Home Blog Page 157

உலகையே திரும்பிப் பார்க்கவைத்த டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்!

எலான் மஸ்க்குக்கு டெஸ்லா நிறுவனம் 1 லட்சம் கோடி டாலர் ஊதியத்தை ஒப்புதல் அளித்துள்ளது. இது உலக வரலாற்றில் எந்த தலைமைச் செயல் அதிகாரிக்கும் கிடைக்காத அளவுக்கு மிகப்பெரிய தொகையாகும். மஸ்க் நினைத்தால், இந்த தொகையில் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வழங்க முடியும்.

எலான் மஸ்க்குக்கு 1 லட்சம் கோடி டாலர் ஊதியத் தொகுப்பு வழங்க டெஸ்லா நிறுவனத்தின் 75 சதவீத பங்குதாரர்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஏனென்றால், உலக வரலாற்றில் இதுவரையில் எந்த தலைமைச் செயல் அதிகாரிக்கும் கிடைத்திராத ஊதியம் என்பதல்ல, யாரும் கற்பனை கூட செய்துபாத்திராத தொகை இது.

ஆப்பிள் சிஇஓ டிம் குக்குக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதியத் தொகுப்பைவிட இது 13 ஆயிரத்து 400 மடங்கு அதிகம். ஆல்ஃபபெட் சிஇஓ சுந்தர்பிச்சைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதியத் தொகுப்பைவிட 4 ஆயிரத்து 500 மடங்கு அதிகம்.

எலான் மஸ்க்குக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஒரு ட்ரில்லியன் டாலர் ஊதியத் தொகுப்பு என்பது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த ஜிடிபியைவிட அதிகம். இன்னும் சொல்லப்போனால் 180 நாடுகளின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தியை விட அதிகமாகும். ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2030-க்குள் உலகப் பசியை ஒழிக்கத் தேவைப்படும் மொத்தத் தொகையை விடவும் இது இரண்டு மடங்குக்கும் மேல் அதிகம்.

மஸ்க் நினைத்தால், தனது இந்தத் தொகையில், பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 கொடுக்க முடியும்.

தற்போது மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உள்ளது. தற்போது அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஊதிய தொகுப்பு அவரது மொத்த சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகம். நிர்ணயிக்கப்பட்டிருக்கும் டெஸ்லா இலக்குகளை எலான் மஸ்க் எட்டினால், அவருக்கு இந்த ஊதியத் தொகுப்பு முழுமையாக கிடைக்கும்.

T20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தான் போட்டிகள் இலங்கையில்!

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து அடுத்த ஆண்டு நடத்தும் T20 ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்தியாவின் அகமதாபாத், டெல்லி, கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இலங்கையில் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், கொழும்பு ஆர். பிரேமதாச மற்றும் பல்லேகல மைதானங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 

T20 உலகக் கிண்ணம் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகி, இறுதிப் போட்டி மார்ச் 8 ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. 

ICC வழிகாட்டுதலின்படி, போட்டித் தொடர் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் போட்டி அட்டவணை வெளியிடப்பட வேண்டும். அதன்படி, இது பெரும்பாலும் எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. 

இந்திய கிரிக்கெட் சபைக்கும் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் ஒன்று தொடரை நடத்தும் போது, மற்றைய நாடு நடுநிலை இடத்தில் விளையாடும். 

இதன் காரணமாக, பாகிஸ்தான் தனது அனைத்துப் போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். 

பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், இறுதிப் போட்டியும் இலங்கையிலேயே நடைபெறும். 

இந்த முறை போட்டித் தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன. 

ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில், அணிகள் தலா 4 வீதம் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன. 

அந்த இரண்டு குழுக்களிலும் முன்னிலை வகிக்கும் தலா இரண்டு அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். 

இந்தத் தொடரில் விளையாடத் தகுதி பெற்றுள்ள நாடுகள் பின்வருமாறு: 

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நேபாளம், ஓமான், ஐக்கியஅரபு அமீரகம், நமீபியா, சிம்பாப்வே

பெண் தலைவர்களை வலுப்படுத்த யாழ்ப்பாணத்தில் வேலைத்திட்டம்!

