த நிலைமை காரணமாக 1983ம் ஆண்டுக்கு பின்பு இயங்கவில்லை.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததைத்தொடர்ந்து குறித்த தொழிற்சாலையை விரைவாக ஆரம்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறித்த இரசாயன தொழிற்சாலை மூலம் குளோரின் மற்றும் Caustic Soda உற்பத்தி செய்யப்படவுள்ளது.
தேசிய அளவில் நீர் சுத்திகரீப்புக்கு குளோரின் இறக்குமதி செய்யப்படுகின்றது. இங்கு உற்பத்தி செய்வதன் மூலம் இறக்குமதியை நிறுத்த முடியும் எனவும் இந்த மாவட்டத்தில் எங்களின் வளத்தை பயன்படுத்தி இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இலங்கை கடற்படையினர், நேற்று (2025 ஜூன் 04) கல்பிட்டி ஆலங்குடா கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட அறுநூறு சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் ஒரு (01) டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
அதன்படி, கல்பிட்டி ஆலங்குடா கடல் பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவுடன் இணைக்கப்பட்ட புலனாய்வு பணிக்குழு நடத்திய இந்த சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, ஒரு டிங்கி படகில் 17 சந்தேகத்திற்கிடமான பைகள் சோதனை செய்யப்பட்டன. அங்கு, கடற்படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் போது கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 600 கிலோகிராம் பீடி இலைகளுடன் டிங்கி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் சிறப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு
• சுற்றாடல் அழிவின் பின்னணியில் முன்னைய அரசியல் அதிகாரமும் இருந்தது, அந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்திவிட்டோம், இப்போது மாறுமாறு அதிகாரிகளுக்கு கூறுகிறோம்
கொங்கிறீட் பிளாஸ்டிக்கினால் அழிந்துள்ள சூழலை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
பொதுவான தேசிய உணர்வுடன் பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்றும், இந்தப் பொறுப்பை புறக்கணிக்கக் கூடாது என்றும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் இதில் இணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
கேகாலை நிதஹஸ் மாவத்தையில் இன்று (05) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் “பிளாஸ்டிக் பாவனையை ஒழிப்போம்” என்பதுடன், “முளைப்பதற்கு இடமளிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
சுற்றாடல் மறுமலர்ச்சிக்குத் தேவையான சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், உலக சுற்றாடல் தினத்தை ஒரு சம்பிரதாயமாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறது.
பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், 03 சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இந்த நிகழ்வில் இடம்பெற்றன.
சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், அனைத்து அரச நிறுவனங்கள், “Clean Sri Lanka” செயலகம் மற்றும் சுற்றாடல் அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை
இன்றைய நாள் மிக முக்கியமான நாள். நான் பல கூட்டங்களில் உரையாற்றியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இன்று எனக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் உரை மாத்திரமல்ல.
நமது தாய்நாடு மற்றும் நமது சுற்றாடல் கட்டமைப்பு பற்றிய பிணைப்பு, பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்வு வெறும் விழா மாத்திரம் அல்ல. சுற்றாடல் கட்டமைப்பு மீதான நமது பிணைப்பு, உணர்வுகள் மற்றும் பொறுப்புகளின் பிரகடனம் இது என்று நான் நம்புகிறேன். நாம் ஒரு வெளிநாட்டவரைச் சந்தித்தால், அவர்கள் அனைவரும் உங்கள் நாடு அழகாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நமது நாட்டின் சுற்றாடல் கட்டமைப்பு குறித்து நமக்கு மிகவும் பெறுமதிமிக்க வரலாறு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பு இன்று நமது நாட்டை அழகாக மாற்றியுள்ளது.
ஆனால் நாம் காணும் இந்த அழகுக்குப் பின்னால், மிக ஆழமான ஒரு துக்கம் இருக்கிறது. நாம் பார்க்கும் இந்த அழகு உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்பில் இருக்கிறதா? அதைவிட ஆழமான சோகத்தை நாம் சந்தித்திருக்கிறோம். நாங்கள் குழந்தையாக இருந்தபோது, எங்கள் நாட்டை நிலச்சரிவு இல்லாத நாடாக அடையாளம் கண்டோம். ஆனால் எங்கள் வாழ்நாளிலேயே, நிலச்சரிவுகளின் துயரத்தை நாங்கள் அனுபவிக்கிறோம்.