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியன இணைந்து ஏற்பாடு

இலங்கை முழுவதிலுமுள்ள பெண் தலைமைத்துவங்களுக்கிடையிலான தொடர்புகளை உருவாக்குவதன் முதற்படியாக ‘இணைக்கும் குரல்கள்’ – பெண் தலைவர்களுக்கான பிராந்திய பரிமாற்ற நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் ஆகியன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன.

பாராளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்கள், கல்வி மற்றும் வணிகத் துறைகளிலிருந்தான தேசிய மற்றும் மாவட்ட ரீதியிலுள்ள பெண் தலைவர்களை ஒன்றாக இணைக்கும் நிகழ்வாக இது அமைந்ததுடன், இங்கு அனுபவங்கள், தடைகள் மற்றும் பெண் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்கு அடையாளம் காணப்பட்ட நடைமுறைத் தீர்வுகள் குறித்துப் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஒன்றியத்தின் கௌரவ உறுப்பினர்களான ஹேமாலி வீரசேகர, ஹசாரா லியனகே, துஷாரி ஜயசிங்க, அனுஷ்கா திலகரத்ன, எம்.ஏ.சி.எஸ்.சதுரி கங்கானி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசூசா குபோடா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான பாராளுமன்றம் மற்றும் ஊடகத்துறை நிபுணர் சதுரங்க ஹப்புஆரச்சி ஆகியோர் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவுப்படுத்தும் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.

நிலையான வழிகாட்டுதல் வலையமைப்பை உருவாக்குவதற்கும், வடக்கில் உள்ள பெண் தலைமைத்துவங்களிடமிருந்து முக்கிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்று அவற்றை உள்ளடக்கிய அறிக்கையை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை இந்தத் தளம் உருவாக்கியது.

தலைமைத்துவத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும், இலங்கை முழுவதும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் ஆதார அடிப்படையிலான கொள்கை முடிவுகளை முன்னெடுப்பதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்திற்கு இந்த அறிக்கை உறுதுணையாக இருக்கும்.

3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் 3 பேர் கைது!

காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் இன்று (08) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பா.உறுப்பினர் சாணக்கியனின் தந்தை காலமானார்!

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையாரும், மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி. மூ. இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசாமாணிக்கம் நேற்று (07) பிற்பகல் இறைவனடி சேர்ந்தார். 

காலமாகும் போது அவரது வயது 67 ஆகும். (பிறப்பு: 13.06.1958, இறப்பு: 07.11.2025) 

அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Home-இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் எரியூட்டப்படும் என ​தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

2025 நவம்பர் 08ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வரவு செலவுத் திட்டத்தை கடுமையாக சாடிய சஜித்!

இன்று (07) சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது, மக்களுக்கு சலுகைகள் இல்லாத, சர்வதேச நாணய நிதியத்தின் வெறும் வரவு செலவுத் திட்டமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விமர்சித்துள்ளார். 

வரவு செலவுத் திட்ட உரை முடிந்த பின்னர், பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டமாக அமையவில்லை. 

நாட்டு மக்கள் இன்று பல துயரமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். வறுமை அதிகரித்து காணப்படுகிறது. வேலையின்மையும் அதிகரித்துள்ளது. 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% இற்கு மேலாகப் பங்களிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் தொழில் நடவடிக்கைகள் வீழ்ச்சி கண்டு, அவர்களது வாழ்க்கை சீர்குலைந்து போயுள்ளது. இவர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கத்தால் முடியவில்லை. 

விவசாயிகள், மீனவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையில்லாப் பட்டதாரிகள் என அனைவரும் தங்கள் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வுகளும் இல்லாமல் தவிக்கின்றனர். 

இந்த வரவு செலவுத் திட்டமானது ஏமாற்று, பொய்கள் மற்றும் தமது இருப்பை முன்னோக்கி கொண்டு செல்லும் வரவு செலவுத் திட்டமாக அமைந்து காணப்படுகின்றது. 

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சட்டக் கட்டமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குவேன் என்று ஜனாதிபதி கூறினாலும், அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் இந்நேரத்தில், இது தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என்று சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளார். 

இதற்கு முன்னர் இந்த அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குறித்து ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு வந்தது. ஆனால் இன்று திசைகாட்டி அரசாங்கத்தைச் சேர்ந்தோர் இந்த போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய பிற்பாடு, இவற்றை ஊடகங்களில் காண்பிப்பதைத் தவிர்த்து, அதனை மறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்த அரசாங்கம் இரட்டை நாக்கு கொண்ட அரசாங்கமாக காணப்படுகின்றது. இது மக்களுக்கு நிவாரணம் வழங்காத, IMF எழுதிய வரவு செலவுத் திட்டத்தின் வடிவத்தை எடுத்த வரவு செலவுத் திட்டமாகும். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எதுவும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கவில்லை. 

முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டக் கருத்திட்டங்களுக்கு மிகக் குறைந்த தொகையே ஒதுக்கப்பட்டுள்ளன. 

2025 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைப் பார்க்கும்போது, ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு ஒதுக்கீடுகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கை முன்வைக்கப்பட வேண்டும். அது இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை. 

இவ்வாறு முன்னேற்ற மீளாய்வுகளை சமர்ப்பிக்காத நிதியமைச்சரான ஜனாதிபதி இன்று பொய்களை அடிக்கி வைத்தார். இந்த ஆளும் தரப்பினர் மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசாங்கத்திற்கு இன்னும் மனச்சாட்சி வரவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டம் 2026 ஒரே பார்வை!

கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் நிதி அமைச்சர் என்ற ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை (வரவுசெலவுத்திட்ட உரை) நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.

இன்று பி.ப 1.30 மணிக்கு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டுடன் கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உள்ள ஜனாதிபதியின் அலுவலகத்திலிருந்து சம்பிரதாய பூர்வமாக படைக்கல சேவிதர் அழைத்துவர சபா மண்டபத்திற்கு வருகை தந்ததுடன் பி.ப 5.50 மணிவரை வரவுசெலவுத்திட்ட உரையை முன்வைத்தார்.

புதிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத்திட்டமான இது சுதந்திர இலங்கையின் 80வது வரவுசெலவுத்திட்டமாக வரலாற்றில் பதிவாகிறது. வெளிநாட்டுத் தூதுவர்கள், ஆளுநர்கள், உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள், பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள், நீதிபதிகள் உள்ளிட்ட விருந்தினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை 6 நாட்கள் இடம்பெறும். அதன்பின்னர் நவம்பர் 14 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.

இதனைத் தொடர்ந்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலையின் போதன விவாதம் நவம்பர் 15 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 3 சனிக்கிழமை தினங்கள் உள்ளடங்கலாக 17 நாட்கள் நடைபெறவுள்ளது. அதனையடுத்து ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி பி.ப. 6.00 மணிக்கு இடம்பெறும்.

இன்றைய வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் ஒரே பார்வையில்..

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்

  • புதிய தீர்வை வரிக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கும் , புதிய ஏற்றுமதி உற்பத்தி  மற்றும் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் தேசிய தனிவர்த்தக கரும பீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல்
  • 2028 ஆம் வருடத்தில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முடியாத நிலை தோன்றுமென அடிப்படையற்ற கருத்துக்களை ஒருசில தரப்பினர்கள் சமூகத்திற்கு எடுத்துரைத்த வண்ணம் இருக்கின்றார்கள். 2024 ஆம் வருடத்தில் 1,674 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைப் பணமாகவும் வட்டியாகவும் செலுத்தி முடித்துள்ளோம். 2025 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும்போது 1,948 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.

    நடுத்தர கால பேரண்டப் பொருளாதாரப் போக்கு
  • எமது பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் சமமான காலப்பகுதியில் 4.8 வீதம்வரை அதிகரித்தது. வேலையின்மை 2024 ஆம் வருடத்தின்  முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் 3.8 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

    முதலீட்டிற்கு அனுகூலமான சூழலை உருவாக்கல்
  • முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், முதலீடுகளை பாதுகாப்பதற்குமாக புதிய “முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்” 2026 ஆண்டு முற்பகுதியில் அங்கீகரிக்கப்படும்.  

    இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம்
  • கைத்தொழில் வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து உரிய முறையில்  முகாமை செய்வதற்காக 2026 இல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனிற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு  முன்மொழிவு.