நாங்கள் இளமையாக இருந்தபோது, வெள்ளம் மற்றும் பாரிய வறட்சி இல்லாத ஒரு நாடாக எங்கள் நாட்டை கண்டோம். அந்த உரிமையுடன் பிறந்த நாம், எமது வாழ்நாளில் பாரிய வெள்ளம் மற்றும் பாரிய வறட்சியின் பேரழிவை அனுபவிக்கிறோம். மேலும், மனித-யானை மோதல் ஒரு பாரிய சோகமாக மாறிவிட்டது. மிகச் சிறந்த உயிரியல் பன்முகத்தன்மை
கொண்டிருந்த நமது நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் இடையே ஒரு பாரிய மோதல் உருவாகியுள்ளது.
எனவே, இன்று வாழும் நமக்கு, நாம் கைவிட முடியாத ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளன. இந்த நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க வேண்டும்.
இந்த சோகம் இப்படியே தொடர்ந்தால், நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாரிய துயரத்தையே விட்டுச் செல்வோம். எனவே, இன்று வாழும் பிரஜைகளாக, இந்த சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்து, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது நமது கைவிட முடியாத பொறுப்பாகும். இந்தச் சுற்றாடலுக்குப் பின்னால் ஏராளமான வலுவான சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன. நமது நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த சட்டங்களும் விதிமுறைகளும் சுற்றுச்சூழல் துறையில் உள்ளன. மேலும் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மிகவும் முறையான அரச பொறிமுறையும் உள்ளது.
முதலாவதாக, இந்த அழிவுகளுக்குப் பின்னால் அரசியல் சக்தி இருக்கிறது. நம் நாட்டில் உள்ள ஏராளமான மணல் அகழ்வு பிரதேசங்கள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை, அல்லது ஒரு அரசியல்வாதிக்கு நெருக்கமான ஒருவருக்குச் சொந்தமானவை. இந்த நிலைமையை என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். நமது காடுகள் அழிக்கப்பட்டதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்தக் காடுகள் அழிக்கப்படுவது, அரசியல் அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்டது.
உயிரைக் கொல்வதற்கு பங்கேற்க வேண்டாம். உயிரைக் கொடுக்க பங்கெடுங்கள். அதற்குத் தேவையான அரசியல் பாதுகாப்பை நாங்கள் வழங்குவோம். அரசியல் அதிகாரம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், பழைய அதிகாரத்துவ பொறிமுறையின் சில பகுதிகள் பழைய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடத் தவறிவிட்டன. போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்த அதிகாரிகளுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பொருட்களை வெளியேவிட்ட அதிகாரிகளுக்கு எதிராக சுங்கத் துறையும் பல்வேறு விதிமீறல்களைச் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சுரங்கப் பணியகமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
அதனால்தான் பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறோம். நான் மீண்டும் கூறுகிறேன், மாறுங்கள், இல்லையெனில் நாம் மாற்றுவோம்.
நான் அநுராதபுரத்தில் இருந்தபோது, ஆறு அடி தோண்டினாலும் நகரத்தில் நீர் இருந்தது. ஆனால் இப்போது, எவ்வளவு ஆழமாகத் தோண்டினாலும், அநுராதபுரத்தில் நீர் கிடைக்காது. எங்கள் வாழ்நாளில் அநுராதபுரத்தில் நீர் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.
கடந்த காலத்தில் கடுகன்னாவை ஏறும் போது ஆறுகளின் சத்தமும், நீர்வீழ்ச்சிகளின் சத்தமும் கேட்கும். எங்கள் காதுகள் அடைக்கப்பட்டன. இப்போது அது நடக்கவில்லை, சூழல் வறண்டுவிட்டது. இந்த துயரத்தை நம் வாழ்நாளில் அனுபவிக்கும் ஒரு தலைமுறையாக நாம் மாறிவிட்டோம்.
மத்திய மலைநாட்டில் உள்ள ஏராளமான நீர்த்தேக்கங்கள் சேற்றால் நிரம்பியுள்ளன. சுற்றுச்சூழல் திட்டங்களை உருவாக்கும்போது சுற்றுச்சூழலைப் பற்றி சிந்தித்தோமா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றில் நமது முன்னோர்கள் மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களைக் உருவாக்கவில்லை. எல்லோரும் மத்திய மலைப்பகுதியைப் பாதுகாத்து, அதிலிருந்து நீரைத் திருப்பி நீர்த்தேக்கங்களை உருவாக்கினார்கள். மினிப்பே கால்வாய் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், மத்திய மலைப்பகுதிகளில்தான் அதிக யானைகள் இருந்தன.