    வலதுகுறைந்த சமூகத்திற்கு உதவி செய்தல்
  • அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின் 3 சதவீதம்  வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளபோதும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோரை  தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா  15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில்  50 சதவீத சம்பள உதவித் தொகை  24 மாதங்கள் வரை அரசாங்கத்​தினால் செலுத்துவதற்கு ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    கல்வியும் பயிற்சியும்
  • கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை.
  • மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு.
  • சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு. இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு.
  • உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஈடுகொடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை  கொடுப்பனவுகளை 2026 இலும் ரூபா  2,500 மூலம் அதிகரிப்பதற்கு முன்மொழிவு. அதற்கமைய, மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை  கொடுப்பனவு ரூபா  9,000 ஆகவும் அதிகரிக்கப்படும்.  அதேபோன்று “நிபுணதா சிசுதிரிய கொடுப்பனவு” ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்படும்.
  • தேசிய கல்விக் கல்லூரி புலமைப்பரிசில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 2,500 இனால் அதிகரிப்பதற்கு  முன்மொழிவு.

    சுகாதாரம்
  • இரண்டாம் நிலை சுகாதாரசேவைகள் 82 தள வைத்தியசாலை (Base Hospitals) களினூடாக வழங்கப்படுகின்றன. வைத்தியசாலைகள் அநேகமானவற்றில் வசதிகள் அண்மைகாலங்களில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இவ்வைத்தயசாலைகளை அபிவிருத்தி  செய்வதன் மூலம் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றின் முதலாவது ஆண்டனைத் தொடங்குவதற்கு ரூபா  31,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • ரூபா 12,000 மில்லியன் செலவில் அதிக இடவசதி மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய 16 மாடி கொண்ட தேசிய இருதய பிரிவொன்றை தாபிப்பதற்குத் தேவையான தொடக்கப் பணியினை ஆரம்பிப்பதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு.
  • மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் தலசீமியா நோயாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா  10,000 கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்
  • ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இவ் ரூபா 1,5​50 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 20​​0 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிவு.

    பிரதேச அபிவிருத்தி
  • இடைநிறுத்தப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணம் மீள தொடங்கப்பட்டு முக்கிய சந்திகள் விரிவுபடுத்தப்படும். அதற்கமைய கிராமிய வீதிகளுக்காக ரூபா 24,000 மில்லியனும், கிராமிய பாலங்களுக்காக ரூபா 2,500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான சலுகைகள்
  • வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டுக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படும். அது வட்டி மீளளிப்பிற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நிதியத்தினை பயன்படுத்தி வட்டியை மீளளிப்புச் செய்ய முன்மொழிவு. அதேபோல், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யப்படும்.

    மனித-யானை மோதலைக் குறைத்தல்
  • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான 294 வாகனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதி.
  • யானை வேலி கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலினை குறைப்பதற்காக விசேட பயிற்சி வழங்கப்பட்ட சிவில் பாதுகாப்பு சேவை அலுவலர்கள் 5,000 பேரினை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு முன்மொழிவு.
  • வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    ஊடகத்துறை மேம்பாடு
  • ஊடகவியலாளர்களின் திறன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயர் கல்வி புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு மற்றும் ஊடகவாகத்திற்கு அவசியமான தொழில்நுட்ப பிரவேசத்திற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குதல்
  • விளையாட்டுக் கலாச்சாரத்தை விருத்திசெய்தலானது, சமூகத்தில் ஆரோக்கியமான, ஒற்றுமையான மற்றும் “பலமான குடிமகன் – வெற்றிகரமான மக்களை” உருவாக்குகிறது. எனவே, விளையாட்டு வசதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூபா 800 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிவு.
  • கல்முனை விளையாட்டரங்கினை நிறைவு செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளை  அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

    பொருளாதார சுயாதீனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு
  • ரூபா 500 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கட்டப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் செயற்படாதிருக்கும் தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்தப்படுதல் வேண்டும். இக்களஞ்சியமானது, சுமார் 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்டதாகும். இக் களஞ்சியத்தினைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்யவும், சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
  • மில்கோ (பிரைவட்) லிமிடெட்டின் படல்கம பால் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படல்கம பால் தொழிற்சாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளதுடன், அதற்காக ஏற்கனவே சுமார் ரூபா 18,000 மில்லியன் மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது. தொழிற்சாலையின் மீதமுள்ள பணிகளை நிறைவுசெய்யத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு, குறிப்பாக இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களைத் திருத்தி உற்பத்தியைத் தொடங்குவதற்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.

    தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்தல்
  • இலங்கையின் வருடாந்த தெங்கு உற்பத்தி சுமார் 2,800 – 3,000 மில்லியன் தேங்காய்கள் என்பதுடன் இதில் சுமார் 70 வீதம் வீட்டு நுகர்வுக்காகவும் மீதி தெங்குசார் உற்பத்திக் கைத்தொழில்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. எவ்வாறாயினும், தற்போதைய வருடாந்த தெங்கு உற்பத்தி வீட்டு நுகர்வுக்கு போதுமாக இருந்த போதிலும், இது கைத்தொழில் கேள்விக்கு  ஏற்ற வழங்கலை நிறைவு  செய்வதற்கு போதுமானதல்ல. அதனால், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகால உபாயவழியாக, தெங்கு  ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில்  ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வடக்கு தெங்கு  முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிவு.
  • பாதுகாப்பானதும் தரமானதுமான மீன்பிடி படகுகளை இயக்குவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், வினைத்திறனைக் கூட்டுதல் மற்றும் விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் மீது கவனம் செலுத்திய வண்ணம், பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபா 300 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.

    மேலும், மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை  தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைப்பு.
  • விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதனூடாக தரமானதும் போதியதுமான மீண் விளைச்சலை பெற்றுக்கொள்வதன் மூலம் மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    நீர்ப்பாசனக் கைத்தொழிலும் நீர்வழங்கலும்
  • வடக்கு மாகாணத்தின் யோதவாவியுடன் இணைந்த காணிகளில் விவசாயத்துறைக்கு ஈடுபடுத்தல், ஏற்கனவே உள்ள காணிகளின் உற்பத்தி விளைவுப் பெருக்கத்தை அதிகரித்தல், அதேபோன்று குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம். முதலான கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக ரூபா 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • அணைக்கட்டுகள் மற்றும் வாவிகளை புனரமைத்தல்: சேனாநாயக்க சமுத்திரத்தின் வாண் கதவுகளை புனரமைக்கும் பணிகளை துரிதமாக ஆரம்பித்தல் உள்ளிட்ட கல்ஓயா, இராஜாங்கனய ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அருவித்தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபா 8,350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 650 குளங்கள் மற்றும் 350 கிலோமீற்றர் வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

    நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தல்
  • வெள்ளப்பெருக்கு காரணமாக அவதியுறும் கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, மன்னார், புத்தளம் ஆகிய நகரங்கள் சார்ந்ததாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல் செய்வதற்கும் இவ் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 250 மில்லியன் ஒதுக்கீடு.
  • வளவ கங்கைக்கு மேலதிக நீரை அனுப்புவதற்கு மேலதிகமாக தற்சமயம் இரத்தினபுரி மற்றும் களுத்தறை மாவட்டங்களில் காணப்படுகின்ற வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கும் பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.
  • மாத்தறை நில்வளா கங்கைக்கு குறுக்காக 2022 ஆம் வருடத்தில் முடிக்கப்பட்ட உவர்நீர் தடுப்பு காரணமாக தற்சமயம் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இது சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே, அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படுகின்ற தீர்வுகளை அமுல் செய்வதற்கு ரூபா 1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.  அதேபோல் இவ் வெள்ள அனர்த்த்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு  முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அவதானத்தை கட்டுப்படுத்துவதற்காக கிரான் பாலத்தையும், பொண்டுக்கள் சேனை பாலத்தையும் நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூபா 500 மில்லியன் நிதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    குடிநீர் வழங்கலை மேம்படுத்தல்
  • கம்பஹா,  களுத்துறை, அநுராதபுரம், கண்டி,யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் குருணாகல் முதலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமாக குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களை  செயற்படுத்துவதற்கு ரூபா 85,700 மில்லியன் ஒதுக்கீடு.

    பொதுப் போக்குவரத்து
  • “பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை – வினைத்திறன் மிக்க பயணமுடிவு” என்ற அரசாங்கத்தின் நீண்டகால நோக்கை அடைவதற்கு  வினைத்திறன் மிக்கதும் நிலைபேறானதுமான பயணிகள் போக்குவரத்து முறைமையொன்றை ஏற்படுத்துவதே தற்போதய அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும். இதற்காக இவ்வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 67,200 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.
  • பொதுப் போக்குவரத்துத் துறையை பலப்படுத்தும் பொருட்டு தூர பயணச் சேவைகளுக்காக 600 பஸ் வண்டிகள் இலங்கைப் போக்குவரத்து சபை மூலம் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது.
  • ஒரு சில வீதிகளில் ஓடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமை காரணமாக தனியார்துறை போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் தமது பஸ் வண்டிகளை அவ் வீதிகளில் செலுத்துவதை மட்டுப்படுத்துகின்றார்கள். நிலைபேறான போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு யோசனை முன்வைக்கப்படுவதுடன், இடைக்காலத் தீர்வொன்றாக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.