இன்று, நமது சுற்றுச்சூழல் அமைப்பில் கொக்குகளையோ அல்லது வண்ணத்துப் பூச்சிகளையோ நாம் காணவில்லை. மனிதனால் ஏற்படும் பேரழிவின் விளைவுகளை நாம் காணலாம். இன்று, வண்ணத்துப் பூச்சிகள் காணப்படாத ஒரு நாட்டில் சிறு குழந்தைகள் வளர்கிறார்கள். எனவே, வண்ணத்துப் பூச்சிகள் திரும்பி வரும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது நமது பொறுப்பு.
எந்தவொரு துறையைப் பற்றியும் வெவ்வேறு எண்ணக்கருக்கள் இருக்கலாம். பொருளாதாரத் துறைக்கும் கல்வித் துறைக்கும் வேறுபட்ட எண்ணக்கருக்கள் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய ஒரே ஒரு எண்ணக்கரு மாத்திரமே இருக்க முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது பெரியவர்களாகிய நமது பொறுப்பு. இதைச் செயல்படுத்த மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். எனவே, நமது சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி சுற்றுச்சூழல் பிரச்சினையில் ஒன்றுபடலாம். தேசிய பிரச்சினை எதுவாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பிரச்சினையில் நாம் ஒன்றாக இருக்கலாம். சுற்றுச்சூழல் துறை மூலம் தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும். பொதுவான தேசிய உணர்வுடன் கூடிய ஒரு தேசிய சூழலை உருவாக்க
நமக்கு வாய்ப்பு உள்ளது. அதனால்தான் “முளைப்பதற்கு இடமளியுங்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.
இந்த மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். வறண்ட நிலத்தை, நீர் கட்டமைப்பின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை, கான்கிரீட் பிளாஸ்டிக்கின் பாதிப்பால்
அழித்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
உலக நாடுகளுக்கு நாங்கள் கூறுவது இதுதான். அளவில் நாம் ஒரு சிறிய தீவாக இருக்கலாம். ஆனால் இன்று நாம் மனசாட்சியின் பாரிய சக்தியாக நிற்க முடியும். ஒன்றாகச் சேர்ந்து, நம் நாட்டை மீண்டும் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடாக மாற்ற முடியும்.
அப்போது முழு உலகமும் இலங்கையைப் பார்த்து இவ்வாறு கூறும்:
மண்ணை ஆன்மாவாக மாற்றிய ஒரு தேசம் இது. பூமியுடன் முரண்படாமல் பூமியுடன் இணைந்திருக்கும் ஒரு தேசம் இது. இன்று நாம் பூமியுடன் முரண்படுகிறோம். பூமியுடன் சமாதானமாக இருக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதை நமது கனவாக மாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, வேடுவத் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அரசாங்க மருந்தாளர் சங்கம் மேற்கொண்டுள்ள ஒருநாள் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலும் நோயாளர்கள் பெரும் அசெளகரியத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பதவி உயர்வு முறை தொடர்பான பிரச்சனையை அனைவருக்கும் நியாயமாக தீர்க்கப்படவில்லை, இதன் விளைவாக கணிசமான எண்ணிக்கையிலான மூத்த அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு இழப்பு ஏற்பட்டமை.
வகுப்பு I அதிகாரிகளுக்கான முன்மொழியப்பட்ட செயல்திறன் தடை தொடர்பாக சுகாதார அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட மேலாண்மைப் பயிற்சியை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கத் தவறியமை.
பட்டதாரி பயிற்சிகளுக்கு வேறு பெயர்களைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்தமை.
பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் தகுதிப் பட்டியலைப் பயன்படுத்த ஒப்புதல் வழங்கத் தவறியமை.
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருந்தாளர் சங்கம் ஒரு நாள் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பிரச்சனையை உரிய அதிகாரிகள் தீர்க்க வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், இன்றைய தினம் மாதாந்த சிகிச்சை தினமாகையால் சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று மருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நோயாளர்கள் அசெளகரியங்களை எதிர்நோக்கினர்.