    வீதி அபிவிருத்தி
  • நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெரும்பாலான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. மீண்டும் அவ்வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 2026 ஆம் வருடத்திற்கு ரூபா 342,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 66,150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்
  • இலங்கை பொலிஸ் வீதி விபத்துக்கள் அறிக்கைக்க​ அமைய 2024 ஆம் வருடத்தில் 24,589 வீதி விபத்துக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 2,262 உயிராபத்து விபத்துக்கள் ஆகும். இவ் விபத்துக்கள் காரணமாக 2,368 உயிர்கள்  இழக்கப்பட்டுள்ளன. வீதிப் பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பரந்த அளவிலான  வீதிப் பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மேலும், ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிவு.

    நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை
  • யாழ்ப்பாணம், எஹெலியகொடை, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளடங்கலாக தீவு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10 நகரங்களின் சாத்திய வளங்களை அடையாளங்காணும் ஆரம்ப பணிக்காக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட அதேவேளை தேவை மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி அமைச்சின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்காக, ரூபா 900 மில்லியன் நிதி ஒதுக்கீடு.

    சகலருக்கும் பாதுகாப்பான உறைவிடம்
  • வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை 2026 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், அவ்வேலைத் திட்டத்தின் கீழ், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பு.
  • குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் “தமக்கெனதோர் இல்லம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி நிகழ்ச்சிதிட்டம்  கட்டம் கட்டமாக  நடைமுறைபடுத்தபடும், மேலும், அதன் கீழ் நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நோக்கத்திற்காக, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 3,000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்ய முன்மொழிவு.
  • அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 15,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
  • மகறகமை மற்றும் கொட்டாவை ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதேவேளை,  அதற்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காகவும் வீடுகள் வழங்கப்படும்.
  • இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சபிரகமுவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு  ரூபா 1,305 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மண்சரிவு மற்றும் வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 9,000 கிராமப்புற மற்றும் தோட்டப்புற குடும்ப அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாண்டில் 1,200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 2,000 மில்லியன்  நிதி ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக  2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு  தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

    அரச சேவைக்கான ஆட்சேர்ப்பினை முறைப்படுத்தல்
  • பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவியணி முகாமைக்கான குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர் சுமார் 75,000 பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள்/ உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இயந்திரோபகரணங்களை பெற்றுக்கொடுத்தல்
  • அரச  நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரோபகரணங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை  இதற்காக ஆரம்பத்தில் ரூபா 12,500 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.

    அரசாங்க நிறுவனங்களில் நிலுவையில் உள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளைத் தீர்ப்பனவுசெய்தல்
  • பல அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு பணியாளர்ளை ஆட்சேர்ப்புச் செய்யும்போது  அரசியல் ஆதரவை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு  வழங்கும் இடங்களாகவும்  முறையான முகாமைத்துவ அல்லது நிதி ஒழுக்கம்  இல்லாமல் செயற்பட்டதால் பல அரசாங்க  நிறுவனங்கள்  மக்களுக்கு  பெரும் சுமையாக மாறி, வங்கிகளுக்கு கடன்பட்டு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் வரிகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • 1.  வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) நிறுவனம்
  • 2. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை
  • 3. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்
  • 4. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
  • 5. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்
  • 6. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை
  • 7.  வரையறுக்கப்பட்ட எல்கடுவ  பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்
  • 8. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
  • 9. நோர்த் சீ நிறுவனம்
  • 10. சிலோன் செரமிக்ஸ் கூட்டுத்தாபனம்

    ஆகிய 10  அரசு தொழில்முயற்சிகளில் நிலுவையாக உள்ள  ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், பணிக்கொடை போன்ற நியதிச்சட்ட கொடுப்பனவுகள் மற்றும் வரிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பனவு செய்வதற்கு ரூபா 11,000 மில்லியன்  தேவைப்படுகிறது. இவ்வாறு செலுத்தப்படாத நியதிச்சட்டக் கொடுப்பனவுகளை, கட்டம் கட்டமாக செலுத்த முன்மொழியும் அதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிவு.
  • கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில்  பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கும் அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர்  கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் முன்மொழிவு.

    வாகனங்கள் மீது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை விதித்தல்
  • வாகனங்கள் விற்பனையின் போது அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு முறையாக அறவிடப்படுவதில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. எனவே, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது உற்பத்தி  மற்றும் விற்னையின் போது  சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை சேகரித்து, விற்பனைக்குப் பின்னான சந்தர்ப்பத்தில் இந்த வரியை விலக்களிக்க முன்மொழிகின்றேன். இதனை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

    தேசிய தீர்வைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்
  • தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிவு.

இலங்கையின் பரந்த பொருளாதார  மறுசீரமைப்பு  நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும், உலகில் முதற் தர சுற்றுலா பயணிகள் அடைவிடமாகவும் சர்வதேச மட்டத்தில் பேர்பெற்றுள்ள தருணத்தில், உலகில் சனநாயக சுட்டிக்கு  அமைவாக எமது தேசம் 15 படிகள் முன்னேற்றமடைந்துள்ள இத் தருணத்தில், உலகில் ஊழலுக்கு எதிரான செயன்முறை சிறந்த பாராட்டத்தைப் பெற்றுள்ள இத்தருணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூபா 5,000 கொடுப்பனவு!

  • தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு  புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான  செலவைக் குறைத்து அவர்களின்  கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில்  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா  6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம்  தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி  பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000  கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு  செலவுத்திட்டத்திலிருந்து ரூபா  50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.
  • கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும்  மாணவர்களின்  எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது  பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது.  எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது​ கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு  ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு   செய்யப்பட்டுள்ளது.

புதிய பட்ஜெட்டில் வலதுகுறைந்த சமூகத்திற்கு சிறப்புத் திட்டம்!

நாடுபூராகவும் சிதறிவாழும் சுமார் 1.6 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட வலது குறைந்த சமூகம், நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 7 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய பிரகடனத்தை அங்கீகரித்த நாடு என்ற வகையில் அச்சமூகத்தின் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பினை அரசு கொண்டுள்ளது.

  •  அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுமார் 140,000 வலது குறைந்த மக்களுக்கு ரூபா 10,000 வீதப்படி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபா 19,000 மில்லியன் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.
  • வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வலது குறைந்தோர்களுக்கான அணுகுமுறை ஒழுங்கு விதிகளை, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் வகுப்பதை பிரதான பணியாகக்  கொண்டு சர்வதேச தரங்களுக்கும் அளவு கோள்களுக்கும் ஏற்ப திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோர்களுக்காக  பிரதேச  செயலகங்கள், புகையிரத நிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்குதல்  என்பவற்றுக்காக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா  1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.
  • வலது குறைந்தோரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின்  3 சதவீதம்  வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என  உத்தயோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாயினும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே,  அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • வலது குறைந்தோரின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்குப் பெற்றுக் கொள்வதை நோக்காகக்   கொண்டு, தனியார் தொழில்தருநர்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்தல் எனும் நோக்குடன் தொழில் ஒன்றில் ஈடுபடக்கூடிய மட்டத்தில் இருக்கின்ற வலது குறைந்தோரை  தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா  15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில்  50 சதவீத சம்பள உதவித் தொகை  24 மாதங்கள் வரை அரசாங்கத்​தினால் செலுத்துவதற்கு நாங்கள் பிரேரணை முன்மொழிகின்றோம். இதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.
  • ஒட்டிசம் உள்ளிட்ட வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக பகல்நேர பேணிப்பாதுகாத்தல் நிலையங்களை அமைக்கும் பணிகள், சுகாதார  அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இப் பணிகளை அடுத்த வருடத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின்கீழ் ரூபா 100 மில்லியன் நிதியும், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ரூபா 447 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை தொடர்ந்தும்  விஸ்தரிப்பதற்கும் பகல்நேர  பாதுகாப்பு  நிலையங்களை அமைப்பதற்கும், மேலதிகமாக ரூபா  500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.